
தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)
https://soundar53.substack.com/podcast
முகவுரை
உடலுக்கும், உயிருக்கும் உள்ளது வெறும் குத்தகை ஒப்பந்தமே என்றும், யாக்கை நிலையற்றது என்றும் அறிந்து உணர்ந்து, இரண்டாவது முறையாக சங்கரனின் வைரக் கூடத்திற்கு பட்டை தீட்டி மெருகேற்றிக் கொள்ள வருகை தந்த, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் செயல்முறைக்கு (diamond cutting and polishing process), செல்வம் நிலையாமை என்று பெயர். “ஸரீர அநித்யம்” என்பதை முதல் செயல்முறையில் வழங்கிய ஆதி சங்கரர், “தன அநித்யத்தை” இரண்டாவது செயல்முறை வழியே நம் மூட மனத்திற்கு கொடுக்கிறார்.
இந்த செயல்முறையை உள்வாங்கினால், பணம்/செல்வம் என்பவை, நிரந்தரமான மகிழ்வைத் தேடும் நமக்கு ஒரு கருவிகளே அன்றி அவைகளை அடைவதே நமது குறி அல்ல என்பது ஆழமாகப் பதியும்.
சமஸ்க்ருத ஸ்லோகம்
मूढ जहीहि धनागमतृष्णां
कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।
यल्लभसे निजकर्मोपात्तं
वित्तं तेन विनोदय चित्तम् ||
தமிழ் ஒலி பெயர்ப்பு
மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்
கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |
யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேன வினோத3ய சித்தம் ||
தமிழ் மொழிபெயர்ப்பு
மூடனே வெல்வாய் செல்வத் தாகம்
மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்
மறை வழி ஈட்டிய செல்வம் போதும்
நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்
சமஸ்க்ருத சொற்றொடர்களின் பொருள்
முதல் சொற்றொடர்
मूढ - மூட - ஏ அறிவிலியே, ஏ மூட மனமே !
जहीहि - ஜஹீஹீ - விட்டுவிடு, வென்றுவிடு
धनागमतृष्णां = धन + आगम + तृष्णां
1. धन - தன - செல்வம். தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா பொருட்கள், வசதிகளைக் குறிக்கும்.
2. आगम - ஆகம - வரவு
3. तृष्णां - த்ருஷ்நாம் - வேட்கை, தாகம், அடக்கமுடியா விருப்பம்,
कुरु सद्बुद्धिं = குரு ஸத்புத்திம் = कुरु + सद्बुद्धिं - வளர்த்திடு நல்லறிவை
मनसि - மனஸி - மனதினில்
वितृष्णाम् - வித்ருஷ்நாம் - வேட்கையின்றி, தாகமின்றி
அதாவது, செல்வத்தின் மேல் உள்ள வேட்கையை வென்று, நல்லறிவை மனதில் வளர்த்திடு என்ற பொருள் இச்சொற் தொடருக்கு.
இரண்டாம் சொற்றொடர்
यल्लभसे - ய்ல்லபஸே= यत् யத்+ लभसे லபஸே - எந்த, அடைவது,
निजकर्मोपात्तं = நிஜகர்மோபாத்தம் = निजकर्मणा उपात्तम् = நிஜகர்மணா + உபாத்தம் = உனக்கு விதிக்கப்பட் வினைகளைப்புரிந்ததால் விளையும்; தனக்கு விதிக்கப்பட்ட வினைகளை, அற வழியில் (தர்ம ரீதியாக) , தனது முற்பிறவி வினைப்பலானக
वित्तं तेन विनोदय चित्तम् - வித்தம் தேந விநோதய சித்தம்
वित्तं - வித்தம் - செல்வம்
तेन - தேந - அவ்வழியில்
विनोदय - விநோதய - மகிழ்
चित्तम् - சித்தம் - மனது
அதாவது, நேர்வழியில் ஈட்டியதாலோ மற்றும் தனது முற்பிறவி வினைப்பலானக அடைந்ததாலோ எந்த ஒரு செல்வத்தை அடைந்திருக்கிறாயோ, அவ்வழிகளில் வந்த அந்தச் செல்வத்தை வைத்து மனமகிழ்வு அடை என்ற பொருள் இச்சொற்றோடருக்கு.
விளக்கவுரை
அன்றாட வாழ்வில் செல்வத்தால் சுகம் கிடைக்கும் என்ற கருத்து நமது மனித இயல்பு. செல்வமில்லையேல் வாழ்வதெப்படி? ஆதலினால் பணத்தாசை ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் நமக்கு.
பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை அறிந்த நாம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிய விரும்புவதில்லை. இந்த தவறான கருத்தினால், பணத்தின் மீது அளவு கடந்த அவா நமக்கு அதிகம்.
மனிதப் பிறவி என்றால் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை பரமனிடம் விட்டுவிட்டு கர்மம் புரியவேண்டும் என நமது மறைகள் எடுத்துரைக்கின்றன.
அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும். கர்மபலன், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் புரியும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை.
ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ இப்பண்ணில் ஆதி சங்கரர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்; அதன் மூலமாகவே மன சாந்தி ஏற்படும் என பொருள் கொள்ள வேண்டும்.
இதுவே இப்பண்ணின் சாரம்.
தமிழ் இலக்கியத்தில் செல்வம் நிலையாமை
செல்வம் நிலையாமையைப் பற்றி எண்ணற்ற விளக்கங்களை, தமிழ் புலவர்கள் அளித்துள்ளனர். அதில் சிலவற்றை ஆய்வோம்.
திருமூலர்
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.
முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.
நாலடியார்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால்
தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறி வரும்.
திருக்குறள்
அற்கா வியல்பிற்றுச் செல்வ மது
பெற்றா லற்குப வாங்கே செயல். - 333 நிலையாமை
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்ரஎன்று உணர்த்தப்படுகிறது.
வளையாபதி
வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை யொட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வம் இகப்பவோ. 35
ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும். ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.
(உதாரணங்கள் - சென்ற 2015 டிசம்பரில் சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பு, மறதியினால் நாம் செய்யும் தவிர்க்கக்கூடிய செலவுகள், வேந்தன் எனும் அரசு, மதுபானம் விற்று மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல் குடிபோதைக்கு ஆளாக்கி விடுவது, அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால ஏற்படும் பெரும் நட்ம், தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, வீடு, வங்கிகளில் கொள்ளை என நாம் இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்).பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.
சித்தர் பாடல்கள்
“தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ
என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும்.
செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,
“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)
என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ?என்று கேள்வி எழுப்புகிறார்
நாட்டுப்பாடல்
வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,
''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப்
பேரான மணையிலே ஊட்டி அரைத்து
நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை
நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும்
நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில்
நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு
பாதியைப் பறையன் கிழித்தான் - அதில்
பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான்
அக்கினி தேவுக்குப் பாதி - இந்த
அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''
என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.
முடிவுரை
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
நாம் செல்வம் உடையோம் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவுடையோரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!
ஆதலினால், துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, கோவிந்தனைத் துதி மூட மனமே என்று எடுத்துரைக்கிறது இந்த இரண்டாவது செயல்முறை.
செல்வத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் என்று தவறான முடிவிற்று நாம் வரக்கூடாது. தங்கள் சொந்த நலனுக்காக கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கு எதிரான அறிவுரையாக இந்த இரண்டாவது செயல்முறையை கவனமாக உட்கொள்ள வேண்டும்.
உள்ளுணர்வோம். அடுத்த செயல்முறை என்னவென்று புது வருட முதல் நாள் (01-01-2023) அன்று அறிவோம். அதுவரை