சங்கரனின் வைரக்கூடம் 8 – இல்லற உறவு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

இந்த உலகம், உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அது உங்களுக்குத் தீங்கு செய்யாது என்று கூறுகிறது வேதாந்தம். இது தான் வேதாந்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.  இந்த உலகம் என்பது என்ன என்று நாம் அறிய நமக்கு உதவி புரியவே

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்தம யக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான்

என்ற தாயுமானவர் பாடல் கூறுவது போல, மண் என்ற நிலம் மீது பெண் துணைகொண்டு, பொருளைக் கொண்டு வாழ்ந்து, அப்பொருள்களிலிருந்து பெறுகின்ற அனுபோகமே இன்பம் என்றும், அதுவே பொருள் என்ற மயக்க நிலையில் மதி கெட்டு இருந்திடும் மூட மனிதனின் அறிவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல, அவனுள் உறங்கிக் கிடக்கும் வைரமெனும் வைராக்கியத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மெருகூட்டும் பணியாக இதுவரை ஏழு செயல்முறைகளை, அவரது வைரக் கூடத்தில் நம் அனைவருக்கும் அளித்தார் ஆதி சங்கரர்.

இப்பொழுது அடுத்த படியாக, முக்கியமான அடிப்படை கேள்விகளை எழுப்பி நம் சிந்தனையை தூண்டுகிறார் இந்த எட்டாவது ஸ்லோகத்தில். வாருங்கள், பட்டை தீட்டிக் கொள்வோம் நம் வைரத்தை (வைராக்கியத்தை).

சமஸ்க்ருத ஸ்லோகம்

का ते कान्ता कस्ते पुत्रः

संसारोयमतीव विचित्रः |
कस्य त्वं कुत आयातः

तत्त्वं चिन्तय तदिह भ्रातः ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

கா தே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |

கஸ்ய த்வம் குத ஆயாத:

தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

யாருந்தன் மனைவி யாருந்தன் பிள்ளை

விந்தை யன்றோ இவ்உலக வாழ்க்கை

யாருந்தன் மூலம் எங்கிருந்து வந்தாய்

தம்பி தத்துவ சிந்தனை செய்வாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

का ते - கா தே - யாருந்தன் 
कान्ता - காந்தா - மனைவி
कस्ते - கஸ்தே - யாருந்தன்
पुत्रः - புத்ர: - பிள்ளை
संसारोयमतीव विचित्रः - ஸம்ஸாரோயமதீவ விசித்ர: - संसार + अयमं + अतीव + विचित्रः - ஸம்ஸார + அயம் + அதீவ + விசித்ர: - ஸம்ஸாரம் + இந்த + மிக + விசித்ரம்कस्य - கஸ்ய - எவருடையவன்
त्वं - த்வம் - நீ
कुत - குத - எங்கிருந்து
आयातः - ஆயாத: - வந்தாய்
तत्त्वं - தத்வம் - இந்த உண்மையை
चिन्तय तदिह - चिन्तय + तद् + इह - சிந்தய+ தத் + இஹ - சிந்தி இங்கேயே
भ्रातः - ப்4ராத: - (உடன் பிறவா) சகோதரனே

விளக்கவுரை

நேரடி பொருள்
 (உடன் பிறவா) சகோதரனே! உன் மனைவி யார்? உன் மகன் யார்? நீ எவரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து இந்த விசித்திரமான சம்சாரத்திற்கு வந்து சேர்ந்தாய்? இந்த உண்மைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்!
விளக்கம்
குடும்பம் என்ற சொல்லிற்கு  மூவகை உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு என்று பொருள் கொள்ளலாம்.  அதாவது, திருமணம், இரத்தம் அல்லது தத்தெடுப்பு ஆகிய உறவுகளால் ஒன்றுபட்ட நபர்களின் குழு.  இந்தக் குழுவில் ஒவ்வொருவருக்கும் அன்னை, தந்தை, மகன், மகள், அக்கா, தங்கை, அண்ணா, தம்பி, கணவன், மனைவி என்ற சமூக நிலைகள் உண்டு. இணக்கமான வாழ்க்கைக்காக நாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஏற்பாடுதான் குடும்பம் என்ற ஒரு நிறுவனம். குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

வாழ்க்கையின் போக்கில், நாம் இந்த உறவுகளின் வலுவான பற்றுதல் காரணமாக நமக்கு பொறுப்புகள், கடமைகள் மற்றும் அவர்கள்/அவைகள் தொடர்பான இன்ப துன்பங்கள், நினைவுகள், கவலைகள் முதலானவற்றை சந்திக்கின்றோம். கால சுழற்சியில் கடைசி காலம் வரும்பொழுது “நான் யார் நீ யார், நாலும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார், மகன் யார் தெரியார், தந்தை என்பார் அவர் யார் யார்” என்றும், “நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா; இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா; இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே, வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன” என்றெல்லாம் தத்துவ கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்.

இது தான் உலக யதார்த்தம். இதனைத்தான் ஆதி சங்கரர் நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைத்து, சிந்திக்க வேண்டும் என நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

ஆழ்ந்து ஆராய்ந்தால், உண்மை புரியும். உதாரணமாக, மகன் பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் இருந்தான். அதற்கு முன், அவன் நம் சொந்த உடலில் ஆற்றலாக இருந்தான். அதற்கு முன்பு அந்த ஆற்றல் உணவாக, அவ்வுணவு வயல்களில் உள்ள தாவரங்கள் மற்றும் காய்கறிகளாக, அவைகளனைத்தும் அதற்கு முன்பு பூமியாக இருந்தது. நாம் பூமி என்று அழைக்கப்படுவது உணவாகவும், பின்னர் என் உடலில் ஆற்றலாகவும் மாறி, பின்னர் கருவாகி, தாயின் வயிற்றில் குழந்தையாக மாறியது. எனவே, மாற்றத்தின் முழு செயல்முறையையும் நாம் பார்க்கும்போது, மனைவி, மகன் மற்றும் கணவன் என்று நாம் அழைப்பது ஐந்து கூறுகள் எனப்படும் ஒரு அடிப்படை பொருளின் மாற்றங்களே தவிர வேறில்லை.

ராட்சத “ரோலர் கோஸ்டர்” எனும் “உயர் சுழல் வீச்சு சவாரி”யில் செல்லும்போது , நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அதிலிருந்து வெளியே வரும்போதுதான், முடிவில்லாத வட்டங்களில் நாம் சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம். குடும்பமும் அப்படித்தான். 'குடும்ப' வாழ்க்கையிலிருந்து வெளியே வரும்போது மட்டுமே உலகத்துடனான நமது உண்மையான உறவு புரியும்.

இந்த அடிப்படைக் கேள்விகளை ஆராய்வதற்கான அழைப்பே இந்த ஸ்லோகம். ஆராய்ந்து அறிந்தால் நமது மனதை தயார்படுத்தி, உள்ளுறங்கும் வைராக்கியத்தை பட்டை தீட்டி மெருகேற்றி வெளிக் கொண்டு வர முடியும்.

நல்லோர் இணக்கம், குருவின் வழிகாட்டு, பரம்பொருளின் மேல் பற்று - இவை மூன்றுமே நமது மனதை தயார்படுத்த நமக்கு வேண்டிய கருவிகள். மிக முக்கியமாக, பரம்பொருளின் மேல் பற்றினை வளர்த்திட பிரார்த்தனை மனப்பான்மை தேவை. அதனால் துதி கோவிந்தனை என்கிறார் ஆதி சங்கரர்.
தமிழ் இலக்கியங்களில் உறவுகள்
திருவாசகம் (யாத்திரைப் பத்து)

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

ஐந்தாம் திருமுறை - கொண்டீச்வரம் - அப்பர்

தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்துப் பயில்வு எய்திய
கொந்தவிழ் பொழில் கொண்டீச்சுரவனை
சிந்தை செய்மின் அவனடி சேரவே

தந்தை தாய் தாரம் ஆகிய சொந்தங்களின் பந்தம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கட்டாயத்தில் நம்மை தள்ளி விடுகின்றது, மிகவும் அவசியமான தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை. ஆனால் பல சமயங்களில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நாம் செய்யும் முயற்சிகளில் நாம் இறைவனை மறக்க வாய்ப்பு இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே பந்தம் எனும் தளை அறுத்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இறை சிந்தனை, நாம் பாசக் கட்டுகளிலிருந்து விடுபட உதவு செய்யும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இறைவனின் திருவடிகளை சென்று அடைவதற்கு ஓரே வழி, அவனைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வது தான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

“ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல”

“வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

முடிவுரை

இந்த ஸ்லோகம், குடும்பம் என்ற கட்டமைப்பை தாழ்த்துகிறது; தந்தை, மகன், துணைவி போன்றவற்றில் ஒருவரின் பாசத்தையும் அவரது கடமைகளின் செயல்திறனையும் குறைத்திடுகிறது என்னெல்லாம் தவறாக நாம் கணிக்கக்கூடாது.

ஆன்மிகமும் குடும்ப வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாதவை. ஆன்மீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கையை துறக்காமலேயே வாழ முடியும். தமிழ்நாட்டில் உள்ள 63 நாயன்மார்கள் என்பவர்களில் குறிப்பாக பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் தான் முக்தி அடைந்து உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறை மட்டத்தில், அவர் இங்கு சுட்டிக் காட்டுவது என்னவென்றால், நாம் நமது பல்வேறு பாத்திரங்களில் மற்றவர்களுடன் பழகினாலும், அவர்களிடம் பாசம் காட்டினாலும், போதுமான அளவிலான புறநிலையைப் பேண வேண்டும், அந்த பிணைப்புகள் நம்மைக் குருடாக்கி, வழிக்கு வர விடக்கூடாது. நமக்கான விடுதலையை நாமே தேடுகிறோம் என்பதையே இந்த செயல்முறை விளக்குகிறது.

இதனை அறிந்துணர்வோம். சங்கரனின் வைரக் கூடத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s