சங்கரனின் வைரக்கூடம் 11 – மாயச் செருக்கு

Well lit balcony – a Maya?

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

பெரும் சாதனை புரிந்த உணர்வு, நம்பிக்கை நிறைந்த முகம்,  மலர்ந்த புன்னகையுடன் வரும் மகனைக் கண்டு “உன்னைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கர்வமாக/பெருமையாக இருக்கு தெரியுமா?”  என்று கூறும் தாய் ஒரு புறம்.

“அவனிடம் சென்று எதுவும் கேட்காதே. அவன் ரொம்ப கர்வம்/பெருமை புடிச்சவன்” - அண்டை வீட்டுக் காரனைப் பற்றி கூறும் அடுத்தவன் ஒரு பக்கம்.

ஒரே சொல் - கர்வம்/பெருமை. இரண்டு எதிர்மறையான கருத்துள்ள பொருள். முதல் கர்வம்/பெருமை அடுத்தவரைப் பாதிக்காதது. இரண்டாவது, அடுத்தவரைப் பாதிப்பது. இதனை வெளிக்காட்ட ஒரு அருமையான திருக்குறள் உண்டு.


அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

திருவள்ளுவர்

மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல், தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான் என்று ’தன்னை வியந்தான்’ என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார்.

இந்த தன்னை வியக்கும் தன்மையைத்தான் கர்வம், தற்பெருமை, தலைக்கணம் என்றெல்லாம் எதிர்மறை சிந்தனையில் கூறுகிறோம்.

கர்வம் எதனால் வருகிறது, அதன் விளைவுகள் என்ன, அதனை நீக்குவதற்கு வழி எதுவும் உண்டா என்ற கேள்விகளுக்கு விடைகள், சங்கரனின் வைரக் கூடத்தில் நமக்கு கிட்டும், இந்த 11வது ஸ்லோகம் வழியாக.

வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்குவதற்கு, மூன்று எடுத்துக்காட்டுகளை கோடிட்டுக் காட்டுகிறார் ஆதி சங்கரர். இந்த முக்கியமான ஸ்லோகத்தை ஆராய்வோம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मा कुरु धनजनयौवन गर्वं

हरति निमेषात्कालः सर्वम् |

मायामयमिदमखिलं हित्वा

ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ||

Adi Sankara

தமிழ் ஒலி பெயர்ப்பு

மாகுரு த4ன ஜன யௌவன க3ர்வம்

ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் |

மாயாமயமித3ம் அகி2லம் ஹித்வா

ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா ||

தமிழ் மொழி பெயர்ப்பு

வளம் குடி இளமை கர்வம் வேண்டாம்

கணத்தினில் கவர்ந்திடும் என்றும் காலம்

உலகே மாயம் என்பதால் விடுத்திட்டு

மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

मा कुरु  - மாகுரு - அடைய வேண்டாம்

धनजनयौवन गर्वं - த4ன ஜன யௌவன க3ர்வம் - வளம் (செல்வம்), குடி (மக்கள்/உறவு), இளமை (இவைகளினால் வரும்) தற்பெருமை

हरति निमेषात्कालः सर्वम् - ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் - அழித்திடும் நிமிடத்தில் காலம் அனைத்தையும்

मायामयमिदमखिलं - மாயாமயமித3ம் அகி2லம் - உலகே மாயம்

हित्वा - ஹித்வா - துறந்து

ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा - ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா - மெய்ப்பொருள் அறிவாய், நீயே என்று

விளக்கவுரை

நேரடி பொருள்
“நான் பணக்காரன்” ; “எனக்கு நிறைய சுற்றத்தினர் உள்ளனர்”;“நான் இளமையுடன் எழிலுடன் (யௌவனம்) இருப்பவன்” என்றெல்லாம் கர்வம் கொள்ளாதே.

காலம் நினைத்தால் இவற்றை எல்லாம் ஒரே நிமிடத்தில் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடும். உலகமே பொய்க் காட்சி. பிரம்மம் மட்டுமே உண்மையானது என்று அறிந்து நீயும் பிரம்மமே என்பதை அறிந்துணர்வாயாக.
விளக்கம் 
இந்த ஸ்லோகத்தில், நான்கு தத்துவங்களை கோடிட்டு காட்டி, ஆதி சங்கரர் நிலைக்கண்ணாடியில் நம்மைப் பார்க்க உதவுகிறார். அவைகள் முறையே:

1. மனிதரின் அகந்தைகள்
2. நேரத்தின் விளைவு
3. உலகமும் மாயையும்
4. பரம்பொருளும் (பிரம்மனும்) அவனைப் பற்றிய அறிவும்.

ஒருவர் நேர்மையாகவும், உயர்ந்த குணமுடையவராகவும் இருந்தால், அவர் தன்னைத்தானே ஒரு கேள்வியைக் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று சங்கரர் சொல்லாமல் சொல்லி வைத்தார் இப்பண்ணிலே.

“இவ்வுலகில், என் வாழ்வில், நான் ஒருவன் மட்டுமே எதையாவது ஒன்றை உருவாக்கியிருக்கிறேனா அல்லது பெருமைப்படக்கூடிய ஒன்றை எனக்கு சொந்தமாக வைத்து கட்டுப்படுத்துகிறேனா?”

இது தான் அந்த கேள்வி. இதனை நமக்கு நாமே கேட்டுக்கொண்டு இருந்தோமானால், நமக்கு இந்தப் பண்ணில் உள்ள கீழ்கானும் விளக்கங்கள் புரியும். 
த4ன ஜன யௌவன க3ர்வம்

ஆதி சங்கரர் “தன, ஜன மற்றும் யௌவன” ஆகிய மூன்று வெற்று அகந்தைகளை எடுத்துக்கொள்கிறார். இவை மூன்றும் செல்வம், புகழ் மற்றும் இளமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான மாயைகள் என்றும் அவை எந்த நேரத்திலும் மறைந்துவிடும் என்றும் கூறுகிறார்.

இந்த மூன்றும் அனைத்து ஆன்மீக முயற்சிகளுக்கும் பாரம்பரிய தடைகள். ஏனென்றால் தன்முனைப்பு எனும் அஹங்காரத்தை (ego) அழிக்கும் நோக்கமுடைய ஆன்மீகத்திற்கு எதிர்மறையாக, இந்த மூன்று அகந்தைகள், தன்முனைப்பிற்கு முட்டுக் கொடுத்து உதவும்.

இந்த மூன்று "தன்முனைப்பு முட்டுக்களை" ஆராய்வோம்.

தனம் - செல்வம்

முன்னே கூறியது போல், "நான் செல்வத்தை உருவாக்கியுள்ளேனா அல்லது இந்த செல்வத்தின் மீது எனக்கு கட்டுப்பாடு இருக்கிறதா?" என்ற கேள்வியைப் பயன்படுத்துவோம். இக்கேள்விக்கு ஆமாம் என்று என்னால் உறுதியாக பதில் கூற முடியாது. ஏன்?

என்னுடையது என்று நான் சொல்லும் இந்தச் செல்வம் எங்கிருந்து வந்தது? பரம்பரை சொத்தை விட்டு விடலாம். அது என்னால் இல்லை. நான் கடினமாக உழைத்து சம்பாதித்தது என்று நாம் கூறும் செல்வத்தை ஆய்வோம்.

என் உடலை வருத்தி புரியும் உழைப்பு, அதனால் வரும் சம்பாதிப்பு என்றால், உடனடியாக நாம் பட்டிருக்கும் மூன்று கடன்கள் நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.

1. நம் உடல் எங்கிருந்து வந்தது - பெற்றோரிடமிருந்து.
2. நம் உழைப்பு திறன் எங்கிருந்து வந்தது - ஆசானிடமிருந்து
3. இவரிருவரின் மூலம் எது - பரம்பொருள் எனும் இறைவன்

ஆக, இந்த மூவரும் இலையேல் எங்கிருந்து வரும், நம் கடின உழைப்பும், செல்வமும்.

எனவே தான், கடவுளுக்கும், முன்னோர்களுக்கும்/பெற்றோர்களுக்கும், நமக்கு ஆசானாக விளங்கிய ரிஷிகளுக்கும் நாம் நன்றி செலுத்தி, செலுத்த வேண்டிய கடன்களை (தேவ, பித்ரு, ரிஷி ருணம் என்று வடமொழியில் கூறுவர்) நிறைவேற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

மேலும் நமக்கு உடல் ஆற்றலைக் கொடுக்கும் உணவு எங்கிருந்து வந்தது? கன்னட மொழியில் மிகப் பிரபலாமான, திரு. டி.வி. குண்டப்பா அவர்கள் எழுதிய மக்கு திம்மா என்ற படைப்பில்

பசி களையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ
புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ
இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ
இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா

என்று அழகாக நமது கடனை எடுத்துரைக்கிறார்.

எனவே, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பற்றி நாம் இப்படி உண்மையிலேயே சிந்திக்கும்போது, நம்மிடம் பணிவும், தன்னடக்கம் மட்டுமே வளரும்/இருக்கும்; பெருமை இருக்காது. இந்த அடிப்படை நன்றியுணர்வை நாம் புரிந்து கொள்ளாமலோ அல்லது உணராமலோ இருந்தால், செல்வத்துடன் வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்து, ஆணவம், செருக்கு, மமதை என்றெல்லாம் கூறப்படும் தன்முனைப்பு.

செல்வத்தைப் போலவே மக்களும் (உற்றார், உறவினர், நன்பர் - அவர்களால் வரும் புகழும்) இளமையும் என்றும் நிலைப்பதில்லை. முந்தைய பண்களில் (2,5,6) ஆதி சங்கரர், செல்வம் அல்லது சம்பாதிக்கும் சக்தி இல்லாத ஒருவரைத் நெருங்கிய உறவுகள் கூட அண்டமாட்டார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார் அல்லவா!

மேலும் கொழுப்பு மற்றும் சதையை அடிப்படையாகக் கொண்ட இளமையும் உடல் வலிமையும், உடலின் இயற்கையான மாற்றங்களான முதுமையும் இறுதியில் சிதைவு அடைந்தே தீரும். முந்தைய ஸ்லோகங்களில் ஆதிசங்கரர் நம் முட்டாள் மனதிற்கு, உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயான குத்தகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு நியமிக்கப்பட்ட நாளும் நேரம் வரும்போது எதுவும் நமக்கு உதவாது என்று கூறினார் என்பதை நினைவு கூற வேண்டும்.

எனவே, உலகமும் அது வழங்கும் அனைத்து செல்வங்களும் மாயை தான், அவைகள் நிலையற்றவை மட்டுமே. இதைத்தான் அடுத்த சொற்றொடரில் விளக்குகிறார் பரமனின் அவதாரமான ஆதி சங்கரர்.
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம்

ஆதி சங்கரர் ஹரதி, நிமேஷ கால, சர்வம் ஆகிய மூன்று முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; எல்லாம் சில நொடிகளில் அழிந்துவிடும் என்பது நேரடியான பொருள்.

இந்த வாக்கியத்தை விவாதிக்க மற்றும் புரிந்து கொள்ள, ஒருவர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வங்கியின் தரவுகள் இங்கே:

மார்ச் 2020 முதல், 1000 நாட்களில் (86,400,000 வினாடிகள்), "இது" இதுவரை பின்வரும் தாக்கத்தை ஏற்படுத்தியது:

1. அதிகாரப்பூர்வ, உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான 6,606,624 மனிதர்களின் அகால இறப்பிற்கு “இது” காரணம். அதாவது சுமாராக ஒவ்வொரு 13 வினாடிக்கும் இவ்வுலகில் ஒருவர் மரணம் எய்யக் காரணம் “இது”.
2. கடுமையான அதிர்ச்சி அலைகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி, இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது “இது”.
3. வளர்ந்து வரும் மற்றும் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வருமான இழப்பினால், வேண்டிய அடிப்படை நுகர்வுகளை மூன்று மாதங்களுக்கு மேல் தக்கவைக்க முடியவில்லை “இதன்” விளைவால்.
4. நாடுகளுக்குள்ளும் நாடுகளிலும், சமத்துவமின்மையும், வறுமையும் வெகுவாக உயரக் காரணமாக இருந்தது “இது”.

இந்த 21 ஆம் நூற்றாண்டின் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிகளில் , "இது" வரப்போகிறது என்பது நமக்குத் தெரியுமா? "இது" இப்படி "ஹரதி நிமேஷாத் கால: சர்வம்" செய்யும் என்று நமக்குத் தெரியுமா?

இந்த “இது” எது? அதுதான் கோவிட்-19 தொற்றுநோய்.

"அதனால்", அதாவது, கோவிட் 19 தொற்றுநோயால், செல்வம் அழிந்தது, இளமை மறைந்தது, நண்பர்கள் சில நொடிகளில் சென்றுவிட்டனர்.

இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும் இச் சொற்றொடருக்கு!

இந்த நிகழ்வுகள்,

“நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்”

என்று பத்து வயது பாலக ஞானி, திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை நினைவுக்கு கொண்டு வரும்.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளதுணர்வார் பெறின்

உண்மை அறிந்தோர், ஒரு தினம் என்பது கால அளவு போல் தோன்றினாலும் அது வாழ்நாளை அறுக்கும் வாள் என்று உணர்வர் என்ற திருக்குறள் இந்த சொற்றொடரைத் தழுவியதே.
மாயாமயமித3ம் அகி2லம் 

உலகம் முழுக்க மாயையால் நிரம்பியுள்ளது என்பதே நேரடிப் பொருள். உலகே மாயம். சங்கரர் வெளிப்படுத்திய மாயையின் கருத்தைப் புரிந்துகொள்ள, கோவிட்-19 பற்றிய நமது விவாதத்தை மேலும் தொடர்வோம்.

இல்லாத ஒன்று இருக்கின்ற மாயம்

நமது அன்றாட வாழ்வில், நமது உடல், மன வளாகத்தால் (பொறி புலன்களால்) உணர முடியாத “எதை”யும் பொதுவாக நாம் “அது” இல்லாதது என்றும் (இல்லையென்றும்), உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், “அதை”ப்பற்றி நாம் கவலையும் படுவதில்லை என்பது உலக இயல்பு அல்லவா! கண்ணால் காணும் பொருளே, நம் விரல் நகத்தைத் தாண்டிவிட்டால் அது நமது “இல்லை” என்கிறோம். காண முடியாத ஒன்றை “இருக்கிறது” என்று கூறுவோமா,இல்லை என்றுதானே “அதை”க் கூறுவோம். அந்த “இல்லாத” (அதாவது நமது பொறி புலன்களால்) உணர முடியாத ஒன்றை இப்பொழுது உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

உங்களால் "அதை" பார்க்க முடியவில்லை, என்னால்"அதை" கேட்க முடியவில்லை, மேலும் அவர்களால் "அதை" உணர முடியவில்லை. அது தான் கொடிய கோவிட்-19 வைரஸ். எனினும் “அது” பரவி இருக்கிறது அல்லவா. அகராதிகளின் வரையறையின்படி, ஒருவர் "அந்த கோவிட்-19 வைரஸை " மாயா என்றும் சொல்லலாம். இல்லாத ஒன்று என்று பொறி புலன்களுக்கு உண்மையற்றதாகத் தோன்றினாலும் அது இருந்தது, இருப்பது, இருக்கும், அது தான் உண்மை.

இருப்பது, இல்லாத மாயம்

இதேபோல், "இருப்பது, உண்மையானது" என்று தோன்றும் "உண்மையற்றதும், இல்லாததும்" உள்ளன, உதாரணமாக கானல் நீர், மந்திரவாதியின் செயல்கள் இவைகளைல்லாம் ஒரு மாயத்தோற்றம்.

நமது உடலையே எடுத்துக் கொள்வோம். நம் உடலுக்கு சுகங்களை நாம் கொடுக்க கொடுக்க, பதிலுக்கு அவ்வுடல் நமக்கு என்ன கொடுக்கிறது; துக்கத்தை ஒன்றே கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் மாயமே. ஏனெனில் சுகமும், துக்கமும் நாம் நினைப்பது போன்ற சுகமும் துக்கமும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மாயை என்பது புரிந்து கொள்ள இயலாமை (non apprehension), தவறாக புரிந்துகொள்ளும் தன்மை (mis apprehension) என்ற இரண்டு தத்துவங்களை உள்ளடக்கியது.

அதாவது மறைப்பு, வெளிப்படுத்துதல் என்ற இரண்டு சக்திகளுடையது மாயை. (The AvaraNa shakti is called the power of concealment and the vikShepa-shakti the power of projection). இருப்பு இலாத தன்மை போன்று தோன்றினாலும், உடல் மன வளாகமான நம் உள்ளுணர்வில் வடிவங்களை உருவாக்கும் சக்தியுடையது மாயை.

(மாயை எனும் தத்துவத்தை, எனது மூட மனதிற்கு எட்டிய வரை https://soundar53.substack.com/p/-5- என்ற வலைதளப்பதிவில் விவரித்துள்ளேன். நேரம் கிடைத்தால் காணவும்).

எனவே தனம், ஜனம், யௌவ்வனம் போன்றவைகளைத் தவறாக புரிந்து கொண்டதால் (misapprehension) வளரும் தன்முனைப்பு என்ற கர்வம் எனும் தற்பெருமையால், நம்மை வாழ்க்கையின் யதார்த்தமான நிலையையும் அல்லது இவ்வுலகைப் பற்றிய சார்பற்ற புறநிலை உணர்வையும் புரிந்து கொள்ள இயலாமைக்கு (non apprehension) வழி வகுக்கிறது.

இதனால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கிளிஞ்சல் வெள்ளியென, கண்ணாடித்துகள் மணிக்கல்லென, மாக்கலந்தநீர் பாலென, கானல்நீர் தண்ணீரென மருட்சிகொண்டு, நிலையிலாதவற்றை நிலையெனக் கண்டு மயங்குவதே உலக வாழ்க்கை என்பதை உணர்த்தவே, ஆதி சங்கரரின் மாயாமயமித3ம் அகி2லம் என்ற சொற்றொடர்.
ஹித்வா

கைவிடு, துறந்திடு, விட்டுக்கொடு என்பதே நேரடிப் பொருள். ஆதிசங்கரர் இந்த (தன, ஜன, யௌவ்வன) என்ற தன்முனைப்பு முட்டுக்கள் எதிலும் நிலையான மகிழ்வைக் காண முடியாது என்பதை உணருமாறு அறிவுறுத்துகிறார். எனவே "ஹித்வா" அவைகளைத் துறக்குமாறு அவர் வலியுறுத்துகிறார்.

இந்த சொல்லிற்கான தனது விளக்கவுரையில், சுவாமி விதிதாத்மானந்தா கூறுகிறார்:

“வேதாந்தத்தில், துறவு என்பது ஒரு செயல் அல்ல; இது ஒரு மனநிலை, உலக விஷயங்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை. புற நிலையில், வினைகள் புரிவதில்லை, பொருட்களை நிராகரிப்பது என்பதெல்லாம் துறவு அல்ல. விட்டுவிட்ட எதையாவதின் இழப்பை உணர்ந்தால், நான் அதை உள்நோக்கி விட்டுக்கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்”.

தூய, நிலையான மகிழ்வெனும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம், சோகம், பயம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற உள்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண, “பொருளாகிய உலகத்தை நோக்காதே; உலகப் பொருள்களால் இவற்றைத் தீர்க்க முடியாது” என்ற இந்த உண்மையை அங்கீகரிப்பதே துறவு.

எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிடுவது, அவைகளின் பயனை அனுபவிப்பது என்பதே இந்த “ஹித்வா” என்ற சொல்லின் பொருள்.

குறிப்பு: சமஸ்க்ருத மொழியில், சில பதிவுகளில் “ஹித்வா” என்ற சொல்லிற்கு பதிலாக “பு3த்4வா” என்று காணப்படுகிறது. அதற்கு அறிந்துணர்தல் என்ற பொருள். அதாவது எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவே யதார்த்தம் அல்லது பயன் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த அளவிற்கே அவைகளை மதிப்பிட்டு, அவைகளின் பயனை அனுபவிப்பதை அறிந்துணர்தல் என்ற பொருளைக் கொள்ளலாம்.
ப்3ரம்மபத3ம் த்வம் ப்ரவிச’ விதி3த்வா

விதி3த்வா என்றால் அறிந்து, உணர்ந்த பிறகு (புரிந்து அனுபவிப்பது), த்வம் ப்3ரம்மபத3ம் ப்ரவிச’, உன்னைப் பற்றிய உண்மையை அறிந்த நீ பரம்பொருளின் (பிரம்மனின்) இருப்பிடத்தில் நுழைவாயாக என்பது நேரடிப் பொருள்.

எனவே, என்னைப் பற்றிய உண்மையை அறிந்து, பிரம்மனின் இருப்பிடத்தில் பிரவேசிக்க, நான் உலகத்தைத் துறக்க வேண்டும், அதாவது, எனது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எனது இலக்கை அடைவதற்கும் நான் உலகத்தைச் சார்ந்திருக்கும் போது என்னை நான் அறிவதில்லை.

மனிதப் பிறப்பின் நோக்கமே தெய்வீகமாக மாறுவதுதான். மற்றவை அனைத்தும் வாழ்க்கையின் வழிமுறைகள். வாழ்க்கையின் குறிக்கோளுக்கும் வாழ்க்கை வழிமுறைக்கும் இடையில் நாம் ஒருபோதும் குழப்பமடையக்கூடாது. வாழ்க்கையின் குறிக்கோள் நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

"பிரம்ம சத்யம், ஜகத் மித்யா" (பிரம்மம் மட்டுமே இறுதி உண்மை, மற்றும் உலகம் நிரந்தரமற்றது) என்பதை உணர்ந்து அனுபவித்தால், என் அமைதியான மனம் எந்த கவனச்சிதறல்களிலிருந்தும் விடுபட முடியும். பின்னர் என்னால் என்மேல் கவனத்தை செலுத்த முடியும். அப்படி செலுத்துகையில் தன்னைப் பற்றிய அறிவு எனும் "நீயே அது" ("தத் த்வம் அசி") என்ற மெய்ப்பொருளின் இருப்பிடத்திற்குள் நுழையலாம். ஆகாயத்தில், மேகங்களை விட மேலான சொர்கமெனும் இடத்தில், வின்னவரும் தேவதைகளும், மிளிரும் வெள்ளை நிற ஆடையில் நம்மைச் சுற்றி பறந்திடும் இடமல்ல அது. அந்த இடம் உன்னிடமேதான் உள்ளது.

இங்கேயே, இப்பொழுதே வீடுபேறு எனும் விடுதலை நிலை தன்னை அறிந்தோர்க்கு. இதைத்தான் ஆதி சங்கரர் 9வது ஸ்லோகத்தில் “நிஸ்சல தத்த்வே ஜீவன்முக்தி:” என்று கூறினார்.

முடிவுரை

உலகத்தின் நிலையற்ற தன்மையும் அதன் இன்பங்களும் நம்மை நம் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப வேண்டும். நாம் நமது உடல் மன வளாகத்தைப் பயன்படுத்தி, இவைகளனைத்தும், சாராம்சத்தில் வெறும் மாயை (மாயா) என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரம தத்துவமான பிரம்மத்தை அறிந்து, அதில் நமது உணர்வை இணைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் ஆத்மாவே உண்மையான நிரந்தரமான மெய்ப்பொருள், அதுவே பரம்பொருள் எனும் நிலையான உண்மை. அதுவே தூய இருப்பு, தூய உணர்வு, தூய பேரின்பம்.

ஆதி சங்கரரின் இந்த முக்கியமான செய்தியை நாம் ஆழ்ந்து உணரவேண்டும். அடுத்த வலைப்பதிவில் அடுத்த ஸ்லோகத்திற்குச் செல்வோம்.

அதுவரை……

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s