சங்கரனின் வைரக்கூடம் – 7 – பருவக் கோளாறு

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை பிடித்து அலையாமல், நமது வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து, உறவுகள் தொடர்கதைகள் அல்ல என்றும் அந்த உறவுகளும், நாம் ஈட்டும் செல்வமும், நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றும் உள்ளவரையே என்பதை நன்கு ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆறு செயல்முறைகளை சங்கரனின் வைரக்கூடத்தில் அறிந்தோம் இதுவரை.

‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ என்றார் ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி கழிக்கிறோம் என்பதை இந்த நாட்டுப்புற பாடல் எளிமையாக எடுத்துரைக்கிறது..

''தத்தக்கா புத்தக்கா நாலே காலு
தானே நடக்கையிலே ரெண்டேகாலு
உச்சி வெளுக்கையிலே மூணே காலு
ஊருக்குப் போகையிலே எட்டே காலு''

என்ன இது? தத்தக்கா புத்தக்கா என்ற உளரல். இதற்கும் இந்த பஜகோவிந்த ஸ்லோகத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு; இந்த நாட்டுப்புற பாடலின் பொருளை அறிய, முடிவு வரை காத்திருக்கலாம்.

மனித வாழ்வவினை (பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலத்தை) பருவங்களாக பிறிக்கலாம். இந்தப் பிறிவுகள் ஒவ்வொருவரின் கண்ணோக்கத்தைப் பொருத்து; இரண்டிலிருந்து, பண்ணிரண்டு வரை பிரிக்துப் பார்க்கலாம் என்பர். அனைத்து கண்ணோக்களிலும் மூன்று முக்கிய நிலைகள் உண்டு. நமது வாழ்நாளை, குழந்தை, இளமை, முதுமை என்று பருவங்களாகப் பிரிக்கலாம். (மேலே உள்ள படத்தை பாரக்கவும்).

இந்தப் பருவங்களை எப்படி கடக்கிறோம் நாம், என்பதை ஆதி சங்கரர் ஒரு புகைப்படம் போல ஒரு ஒரு வரியில் விவரிக்கின்றார் இந்த அடுத்த செயல்முறையில்.

வாருங்கள். எப்படி என்று பார்க்கலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

बालस्तावत्क्रीडासक्तः

तरुणस्तावत्तरुणीसक्तः |

वृद्धस्तावच्चिन्तासक्तः

परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ||

ஆதி சங்கராச்சார்யா

தமிழ் ஒலிபெயர்ப்பு

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரமே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பாலகனாக பற்றுவோம் ஆட்டம்

வாலிபனாக குமரியில் நாட்டம்

முதியவனாக உள்ளத்தில் கவலை

முத்தனைப் பற்றிட எவனும் இல்லை

சமஸ்க்ருத சொற்களின் பொருள்கள்

बालस्तावत् - பாலஸ்தாவத் - குழந்தைப் பருவத்தில், 

क्रीडा असक्तः - க்ரீடா ஸக்த: - க்ரிட + அஸக்த: - ஆட்டம்/விளையாட்டு + பற்றுதல்

तरुणस्तावत् - தருண ஸ்தாவத் - இளமை பருவத்தில்

तरुणीसक्तः - தருணீஸக்த: - பெண்ணாசை/குமரியில் நாட்டம்

वृद्धस्तावत् - வ்ருத்தஸக்த: - முதுமைப் பருவத்மில்

चिन्तासक्तः - சிந்தாஸக்த: - கவலை உள்ளம் கொள்வது

परमे ब्रह्मणि - பரமே ப்ரஹ்மநி - பரப்பிரம்மனை

कोपि न - கோபி ந - க அபி ந - ஒருவரும் இல்லை

असक्तः - அஸக்த: - பற்றுடன்

விளக்கவுரை

நேரடிப் பொருள்
விளையாட்டு/விளையாட்டுத்தனத்தின் மீதான பற்றுதலால் குழந்தைப் பருவம் நழுவிப் போகிறது. பெண் மீதான பற்றுதலால் இளமை மறைகிறது. பல விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில் முதுமை கடந்து செல்கிறது. ஐயகோ, பரபிரம்மத்தைப் பற்றிட விரும்பும் எவரும் இல்லை.
தத்துவ விளக்கம்
முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் , ஆதி சங்கரர் மரண நேரத்தை விளக்கி, நிலையிலா, வெறுமையான, தவறான மனித உறவுகள் எவ்வாறு நமது முட்டாள்தனமான மனதை நமது ஆன்மீக இலக்கிலிருந்து திசைதிருப்ப முடியும் என்பதை நினைவூட்டினார்.

இந்த செயல்முறையில், அவர் நமது வாழ்க்கைப் பயணத்தின் நான்கு நிலைகளை சுட்டிக்காட்டி அந்நிலைகளின் யதார்த்த நிலமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு மனிதன் வாழ்வில் நான்கு பருவங்களைக் (4 நிலைகளைக்) கடந்து செல்கிறான் - குழந்தை, பாலகன், இளைஞன், முதியவன் என்பவை இவை.

இந்தப் பயணத்தில் நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி அவர் எச்சரிக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனச்சிதறல்கள் உள்ளன.

இன்றய காலக் கட்டத்தில் நாம் அனைவரும் ஒரே “பிஸி” - ஒய்விலா பரபரப்பு; அல்லவா! எப்படி?

1. குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டிலே பிஸி.
2. இளமை எனும் பூங்காற்றுக் காலத்தில் பாலினத்தில் நாட்டம். இளஞனுக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்ற கவலையும், குமரிப் பெண்ணுக்கு, தனக்கு பின்னால் எத்தனை ஆண் நண்பர்கள் சுற்றுகிறார்கள் என்ற கவலை.
3. முதுமையில், வாழ்க்கையின் இறுதி/இறுதிக் கட்டங்களுக்குள் நுழைகிறோம். நமது கவனம் முழுவதுமாக மாறி, நமது உடமைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் போன்றவற்றின் பாதுகாப்பு/கவலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எவரிடத்தில் பேசினாலும், “நமது மலரும் நினைவுகளை அவர்களின் மீது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறோம்”.

பரம்பொருளை அறியவும், மெய்ப்பொருளை உணரவும் நேரமே இல்லை. சிறிது நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்தாலும், பயிற்சியின்மையால், அப்படிப்பட்ட எண்ணங்களில் மனம் ஈடுபட மறுக்கும், நொண்டிச்சாக்குகளை நோக்கி விரையும்.

நம் வாழ்வில் தெய்வீகத்தை, மிகக் குறைந்த வயதிலேயே கொண்டுவரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நமது உடல், மனம் மற்றும் புத்தி வளாகம் உலக விவகாரங்களில் சிக்கிக்கொள்ளும் முன் இதைச் செய்ய முடிந்தால், அது வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைக் கடக்க உதவும். இந்த வைராக்கியமெனும் வைரத்தை தோண்டி எடுத்து, பட்டை தீட்டி, மிருகேற்றி நம்மில் ஒளித்திடவே, ஆதி சங்கராச்சாரியார் இந்த நிலையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இப்படி எடுத்துரைப்பதால், சங்கரர் உலக நோக்கங்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை விளையாட வேண்டும், ஒரு இளைஞன் சம்பாதித்து குடும்பத்தை வளர்க்க வேண்டும் மற்றும் நேர்மையான வழிகளில் செல்வத்தைப் பெற வேண்டும். ஆனால் ஒருவன் தனது அன்றாட வாழ்வின் தொடகத்திலேயே, கடவுளை மையமாகக் கொண்ட உள்நோக்கிய பயணத்தைத் தொடங்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், வயதான காலத்தில், நமது உலக உடைமைகளைப் பற்றிய தவிர்க்கக்கூடிய கவலைகள் நம்மை தீண்டாது. நமது மன அமைதியையும் பறிக்காது.

இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

தமிழ் இலக்கியங்களில் வாழ்க்கைப்பருவங்களின் நிலையாமை

பட்டினத்தார் பாடல்

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே

திருமந்திரம்

திருமந்திரப் பாடல் ஒன்றில், பாலன் இளைஞன் முதியவன் என்ற பல பருவ மாறுபாட்டினை உடல் அடைவதைக் கண்ட பின்னரும், இளமை நிலையற்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளமால் உலகத்தவர் இருக்கின்றார்களோ என்று வருந்தும் திருமூலர், காலத்தையும் அண்டங்களையும் கடந்தவனாகிய இறைவனின் திருவடிகளை நாம் தொழவேண்டும் என்று உணர்த்துகின்றார்.

பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்பவன் நானே

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான். அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை. நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும், தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.

அறநெறிச்சாரம்

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப் -- பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர். --- அறநெறிச்சாரம்.

(தெரிவு இல் இளமையும்) பொருள்களை ஆராய்தற்கு ஏலாத இளமைப் பருவத்தையும், (தீப்பிணியும்) கொடிய நோய்களையும், (மூப்பும்) கிழத்தன்மையையும், (பிரிவும்) உற்றாரைப் பிரிதலையும், (துயிலும்) மரணத்தால் வருந் துன்பங்களையும், (உறீஇ) அடைந்து, (பருவந்து) வருந்தி, (பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு) பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, (வித்துக் குற்று உண்பார் பலர்) உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

அப்பரின் தேவாரம்

அப்பர் பிரான், இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள் நம்மை இகழ்வதற்கு வழி வகுக்கும் முதுமை வரும் முன்னர் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
எழுது கொடியிடையார் ஏழை மென்தோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
என்னோடு பகை தான் உண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
ஊர் போலும் ஆரூர் தானே

முடிவுரை

நமது வாழ்நாளின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டும் அருமையான ஸ்லோகம். ஆழ்ந்து நம்மை சிந்திக்க வைக்கும் உண்மைகள்.

நாலு கால்களில் (இரு கை, இரு கால்) தத்தக்கா புத்தக்கா என்று தவழும் குழந்தையாக, பின் தானாக (சக்தியுடன்) இரு கால்களில் நடக்கும் இளைஞனாக, உச்சி வெளுத்து தண்டுகோல் கொண்டு மூன்று கால்களில் நடக்கும் முதுமைப் பருவம் தாண்டி, எமன் அழைத்து செல்லும் ஊருக்குப் போகையிலே எட்டு கால்களுடன் (நம் பிணத்தை தூக்கிச் செல்லும நால்வரின் கால்கள்) செல்லும் நாம், இறைவனை நினக்க தேரம் ஒதுக்கினோமா என்று ஆராய வேண்டும். இது தான் இந்தப் பண்ணின் சாரம்.
இதனைத்தான்  15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான் கபீர்தாஸ் , இந்தி மொழியில் கூறுகிறார்:

बीत गये दिन भजन बिना रे।
भजन बिना रे, भजन बिना रे॥

बाल अवस्था खेल गवांयो।
जब यौवन तब मान घना रे॥

लाहे कारण मूल गवाँयो।
अजहुं न गयी मन की तृष्णा रे॥

कहत कबीर सुनो भई साधो।
पार उतर गये संत जना रे॥

ஞானி கபீர் தாஸ்
“ஐயோ, உமது தியானம் இல்லாமலேயே என் உயிர் போய்விட்டது ஆண்டவரே! நான் என் குழந்தைப் பருவத்தை விளையாடிக் கழித்தேன், என் இளமையில் என் பெருமை என்னைத் தாண்டியது.நான் என் வாழ்வின் பெரும்பகுதியை (முக்கியத் தொகை) பயனற்ற நாட்டங்களில் இழந்துவிட்டேன், என் மனம் மற்றும் புலன்களின் ஆசைகள் இன்னும் தணியவில்லை”.

ஆய்வோம் உட்கருத்தினை. தயாராகுவோம் அடுத்த பதிவிற்கு. அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க