
வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு
https://soundar53.substack.com/podcast
முகவுரை
உடல், பொருள், காமம், வாழ்வு, இவை அனைத்தும் நிலையற்றவை என ஆதி சங்கரர் இதுவரை நமது மூட மனதிற்கு நான்கு செயல்முறைகளாக எடுத்துரைத்துள்ளார்.
நமது மனம் எவ்வளவு மூடமானது பாருங்கள். நான்கு முறைகளை உள்வாங்கியும், நம் மனது தளராமல் கூறுகிறது
“எனக்கு எதற்கு இந்த முயற்சியெல்லாம். எனக்கு உற்றார், உறவினர், சுற்றம், சூழம் எவ்வளவு பேர்கள் எனக்கு. ஏதாவது ஒன்று எனக்கு என்றால் ஓடி வந்து உதவுவார்கள் தெரியுமா? நதி எங்கே போகிறது? கடலைத் தேடி; நாளெங்கே போகிறது? இரவைத் தேடி; நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி; நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி” என்று கூறுகிறது நம் மனம். அல்லவா!
உண்மை தான். உற்றார்களும், உறவினர்களும் எவ்வளவு தடவை, எவ்வளவு நேரம் உதவுவர்? விடை கூற முடியுமா?
வாருங்கள். சங்கரனின் வைரக்கூடத்தில் ஐந்தாவது செயல்முறை காத்திருக்கிறது. அதைப் பெற்றபின், இந்தக் கேள்விக்கு பதில், கிடைக்கும்.
சமஸ்க்ருத ஸ்லோகம்
यावद्वित्तोपार्जन सक्तः
ஆதி சங்கரர்
स्तावन्निज परिवारो रक्तः |
पश्चाज्जीवति जर्जर देहे
वार्तां कोऽपि न पृच्छति गेहे ||
தமிழ் ஒலிபெயர்ப்பு
யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |
பச்’சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||
தமிழ் மொழிபெயர்ப்பு
பொருள்தனை ஈட்டும் ஆற்றல் வரைக்கும்
கொள்வர் சுற்றம் பற்றுடன் பிரியம்!
சக்தி இன்றி தளர்ந்திடும் தேகம்
கேட்பார் இல்லை யோக ஷேமம்!!
சமஸ்க்ருத சொற்களின் பொருள்
यावद् யாவத்3 - எது வரையில்/எதுவரைக்கும்
वित्त-उपार्जन-सक्तः வித்தோ பார்ஜன சக்த: வித்த உபார்ஜன சக்த: - வித்த - பொருள், உபாரஜன - ஈட்டுதல்/சம்பாதித்தல், சக்த: - சக்தி/ஆற்றல்
तावत् - தாவத் - அதுவரையில்/அதுவரைக்கும்
निज परिवारः நிஜ பரிவார: - சுற்றத்தார்
रक्तः ரக்த: - பற்றுடன் பிரியம்
पश्चात् பச்’சாத் - பின்னர் (பொருள் ஈட்ட இயலா நிலை வரும் பொழுது)
जर्जर देहे जीवति ஜர்ஜர ஜீவதி தே3ஹே - ஜீவதி - பொருள் ஈட்ட முடியா நிலையில் வாழ்தல், ஜர்ஜர - முதுமைக் காலத்தில் (உடல் தளர்ந்த காலத்தில்), தேஹே - உடலில்
कोपि न கோபின - ஒருவரும் இல்லை
गेहे gEhE - கே3ஹே வீட்டினில்
वार्तां पृच्छति வார்த்தாம் ப்ருச்சதி - வார்தைகள் கூற (நலம் விசாரிக்க, அன்புடன் பேச)
விளக்கவுரை
பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய். இதுதான் நேரடியான பொருள் இப்பண்ணிற்கு. இதன் விளக்கத்தை இப்பொது காணலாம்.
மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. குடும்பம், கணவன், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் போன்ற உறவுகளில், அவர்கள் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனிதன் பாதுகாப்பைத் தேடுகிறான். நம்மைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் நம் பரிவாரங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வில் நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்கின்றோம். அன்பும் பற்றுதலும் பரஸ்பரம் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இந்த பாதுகாப்பு/பற்றுதல்/காதல் என்ற உணர்வு, வாழ்நாளில் நிரந்தரமா, நிலையானதா?
நாம் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படும் வரை, நம் தொடர்புடைய வட்டங்களில் நமக்கு செல்வாக்கு/மரியாதை. நம் வாழ்வில், எத்தனை மேலாளர்கள்/உயர் அதிகாரிகள்/ ஆனையர்கள், அவர்கள் ஓய்வு பெற்ற/வெளியேறிய மறுநாளே, அவர்களால் பணியில் சேர்க்கப்பட்ட காவல் தொழிலாளியால் அதே அலுவலகங்களில், நுழைவதற்கு தடை செய்யப்படுகின்றனர் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன்களைக் காலத்தின் செயல்முறை குறைக்கும் போது, மக்கள் நம்மில் எந்த மதிப்பையும்/பயனையும் காண மாட்டார்கள். ஆனால் அதுதான் உலக இயல்பு அல்லவா?
அது போல, நம் பரிவாரம், நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உறவுகள் தொடர்கதை என்று நாம் கருதினாலும், அது சிறு கதையாக முடியாமல் இருக்க நம் பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன் உதவுகிறது என்பது உலக யதார்த்தம்.
முதுமைக்காலத்தில், திறன், உடல் நலக்குறைவு அடைந்து, பணம்/பொருள் சம்பாதிக்க வழி இல்லாத நேரத்தில், சொந்த வீட்டில் கூட நாம் ஒரு சுமை. அப்படி, மற்றவர்களைச் சாரந்து வாழும் போது அன்பின் தரம் மாறுகிறது.
அன்றாட வாழ்வில் இந்த யதார்த்தத்தை நிருபிக்க முதியோர் இல்லங்கள் / முதியோர் பராமரிப்பு நிறுவனங்கள், ஆசிரமங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றே போதுமானது.
ஒரு சிலர், வயது முதிர்ந்து நெடுநாள் நோய்பட்டு இருக்கும் நபரை வலியிலிருந்து விடுவிப்பதற்காக, இறைவனிடம் பிராரத்தனை; ஆனால் உண்மையில் அவர்கள் எந்த மதிப்பும் இல்லாத அந்த வயோதிகனிடமிருந்து விடுதலையை விரும்புகிறார்கள். அவர்கள் அதை நேரடியாக வெளிப்படுத்தவில்லை ஆனால் அதுதான் மனதில் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல். இதுவும் யதார்த்தமே.
ஆக, யாரிடமிருந்தும் அன்புக்காக ஏங்காதே. இதனை ஆங்கிலத்தில் Emotional Dependence என்பார்கள்.
உணர்வுகளை உலுக்கிடும் உலக நடப்பை நேரடியாக ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் உறவு நிலையாமை
திருமந்திரம்
பந்தல் பிரிந்தது, பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.
உடல் என்னும் அழகிய பந்தல் பிரிந்துவிட்டது. உயிர்நிலை அப்போது நிலை குலைந்துவிட்டது. உடலின் ஒன்பது வாயில்களும் ஒன்றாக மூடிக் கொண்டன. துன்பம் தருகின்ற, காலம் என்பதன் முடிவு வந்து சேர்ந்தது. அன்பு கொண்ட உறவினர்கள் அழுவிட்டு அகன்று சென்றார்கள்.
பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.
கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும். உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன். வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும்,நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.
ஆர்த்துஎழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர், ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே.
ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தவரும், மனைவியும், மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலை வரை வந்துவிட்டு நீங்குவர். வாழ்க்கைக்கு வேராகிய தலையினை மறைத்து எரி மூட்டுவார்கள். நீரில் தலை முழுகிவிட்டுச் செல்லும் இவர்கள் பந்தம் அற்றவர்கள்.
அப்பர் - பதிக எண்: 5.70 கொண்டீச்சரம் குறுந்தொகை
சுற்றமும் துணை நன் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்றமில் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால் பற்று மற்று இல்லையே
பொதுவாக உலகியலில் காணப்படும் காட்சியை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தங்களுக்கு பயனுள்ள வரை ஒட்டி உறவாடும் சுற்றத்தார், நம்மால் ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்ற நிலை வந்த பின்னர், நம்மைப் போற்றுவதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய செய்கைகளுக்கு, மனைவியும் பெற்ற மக்களும் விதிவிலக்கு அல்ல என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த நிலையை நாம் பல இல்லங்களில் காண்கின்றோம். பயன் கருதி பழகும் மாந்தர்கள், நாம் அவர்களுக்கு பயனாக இருக்கும் தன்மையின் அடிப்படையில் நம்முடன் பழகும் விதத்தில் மாறுபாடு கொள்கின்றார்கள். ஆனால் இறைவனுக்கு நம்மால் ஆக வேண்டிய காரியம் ஏதும் இல்லை. அதனால் என்றும், அவனைச் சார்ந்து வழிபடும் அடியார்களிடம் மாறாத அன்பு கொண்டு அவன் காப்பற்றுகின்றான், எனவே இறைவனை விடவும் சிறந்த பற்றுக்கோடு நமக்கு ஏதும் இல்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
ஔவையாரின் மூதுரை பாடல்
ஒருவனது செல்வம் குறைந்து வறுமை அடையும் நேரத்தில், நீர் குறைந்து வறண்டும் நிலையை அடைந்த குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் விலகுவது போல், சுற்றத்தார் அகன்று விடுவார்கள் என்று இந்த பாடல் ஔவை பிராட்டி கூறுகின்றார்.
அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல்
உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு
பட்டினத்தார் பாடல்கள்
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் உந்தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயான மட்டே வழிக்கே துணை
தினையாம் அளவு எள்ளளவாகிலும் முன்பு செய்த தலந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே. 7.
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 8.
மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழும் ஐந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 9.
உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே
வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”
சதுரகிரி சித்தர் பாடல்
காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!
இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது,இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்,அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு, மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்!
திரை இசைப்பாடல்கள்
உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்கும் …..வாலி
வீடு வரை உறவு
வீதி வரை மணைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ……. கண்ணதாசன்
முடிவுரை
உற்றார், உறவினர், சுற்றம், சூழம் இவர்களிடமிருந்து வரும் அன்பு நிலையற்றது. எதிர்பார்ப்புகளுடன் நிறைந்தவை அவை.
எனினும், நமக்கு நம் மேல் என்றுமே, எப்பொழுதுமே அளவிலா, அழியாத அன்பு. அந்த அன்பே இன்பமெனும் உணர்வாக வெளிப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை. அல்லவா?
அதைப்போல, ஒப்புயர்வற்ற பொருளின் (வஸ்து) மேல் நாம் வைக்கும் ஒப்புயர்வற்ற பேரன்பு (परमप्रेमं- பரம ப்ரேமம்), அதாவது, அழியா, மாறா இறைவனிடத்தில் செலுத்தும் அந்த அன்பும், அழியாதது. அந்த அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
எப்படி என்னுள் அழியாமல் எனக்கு இருக்கும் பதப்படுத்தப்படாத அன்பு, இயற்கையாக இன்பமாக(புன்னகையாக) வெளிப்படுகிறதோ, (“யத்ர யத்ர ஸுகம், தத்ர தத்ர ப்ரீதி) அப்படி இன்பத்தோடு உறையும் அன்பே இறைவன். அந்த அன்பு வெளிப்படுத்தப்படும்போது, இருமை வடிவம் (அன்பு, இன்பம்); வெளிப்படுத்தாவிடில் நம்முள்ளே தூய இருப்பாய், தூய உணர்வாய் இருந்திடும் அந்த பேரன்பே இறைவன்; அதுவே கோவிந்தம். அது யாண்டும் அழியாதது.
அதை புரிந்து கொண்டால், அதை வெளியில் தேடமாட்டோம். ஆகையால் கோவிந்தனைத் துதி. இது தான் இந்த பண்ணின் சாரம்.
பின் குறிப்பு
“செல்வம், புகழ் மற்றும் பெயர் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாக, அதன் மேல் உள்ள பற்றினை பதப்படுத்த வேண்டும் என ஆதிசங்கரர் கூறுகிறார். செல்வத்தையும் புகழையும் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில் அது நம்மிடம் இருக்கும்போது அதை அனுபவிக்க வேண்டும். ஆனால் நாம் அவற்றின் மீது வைக்கும் மதிப்பு/பற்றினை, நிரந்தரமான ஒன்றிலிருந்து பெற வேண்டும். அதுதான் இறை நோக்கமுடைய தூய மனம்.
ஏனெனில், பட்டினத்தார் கூறிய போல “ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவி என்று நாமம் படையாதிரு”க்க, அந்த தூய மனத்தை இறை நோக்கி செலுத்திப்பெரும் ஆன்மீகச் சிந்தனைகளே நம்மிடம் எஞ்சியிருக்கும் சொத்து, காலனின் அழைப்பிதழ் வரும் பொழுத”.
ஆக, உடல், பொருள், காமம், வாழ்வு, உறவு இவை அனைத்தும் நிலையற்றவை என்று தெளிவாக, ஐந்து செயல்முறைகளால் ஆதி சங்கரர் நம் உள் உறைந்த வைராக்கியமெனும் வைரக்கல்லினைத் தோண்டி, பட்டை தீட்டி மெருகேற்ற முயல்கிறார்.
ஆறாவது செயல்முறையில் சங்கரர் என்ன செய்யப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.அதுவரை…..