தன்னையாளும் தலையோனே, அகில முதலோனே தங்களிச்சை தணிந்திட தம்முன்னின்று துதிபாடும் அயன் அமரன் அனைவரும் ஆவலுடன் பொறுத்திருக்க அற்பபுழு அடியேன் அதிவிரைவில் புகலிடம் நாடுதல் எளியோர்பால் உம்கருணைமீதான சிரத்தையாலன்றோ !! 21
சொற்களின் பொருள்
ஸ்வாமிந் - தன்னை ஆளும் தலைவனே விஶ்வாதீஶ்வர - உலகம் ஆள்போனே ஸ்வ இப்ஸித ப்ரார்தநாய - தங்களின் விருப்பம் நிறைவடைய வேண்டி அக்ரே - முன்நின்று தோஷயத்பி: - துதிகளால் மகிழ்விக்கின்ற ப்ரஹ்ம உபேந்த்ர ப்ரப்ருதிபி: அபி - பிரம்மன், இந்திரன், முதலியோராலும் அவஸர: - அருளிடும் காலம் சிரம் - நீண்ட காலமாக ப்ரதீக்ஷ்ய: - எதிர்பார்கப்படுகின்ற த்வாம் - உன்னை கீடகல்ப: - புழுவாகிய நான் த்ராக் ஏவ - திடீரென்று ஶரணம் - புகலிடம் ப்ரார்தயே - வேண்டுவது யத் இஹ - என்பது யாதொன்று உண்டோ தத் - அது தீநே - எளியோன் என்னிடத்தில் தவ - தங்களுடைய க்ருபாம் - கருணையின்மீதுள்ள விஶ்வஸ்ய ஏவ - நம்பிக்கையால் மட்டுமே
விளக்கம்
ஏ ஸர்வேசா! ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்கள் கூட உன்னிடம் தங்களுடைய அபீஷ்டங்களைத் தெரிவித்து வேண்டிக்கொள்ளும் பொருட்டு உன் வாயிலில் வந்து நின்று துதி செய்து உன்னைக் கண்டுகொள்ள ஸந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கும் பொழுது அல்ப பிராணியாகிய நான் நினைத்த மாத்திரத்தில் உன்னை அழைத்து எனக்குச் சரணமளிக்கும்படி வேண்டுகின்றேனே! இந்த உரிமை எனக்கு எப்படிக் கிடைத்ததென்றால் நீ தீனர்களிடம் தயையுடையவன் என்ற பெரியோர்களின் மொழியை நம்பியே யல்லாது வேறு எவ்விதமாகும்?
சிவானந்த லஹரியில் (99) ஆதி சங்கரர்
அன்னம் கேழல் வடிவெடுத்து கீழ், வான் உலகம் தேடி, இயலாது
அயர்ந்து அமர்ந்த அயன் மாயவன் அவருக்கு, அடிமுடி காட்டாது
அடியேன் கண்களுக்கு காட்சி எளிதென கொடுத்திட்டாய் அன்றோ?