ஹிரண்ய கர்ப்பன் – ஒரு கண்ணோட்டம்

முன்னுரை

பிதாமஹர், வாலறிவன், ஹிரண்யகர்ப்பர், அப்ஜயோனி, பிரஜாபதி, விஸ்வஸ்ரு, விதாதா, விதி, கமலோத்பவ, விரிஞ்சி, அண்டஜ என்னெல்லாம் அழைக்கப்படும் நான்முகக் கடவுளான பிரம்மனைப் பற்றியது தசகம் 7. இந்த தசகத்தின் ஸ்லோகங்களை அறிய முற்படுமுன், பிரம்மனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் தேவை நமக்கு. அடியேன் அறிய முற்பட்டதை தசகத்தின் முகவுரையாக அளிக்கிறேன்.

வேதாந்தப் பார்வை

பரமார்த்திகா நிலையில் நிர்குணனாக இருக்கும் பரப்பிரம்மன், மாயையால் பிரதிபலிக்கப்பட்டு, வரையரைகளாலான (அறிபவன்/அறிவது வேறுபாடு, காலம், இடம் போன்றவைகள்), வெளிப்பாடுடைய சகுண பிரம்மனாகிறான். மாயையின் தொடர்புடைய அந்த சகுணப் பிரம்மனின் வெளிப்படா நிலையில் ஈஸ்வரன் (காரணப் பிரம்மன்) என்றும், வெளிப்படும் நிலையில் (manifested state) ஹிரண்யகர்பா, பிரம்மா (நான்முக கடவுள்), காரியப் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறான். 

ஹிரண்யகர்பமே வெளிப்படும் முதல் படைப்பு என்று மறைகள் கூறுகின்றன. வித்தெனும் உள்ளார்ந்த நிலையில், வேர்,  தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகளென மரம் வெளிப்படுவதைப்போல “காரிய ப்ரம்மன்” (வடிவுடை பரமன்) எனும் “ஹிரண்யகர்ப்பா”, மாயையின்  விக்க்ஷேப சக்தியால் வெளிப்படுகிறான்.

ஹிரண்யம் என்றால் பொன்/தங்கம் என்று பொருள்.  அறிவும் பொன்னும் ஒளிமயமானது என்பதால், இங்கே அதற்கு அறிவு என்ற பொருள். பொன் போன்ற ஒளி படைத்த அறிவால், அறியாமையெனும் இருள் நீங்கியது என்பர். கர்ப்பம் என்றால் கருப்பப்பை என்று பொருள். இந்த இடத்தில் அதற்கு உள்ளே என்ற பொருள்.  ஹிரண்ய கர்ப்பம் என்றால், அதனுள் ஒளிமயமான அறிவு என்ற பொருள். முடிவற்ற அறிவு என்பார்கள். அழியா அறிவதனை உள்ளடக்கிய கருவறை. 

அதாவது, அனத்தின் எல்லைகளையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிரினங்களையும், அனைத்து அண்டங்களையும் அவைகளின் நுண்ணிய நிலையில் அடக்கிய கருப்பை என்று பொருள். இப்படி, முற்றிலும் வெளிப்பட்ட அனைத்து அண்டங்களின் நுண்ணிய நிலையை உள்ளடக்கிய கருப்பையே ஹிரண்யகர்ப்பம் எனக் கூறப்படுகிறது. காரிய பரமனின் முதல் வெளிப்பாடு என்பதனால்,  “ப்ரதமஜ” அல்லது “முதல்பிறவி” என்றும் பொன் கருவரை அழைக்கப்படுகிறது. இதற்கான சமஸ்க்ருத தொழில்நுட்பச் சொல் “ஸம்பூதி”. 

அறிவியல் (பௌதீக) கண்ணோட்டம்

பள்ளித் தோழன் ஒருவனை, நீங்கள் ஒரு மிக நீண்ட காலம் (உதாரணத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு) பிறகு ஒரு கூட்டத்தில் பார்க்கும் போது என்ன சொல்வீர்கள்? 

1. “அதோ ! என்னுடைய 5ம் வகுப்பு பள்ளித் தோழன். அதே அங்க அடையாளம். ஐம்பது ஆண்டுகளானாலும் நான் மறக்கவிலை. அவன் பெயர் தாமோதரன்” என்று கூறுவீர்களா?

அல்லது

2. “இடைவிடா தொடர்ச்சித் தாக்குதலால் எண்ணற்ற போட்டான்கள் என் விழித்திரையில் விழுந்து, பார்வை நரம்புகள் வழியாக மின்னனு அலையாய் சென்று தாலமஸ் பின்னுள்ள இருமேடு சென்று அங்கிருந்து என் பிரதானமான காட்சிப்புறனி வழியாக, ஸட்ரையேட் காட்சிப்புறனியில் வண்ணங்களை அடையாளம் கண்டு, பின் பொருட்களை நினைவுக்கு கொண்டுவரும் மூளையின் முன்பகுதி சென்று ஆராய்ந்து என் பள்ளித் தோழன் தாமோதரனை தான் கண்டேன்” என்பீர்களா?

இரண்டும் சரியான கூற்று தான்; முதல் கூற்று பொருள் என்று கூறமுடியாத மனம் ரீதியானது, இரண்டாவது பௌதீகப் பொருளான மூளை ரீதியானது. 

பொதுவாக, மனம் என்பது நம் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், நம்பிக்கைகளின் ஒருபொருட் சொல்லாக கருதப்படுவது. மனம் பொருட்களால் ஆனது அல்ல. எனினும் மிகவும் சக்தி வாய்ந்தது.

மண்டை ஓட்டுக்குள், மூன்று பவுண்டு எடையுள்ள பாலாடைக்கட்டி போன்ற அமைப்பே,  மனம் என்று நாம் கூறுவதன் பொருள் வடிவமான மூளை என குறைந்த பட்சம் விஞ்ஞானிகளாவது கருதுகிறார்கள்.  நமக்கு சிந்தனையோ அல்லது உணர்வோ தோன்றினால்,  அதற்கு மூளையே காரணம் என்றும், மூளை ந்யூரான்கள் வழி மின்னணு அலைகளச் செலுத்தி நரம்பியல் ரசாயனங்களை உற்பத்தி செய்வதால் அந்த சிந்தனையோ உணர்வோ ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். நரம்பியல் அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலானோர், மனம் என்பதற்கு தனி இருப்பு என்று ஒன்றுமில்லை என்று வலியுறுத்துகின்றனர். அது மூளையின் ஆற்றலே தவிர அது சுயேச்சையாக இயங்கும் தன்மை கொண்டதல்ல என்றும் கூறுகின்றனர்.

ஆக, அறிதிறன் நரம்பியல் (cognitive neuroscience), மனித மனதின் உயிரியல் அடித்தளங்களை (biological foundations) கண்டறிய முற்படுகிறது. எப்படி மனச்செயல்பாடுகள் (mental operations) மூளையின் தகவல் செயல்முறை அமைப்பிலிருந்து (information processing architecture) உருவெடுக்கின்றது என்பதை அறிவது ஒரு நோக்கு. எப்படி? மனித மனம், மூளை இரண்டையும் தனிநிலையில் ஆய்வதா அல்லது வேறு பார்வையில் ஆய்வதா? 

நம்முடைய அன்றாட உலகில் நாம் நமக்குச் சொந்தமான அனுபவங்களிலிருந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கண்டு,  சமூக உலகில் பங்கேற்று, , நெறிமுறைகளிலிருந்து வழி தேடி, அழகான அனுபவங்களில் மகிழ்ந்து, அருமை நண்பர்களுடன் பரிவுடன் கலந்து, இந்த அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மனித மூளையை தனித்த ஒருவரின் நிலையிலிருந்து பௌதீக ரீதியில் பார்ப்பது எப்படி சரியான அணுகுமுறையாகும்?

அரோன் பார்பே, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மன இயல் பேராசிரியருடன் இன்னும் இருவரும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில் 

“அறிதிறன் நரம்பியலில் (cognitive neuroscience) பொதுவாக ஒருவரின் அறிவின் பிரதிநிதித்துவம் அவரது மூளையில் என்றும், அது ஒருவொருவருக்கிடையே நேருக்கு நேர் பரிமாற்றப்படுகிறது என கருதப்படுகிறது.  காந்த அதிர்வு அலை வரைவு (MRI), கதிரியக்கத் துழாவல் (CT Scan) போன்ற ஆய்வுகள் தனிப்பட் ஒருவரின் மூளயைத் துழாவி அதன் செயல்பாட்டை யூகிக்க முடியும். எங்களின் ஆய்வு அத்தகயை கருத்து சில முக்கியமான நிகழ்வுகளில் சரியில்லை என்பதை நிருபனம் செய்கிறது. இதை ஊர்ஜிதப்படுத்த, சமீபத்தில் ஒரே சமயத்தில் பலர் ஒரே விஷயத்தை சிந்தனை பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்களின் மூளைகளை அதே சமயத்தில் காந்த அதிர்வு அலகளைப் படம்பிடித்த போது, அவர்களின் மூளைகளின் அதே பகுதிகளில் மின்னணு அலைகளின் ஆக்கம் தெரிந்தது. ஆக, இந்த அறிதிறன் நரம்பியலின் மிகப் பெரிய சவால் என்னவென்றால், ஒருவரின் மூளையில் உறையாமல் அடுத்தவரிடமோ, சமுகத்திடமோ  வெளிக்குத்தகையிலிருக்கும் (outsourced) அறிவை எங்கனம் நாம் அறியமுடிவது என்பதே. ஒருவரின் அறிவாற்றல் என்பது பௌதீக உலகிற்கும், அடுத்தவர்களின் மூளைக்கும் பரவியுள்ளது”  என்று கூறுகிறார்கள்.

மேல்கூறிய கருத்துக்கள், ஆய்வுகள் நம்மை மற்றொரு முக்கியமான தத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதுவே கூட்டுணர்வு (collective consciousness) என்பதாகும்.  கார்ல் ஜங் எனும் புகழ் பெற்ற மனநிலையியல் நிபணர், ஒருவருக்கொருவருடனும், அவர்களின் முன்னோர்களுடனும் தங்களது பகிர்ந்த அனுபவங்கள் மூலம் மனிதர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என நம்புகிறார். நம் உள்ளுணர்வு என்பது, நம் சொந்த அனுபவங்கள், நினைவுகள் மட்டுமில்லாமல், மனித குலத்தின் அனுபவங்களும் நினைவுகளும் நிறைந்த களஞ்சியம். அனைத்து மனிதர்களின் உள்ளுணர்வுகளும் இப்படியே. இக்கூட்டுணர்வு மூலமே நாம் உலக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோம் என கார்ல் ஜங் கருதுகிறார்.

மனம் என்பது பொருளான மூளையின் செயல் அல்லது வினைப் பரிமாணம். கூட்டு மனம் (collective mind) என்பது, பகுதிகள்-முழுமை, தனிநபர்-சமூகம், நிலையான தன்மை-மாற்றம், பகுத்தறிவு-படைப்பாற்றல் இவைகளுக்கிடையே உள்ள எல்லைகள்/வேற்றுமைகளைக் கருதாமல், உறவுகளை ஏற்படுத்துகிறது.  அப்படிப்பட்ட கூட்டுமனம் ஒவ்வொருவரின் மனநிலையையும், கூட்டான மனநிலைக்குதவியும் அந்நிலைகளை புரிந்து கொள்கிறது. 

கூட்டு மனம் / கூட்டு உணர்வைப் படித்தறிய உலகம் முழுவதும் விரிவான விஞ்ஞான ஆய்வு நடக்கிறது.

உயர்நிலை தத்துவ கண்ணோட்டம்

இதுவரை பௌதீக அளவில், உலகத்தில் மனம், மூளை, உணர்வு என்பவைகளப்பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம் இப்பொழுது, இவைகளை உயர்நிலை தத்துவ ரீதியில் (உலகத்திலிருந்து அண்டங்கள் அடங்கிய ப்ரபஞ்ச நிலை) ஆராய்வோம்.

இரவில் விண்ணை நோக்குங்கள். எத்தனை நட்சத்திர மண்டலங்கள, கோளங்கள்? இந்த பிரபஞ்சத்தை நன்றாகப் பாரத்தபின் இவ்வினாக்கள் நம் மனதில் எழும்.

  1. இந்த நட்சத்திரம் சரி, இது தவறு; இந்த மண்டலம் சரியாக அமைந்துள்ளது, இது இல்லை என்று ஒப்பிடுகிறோமா?
  2. விண்மீன் திரைகளில் ஒன்றின் வெளிப்புற விளிம்புகளில் உள்ள ஒரு சிறிய (!) நட்சத்திரத்தை சுற்றி சுழலும் ஒரு முக்கியமற்ற (!) மண், நீர் கலந்த ஒரு பந்து மீது நாம் வாழ்கிறோம் என்று சிந்திக்கின்றோமா?
  3. உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் தெளிவாக அமைக்கப்பட்ட செயல்முறைகளை நாம் காண்கிறோமா?
  4. இவைகளையெல்லாம் ஊடுருவி, சுற்றிப் பிணைக்கும் பேருணர்வு எனும் நூலை நாம் காண்கிறோமா?

இவ்வினாக்களுக்கு சரியான விடைகள் உண்டோ இல்லையோ தெரியாது; அது ஒவ்வொருவருன் மனநிலையைச் சார்ந்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. இவற்றின் பின், எல்லாவற்றிலும் நாம் ஒரு ஒழுங்கு, ஒரு தர்மம்  (இந்த பிரபஞ்சத்தை கையாள்வதில் நமது செயல்களைத்தவிர)  பார்க்கிறோம், இல்லையா? இப்படிப்பட்ட ஒழுங்கு, தர்மத்தை எப்படி இப்பிரபஞ்சம் கடைப்பிடிக்கிறது? இந்த உத்தரவு எங்கிருந்து வருகிறது?  எங்கோ கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு ஒன்று இருந்து  இதை நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும் உறுதி அல்லவா?  என் வார்த்தையை குறிக்கவும். நான் “கூட்டு மூளை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

என் வரையறுக்கப்பட்ட அறிவைப் பொருத்தவரை அந்த கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு (சமஷ்டி மனம்) என்பதனையே பொன் கருவறை என அழைக்கிறோம். வேதங்களின்படி இதுவே முதல் படைப்பு. 

பொன் கருவறை என்பது அனைத்தின் ஒன்று கூடிய மனம் (புத்தியும் சேர்ந்த) என்பதனால், அந்த அனைத்து நுண்நிலைகளின்  ஒருமித்த நிலை, உடல் மன வளாகத்திலிருக்கும் பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே அப்பொறிபுலன்களுக்கு அக்கருவறை புலப்படாது. அந்நிலையில் மாயையின் வெளிப்படுத்தும் (உந்தும்) சக்தியினால், மன உடல் வளாகமுறை ஜீவன், தானே காரணம், தானே நுகர்வோன் என எண்ணி நுண்நிலை இருப்புகளை பருநிலை உலகாகவும், பொருள்களாகவும் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தியதோடல்லாமல், அப்படி வெளிப்பட்ட உலகமும், பொருட்களும் நிலையானது என்ற தவறான புரிதலும் கொள்கிறது.

ஸம்பூதி உபாஸநா 

ஹிரண்ய கர்பத்தை தியானம் செய்வதே ஸம்பூதி உபாஸநா எனப்படும்.

ஸ்வாமி பரமாரத்தானந்தாவின் போதனைகளை இங்கு மேற்கோளாக காட்டுகிறேன்:

“ஹிரண்யகர்ப்பம் என்பது பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டது, அவைகளால் அதனை உணரமுடியாது என்றால் அந்த ஹிரண்யகர்பத்தை எப்படி தியானிப்பது? அதற்கு ஒரு யுக்தி உள்ளது.   ஒரு சின்னத்தை (ஆலம்பனம்) பயன்படுத்துவது. கூட்டு மனதின் (சமஷ்டி மனம்) சின்னமாக நம் மனதை (வ்யஷ்டி மனம்) பயன்படுத்துவது. அதாவது, கவனைத்தை நம் மனம்மேல் திருப்பி தியானிப்பதுவே ஹிரண்யகர்ப்ப தியானம்”. இதுவே ஒரு  எளிய விளக்கம்.

சரி, நம் மனம் எங்குள்ளது?  நமது சாஸ்த்திரங்கள், மனது மூளையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று சொல்கின்றன. மூளை பொறி புலன்களால் அறியக்கூடிய ஒரு பருஉடல் உறுப்பு. மனம் காண இயலா ஒரு நுட்பமான கருவியாகும்.  மரணத்தின் போது, மூளை உடலுடன் எரிந்து சாம்பலாகும். மனம் பிழைத்து, உடல் எரிந்தபின்னர் இன்னொரு உடலைத்தேடி அலையும்.  அறிவியல் இந்த கருத்தை ஏற்கவில்லை.

மறைகள், நமது ஐம்புலன்களுக்கும் (இந்திரியம்) ஏற்ப உடலில் ஐம்பொறிகள் (கோலகம்) உள்ளதை உரைக்கின்றன. உதாரணமாக நமது பார்வைக்கு கண்களே கருவி. குருடர் என்று நாமழைக்கும் மனிதருக்கு பொறிகள் (கோலகம் – கண்கள்) உண்டு புலன் (இந்திரியம் – பார்வை) இல்லை. அதைப்போல நமது மனதின் பொறி (கோலகம்) இதயம் (ஹ்ருதயம்) என்று கூறுகிறர் ஆதி சங்கரர். விழிப்பு நிலையில், மனம் உடலை மேவி பணி புரியும். ஆழ் உறக்க நிலையில் உடலிலிருந்து விலகி அதன் இல்லமான (கோலகம்) இதயத்திற்கு திரும்பும்.  ஹிரண்யகர்பம் என்பது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கூட்டு மனம்”.

ஸம்பூதி உபாஸநாவின் பலன்கள்

அடிப்படையில் இந்த வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் நுட்பம், தியானம். இப்படி ஹிரண்யகர்ப்ப (ஸம்பூதியை) தியானிப்பவர்கள், பிரபஞ்சத்தை வழிபடுகிறார்கள். அதாவது அனைத்துப் படைப்புகளும் ஒன்று, இயற்றகையெனும் ப்ரக்ருதியும் ஒன்று என்ற அடிப்படை உணர்வுடன் வழிபடுவது. அந்த உணர்வில் அவர்களும், இயற்கையும் பிரபஞ்சமும் வேறு என்று அவற்றை வழிபடுகின்றனர். அதாவது, இறையும் நானும் வேறு என்ற உட்கருத்துடன் வழிபடுவது.

இவ்வழிபாட்டின் மூலம் இஞ்ஞானிகள் ஓப்பீட்டளவில் அழிவிலா நிலை  அடைந்தாலும், இயற்கையுடன் கலந்திணைந்து மரணத்தைக் கடந்து மறுபிறவி தவிர்ப்பரே (க்ரம முக்தி) அன்றி வீடுபேறு அடைவது என்பது இவ்வகை வழிபாட்டில் இயலாதது. ஏனெனில் அந்த தியானத்தின் உட்கருத்தில் இருமை உளது (நான் வேறு, இறை வேறு). 

அந்த வழிபாடு புரியும் ஞானிகள், பிரம்ம லோகம் என்னும் இறை உலகத்தை ஷுக்ல கதி என்ற பாதை வழி அடைவர் என்று மறைகள் கூறுகின்றன. அந்தப்பாதை இதயத்திலிருந்து தொடங்குவதாய்  மறைகள் கூறுகின்றன. மரணத்தின் போது (உடலை விட்டு உயிர் பிரியும் போது) நுண்ணுடலும், காரண உடலும் இதயத்திற்கு திரும்புகின்றன. அங்கிருந்து தோன்றும, 101 நாடிகளில் ஒன்றான சுஷும்ன நாடி வழியாக மேல்நோக்கி சென்று கபால உச்சி வழியாக, சூரியன் வழியாக பிரம்ம லோகம் அவைகள் அடைந்திடும் என்று மறைகள் உரைக்கின்றன. இதைப்பற்றிய விபரங்கள் இந்த முன்னோக்கில் அடங்க வில்லை என்பதை அறிக.

பிரம்ம லோகம் அடையும் இஞ்ஞானியர் அட்டமா சித்திகளை அடையக்கூடும். எனினும், அவைகளால் அடையும் மகிழ்வும் நிலையற்றதே என மறைகள் கூறுகின்றன.

தசகம் 7 – முதல் ஸ்லோகத்தை அடுத்த பதிவில் காண்போம்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !