உன்னை அறிவாய் – மே தின கவிதை

ஒவ்வொரு முறையும் நான் நியுயார்க் நகரில், மன்ஹாட்டனிற்கு வரும்பொழுதெல்லாம், முதலில் என் மனதில் நிலைப்பது ஒரே ஒரு காட்சிதான்.

விண்ணைத் தொடுமளவு உயர்ந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில், தலையைக் கிறுகிறுக்க வைக்கும் உயரத்திலே, மணிக்கு ஐந்திலிருந்து பத்து மைல் வேகத்தில் அடிக்கும் காற்றையும், நீர் உறையும் குளிர் காலத்திலும், உடல் வேகும் கோடை காலத்திலும், நான்கு இரும்புக் கயிற்றில் தொங்கும் தொட்டிலில், காலை முதல் மாலை வரை வாழ்ந்து, உழைக்கும் தொழிலாளிகளைக் கண்டு ஒருவித அச்சத்துடனும் மாளா வியப்புடனும் நான் காணும் காட்சியே அது.

இம்முறை, அத்வைத வேதாந்த மாணவனாகிய எனது உணர்ச்சிகளை வெளிக்கொட்டுவது என்ற முடிவின் விளைவே இக்கவிதை



நான்கு கரும்பொன் கயிற்றினிலே 
நானூறடி தாண்டிய உயரத்திலே
நாடிகள் நலித்திடும் வாதமனிலே
ஆடிடும் காலிலாத் தொட்டிலிலே
பாழும் வயிறுப்பாட்டினால் வாழ்ந்தே
நாளும் உழைத்திடும் நண்பர்களே!
பாவியெனக் கூறவா இவ்வுலகினையே
ஆவிபறக் கஞ்சிதரும் அன்னையெனவா
பாரெங்கு கேட்டிடினும் பதிலில்லையே !
காலிலாக் கட்டில் சேரும் காயத்திற்காகவே
காலிலாத் தொட்டிலில் ஆகாயத்திலே ஆடியே
வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டியுளதே!
மாயை எனும் வாழ்வுதனில்
இது தேவை என்றிடினும்
தேவை நமக்கு ஒன்றே
அது ஆத்மஞானமெனும் மெய்யறிவே !!

பொன். எழிலரசன்

கர்ம யோகிகள் அனைவருக்கும், உழைப்போர் தின வாழ்த்துகள்!

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !