ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 5

ஸ்லோகம் 5 

त्वं वेदान्तैः प्रथितमहिमा गीयसे विश्वनेतः
त्वं विप्राद्यैर्वरद निखिलैरिज्यसे कर्मभिः स्वैः ।
त्वं दृष्टानुश्रविकविषयानन्दमात्रावितृष्णै-
रन्तर्ग्रन्थिप्रविलयकृते चिन्त्यसे योगिवृन्दैः ॥ ५॥
த்வம் வேதாந்தை: ப்ரதிதமஹிமா கீயஸே விஶ்வநேத:
த்வம் விப்ராத்யைர்வரத நிகிலைரிஜ்யஸே கர்மபி: ஸ்வை: ।
த்வம் த்ருஷ்டாநுஶ்ரவிகவிஷயாநந்தமாத்ராவித்ருஷ்ணை-
ரந்தர்க்ரந்திப்ரவிலயக்ருதே சிந்த்யஸே யோகிவ்ருந்தை: ॥ 5॥

தமிழாக்கம்

வேதாந்தம் பலவாறு புகழ்பாடும்   
வேண்டும் வரமளி உலகநாதன் நீ!
வேதியருட்பட உலகோர் அவரவர்
வினைவழி வேண்டப்படுவோன் நீ!
அகமுடிச்சு அறவே அழிந்திட 
இகபர இன்பதாகம் அழித்திட்ட
யோகியர் புரி தியானமே நீ !! 5

சொற்களின் பொருள்

விஶ்வநேத: – உலகை வழிநடத்திச் செல்பவரே

வரத: – வரமளிப்பவரே 

த்வம் – நீ (தாங்கள்) 

வேதாந்தை: – உபநிஷத்துகளால் 

ப்ரதிதமஹிமா (விவித மஹிமா) – பல்வேறு விதமான மகிமைகளை உடையவராக 

கீயஸே – போற்றிப் புகழ்ந்து பாடப்படுகிறீர் 

விப்ராத்யைர் – அந்தணர் முதலான 

நிகிலைர் – அனைவராலும் 

ஸ்வை: – அவரவர் 

கர்மபி:- கர்மங்களால் 

இஜ்யஸே – வழிபடப்படுகிறீர்

அந்தர்க்ரந்தி – அக முடிச்சுகள், 

ப்ரவிலயக்ருதே – நன்கு அவிழும் பொருட்டு 

த்ருஷ்ட அநுஶ்ரவிக விஷயாநந்தமாத்ரா – இவ்வுலக அவ்வுலக புலனின்பப் பொருட்களில் 

வித்ருஷ்ணைர் – வேட்கையொழிந்த 

யோகிவ்ருந்தை: – யோகியர் கூட்டங்களால்

சிந்த்யஸே – நன்கு தியானிக்கப்படுகிறீர் 

பொருள் விளக்கம்

துன்பம் கலவா இன்பமதனை எப்பொழுதும் வேண்டிடும் நம் அனைவரின் இலக்கு இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத பேரின்பமான இறைவன் ஒன்றே. ஆழ்மனதில் எப்பொழுதும் இறைநினைப்பு இருக்க வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் கருப்பொருள்.

இப்பொருளை விளக்கிட, அப்பைய தீக்‌ஷிதர் 

  1. இறையின் மஹிமைகள் உபநிஷத்துக்களால் பலவாறு போதிக்கப்படுகின்றன என வேதங்களை ப்ரமாணமாக முதலில் கூறி 
  2. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்ம யோகத்தின் கருத்தை உள்வைத்து உலகோர் வணங்குவர் உத்தமனை என்று அறிவுரைத்து,
  3. இருமை வகையறிந்து ஈண்டு அறம் பூண்டவர் தியானிப்பதும் அவனையே என்று எடுத்துக்கூறி ஞானயோகம் வழி அவனை அடைவது 

என்று வாழ்வதனில் பேரின்ப இலக்கை அடைய, இறையினையே இடைவிடாது நாடிட வேண்டும் என்று கூறுகிறார் அப்பையர்.

இந்த ஸ்லோகத்தில்,இறைவனை இரண்டு விளி வேற்றுமைச் சொற்கள் (ஸம்போதன ப்ரதமா விபக்தி ஏக வசனம்) கொண்டு அழைக்கிறார்:

1. “விஶ்வநேத:” 

இந்த சொல், உலகை வழிநடத்திச் செல்பவரே என்று பொருள்படும். இந்த வழிநடத்தலை விளக்கிட

ஆக்கி அளித்துத் துடைக்கும் தொழில்

அத்தனை வைத்தும் எள்ளத்தனை யேனும்

தாக்கற நிற்கும் சமர்த்தன் உள்ள – சாக்‌ஷியைச்

சிந்திக்கத் தக்கது தோழி

என்ற தாயுமானவர் பாடல் போதுமானது.

2. ‘வரத” 

வரம் என்பது தேரந்தெடுத்தலைக் குறிப்பது. இங்கே அடியார்களின் தேர்வைக் குறிப்பது. அதாவது, இறைவன், நான் தேரந்தெடுத்ததை அருள்பவர் எனப்பொருள்படும். இதனை பல ஞானியர் எடுத்துரைத்துள்ளனர்:

  1. “எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.  
  2. “வேண்டத்தக்கதை அறிவோய் நீ” என்றார் மாணிக்கவாசகர். 
  3. “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்றார் நாவுக்கரசர். 
  4. “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை” என்றார் சுந்தரர். 
  5. செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கிறோம் – அவன் எங்களது அறிவினைத் தூண்டி நடத்துக “ என்றான் பாரதி.
  6. சரியானதைத் தேரந்தெடுப்பதற்குரிய நல்ல புத்தியைக் கொடு என்று பிரார்த்திப்பது காயத்ரீ மந்திரம்.

இந்த ஸ்லோகத்தில் “வேதாந்தை: விவித (ப்ரதித) மஹிமா கீயஸே” என்ற சொற்றொடரை  “ வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழந்து அகன்ற நுண்ணியனே” என்றார் மாணிக்கவாசகர்.

அது போல, “விப்ராத்யைர்வரத நிகிலைரிஜ்யஸே கர்மபி: ஸ்வை” என்ற சொற்றொடருக்கு, பகவத் கீதையில் (18.45) : 

ஸ்வே ஸ்வே க1ர்மண்யபி4ரத1: ஸம்ஸித்3தி4ம் லப4தே1 நர: |
ஸ்வக1ர்மனிரத1: ஸித்3தி4ம் யதா2 வின்த3தி1 த1ச்1ச்2ருணு ||

பகவத் கீதை 18.45

மனிதர்கள் தங்கள் உள்ளார்ந்த குணங்களால் பிறந்த தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், முழுமையை அடைய முடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு பரிபூரணமாக முடியும் என்பதை இப்போது என்னிடம் கேள்

என்ற கண்ணனின் அறிவுரை விளக்கமாகிறது. ஒவ்வொருவரும் தங்களது கடமைகளின் மூலம் கடவுளை வழிபடுகிறார்கள். கடமைகளை கடவுள் வழிபாடாகக் கருதி செய்ய வேண்டும். கடவுளுடன் தொடர்புபடுத்தப்பட்ட செயல்களுக்கே கர்மயோகம் என்று பெயர். அது நம்முடைய மனதை பக்குவப்படுத்தும். “யாதாயினும் தொழில் செய்வோம், யாதும் அவன் தொழிலாம்” என்றான் பாரதி.

“அந்தர்க்ரந்தி” எனும் அக முடிச்சுகள் என்ன?  முடிச்சு என்பது அறியாமையினால் ஏற்படும் த்ருட பந்தம் – strong attachment  என விளக்குகிறார் ஆதி சங்கரர்.  அதாவது, என்னைப் பற்றிய, ப்ரபஞ்சத்தைப் பற்றிய, நான் உடல், செல்வம் என்னுடையது, நான் இன்பமாக இருக்கிறேன், நான் துன்பமாக இருக்கிறேன் போன்ற விளைவாகிய எண்ணங்கள்அனைத்தினால் (நல்லது கெட்டது உட்பட, வித்யா, அவித்யா மாயையின் குணங்கள்) முடிச்சுகள் ஏற்படுகிறது. இதனின் விளக்கத்தை

  1. முண்டக உபநிஷத் 2.2.9
  2. கடோபநிஷத் 2.3.15
  3. அஷ்டாவக்ர கீதை – 18.87-88

காணலாம்.