ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 23 – வழித்துணை

ஸ்லோகம் 


त्वामेवैकं हतजनिपथे पान्थमस्मिन्प्रपञ्चे
मत्वा जन्मप्रचयजलधेः बिभ्यतः पारशून्यात् ।
यत्ते धन्याः सुरवर मुखं दक्षिणं संश्रयन्ति
क्लिष्टं घोरे चिरमिह भवे तेन मां पाहि नित्यम् ॥ २३॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

த்வாமேவைகம் ஹதஜநிபதே பாந்தமஸ்மிந்ப்ரபஞ்சே
மத்வா ஜந்மப்ரசயஜலதே: பிப்யத: பாரஶூந்யாத் ।
யத்தே தந்யா: ஸுரவர முகம் தக்ஷிணம் ஸம்ஶ்ரயந்தி
க்லிஷ்டம் கோரே சிரமிஹ பவே தேந மாம் பாஹி நித்யம் ॥ 23॥

தமிழாக்கம்


இவ்வுலகில் பிறவிப்பிணிநிறை பாதையதனில் 
வழித்துணையென வருவோன் நீ ஒருவனே என
கரையிலா பிறவிப்பெருங்கடலதனில் நடுங்கிடும்
நல்வினையோர் தெளிசார்ந்திடுவர் உன் தென்முகம்! 
அம்முகம் கொண்டு இவ்வகிலமதில் கொடுமைநிறை 
பிறவிச்சுழல் சிக்கித் தவிக்கும் சிறியோன் எனை
விடுவித்து அனுதினமும் காத்திடு அமரர் தலையோனே !! 23

சொற்களின் பொருள்

ஸுரவர - தேவர்களில் சிறந்தோனே
அஸ்மிந் - இந்த
ப்ரபஞ்சே - உலக (மாய) வாழ்க்கையில்
ஹதஜநிபதே - இறப்பு-பிறப்பு பாதையில்
த்வாம் - தாங்கள்
ஏகம் ஏவ - ஒருவரையே
பாந்தம் - வழித்துணையாக
மத்வா - கருதி
பாரஶூந்யாத் - கரையற்ற
ஜந்ம ப்ரசய ஜலதே - பிறவித் தொடராகிய கடலில்
பிப்யத: - நடுங்கிக்கொண்டிருக்கும்
தன்யா:- பாக்கியசாலிகள்
தே - தங்களுடைய
யத் - எந்த
தக்ஷிணம் - தெற்கு நோக்கிய
முகம் - முகத்தை
ஸம்ஶ்ரயந்தி - முழுமையாகச் சார்ந்திருக்கிறார்களோ
தேந - அந்த, அதாவது தக்‌ஷிண முகேந, அகோர முகேந, தென் முகத்தினால்
இஹ - இவ்வுலக வாழ்க்கையில்
சிரம் - நீண்ட (வெகு நாட்களாக)
கோரே - கோரமான
பவள - பிறவிச்சுழலில், சம்சாரத்தில்
க்லிஷ்டம் - துன்புற்றிருக்கின்ற
மாம் - என்னை
நித்யம் - எப்பொழுதும்
பாஹி - (அமைதியைக் கொடுத்து) காப்பாயாக

விளக்கம்

ஜன்மத்திற்குப் பின் ஜன்மமாக எடுத்துக்கொண்டு ஸம்ஸாரமென்ற முடிவற்ற பாதையில் அவதிப் பட்டுக்கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஜீவனுடன் அந்தராத்மாவான ஈசன் ஒருவனே துணையாகக் கூடவே போய்க்கொண்டிருக்கிறார். இவ்விதம் ஜீவனுக்கு துணைவரும் பரமாத்மாவே மார்க்கபந்து ஆகிறார்.

பிறவிக் கடலினின்றும் கரையேற நிச்சயித்த பெரியோர்கள் அவர் தம் துணையாருக்கும் பகவானின் பஞ்ச முகங்களில் தென்னோக்கியதான அகோர முகத்தை சரணமடைந்து முக்தி யடைகிறார்க்ள். இறைவனின் தென்திசை முகத்திற்கு அகோரம் (அ கோரம் – கோரமில்லாத, ஸாந்தம்) என்று பெயர். இதனை நான் சார்ந்திருக்கிறேன் என்கிறார் அப்பையர்.

அப்பையர், பரத்வாஜ கோத்திரத்தை சார்ந்தவர். பரத்வாஜர் அகோரத்தை வழிபட்டு உய்வு பெற்றவர். தானும் அதே வழியில் இறையினை வழிபட முயல்கிறேன் என்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அமைதி, ஸாந்தம். எனவே பாஹி, அதாவது  (அகோரம் – அமைதியைக் கொடுத்து) என்னையும் காப்பாயாக என்கிறார். 

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க ! 

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 22 – புரமெரித்த பரமன்

ஸ்லோகம்


कर्मज्ञानप्रचयमखिलं दुष्करं नाथ पश्यन्
पापासक्तं हृदयमपि चापारयन्सन्निरोद्धुम् ।
संसाराख्ये पुरहर महत्यन्धकूपे विषीदन्
हस्तालम्बप्रपतनमिदं प्राप्य ते निर्भयोस्मि ॥ २२॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

கர்மஜ்ஞாந ப்ரசயமகிலம் துஷ்கரம் நாத பஶ்யந்
பாபாஸக்தம் ஹ்ருதயமபிச ஆபாரயந்ஸந்நிரோத்தும் ।
ஸம்ஸாராக்யே புரஹர மஹத்யந்தகூபே விஷீதந்
ஹஸ்தாலம்ப ப்ரபதநமிதம் ப்ராப்யதே நிர்பயோஸ்மி ॥ 22॥

தமிழாக்கம்


மறைகூறும் விதிமுறைகள் கடினமெனக் கருதி
மனக்கட்டு இலாமல் பாவச் செயல்களில் ஈடுடனே
சம்சாரமெனும் பாழுங் கிணறதனில் வீழ்ந்திட்டு
அழுதழுது துன்பமுறும் அடியனுக்கு நீண்டது
ஆண்டோனே உன் அபயக்கரம் அடியேன் பற்றிட !
அச்சமினி ஏதுமில்லை புரமெரித்த பரமனே !! 22

சொற்களின் பொருள்

कर्मज्ञानप्रचयम - கர்மஜ்ஞாநப்ரசயம் - கர்ம, ஞான அனுஷ்டானம்
अखिलं - அகிலம் - அனைத்தும்
दुष्करं - துஷ்கரம் - கடினமானவை
नाथ - நாத - தலைவனே
पश्यन् - பஶ்யந் - என்று கருதி
पापासक्तं - பாபாஸக்தம் - பாபத்தில் ஈடுபாடுள்ள
हृदयमपि च - ஹ்ருதயமபிச - உள்ளத்தையைம்
आपारयनं - ஆபாரயந் - இயலாமையார
सन्निरोद्धुम् च - ஸந்நிரோத்தும் ச - நன்கு கட்டுப்படுத்தவும்
संसाराख्ये - ஸம்ஸாராக்யே - பிறவிப்பிணி எனப்படும்
पुरहर - புரஹர - முப்புரம் எரித்தோனே
महत्यन्धकूपे - மஹத்யந்தகூபே - பாழுங்கிணறில்
विषीदन् - விஷீதந் - அழுது அழுது அல்லலுறும்
हस्तालम्बप्रपतन - ஹஸ்தாலம்ப ப்ரபதந் - பற்றிக் கொள்ள கை நீட்டலானது
ईढं - இவனுக்கு
प्राप्य ते - ப்ராப்யதே - கிடைத்து
निर्भयोस्मि - நிர்பயோஸ்மி - அச்சமின்றி இருக்கிறேன்

விளக்கம்

நமக்கினி பயமேது (“அஹம் நிர்பயோஸ்மி”) என்கிறார் அப்பையர். 

ஏன் அப்படி கூறுகிறார் ? “ஹஸ்த ஆலம்ப ப்ரபதனம் ப்ராப்யதே” அதாவது பாழுங்கிணற்றில் விழுந்து, அழுது அழுது துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்குப் பற்றிக்கொள்ள இறைவன் நீட்டிய கை கிடைத்தது  என்பதனால் என்கிறார்.

இதன் கருப்பொருள் என்ன ?  மெய்யறிவைப் பெற்றதனால், பயமேதுமில்லை என்பதனைக் குறிப்பது ஆகும். மெய்யறிவு பெற்றோர்க்கு அனைத்தும் ஆன்மா, அனைத்திலும் ஆன்மா என்று அறிந்தபின், யாரிடமிருந்தும், எவையிடமிருந்தும் அச்சமோ, கவலையோ இல்ல என உபநிஷத் மந்திரங்களும், பகவத் கீதையும் எடுத்துரைக்கின்றன. 

எந்தப் பாழுங்கிணறைக் கூறுகிறார் அப்பையர்?  ஸம்ஸாரம் எனும் அதாவது இந்திரிய ஸுகம், உலக உறவுகள் என்பதே பெரும் (“மஹத்”) பாழுங்கிணறு (“மஹதி அந்தகூபே”). அப்படி விழுந்து “விஷீதன்” என்று அவர் கூறுவது, அதாவது அழுது அழுது என்று கூறுவது அவரது துன்பத்தின் வெளிப்பாடு (“விஷீத”).  வெளிப்படாத துன்பத்தை “ஷோக: என்றும் துன்பத்தின் வெளிப்பாடு ‘விஷீத’ என்றும் கூறப்படுகிறது வடமொழியில்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடையேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே! 

என்ற மாணிக்கவாசகர் உரை, இவரது நிலைக்கு ஒப்பு.

சரி, சம்சாரம் எனும் பாழுங் கிணற்றில் ஏன் விழுந்தார் என கூறுகிறார் ?  வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்ம, ஞான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதனால், பாபத்திலேயே ஈடுபாடு உள்ள மனதை அடக்கமுடியாமல் வீழ்ந்திட்டேன் என்கிறார் அப்பையர்.

கருத்துரை

“கர்மாவைச் செய்து சுத்தியடைவதும் ஞானத்தைச் சம்பாதிப்பதும் சிரத்தையினாலும் விடாமுயற்சியினாலும் காலக்கிரமத்தில் ஸாதிக்க வேண்டுவன வாதலால் சோம்பேறியும் சபல புத்தியுள்ளவனுமாகிய என்னால் அஃதெல்லாம் நிறைவேற்ற முடியாத காரியம் என்பது திண்ணம். துர்வாஸனையினால் தடுக்கப்பட்ட காரியங்களில் ஊக்கமுடைய என் மனத்தையே என்னால் திருப்பமுடியவில்லையே. இந் நிலையில் ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்ற்றில் பரிதபிக்கும் என்னைக் கரையேற்ற உன் கைப்பிடி கிடைத்திருப்பதால் இனி எனக்கு பயமில்லை”.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க ! 


ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 20 – சரணாகதி

ஸ்லோகம் 20


दासोऽस्मीति त्वयि शिव मया नित्यसिद्धं निवेद्यं
जानास्येतत् त्वमपि यदहं निर्गतिः संभ्रमामि ।
नास्त्येवान्यन्मम किमपि ते नाथ विज्ञापनीयं
कारुण्यान्मे शरणवरणं दीनवृत्तेर्गृहाण ॥ २०॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

தாஸோஸ்மீதி த்வயி ஶிவ மயா நித்யஸித்தம் நிவேத்யம்
ஜாநாஸ்யேதத் த்வமபி யதஹம் நிர்கதி: ஸம்ப்ரமாமி ।
நாஸ்த்யேவாந்யந்மம கிமபி தே நாத விஜ்ஞாபநீயம்
காருண்யாந்மே ஶரணவரணம் தீநவ்ருத்தேர்க்ருஹாண ॥ 20॥

தமிழாக்கம்


உனதடிமை என்றும் யானென
உறுதியுரை வேண்டுமோ சிவனே!
திக்கின்றித் திரிகிறேன் தெரிந்திட்டீர்
தெரிவிக்க வேறொன்றும் இலையே !
தீனனென் திருவடித் தொழுதலை 
ஏற்றிடுவீர் கருணையுடன் எம்பிரானே !! 20

சொற்களின் பொருள்

ஶிவ - மங்களமானவரே
த்வயி - தங்களிடத்தில்
தாஸ: - அடிமையாக
அஸ்மின் - இருக்கிறேன்
இதி - என்று
நித்யஸித்தம் - எப்போதும் உறுதியாக
மயா - என்னால்
நிவேத்யம் - தெரிவிக்கப்பட வேண்டுமா
அஹம் - நான்
நிர்கதி - கதியின்றி
ஸம்ப்ரமாமி - அலைகிறேன் (உழல்கிறேன்)
யேதத் - இதனை
த்வமபி - தாங்களும்
ஜாநாஸ- அறிவீர்
நாத - தலைவனே
தே - தங்களிடத்தில்
மம - எனக்கு
விஜ்ஞாபநீயம் - தெரிவிக்க, வேண்டிட
அந்யத் - வேறு
கிமபி - ஏதொன்றும்
நாஸ்த்யேவ - இல்லையே
தீநவ்ருத்தே - எளியோன்
மே - என்
ஶரணவரணம் - திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை)
காருண்யாந்- கருணையுடன்
க்ருஹாண - ஏற்பீரே

விளக்கம்

சிவ பெருமானே ! தங்களின், அடிமை யான் என எப்போதும் உறுதியாக என்னால் தெரிவிக்கப்பட வேண்டுமா என்ன ! நான் கதியின்றி அலைகிறேன் (உழல்கிறேன்) என்பதனை தாங்களும் அறிவீர்.தலைவனே ! தங்களிடத்தில் எனக்கு தெரிவிக்க, வேண்டிட வேறு  ஏதொன்றும் இல்லையே ! எளியோன் என்  திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை) கருணையுடன் ஏற்பீரே ! 

ஸ்வாமி! நான் உன் தாஸன், உன்னைத் தவிர வேறு கதி எனக்கு இல்லை, என்பதைத் தானே நான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நான் உன் தாஸன் என்பது சாச்வதமாய் ஏற்பட்ட நிலை. ஆதலின் நான் சொல்லிக்கொள்ளாமலே நீ அறிந்த விஷயம். நான் திக்கற்றவனாய் பரிதபிக்கும் நிலையில் காப்பவரின்றிச் சுழன்று கொண்டு வருகிறேன் என்பதும் முற்று முணர்ந்த உனக்குத் தெரியாததில்லை. இவ்விதம் பார்க்குங்கால் நான் உன்னிடம் தெரிவித்திக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஆகையினால் கருணையை முன்னிட்டு மிக்க பரிதாப நிலையிலிருக்கும் என்னுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்வாயாக.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 19

ஸ்லோகம் 19


ध्यातो यत्नाद्विजितकरणैर्योगिभिर्यो विमुक्त्यै (विमृग्यः)
तेभ्यः प्राणोत्क्रमणसमये संनिधायात्मनैव ।
तद्व्याचष्टे भवभयहरं तारकं ब्रह्म देवः
तं सेवेऽहं गिरिश सततं ब्रह्मविद्यागुरुं त्वाम् ॥ १९॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

த்யாதோ யத்நாத்விஜிதகரணைர்யோகிபிர்யோ விமுக்த்யை (விம்ருக்ய:)
தேப்ய: ப்ராணோத்க்ரமணஸமயே ஸம்நிதாயாத்மநைவ ।
தத்வ்யாசஷ்டே பவபயஹரம் தாரகம் ப்ரஹ்ம தேவ:
தம் ஸேவேঽஹம் கிரிஶ ஸததம் ப்ரஹ்மவித்யாகுரும் த்வாம் ॥ 19॥

தமிழாக்கம்


பொறி வென்ற யோகியரின் பெரு முயற்சித் துதிப்பொருளாய்,
அவர்தம் இறுதி மூச்சுக் காற்று  முடியும் தருணமதில், தானே
முன்நின்று முக்திக்கு வித்தாகும் மும்மல அச்சம் போக்கிடும்
முழுமை அறிவு உரைத்திடும் மும்மறைக் கருவுரை ஆசானுன் மும்மலர்ப்பாதம் பணிந்திடுவேன் எப்போதும் மலையோனே !! 19

சொற்களின் பொருள்

கிரிஶ - மலையோனே
விஜிதகரணைர் - பொறிகளை வென்றவர்களான
யோகிபி - யோகிகளால்
யத்நாத் - பெரு முயற்சியால்
த்யாதஹ - தியானிக்கப்படுகின்ற
யஹ - எந்த
தேவஹ - இறைவன்
விமுக்த்யை (விம்ருக்ய:) - மோக்‌ஷத்தின் பொருட்டு (தேடப்படுகின்ற)
தேப்ய: - அந்த யோகிகளுக்கு
ப்ராண உத்க்ரமண ஸமயே - பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம்
ஆத்மநா ஏவ - தானே
ஸம்நிதாய - காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்‌ஷத்தை அளிக்கிறார்)
பவபயஹரம் - பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற
தாரகம் - சம்சாரத்தைக் கடக்கின்ற
தத் ப்ரஹ்ம - அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை
வ்யாசஷ்டே - உபதேசிக்கிறாரோ
தம் - அத்தகைய
ப்ரஹ்மவித்யாகுரும் - மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய
த்வாம் - உம்மை
அஹம் - நான்
ஸததம் - எப்போதும்
ஸேவே- வழிபடுகிறேன்

விளக்கம்

பொறிகளை வென்றவர்களான யோகிகளால் பெரு முயற்சியால் தியானிக்கப்படுகின்ற,  மோக்‌ஷத்தின் பொருட்டு தேடப்படுகின்ற, எந்த இறைவன் அந்த யோகிகளுக்கு பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம் தானே காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்‌ஷத்தை அளிக்கிறார்) பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற சம்சாரத்தைக் கடக்கின்ற  அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை 

உபதேசிக்கிறாரோ, அத்தகைய மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய

உம்மை நான் எப்போதும் வழிபடுகிறேன்  என்று பிராரத்திக்கும் தீக்‌ஷிதர், இந்த ஸ்லோகத்தில் மறைமுகமாக,  இந்திரிய நிக்ரஹம் செய்ய முடியாத, தர்மத்தை அனுஷ்டிக்க இயலாதவனாக நான் உனைச் சரணடைகிறேன் கூறுகிறார்.

பிரம்மவித்யை என்ற சொல்

  1. ஜீவனை ப்ரம்மன் என்று புரியவைக்கும் வித்யை.
  2. ஜீவாத்மாவை, பரமாத்மாவாகப் புரியவைக்கின்ற வித்யை.
  3. இறைவனைப் பற்றிய அறிவு
  4. உயிர் இறைவனாகவே இருக்கிறது என்ற அறிவைப் புகட்டுகின்ற வித்யை. (“ஜீவோ ப்ரம்மைவ நா பரஹ”)
  5. த்வைத பக்தி  செய்தவனுக்குத்தான் அத்வைத ஞானத்தை உபதேசிக்க முடியும்.

என்றவைகளைப் பற்றியது.

 இந்த ஸ்லோகம் நமக்கு கூறுவது:

  1. யோகியாக இருத்தல்.
  2. புலனடக்கம் பழகுதல்.
  3. விடாமுயற்சி செய்து இறைவனை தியானித்தல்
  4. அவ்வாறு தியானிப்பவர்களுக்கு, இறைவனே வந்து அகண்ட ப்ரம்மோபதேசம் செய்வார்.
  5. இறைவன் ப்ரம்மவித்யா குருவாக இருக்கிறார்
  6. அவரை நாம் வழிபடவேண்டும்

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 18

ஸ்லோகம் 18


भक्ताग्र्याणां कथमपि परैर्योऽचिकित्स्याममर्त्यैः
संसाराख्यां शमयति रुजं स्वात्मबोधौषधेन ।
तं सर्वाधीश्वर भवमहादीर्घतीव्रामयेन
क्लिष्टोऽहं त्वां वरद शरणं यामि संसारवैद्यम् ॥ १८॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

பக்தாக்ர்யாணாம் கதமபி பரைர்யோঽசிகித்ஸ்யாமமர்த்யை:
ஸம்ஸாராக்யாம் ஶமயதி ருஜம் ஸ்வாத்மபோதௌஷதேந ।
தம் ஸர்வாதீஶ்வர பவமஹாதீர்கதீவ்ராமயேந
க்லிஷ்டோঽஹம் த்வாம் வரத ஶரணம் யாமி ஸம்ஸாரவைத்யம் ॥ 18॥

தமிழாக்கம்


அம்பரத்தார் முயன்றும் தீர்க்க இயலா 
அடியாரின் பிறவிப் பிணிதனை மெய் 
அறிவெனும் மருந்து புகட்டிக்  குணம் 
அளித்திடும் பேர் மருத்துவனை பிறவிப் 
பெருங்கடல் மூழ்கி உழலும் பேதை யான் 
அடிபணிந்தேன் அகிலாண்ட நாதனே !! 18

சொற்களின் பொருள்

யஹ - எவரொருவர்
பரைர் - மேலான
அமர்த்யைஹி - தேவர்களால்
கதமபி - எங்கேனும், எப்படியாயினும்
அசிகித்ஸ்யா - குணப்படுத்த இயலாத, தீரக்கமுடியாத
பக்தாக்ர்யாணாம் - முதன்மை பக்தர்களின்
ஸம்ஸாராக்யாம் - உடல் உயிரெடுத்ததால் விளையும் துன்பங்களான
ருஜம் - நோயினை
ஸ்வாத்மபோத ஔஷதேந - தன்னைப் பற்றிய தெளிந்த அறிவு எனும் மருந்தால்
ஶமயதி - தீர்க்கிறாரோ

தம் - அத்தகைய
பவ மஹா தீர்க தீவ்ர அமயேந - பிறவிச் சுழலாகியமிகப் பெரிய, இடைவிடாது ஆழமாகத் துன்புறுத்துகிற நோயால்
க்லிஷ்டோ - அவதிப்படும் (துன்பப்படும்’
அஹம் - நான்
வரத - வேண்டிய வரமளித்திடும்
ஸம்ஸாரவைத்யம் - பிறவிப்பிணிதீர் மருத்துவராம்
த்வாம் - உன்னை
ஶரணம் யாமி - சரணமடைகிறேன்
ஸர்வாதீஶ்வர - அனைத்திற்கும் தலைவனே

விளக்கம்

வாழ்க்கையின் இன்ப துன்ப அனுபவங்களுக்கு சம்சாரம்  எனப்பெயர். நிறைவின்மை எனும் நெருடலே சம்சாரம். பவ ரோகம் (பிறவிப்  பிணி) என்பர் இதனை. பிறவிப் பிணியை தேவர்களால் தீர்க்க இயலாது. இறைவன் ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஸம்ஸாரம் என்பது ஒரு ரோகம். இந்த வியாதிக்கு வைத்தியம் செய்ய வேறு ஒரு வைத்தியனாலும் முடியாது. மற்ற தேவர்கள் சில வரங்களைக் கொடுக்கலாம். ஆனால், இந்த ஸம்ஸார வியாதியைத் தீர்க்க அவர்களால் இயலாது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் 

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை 

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்

தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் 

போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

என்கிறார் திருநாவுக்கரசர் திருப்புள்ளிருக்குவேளூர் திருமுறை திருப்பதிகத்தில்.

இறைவன் ஒருவனே பிறவிப்பிணி தீ்ர்ப்பவன், அதுவும் மெய்யறிவினால் மட்டுமே.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 17

ஸ்லோகம் 17


ब्रह्मादीन् यः स्मरहर पशून्मोहपाशेन बद्ध्वा
सर्वानेकश्चिदचिदधिकः कारयित्वाऽऽत्मकृत्यम् ।
यश्चैतेषु स्वपदशरणान्विद्यया मोचयित्वा
सान्द्रानन्दं गमयति परं धाम तं त्वां प्रपद्ये ॥ १७॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

ப்ரஹ்மாதீந் ய: ஸ்மரஹர பஶூந்மோஹபாஶேந பத்த்வா
ஸர்வாநேகஶ்சிதசிததிக: காரயித்வாঽঽத்மக்ருத்யம் ।
யஶ்சைதேஷு ஸ்வபதஶரணாந்வித்யயா மோசயித்வா
ஸாந்த்ராநந்தம் கமயதி பரம் தாம தம் த்வாம் ப்ரபத்யே ॥ 17॥

தமிழாக்கம்


சீவனாய் ஜடமாய் அவைகளுக்கு வேறாய்
விதிமுதல் பசுவரை மோகவடம்கட்டி அவரவர்
விதியொப்ப பணியேற்றி, திருவடி பணிவோரை
விடுத்திட்டு மெய்யறிவு புகட்டி வீடுபேறு தரும்
முப்புரமெரி முதல்வோனே பணிந்தேன் உன் பாதம் !! 17

சொற்களின் பொருள்

ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே 
யஹ - எந்த பரமேஸ்வரன்
ஏக: - ஒருவராகவும்
சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும்
ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான
ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும்
மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால்
பத்த்வா - கட்டி
ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை
காரயித்வா - செய்யுமாறு செய்து
ய: ச - எந்த பரமேஸ்வரன்
ஏதேஷு - இவர்களுள்
ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை
வித்யயா - மெய்யறிவினால்
மோசயித்வா - விடுவித்து
ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை
பரம் - பரமனின்
தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்‌ஷத்தை)
கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ)
தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.

விளக்கம்

சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை. 

அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.

பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார். 

 பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.

அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே. 

இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்‌ஷிதர்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 13

ஸ்லோகம்

ஸர்வம் க்ஷேப்தும் ப்ரபவதி ஜந: ஸம்ஸ்ருதிப்ராப்தமாக:
சேத: ஶ்வாஸப்ரஶமஸமயே த்வத்பாதாப்ஜே நிதாய ।
தஸ்மிந்காலே யதி மம மநோ நாத தோஷத்ரயார்தம்
ப்ரஜ்ஞாஹீநம் புரஹர பவேத் தத்கதம் மே கடேத ॥ 13॥

தமிழாக்கம்

சுவாசம் அடங்கும் வேளையிலே
உள்ளம் உன்பாதம் பணித்திட்டு 
பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி 
எறிய இயலும் புரமெரி நாதனே ! 
ஒருகால் அக்காலம் என் உள்ளம்
ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு
தவறிட்டால் உனதடி பணிந்திட
எங்கனம் எனக்கு கை கூடும் !!  13

சொற்களின் பொருள்

நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ! 

புரஹர – முப்புரத்தை எரித்தோனே 

ஜந: – மனிதன் (உயிர்) 

ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் 

சேத: – மனதை (சித்தத்தை) 

த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்

நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து) 

ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும் 

ஸர்வம் – அனைத்து

ஆக3ஹ – பாபங்களையும்

ஷேப்தும் – உதறி எறிந்துவிட

ப்ரபவதி – முடியும் (எனினும்,) 

தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்

யதி – ஒரு வேளை 

தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்) 

மம மநோ – என் மனது
ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக

பவேத் – ஆகிவிட்டால்

தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)

கதம் மே – எப்படி எனக்கு 

கடேத – கைகூடும்

விளக்கம்

எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.

திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம் 

இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.

இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று

சரணம் பவித்ரம், விததம் புராணம் !
யேன பூதஸ்தரதி துஷ்க்ருதாநி !
யேன பவித்ரேன ஷுத்தேன பூதாஹ !
அதி பாப்மானமராதிம் தரேம !
லோகஸ்ய பவித்ரம் சரணம் நோ லோகே ஸ்திரம் த³தாது !

தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் ! 

என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது. 

  1. இடது திருவடி குறிப்பது
    • அபர ஞானம்
    • கர்ம காண்ட ஞானம்
    • உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
    • சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
  2. வலது திருவடி குறிப்பது
    • பர ஞானம்
    • ஞான காண்ட ஞானம்
    • உண்மையை உணர்த்துவது
    • யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 

வளிமுதலா எண்ணிய மூன்று 

என்கிறது திருக்குறள் (941).

நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.

  1. வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
  2. பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
  3. சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது  இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 14

பயணம் முன்பு – Before Departure

முன்குறிப்பு.

நான் அனைவருக்கும் முதலில் பதிவிட்டதில், அறியாமையால், தவறுதலான ஸ்லோக எண்களால் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டேன். இந்த மந்திரம் 14வது ஸ்லோகம். அடுத்த பதிவில் 13வது ஸ்லோகத்தைப் பற்றி எழுதுகிறேன்.

தவறுக்கு அடியேனின் மன்னிப்பு வேண்டுதலை ஏற்கவும். பிழையை சுட்டிக்காட்டிய பெரியோருக்கு மிக்க நன்றி.

ஸ்லோகம்


ப்ராணோத்க்ராந்திவ்யதிகரதலத்ஸந்திபந்தே ஶரீரே
ப்ரேமாவேஶப்ரஸரதமிதாக்ரந்திதே பந்துவர்கே ।
அந்த: ப்ரஜ்ஞாமபி ஶிவ பஜந்நந்தராயைரநந்தை:
ஆவித்தோঽஹம் த்வயி கதமிமாமர்பயிஷ்யாமி புத்திம் ॥ 14॥
प्राणोत्क्रान्तिव्यतिकरदलत्सन्धिबन्धे शरीरे
प्रेमावेशप्रसरदमिताक्रन्दिते बन्धुवर्गे ।
अन्तः प्रज्ञामपि शिव भजन्नन्तरायैरनन्तैः
आविद्धोऽहं त्वयि कथमिमामर्पयिष्यामि बुद्धिम् ॥ १४॥

தமிழாக்கம்

பிராணம் நன்கடங்கும் வேளை நாதனுன்
திருவடித் தாமரை பணித்திட்டு மனிதனின்
பிறவிகள் ஈட்டிய பாவம் அனைத்தும்
உதறி எறிந்திட இயலும்  – எனினும்
அக்காலம் முத்தோஷமதனால் என் மனம் எந்நினைவின்றி இருந்திட்டால் எங்கனம்
கைக்கூடும் உன் திருமலரடி முப்பரமெரியோனே !! 14

சொற்களின் பொருள்

நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ! 

புரஹர – முப்புரத்தை எரித்தோனே 

ஜந: – மனிதன் (உயிர்) 

ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் 

சேத: – மனதை (சித்தத்தை) 

த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்

நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து) 

ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும் 

ஸர்வம் – அனைத்து

ஆக3ஹ – பாபங்களையும்

ஷேப்தும் – உதறி எறிந்துவிட

ப்ரபவதி – முடியும் (எனினும்,) 

தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்

யதி – ஒரு வேளை 

தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்) 

மம மநோ – என் மனது
ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக

பவேத் – ஆகிவிட்டால்

தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)

கதம் மே – எப்படி எனக்கு 

கடேத – கைகூடும்

விளக்கம்

திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம் 

இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம்.

ஆனால் நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.

இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.

இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று

சரணம் பவித்ரம், விததம் புராணம் !
யேன பூதஸ்தரதி துஷ்க்ருதாநி !
யேன பவித்ரேன ஷுத்தேன பூதாஹ !
அதி பாப்மானமராதிம் தரேம !
லோகஸ்ய பவித்ரம் சரணம் நோ லோகே ஸ்திரம் த³தாது !

தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3

என்பது. 

இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக! இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் ! 

என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது. 

  1. இடது திருவடி குறிப்பது
    • அபர ஞானம்
    • கர்ம காண்ட ஞானம்
    • உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
    • சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
  1. வலது திருவடி குறிப்பது
    • பர ஞானம்
    • ஞான காண்ட ஞானம்
    • உண்மையை உணர்த்துவது
    • யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

தோஷத்ரயார்தம் – முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் – விளக்கம்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 

வளிமுதலா எண்ணிய மூன்று 

என்கிறது திருக்குறள் (941).

நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.

  1. வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
  2. பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
  3. சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது  இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.

ஏன் அவர் இப்படி உழல வேண்டும்? 

ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் – ஸ்லோகத்தின் கருப்பொருள்

மரண காலம் வரும்போது,  

யம் யம் வாபி1 ஸ்மரன்பா4வம் த்1யஜத்1யன்தே1 க1லேவரம் |
த1ம் த1மேவைதி1 கௌ1ன்தே1ய ஸதா3 த1த்3பா4வபா4வித1: ||8.6||

“அர்ஜுனா! எந்தெந்த பொருளை நினைத்துக் கொண்டு மரண காலத்தில் உடலை விடுகிறானோ, எப்பொழுதும் அந்த எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்தவனாய் அதனையே அடைகிறான்”

த1ஸ்மாத்1ஸர்வேஷு கா1லேஷு மாமனுஸ்மர யுத்4ய ச1 |
மய்யர்பி1த1மனோபு3த்3தி4ர்மாமேவைஷ்யஸ்யஸந்ஶயம் ||8,7||

“ஆதலால், எப்பொழுதும் என்னை நினைவு செய்து, போர் செய்யும் கடமையையும் செய். மனமும் புத்தியும் என்னிடம் சரணடைந்தால், நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதில், எந்த சந்தேகமும் இல்லை”.

என்று கண்ணன் பகவத்கீதையில் (8.6, 8.7) கூறுவதை கருப்பொருளாக வைத்துள்ளது இந்த ஸ்லோகம்.

அபிமானத்தை பலப்படுத்துவது நமக்கும், மற்றவர்கும் நல்லதல்ல. இறைவனுக்கும் நமக்கும்தான் உண்மையான தொடர்பு. உண்மை இன்பம் அவரிடம் மட்டுமே! இறுதி காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாததால், எப்பொழுதும் இறைவனையே நினை என்பமே ஸ்லோகத்மில் அடங்கிநுள்ள அறிவுரை நமக்கு.

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு (12) 

பட்டினத்தார்

என்று பட்டினத்தார் கூறுவதும் இதனையே.

ஒன்றுமே பயனில்லை என்று
உணர்தபின் பலனுண்டேன்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே
ஆதலினால் மனமே இன்றே
சிவ நாமம் சொல்லிப்பழகு அன்புடன்
நம்பிக்கெட்டவர் எவர் ஐயா – உமை
உமை நாயகனை திருமயிலையின் இறைவனை

பாபநாசம் சிவன்

என்று பாபநாசம் சிவன் எழுதிய பாடலும் இக்கருப்பொருளை வலியுறுத்துவதே.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 12

ஸ்லோகம்

क्षाम्यस्येव त्वमिह करुणासागरः कृत्स्नमागः
संसारोत्थं गिरिश सभयप्रार्थनादैन्यमात्रात् ।
यद्यप्येवं प्रतिकलमहं व्यक्तमागःसहस्रं
कुर्वन् मूर्खः कथमिव तथा निस्त्रपः प्रार्थयेयम् ॥ १२॥

ஷாம்யஸ்யேவ த்வமிஹ கருணாஸாகர: க்ருத்ஸ்நமாக:
ஸம்ஸாரோத்தம் கிரிஶ ஸபயப்ரார்தநாதைந்யமாத்ராத் ।
யத்யப்யேவம் ப்ரதிகலமஹம் வ்யக்தமாக:ஸஹஸ்ரம்
குர்வந் மூர்க: கதமிவ ததா நிஸ்த்ரப: ப்ரார்தயேயம் ॥ 12॥

தமிழாக்கம்

இவ்வுலகில் இப்பிறவியில் யான்புரி பாவமனைத்தும்
மலையனுனை அச்சம் கலந்த பணிவுடனே துதிகணம்
கருணைக் கடலென மன்னித்தருளுகிறாய் அன்றோ ! 
இருப்பினும் வெட்க மின்றி கணந்தோறும் கணக்கிலா
பாவங்களை வெளிப்படுத்தும் இம்மூடன் எங்கணம்
போற்றித் துதிப்பேன் மலைநாதனே உன்னிடம் !! 12

சொற்களின் பொருள்

கிரிஶ – மலை உறையோனே! 

கருணாஸாகர: – கருணைக் கடலாய் 

இஹ – இவ்வுலகில்

ஸம்ஸாரோத்தம் – இந்த உடல் வாழக்கையில் 

க்ருத்ஸ்ந மாக: – க்ருத்ஸநம் ஆக3ஹ – (நான் செய்த) முழுமையான பாவங்களையும் (ஆக3ஹ – இலக்கணம் – த்விதியா விபக்தி ஏக வசனம்; ஆக3ஸ் – ஸகாரந்தஹ நபும்ஸக லிங்கஹ, ஆக3ஸ் ஸப்தஹ, ஆக3ஹ, ஆக3ஸி, ஆகா3ம்ஸி)

ஸ பய ப்ரார்தநாத் அந்ய மாத்ராத் – அச்சத்தினால் உண்டான பணிவுடன், மிக ஏழ்மையான உணர்வுடன் , பிராரத்தனை செய்த மாத்திரத்தில்

க்ஷாம்யஸ்யேவ – மன்னித்தருள்கிறாய்

யத்யப்யேவம் – யத் யபி ஏவம் – இருந்தபோதிலும் 

நிஸ்த்ரப: – வெட்கமின்றி 

ப்ரதிகலம் – கணந்தோறும், 

வ்யக்தமாக:ஸஹஸ்ரம் குர்வந் – எண்ணற்ற பாபங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்ப்பவனாய் 

ததா – (அப்படி) இருக்கும்போது

அயம் – இந்த 

மூர்க: – மூடனை 

கதமிவ – எப்படித்தான் 
ப்ரார்தயேயம் – பிராரத்தனை செய்வது (உன்னிடம்)

விளக்கம்

“புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன்”

என்று முந்தைய ஸ்லோகத்தில் புலம்பி உரைத்த அப்பைய தீக்‌ஷிதர், இந்த ஸ்லோகத்தில்

“எண்ணித் துணிக கர்மம் என புத்தி சொல்லியும் கேட்காமல், மனம் போனபடி வினைகள் புரிந்து அதனால் வரும் வினப்பயன்களான பாவங்களை ஈட்டிய வண்ணமே இருக்கிறேன்” என்று நொந்து கொள்கிறார்.

இப்படி புத்தி அறிவுரைத்தாலும், மனம் போன போக்கில் போவதினை, “வாஸனை” என்கிறார் வித்யாரண்ய ஸ்வாமிகள் பஞ்சதஸியில்.

அப்பையரின் இப்புலம்பலில் மற்றொன்றும் தெளிவாகிறது. இறைவன் விரைவில் மகிழ்படைபவன் (ஆஷுதோஸி – ashutosh – ஆஷு – மகிழ்வு, தோஸ் – விரைவில்). அடியாருக்கு அருள்வதில் அவன் கருணைக் கடல். அக்கருணைக் கடலில், நம் வினைப்பயன்கள் “கடலில் கரைத்த காயம்” என்பதால், இறையின் கருணையை ஈட்டிட எப்பொழுதும் முயன்றிட வேண்டும்.

இதுதான் இந்த ஸ்லோகம், நமக்கு வழங்கும் அறிவுரை.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 10

ஸ்லோகம்

नाहं रोद्धुं करणनिचयं दुर्नयं पारयामि
स्मारं स्मारं जनिपथरुजं नाथ सीदामि भीत्या ।
किं वा कुर्वे किमुचितमिह क्वाद्य गच्छामि हन्त
त्वत्पादाब्जप्रपतनमृते नैव पश्याम्युपायम् ॥ १०॥

நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி
ஸ்மாரம் ஸ்மாரம் ஜநிபதருஜம் நாத ஸீதாமி பீத்யா ।
கிம் வா குர்வே கிமுசிதமிஹ க்வாத்ய கச்சாமி ஹந்த
த்வத்பாதாப்ஜப்ரபதநம்ருதே நைவ பஶ்யாம்யுபாயம் ॥ 10॥

தமிழாக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன் அண்ணலே!
கருபிறப்பின் பெருவலி எண்ணிஎண்ணி அஞ்சி  நடுங்குகிறேன் நான்! 
என் செய்வேன் பரிகாரம் என்னவென்று எங்கு செல்வேன் அந்தகோ !
உன் மலர்ப்பாதம் பணிவதன்றி வேறேதும் அறிந்திலேன் யான்!! 10

சொற்களின் பொருள்

நாத – தலைவனே 

துர்நயம் – கட்டுப்பாடுகளுக்கு அடங்காத (நயம் = வழிநடத்துதல்)

கரணநிசயம் – இந்திரியக் கூட்டங்களை (நிசயம் = சமூகம்)

அஹம் – நான்

ரோத்தும்- அடக்கியாள 

ந பாரயாமி – ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன்

ஜநிபதருஜம் – ஜனி பத ருஜம். – பிறப்பின் (ஐனி) வழியில் (பத) உள்ள களைப்பை, சிரமத்தை (ருஜம்)

ஸ்மாரம் ஸ்மாரம் – எண்ணி எண்ணி 

ஸீதாமி – நடுங்குகிறேன்

பீ4த்3யா – அச்சத்தினால்

ஹந்த – அய்யகோ 

கிம் வா குர்வே – நான் என் செய்வேன்

கிம் உசிதம் – என்ன (தகுந்த) பரிகாரம்

க்வ – எங்கு (துன்பத்தை நீக்கிட)

அத்ய – இப்பொழுது (இங்கே)

கச்சாமி – செல்வேன் 

த்வத் பாதாப்ஜ ப்ரபதந் ருதே – உன் திருவடித்தாமரைகளில் அடைக்கலமாகுவதைத் தவிர

நைவ – வேறேது

பஶ்யாம் யுபாயம் – அறிந்திலேன் வழி

விளக்கம்

“நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி” – விளக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன்  என்ற சொற்றடரின் விளக்கத்திற்கு தாயுமானவரை அண்டுவோம்:

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே

தாயுமானவர்

மிக்க கடினம் யாதெனில் “மனத்தை  அடக்கி  சும்மா  இருக்கின்ற திறம்  அரிது”.  ஆராய்ந்தால், உடலானது உயிரைத் துன்புறுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.

“ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம்

என்னை மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா
நின் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம்

“திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்”  என்ற கோபால கிருஷ்ண பாரதி பாடல் , கருவிலிருந்து வலியுடன் களைப்பாய் வெளிவரும் பிறப்பினை நொந்துவதற்கான “ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம். “இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரென்னும் துயில் உறாது” என்கிறார் தாயுமானவர்.

“இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கும் எனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார் தீக்‌ஷிதர்”.

மந்திரம் கூறும் கருத்து

ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (பிறப்பு இறப்புச் சுழலில்) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு, விஷயங்களில் இயற்கையாகவே நுழையும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது. 

மாசுகள் படிந்த மனதிற்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவனின் புலம்பல் இது. “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் இரு கமல மலர்ப் பொற்பாதங்களை சரணடைகிறேன்,  எனக்கு வழி காட்டி நீ ஒருவனே என்ற சீவன், சிவனை நோக்கிப் புலம்புவதே இந்த ஸ்லோகம்.