
ஸ்லோகம்
क्षाम्यस्येव त्वमिह करुणासागरः कृत्स्नमागः
संसारोत्थं गिरिश सभयप्रार्थनादैन्यमात्रात् ।
यद्यप्येवं प्रतिकलमहं व्यक्तमागःसहस्रं
कुर्वन् मूर्खः कथमिव तथा निस्त्रपः प्रार्थयेयम् ॥ १२॥
ஷாம்யஸ்யேவ த்வமிஹ கருணாஸாகர: க்ருத்ஸ்நமாக:
ஸம்ஸாரோத்தம் கிரிஶ ஸபயப்ரார்தநாதைந்யமாத்ராத் ।
யத்யப்யேவம் ப்ரதிகலமஹம் வ்யக்தமாக:ஸஹஸ்ரம்
குர்வந் மூர்க: கதமிவ ததா நிஸ்த்ரப: ப்ரார்தயேயம் ॥ 12॥
தமிழாக்கம்
இவ்வுலகில் இப்பிறவியில் யான்புரி பாவமனைத்தும்
மலையனுனை அச்சம் கலந்த பணிவுடனே துதிகணம்
கருணைக் கடலென மன்னித்தருளுகிறாய் அன்றோ !
இருப்பினும் வெட்க மின்றி கணந்தோறும் கணக்கிலா
பாவங்களை வெளிப்படுத்தும் இம்மூடன் எங்கணம்
போற்றித் துதிப்பேன் மலைநாதனே உன்னிடம் !! 12
சொற்களின் பொருள்
கிரிஶ – மலை உறையோனே!
கருணாஸாகர: – கருணைக் கடலாய்
இஹ – இவ்வுலகில்
ஸம்ஸாரோத்தம் – இந்த உடல் வாழக்கையில்
க்ருத்ஸ்ந மாக: – க்ருத்ஸநம் ஆக3ஹ – (நான் செய்த) முழுமையான பாவங்களையும் (ஆக3ஹ – இலக்கணம் – த்விதியா விபக்தி ஏக வசனம்; ஆக3ஸ் – ஸகாரந்தஹ நபும்ஸக லிங்கஹ, ஆக3ஸ் ஸப்தஹ, ஆக3ஹ, ஆக3ஸி, ஆகா3ம்ஸி)
ஸ பய ப்ரார்தநாத் அந்ய மாத்ராத் – அச்சத்தினால் உண்டான பணிவுடன், மிக ஏழ்மையான உணர்வுடன் , பிராரத்தனை செய்த மாத்திரத்தில்
க்ஷாம்யஸ்யேவ – மன்னித்தருள்கிறாய்
யத்யப்யேவம் – யத் யபி ஏவம் – இருந்தபோதிலும்
நிஸ்த்ரப: – வெட்கமின்றி
ப்ரதிகலம் – கணந்தோறும்,
வ்யக்தமாக:ஸஹஸ்ரம் குர்வந் – எண்ணற்ற பாபங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்ப்பவனாய்
ததா – (அப்படி) இருக்கும்போது
அயம் – இந்த
மூர்க: – மூடனை
கதமிவ – எப்படித்தான்
ப்ரார்தயேயம் – பிராரத்தனை செய்வது (உன்னிடம்)
விளக்கம்
“புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன்”
என்று முந்தைய ஸ்லோகத்தில் புலம்பி உரைத்த அப்பைய தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில்
“எண்ணித் துணிக கர்மம் என புத்தி சொல்லியும் கேட்காமல், மனம் போனபடி வினைகள் புரிந்து அதனால் வரும் வினப்பயன்களான பாவங்களை ஈட்டிய வண்ணமே இருக்கிறேன்” என்று நொந்து கொள்கிறார்.
இப்படி புத்தி அறிவுரைத்தாலும், மனம் போன போக்கில் போவதினை, “வாஸனை” என்கிறார் வித்யாரண்ய ஸ்வாமிகள் பஞ்சதஸியில்.
அப்பையரின் இப்புலம்பலில் மற்றொன்றும் தெளிவாகிறது. இறைவன் விரைவில் மகிழ்படைபவன் (ஆஷுதோஸி – ashutosh – ஆஷு – மகிழ்வு, தோஸ் – விரைவில்). அடியாருக்கு அருள்வதில் அவன் கருணைக் கடல். அக்கருணைக் கடலில், நம் வினைப்பயன்கள் “கடலில் கரைத்த காயம்” என்பதால், இறையின் கருணையை ஈட்டிட எப்பொழுதும் முயன்றிட வேண்டும்.
இதுதான் இந்த ஸ்லோகம், நமக்கு வழங்கும் அறிவுரை.