
முன்னுரை
பக்தி என்பது ஒரு உணர்வு. பக்தி என்ற உணர்வு ஒன்றே; இந்த உணர்வில் பல வகைகள் இல்லை. இந்த ஒரே உணர்வினை வெளிப்படுத்தும் வகைகள் மட்டுமே வேறு. நவபக்தி என்பது பக்தியின் ஒன்பது வழிகள். ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவநம், அர்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதநம்.
1. ஸ்ரவணம் – இறைவனுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.
2. கீர்த்தனம் – பகவானின் பெருமைகளைப் பேசுவது.
3. ஸ்மரணம் – எப்பொழுதும் இறைவனை நினைவது.
4. பாத ஸேவனம் – இறைவன் திருவடிகளை வணங்குவது.
5. வந்தனம் – பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.
6. அர்ச்சனம் – இறைவனுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.
7. தாஸ்யம் – பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.
8. ஸக்யம் – ஆண்டவனிடம் நட்பு கொள்வது.
9. ஆத்ம நிவேதனம் – ஆண்டவனிடம் ஆத்மாவை ஒப்படைப்பது
இந்த ஒன்பது வகையான வெளிப்பாடுகளில் ஒன்று இறைவன் தாழ் பணிதல். குருநாதர் ஓம்காரனந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து அடியேன் அறிந்ததை இப்போது காண்போம்.
தாள் பணிதல்
நம்மில் பெரும்பாலோர்க்கு ஆண்டவனின் வழிபாடு என்பதே அடி பணிதலில் தான் தொடங்குகிறது. அதனால் தான் ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர், கடவுள் வாழ்த்திலுள்ள பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் தாழ், அடி வணங்குவதைக் குறிப்பிடுகிறார். அனைவரும் தேடும் அடைக்கலம் இறைவனின் பாதங்களே.
நாம ரூபமுடைய ஒவ்வொரு இறைவனுக்கும் கரங்கள் பல இருந்தாலும் கூட, கால்கள் மட்டும் இரண்டுதான். காரணம் அடியவர்கள் அப்பொழுது தான் பற்றிக் கொள்ள இயலும். நமக்கெல்லாம் கரங்கள் இரண்டு தான் உள்ளது, வலது கரம்,இடது கரம். எண்ணற்ற கால்கள் இறைவனுக்கு இருந்தால், இந்த இரண்டு கரங்களால் எப்படிப் பற்றிக் கொள்ள இயலும் என்பதால் தான்,கால்கள் இரண்டாகவும், கைகள் அள்ளிக் கொடுப்பதற்கு பலவாகவும் இருக்கின்றது என்பதை நாம் உணரலாம்.
இறைவனின் திருவடிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுகிறது மறைகள்.
“ஆண்டவரே, உமது இரண்டு தாமரை பாதங்களும் இலையுதிர் காலத்தில் வளரும் தாமரை மலரின் இரண்டு மலர்ந்த இதழ்கள் போல் தோன்றும் அளவுக்கு அழகாக இருக்கின்றன. உண்மையில், உனது தாமரை பாதங்களின் நகங்கள் ஒரு பெரிய பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றன”
என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).
அவன் தாளை, அதாவது இறைவனின் திருவடியைப் பணிவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளனர் ஞானிகள்.
திருவடி பணிவதன் பலன்
இறைவன் திருவடிதனைப் பணிவதனால், என்ன பலன் என்ற கேள்வி எழலாம். இதற்கு விடைகள் ஏராளமாக உள்ளன நமது மறைகளில்.
1. “இறைவா! உன் திருவடி நகங்களின் ஒளி, ஒரு வரையறுக்கப்பட்ட ஆத்மாவின் இதயத்தில் உள்ள அனைத்து இருளையும் உடனடியாக அகற்றுகின்றன. என் அன்பான இறைவா, ஒரு பக்தனின் இதயத்தில் உள்ள எல்லா வகையான இருளையும் எப்போதும் அகற்றும் உனது அந்த வடிவத்தை எனக்குக் காட்டுவாயாக. என் அன்பான ஆண்டவரே, நீங்கள் அனைவருக்கும் உயர்ந்த ஆன்மீக குரு; எனவே அறியாமையின் இருளால் மூடப்பட்டிருக்கும் அனைத்து ஆன்மாக்களும் ஆன்மீக குருவாகிய உன்னால் ஞானம் பெற முடியும்” என்கிறது ஶ்ரீமத் பாகவதம் (4.24.52).
2. இறைவனின் திருவடி என்ன செய்யும்,என்பதை அருணகிரிநாதர் தெளிவாகக் கூறியிருக்கிறார். ‘நாளென் செய்யும்! வினைதான் என்செய்யும்! எனை நாடி வந்த கோள் என் செய்யும்!’……‘இங்கு என் தலைமேல் நின் கால்பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே’ என்பது கந்தர் அலங்காரப் பாடல். எனவே இறைவனின் திருவடியானது நம் விதியை மாற்றவல்லது.
3. பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நம் திருவடிச் சின்னமான சடாரி வைக்கப்படுவது, நம் தலையெழுத்து சிறப்பாக அமைய வேண்டும் என்பதால் தான்.
4. நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று இறைவனது திருவடியைப் பணிவதில் ஒரு தத்துவம் உள்ளது. வாழ்வில் ஒவ்வொருவரும் பெரியவர்களுக்கும், குருவாக விளங்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகத் தான் திருவடி வழிபாடு உருவாக்கப்பட்டது என்பர் ஞானியர்.
5. திருவடிகளைப் பற்றினால் காலனைக் கூட வெல்ல முடியும். இதற்கு திருக்கடையூர் வரலாறு சாட்சி கூறுகிறது. மார்க்கண்டேயனின் உயிரை எடுப்பதற்கு பாசக்கயிற்றை வீசினான் காலன். மார்க்கண்டேயன் அலறி ஓடி சிவலிங்கத்தை இறுக்கக் கட்டிக் கொண்டான். எமதர்மனால் வீசப்பட்ட பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. லிங்கத்தில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டார். காலனைத் தன் காலால் உதைத்தார்.எம தர்மன் இறைவனைப் பணிந்து மார்க்கண்டேயனுக்கு விதி விலக்கு அளித்தது உலகறிந்த உண்மையல்லவா!!
6. ஜோதி வடிவான ஆதிப் பரம்பொருளாகிய ஈசனின் அடி முடி காண, மாலும் அயனும் முயன்றனர்.திருவடி தேடிச் சென்றவர் திருமால், திருமுடி தேடிச் சென்றவர் பிரம்மன்.
இறைவனின் திருவடியை முதலில் பணிந்தால் நம் மனதில் பக்குவம் ஏற்படும். நாம் தலையைக் குனிந்து வழிபட்டால் திருவடி தெரியும். அகக்கண் திறந்து அனைத்தும் வளமாக வேண்டுமானால் இறைவனின் இணையடிகளைப் பார்த்து வழிபாடு செய்வது அவசியமாகும். இறைவனின் திருவடிகள் அறிவைக் (ஞானம்) குறிக்கின்றன. அறிவு உள்ள இடத்தில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.
திருவடிகளும் மெய்ப்பொருள் ஞானமும்
பொதுவாக, இறைவனின் கமலப்பாதங்கள் இரண்டினைப் பற்ற, உடல், வாக்கு, மனம் வழி நாம் புரியும் வழிபாட்டுச் செயல்கள்களால் நமக்கு வரும்/கிடைக்கும் பலன்களை, ஒவ்வொரு திருவடியின் அருள் என எடுத்துக் கொண்டால், அவைகளை இங்கனம் பிரித்துப் பார்க்கலாம்:
இடது திருவடி குறிப்பது
1. அபர ஞானம்
2. கர்ம காண்ட ஞானம்
3. உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
4. சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
வலது திருவடி குறிப்பது
1. பர ஞானம்
2. ஞான காண்ட ஞானம்
3. உண்மையை உணர்த்துவது
4. யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.