
ஸ்லோகம்
क्षित्यादिनामवयववतां निश्चितं जन्म तावत्
तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्ठानहीनम् ।
नाधिष्ठातुं प्रभवति जडो नाप्यनीशश्च भावः
तस्मादाद्यस्त्वमसि जगतां नाथ जाने विधाता ॥
க்ஷித்யாதிநாமவயவவதாம் நிஶ்சிதம் ஜந்ம தாவத்
தந்நாஸ்த்யேவ க்வசந கலிதம் கர்த்ரதிஷ்டாநஹீநம் ।
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யநீஶஶ்ச பாவ:
தஸ்மாதாத்யஸ்த்வமஸி ஜகதாம் நாத ஜாநே விதாதா॥
தமிழாக்கம்
புவிமுதல் அங்கமுடை பூதங்களனைத்திற்கும்
உண்டு தோற்றம் என்பது உறுதிபட நிச்சயம் !
வடித்தவனெனும் நிலைகளம் இலாமல் அவை
வடிவங்களென அறியப்படுவதே இல்லை !
தாவரமும் தன்வயமற்ற சங்கமமும் ஒன்றினைத்
தோற்றுவிக்க இயலாது என்பதனால், நாதனே
உலகிற்கு முதல்வனாய் இருந்திடும் உனையே
உருவாக்கமதின் உட்பொருளென அறிவேனே !!
சொற்களின் பொருள்
நாத - உலகின் தலைவரே!
க்ஷித்யாதிநாம - க்ஷிதி ஆதிநாம - பூமி முதலான (பூமி, பஞ்ச பூதங்கள்)
அவயவவதாம் - உறுப்புகளுடன் கூடியவைகளுக்கு
ஜந்ம - தோற்றம் (தோன்றியிருக்க வேண்டும்)
தாவத் - என்பது
நிஶ்சிதம் - உறுதி
கர்த்ரு அதிஷ்டாந ஹீநம் - உருவாக்கியவனின் இருப்பு இல்லாமல்
க்வசந - எப்பொருளும்
தத - அவை
கலிதம் ஏவ - அறியப்பட்டதே
நாஸ்தி - இல்லை
ஜடோ - உயிரற்ற பொருளால் (ஜடத்தால்)
அதிஷ்டாதும் - ஒன்றைப் படைப்பதற்கு
ந ப்ரபவதி - இயலாது
அநீஶஶ்ச பாவ: அபி - (வைரயறைகளுடன் கூடிய, தன்வயமற்ற) உயிர,களாலும்
ந (ப்ரபவதி) - முடியாது
தஸ்மாத் - எனவே
த்வம் - நீங்கள்
ஜகதாம் - உலகிற்கு
ஆத்யஹ - முதல்வராக (காரணமாக)
அஸி - இருக்கிறீர்கள்
விதாதா - தங்களைப் படைப்பின் காரணமாக
ஞாதே - அறிகிறேன்
விளக்கம்
இந்த பிரபஞ்சம் எண்ணற்ற நிறங்களையும், எண்ணற்ற வடிவங்களையும் உடையதாக இருக்கிறது. இந்த படைப்பு தோன்றியிருக்கிறது என்பது உண்மை. மேலும் படைப்பவன் (கர்த்தா) இல்லாமல், பொருள் இல்லாமல் எந்த ஒரு படைப்பும் இல்லை. எனவே கடவுள் இருக்கிறார். இதனை வேதம் கூறுகிறது. “உலகு ஆதி பகவன் முதற்றே” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த உலகானது கடவுளை முதலாக உடையதுதான். உலக முதல்வன் ஒருவன் உளன். உலகத்திற்கு ஆதி இறைவன்.
பெரியோரின் சொற்களே இந்த இறைவனின் இருப்பிற்கு ஆதாரம் (ப்ரமாணம்). திருவள்ளுவரே கூறுகிறார்
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
என்று குறள் 850ல்.
இந்த ஸ்லோகம் “ஈஸ்வர அர்த்தித்வ நிரூபணம்” – கடவுளின் இருப்பைக் கூறும் ஸ்லோகம் இது. மேலும்
உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவை தோன்றுகின்றன. உணர்வற்ற பொருளால் இந்த உலகைப் படைக்க முடியாது. சிற்றறிவு உள்ள உயிர்களால் இந்த உலகைப் படைக்க இயலாது.
என்கிறது இந்த ஸ்லோகம்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நம்முடைய வரையறைகள் நமக்குத் தெரிகின்றது. நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி “ஆனந்தமயமாய், அறிவாய் இருக்கிறது” என்று கூறுகிறது வேதம்.
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளே …..
என வானவில்லின் தோற்றத்திற்கு இறைவனை ஒப்பிடுகிறது நாலடியார். எப்போது வரும், எப்போது மறையும் என்பது நமக்குத் தெரியாது.
அத்தகைய “கடவுள் இல்லை என்று சொல்பவன் தன்னையே இல்லை என்று சொல்பவனாகிறான், கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்பவன் தன்னைக் கடவுளாகவே உணர்கிறான்” என்றும் கூறுகிறது வேதம். எனவே கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், இறைவனை மறவா மனம் தேவை.
ஜகத் (படைப்பு) காரியம். காரணமில்லாமல் காரியம் இல்லை. ஜடப்பொருளோ, ஜீவர்களோ காரணமாக இருக்க முடியாது. எப்படியோ, காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். இறை தத்துவம் இருக்கிறது என்பதற்கு இது ப்ரமாணம்.
ஆக, இறைவன் இருக்கிறான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. அறிவுப்பூர்வமான நம்பிக்கை. எப்படி உடலுக்குப் பின்னால் உயிர் தத்துவம், உணர்வுத் தத்துவம் இருக்கிறதோ, அப்படி இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆதாரமாக ஓர் உயிர் தத்ததுவம் இருந்தே ஆக வேண்டும் என்று அறிவுப்பூர்வமான அநுமானத்தால் இறையின் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே வள்ளுவர் முதல் குறளில் பயன்படுத்துகிறார்.
எழுத்தெல்லாம் அகர முதல - இது தெரிந்தது
உலகு ஆதிபகவன் முதற்றே - இது தெரியாதது
தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்துகொள்வது. இந்த ஸ்லோகம் இதனை விளக்குகிறது.
- அனைத்திற்கும் மூலகாரணம் எது?
- அந்த மூல காரணம் இருக்கிறதா, இல்லையா?
- இருந்தால், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
- அதனுடன் தொடர்பு தேவையா?
- அத்தகைய தொடர்பால் என்ன கிடைக்கும்?
என விசாரம் செய்யத் தூண்டும் ஸ்லோகம் இது.
