ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 1

ஸ்லோகம்

कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं
यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव ।
भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம்
யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ |  
பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் 
ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ

தமிழாக்கம்

எவரிடம் விதம்விதம் சிருட்டியின் தோற்றம் 
அவர்தனின் பெருமை அறிய வல்லார் உளரோ!
அடைவர் உனை இருப்பினும் பேரன்பினாலே !
அவா எனக்கு அன்பினால் உனைப் போற்றவே !
அடியனின் இம்முரட்டுத் துணிவு பொறுத்திட்டு
அருள் புரிந்திடுவாயே விண்ணவரின் தேவனே !! 1 

சொற்களின் பொருள்

தேவதேவ - தேவர்களுக்கெல்லாம தேவனாக விளங்குபவனே!

யஸ்மாத் - எவரிடமிருந்து

இத்தம் - இத்தகைய 

விவிதரசனா - விதவிதமான (ஆச்சர்யமான)

ஏஷா - இந்த 

ஸ்ருஷ்டி - படைப்பானது

பபூவ - தோன்றியதோ (தோன்றி, நிலைபெற்று, ஒடுங்குகிறதோ)

தே- (அத்தகைய சிறப்பு வாய்ந்த) உம்முடைய

பரம் - மேலான

ப்ரபாவம் - சிறப்புகளை 

கஹ - எவர் 

போத்தும் - அறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு

ப்ரபவதி - வல்லார் ?

ததபி - இருந்த போதிலும்

த்வாமஹம் - த்வம் இஹம் - நீங்கள் இங்கு

பக்திக்ராஹ்யா - பேரன்பினால் அடையப்படுபவராக இருக்கிறீர்

அஹம் - நான்

த்வாம் - உங்களை 

பக்திமாத்ராத் - பக்தியினால் மட்டும்

ஸ்தோதும் - போற்றித் துதிப்பதற்கு

வாஞ்சாமி - விரும்புகிறேன்

மே- என்னுடைய

இதம் - இந்த 

அதிமஹத - அதிக முரட்டுத்தனமான 

ஸாஹஸம் - துணிச்சலை

ஸஹஸ்வ - பொருத்தருள்வீராக

விளக்கம்

“தேவர்களுக்கு தேவனே! எவரிடமிருந்து இத்தகைய விதவிதமான, வியப்பான இந்த படைப்பானது தோன்றியதோ, அத்தகைய சிறப்பு வாய்ந்த உம்முடைய மேலான, தன்நிகரற்ற சிறப்புகளை, பெருமைகளை, எவரே அறிவதற்கு வல்லவர்? இருந்தபோதிலும், நீங்கள் இங்கு பேரன்பினால் அடையப்படுபவர். நான் உங்களை பக்தியினால் மட்டும் போற்றித் துதிப்பதற்கு விருப்பமுடையவனாக இருக்கிறேன். என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்று இறைவனின் இலக்கணம், பெருமை, அவனை உணரும் வழி இவற்றுடன் துவக்குகிறார் முதல் ஸ்லோகத்தில். இதில் அப்பையரின் பணிவினை நாம் அறியலாம்.

இறைவனின் பெருமை 

இறையின் பெருமையை புகழ்ந்து முடிக்க முடியாது. அதனால்தான்

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ!!

தனது பெருமை நோக்காது எத்துணை எளியவனாயும் போந்து எந்தச் செயலையும் திருவருள் காரணமாகப் பிறர் பொருட்டுச் செய்பவன் எங்கள் இறைவன். ஆகவே, புள்ளித் தோலை ஆடையாக உடுத்தமை, ஆலாலத்தை ஆரமுதாக உண்டமை முதலிய எல்லாம் அவனுக்குப் பெருமை ஆவனவேயன்றிச் சிறுமையாகா என “தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ” என்றார் மாணிக்கவாசகர். 

பகவத் கீதையில் (10.19) “நாஸ்த்1யன்தோ1 விஸ்த1ரஸ்ய மே”- தெய்வீக மகிமைக்கு முடிவே இல்லை என்றும், 

நான்தோ1 ‌ஸ்தி1 மம தி3வ்யானாம் விபூ4தீ1னாம் ப1ரந்த1ப1 |
ஏஷ தூ1த்3தே3ஶத1ஹ ப்1ரோக்1தோ1 விபூ4தே1ர்விஸ்த1ரோ மயா II

பகவத் கீதை 10.40

“எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே” என்றும் (10.40) 

பகவான் கண்ணன் கூறியதை நினைவு கூற வேண்டும்.

படைப்பெனும் வியப்பு

“குதம் ஆஜாதா குதம் இயம் வ்ருஷ்டி” – இவ்வுலகமும் உடலும் எங்கிருந்து வந்தது என்கிறது நாஸதீய ஸூக்தம் (6). 

“ஐன்மாத்ஸத் யதஹ” – பிரம்மம் என்பது யாரிடமிருந்து (உலகின்) தோற்றமும், எஞ்சிய பகுதியும் என்கிறது பிரம்ம சூத்திரம் 1.1.2. இதனை “தடஸ்ய லக்‌ஷணம்” என்பர், அதாவது படைப்பின் காரணத்தை அநுமாநம் செய்கிறோம். 

விதம் விதமான பல்வேறு படைப்பின் தோற்றம் என்பதற்கு “மனஸா அபி அசிந்தய ரசநா ரூபஸ்ய” என ஆதி சங்கராச்சார்யர், 

எண்ணற்ற விதவிதமான படைப்புகளின் ஆச்சர்யத்தை வர்ணிக்கின்றார். 

இதனையே

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன !!

என மாணிக்கவாசகர் கூறுகிறார். எனவே, படைப்பையும், படைப்பின் சிறப்பையும், படைப்பின் காரணமான பரம்பொருளையும் அனுதினமும் மறவாது சிந்தித்தல் வேண்டும். 

அன்பெனும் பக்தி

அத்தகைய இறைவன் “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை” என வள்ளலாரும், “பக்தி வலையில் படுவோன் காண்க” என மாணிக்கவாசகரும் கூறுகின்றனர்.

“ காதலாகி கணிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது” என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். 

“ப4க்1த்யா த்1வனன்யயா ஶக்1ய அஹமேவம்விதோ4 ‌ர்ஜுன | – அர்ஜுனா! அலாதியான கலப்படமற்ற பக்தியினால் மட்டுமே என்னை உன் முன்னால் நின்று இருக்கும் வடிவத்தில் அறிய முடியும்” என கண்ணன் கீதையில் (11.54) அறிவுறுத்துகிறான் இதனையே. 

சிவானந்த லஹரியில் ஆதி சங்கரரின் இந்த பக்தியின் வெளிப்பாட்டினை பல ஸ்லோகங்களில் காணலாம்.  ஆக, நிலையிலா இன்பத்தை தரக்கூடிய உலக இன்பப் பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்கி, நிலையான இன்பமே வடிவான இறையிடத்தில் அன்பை வைக்க வேண்டும். 

தேனுக்குள் இன்பம் கருப்போ ணிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

திருமந்திரம்

அத்தேனுக்குள் இன்பமென, ஊணுக்குள் ஒளிந்திருக்கும் இறைவனை ஊணுருகும் பக்தியாலே உணரமுடியும் என்பதை வலியுறுத்துகிறார் அப்பைய தீட்சிதர்.

அப்பையரின் பணிவு

இந்த ஸ்லோகத்தில்,  “ஸாஹஸம் மே ஸஹஸ்வ – என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்ற சொற்றொடரின் மூலம் அப்பைய தீக்‌ஷிதரின் அடக்கத்தை நாம் அறியலாம்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து 

திருக்குறள் 130

என்று திருவள்ளுவர் கூறுவது போல, கற்க வேண்டியதைக் கற்று (கற்று) , கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்து (கதம் காத்து), அடக்கமாக இருக்கும் (அடங்கல்) அப்பையரிடம் அறக்கடவுள் (தர்ம தேவதை) குடிகொண்டிருப்பதை, (அறம் செவ்வி ஆற்றின் நுழைந்து) அவரின் பணிவின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஆக,

  1. இறைவன் படைப்பிற்கு காரணம்
  2. இறைவனை முழுமையாக அறிய எவராலும் இயலாது
  3. அன்பினால் மட்டுமே அவரை உணரந்து கொள்ள முடியும்
  4. அன்பை வளர்க்க வேண்டுமெனில், ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனமுறுகிப் பாட வேண்டும்.
  5. பணிவுடன் பாட வேண்டும். அடக்கத்துடன் ஆண்டவனைப் போற்றிப் புகழந்து பாடினால், மனமாசுகள களையப்படும். மனம் தெளிவடையும். தெளிந்த மனம், இறைவனை க்ரஹிக்கும் ஆற்றல் பெறும்

இதுதான் இந்த ஸ்லோகம் நமக்கு அளிக்கும் அறிவுரை.


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading