ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 3

ஸ்லோகம்

इन्द्रं मित्रं वरुणमनिलं पुनरजं विष्णुमीशं
प्राहुस्ते ते परमशिव ते मायया मोहितास्त्वाम् ।
एतैः साकं सकलमपि यच्छक्तिलेशे समाप्तं
स त्वं देवः श्रुतिषु विदितः शम्भुरित्यादिदेवः ॥ ३॥

இந்த்ரம் மித்ரம் வருணமநிலம் பத்மஜம் (புநரஜம்) விஷ்ணுமீஶம்
ப்ராஹுஸ்தே தே பரமஶிவ தே மாயயா மோஹிதாஸ்த்வாம் ।
ஏதை: ஸாகம் ஸகலமபி யச்சக்திலேஶே ஸமாப்தம்
ஸ த்வம் தேவ: ஶ்ருதிஷு விதித: ஶம்புரித்யாதிதேவ: ॥ 3॥

தமிழாக்கம்

அவரவர் உன் மாயையால் மருவுகொண்டு உனை
அமரன் மித்ரன் வருணன் வாயு பிரம்மன் விஷ்ணு 
ஈசனென அழைத்திடுவர் உறுதியுடன் நிச்சயித்து !
இவரனைவரும் எவராற்றலின் துளியில் அடங்கிடுமோ
அப்பரம் ஆதிசம்புவே நீயென அருமறைகள் விளி !! 3

சொற்களின் பொருள்

பரம சிவ - சிவ பெருமானே (மேலான பேரின்ப வடிவே)

தே தே - (படைப்பின் மூல காரணத்தை ஆராய்கிற) அவரவர்கள்

தே- உம்முடைய

மாயையா - மாயையினால்

மோஹிதாஹ - மயக்கமடைந்தவர்களாய் 

த்வாம்- (உலக முதல்வராகிய) உம்மை

இந்த்ரன் - இந்திரன் என்றும்

மித்ரன் - மித்ரன் என்றும்

வருணன் - வருணன் என்றும்

அனிலம் - வாயு என்றும்

பத்மஜம் - ப்ரம்மா - நான்முகன் என்றும்

விஷ்ணு - திருமால் என்றும்

ஈஸம் - ஈசன் (ருத்ரன்) என்றும்

ப்ராஹு - ப்ரகர்ஷ்யேந ஆவுஹு - நிச்சயமாக கூறுகிறார்கள்

ஏதை: ஸாகம் - இவர்கள் எல்லோரும் சேர்ந்து

ஸகலமபி - அனைத்தும்

யத் - எவருடைய

சக்திலேஶே - இறையின் பேர் ஆற்றலின் சிறுதுளியிலே

ஸமாப்தம் - (இவர்கள் அனைவரின் ஆற்றல்களும்) அடங்கிவிடுமோ

ஸஹ - அந்த 

தேவஹ - பரம்பொருளான 

த்வம் - தாங்கள்

ஆதி தேவஹ - முதற்கடவுளான

ஷம்புஹு - சம்பு 

இதி - என்று 

ஶ்ருதிஷு - வேதங்களில்

விதித: - அறியப்படுகிறீர்

விளக்கம்

பகவான் ஷ்ருஷ்டி கர்த்தா. அவருடைய ஸ்வரூபத்தை எவராலும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்திக்கு வசப்பட்டவர் என்று முதல் ஸ்லோகத்திலும்,

படைப்பு இருப்பதால், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும். ஜடப்பொருளாலும், வரையறைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாலும் படைக்க முடியாது என்பதனால், அனைத்து ஆற்றலும், அறிவையும் கொண்ட இறைவன் ஒருவனால் தான் இதனைப் படைக்க முடியும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற அறிவுப்பூர்வமான அநுமானத்தை

அப்பையர், இரண்டாவது ஸ்லோகத்திலும் கூறினார். 

இந்த மூன்றாவது ஸ்லோகம் இந்த அனுமானத்தை  

“ஆதிதேவன், வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது” 

என்ற ஷ்ருதிப் ப்ரமாணத்தை கூறுகிறது.

“வேதங்கள் ஐயா என ஓங்கி அகழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்கிறார் மாணிக்க வாசகர். இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இந்த நுண்ணியனை,

உயர்வறுயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரரு சுடரடி தொழுதெழு என் மன்னே!  

என்று நம்மாழ்வாரும்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

என அருணகிரிநாதரும்

விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே 

என திருநாவுக்கரசரும்

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் 
பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் 
கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர்
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் 
நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் 
கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர்
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் 
பேசில் அருள் என்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் 
பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே 

என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.

இப்படி, அறியதற்கு அரிதான, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமயமான இறைவனுக்கு ஒரு வடிவத்தை கூறுவதுபோல அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.  இறைவனை அறிபவர், “அவரவர் தம்தம் தறிவறி வகை வகை” என்கிறார் நம்மாழ்வார்.

ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல்
கேளீரோ !  

என பாரதி பண் பாடினான். அப்படிப்பட்ட சாஸ்த்திரம் இறைவனை எப்படி யாருக்கு அறிய வைக்கவேண்டும் என்று வகுத்தறிந்துள்ளது. எனவே

  1. மந்த அதிகாரிக்கு – ஈஸ்வரன் வைகுண்ட வாசி, கைலாஸ நாதன் (நிமித்த காரணம்) 
  2. மத்யம அதிகாரிக்கு – ப்ரபஞ்சமே ஈஸ்வரன்(உபாதாந காரணம்)
  3. உத்தம அதிகாரிக்கு – உன்னிடத்தில் உணர்வாக இருப்பவரே இறைவன் (விவர்த்த காரணம்)

சிவ – சொல் விளக்கம்

சிவ என்றால் மங்கலம், இன்பம் எனப்படும். அதாவது பொறிகளைப் பயன்படுத்தாமல் அறிவால் அறியக்கூடிய இன்பம் எனப்பொருள். இது பேரின்பம். 

“அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமருரும் அறியார் “ என்றும், “உலப்பலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து” என்றும் வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.

மித்ரம் வருணம் – விளக்கம்

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும். மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம். சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;
உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று

பொய்யாழ்வார்

என்று பொய்யாழ்வர் இந்த மித்ர வருண தத்துவத்தை விளக்கிகிறார். அதாவது,

நாமம்/பெயர்– சிவன், நாராயணன், வாகனம் – ரிஷபம், கருடன், நூல்கள் – ஆகமம், வேதம், வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்), தொழில்/கருமம் – அழித்தல், காத்தல், ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம், உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு, ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம், மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

காரண ப்ரம்மன் அனைத்திற்கும் மூலகாரணமான இறைவன், பரம்பொருள். கார்ய ப்ரம்மன் தேவதைகள். கார்ய ப்ரம்மர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. காரண ப்ரம்மத்தின் ஆற்றலின் ஒரு சிறு துளியே இத்தேவதைகளனைத்தின் ஆற்றல். இதனை

ஏகா ச த³ஶ ஶதம் ச ஸஹஸ்ரம் சாயுதம் ச
நியுதம் ச ப்ரயுதம் சார்பு³த³ம் ச ந்யர்பு³த³ம் ச ।
ஸமுத்³ரஶ்ச மத்⁴யம் சான்தஶ்ச பரார்த⁴ஶ்ச
தன்மே மன: ஶிவஸங்கல்பமஸ்து ॥ 13॥

என ஸிவ ஸங்கல்ப உபநிஷத் கூறுகிறது 

அந்த அந்த புராணத்தில் அந்தந்த தேவதைகள் காரணப் பரம்மனாக வழிபடப்படுகிறார்.  உண்மையில் காரண ப்ரம்மத்திற்கு நாம ரூபங்கள் இல்லை. மித்ரம், வருணம் என்று இரு தேவதைகளை கோடிட்டுக் காட்டி இறைவன் எனும் சிவனுடைய ரூபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ரூபமில்லா இறைவனை நமக்கு உணர்த்துகிறார் அப்பையர் இந்த மந்திரத்தில்.

ஸ்லோகத்தின் கருப்பொருள்

மனம் வடிவத்தைப் பற்றிக் கொண்டாலும், உண்மையில் இறைவனுக்கு வடிவமில்லை என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

சைவமுதல் அளவிலாம் சமயமும் வகுத்து
சமயங்கடந்த மோன சமரச நிலையும் வகுத்த நீ 
மாலறவும் சைவமுதல் மதங்களாகி
மதாதீதமான அருள்மரபு வாழீ 

என்று தாயுமானவர் கூறுவதும் இதுவே.

உண்மையில் வணங்குகின்ற எனக்கும் வடிவமில்லை, வணங்கப்படும் இறைக்கும் வடிவமில்லை. அறியாமையால் என்னை உருவமாக கருதி, காணும் அனைத்தும் நாம, ரூபம் உள்ளவை என அறியாமையினால் எண்ணாத எண்ணமெல்லாம் ஏங்கி ஏங்கித் தவிக்கிறேன். தனித்தன்மைகள் உண்மை என எண்ணுவது மாயை. உணர்ச்சிகள் உண்மை அல்ல, எனினும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேவை. 

இத்தகைய எண்ணத்தில் நிலைத்திருக்க, மனதை சமநிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு உதவும், அப்பையரின் இந்த ஸ்லோகத்தின் விசாரம். 


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading