ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 11

ஸ்லோகம்

उल्लङ्घ्याज्ञामुडुपतिकलाचूड ते विश्ववन्द्य
त्यक्ताचारः पशुवदधुना मुक्तलज्जश्चरामि ।
एवं नानाविधभवततिप्राप्तदीर्घापराधः
क्लेशाम्भोधिं कथमहमृते त्वत्प्रसदात्तरेयम् ॥ ११॥

உல்லங்க்யாஜ்ஞாமுடுபதிகலாசூட தே விஶ்வவந்த்ய
த்யக்தாசார: பஶுவததுநா முக்தலஜ்ஜஶ்சராமி ।
ஏவம் நாநாவிதபவததிப்ராப்ததீர்காபராத:
க்லேஶாம்போதிம் கதமஹம்ருதே த்வத்ப்ரஸதாத்தரேயம் ॥ 11॥

தமிழாக்கம்

உலகுதொழும்  கலைவடிவப் பிறைசிகையனிப் பெரியோனே !
உனதாணைமீறி ஒழுங்கின்றி விலங்கென வெட்கமின்றி 
அலைகின்றேன் இக்கணம் பல பிறவி எடுத்துப் பேரபராதம் சேர் 
அடியேன் பெருந்துயர்கடல் கடப்பது எங்கணம் உனதருளின்றி !! 11

சொற்களின் பொருள்

விஶ்வவந்த்ய – உலகோரல் போற்றப்படுபவனே! 

உடுபதிகலாசூட – நட்சத்திரங்களின் தலைவனாகிய பிறைச்சந்திரனை அணிந்தவனே

தே – உன்னுடைய 

அஜ்ஞாம் – கட்டளையை 

உல்லங்க்ய. – மீறி

த்யக்த ஆசார: – ஒழுக்கத்தை விட்டவனாய்

பஶுவத் – விலங்கினமாய்

அதுநா – இப்போது

முக்தலஜ்ஜ: – வெட்கமின்றி (லஜ்ஐஹ என்றால் வெட்கம்)

சராமி – அலைகிறேன்
ஏவம் – இப்படி 

நாநாவித பவததி ப்ராப்த தீர்கா அபராத: – பலவித பிறவித்தொடர்கள் மூலம் சேகரித்த, நீண்ட பெரிய அபராதங்களை உடைய

அஹம் – நான்
க்லேஶ அம்போதிம் – துன்பக் கடலை

கதம் அஹம் – எங்கனம் நான் 

த்வத் ப்ரஸதாத் ருதே – உன் அருள் இன்றி 

தரேயம் – கடந்திடுவேன்

விளக்கம்

“உன்னை சரணாகதி செய்யும் நான் பெரிய அபராதி என்று தெரிவித்துக்கொள்ளுகிறார். ஹேசந்த்ர கலாதரனே! உன் கட்டளைகளை மீறி நடந்தவன் நான். ஸ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் மூலம் உன்னால் போதிக்கப்பட்ட கர்மாக்களையும் தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்காதவன். புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன். எல்லையற்ற துக்கக் கடலை உன் தயவின்றி வேறு எவ்விதம் நான் தாண்டப் போகிறேன்!”

தவறான பாதையில் சென்று, தவறு என்று உணரந்தவருக்கு குற்ற உணர்ச்சி எழலாம். அவைகளை நீக்கிக்கொள்ள இத்தகைய ஸ்லோகங்கள் உதவுகின்றன. 

ஏன் உலகோரால் போற்றப்படுகிறான் இறைவன். ஏனெனில் அனைவரும் விரும்புவது இன்பம். பேரின்பமே இறைவன் என்கிறது நமது மறைகள். பேரின்பம் எது என்றறியாமல், பெருந்துன்பத்திற்கு (பிறவிப்பிணிக்கு) காரணமான சிற்றின்பங்கள் நாடிஓயாது உழைக்கின்றனர் உலகோர். இறைவனின் கட்டளை என்பது ஷ்ருதி, ஸ்ம்ருதிகளின் கட்டளை.

விலங்கைப் போல – விஷய சுகங்கள் பின் அலைவது என்பது “வந்த வரவை மறந்து, மாதர்பொன்பூமி மயக்கத்தில்” ஆழ்ந்து என்பதைக் குறிப்பது.

மனதில் நூறு கெட்ட எண்ணங்கள் எழுந்தால், அவைகளை இறைவன் துணையைடன் ஐந்து நல்ல எண்ணங்களால் அழிக்க முடியும் என்ற மகாபாரத தத்துவத்தினை உள்வைத்தது இந்த ஸ்லோகத்தில், ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிறார் அப்பைய தீட்சிதர் (குறள் 190). 

துன்பக் கண்ணீரில் துளைந்தோர்க்கு உன் ஆனந்த 

இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் பராபரமே

என்ற தாயுமானவர் பாடல், தீக்‌ஷிதரின் உள்ளத்தை பிரதிபலிக்கிறது.


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

One thought on “ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 11”

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading