
முன்குறிப்பு.
நான் அனைவருக்கும் முதலில் பதிவிட்டதில், அறியாமையால், தவறுதலான ஸ்லோக எண்களால் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டேன். இந்த மந்திரம் 14வது ஸ்லோகம். அடுத்த பதிவில் 13வது ஸ்லோகத்தைப் பற்றி எழுதுகிறேன்.
தவறுக்கு அடியேனின் மன்னிப்பு வேண்டுதலை ஏற்கவும். பிழையை சுட்டிக்காட்டிய பெரியோருக்கு மிக்க நன்றி.
ஸ்லோகம்
ப்ராணோத்க்ராந்திவ்யதிகரதலத்ஸந்திபந்தே ஶரீரே
ப்ரேமாவேஶப்ரஸரதமிதாக்ரந்திதே பந்துவர்கே ।
அந்த: ப்ரஜ்ஞாமபி ஶிவ பஜந்நந்தராயைரநந்தை:
ஆவித்தோঽஹம் த்வயி கதமிமாமர்பயிஷ்யாமி புத்திம் ॥ 14॥
प्राणोत्क्रान्तिव्यतिकरदलत्सन्धिबन्धे शरीरे
प्रेमावेशप्रसरदमिताक्रन्दिते बन्धुवर्गे ।
अन्तः प्रज्ञामपि शिव भजन्नन्तरायैरनन्तैः
आविद्धोऽहं त्वयि कथमिमामर्पयिष्यामि बुद्धिम् ॥ १४॥
தமிழாக்கம்
பிராணம் நன்கடங்கும் வேளை நாதனுன்
திருவடித் தாமரை பணித்திட்டு மனிதனின்
பிறவிகள் ஈட்டிய பாவம் அனைத்தும்
உதறி எறிந்திட இயலும் – எனினும்
அக்காலம் முத்தோஷமதனால் என் மனம் எந்நினைவின்றி இருந்திட்டால் எங்கனம்
கைக்கூடும் உன் திருமலரடி முப்பரமெரியோனே !! 14
சொற்களின் பொருள்
நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ!
புரஹர – முப்புரத்தை எரித்தோனே
ஜந: – மனிதன் (உயிர்)
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம்
சேத: – மனதை (சித்தத்தை)
த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்
நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து)
ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும்
ஸர்வம் – அனைத்து
ஆக3ஹ – பாபங்களையும்
ஷேப்தும் – உதறி எறிந்துவிட
ப்ரபவதி – முடியும் (எனினும்,)
தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்
யதி – ஒரு வேளை
தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்)
மம மநோ – என் மனது
ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக
பவேத் – ஆகிவிட்டால்
தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)
கதம் மே – எப்படி எனக்கு
கடேத – கைகூடும்
விளக்கம்
திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம்
இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம்.
ஆனால் நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.
இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று
சரணம் பவித்ரம், விததம் புராணம் !
தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3
யேன பூதஸ்தரதி துஷ்க்ருதாநி !
யேன பவித்ரேன ஷுத்தேன பூதாஹ !
அதி பாப்மானமராதிம் தரேம !
லோகஸ்ய பவித்ரம் சரணம் நோ லோகே ஸ்திரம் த³தாது !
என்பது.
இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக! இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் !
என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3).
இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது.
- இடது திருவடி குறிப்பது
- அபர ஞானம்
- கர்ம காண்ட ஞானம்
- உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
- சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
- வலது திருவடி குறிப்பது
- பர ஞானம்
- ஞான காண்ட ஞானம்
- உண்மையை உணர்த்துவது
- யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.
தோஷத்ரயார்தம் – முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் – விளக்கம்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்கிறது திருக்குறள் (941).
நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.
- வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
- பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
- சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.
ஏன் அவர் இப்படி உழல வேண்டும்?
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் – ஸ்லோகத்தின் கருப்பொருள்
மரண காலம் வரும்போது,
யம் யம் வாபி1 ஸ்மரன்பா4வம் த்1யஜத்1யன்தே1 க1லேவரம் |
த1ம் த1மேவைதி1 கௌ1ன்தே1ய ஸதா3 த1த்3பா4வபா4வித1: ||8.6||“அர்ஜுனா! எந்தெந்த பொருளை நினைத்துக் கொண்டு மரண காலத்தில் உடலை விடுகிறானோ, எப்பொழுதும் அந்த எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்தவனாய் அதனையே அடைகிறான்”
த1ஸ்மாத்1ஸர்வேஷு கா1லேஷு மாமனுஸ்மர யுத்4ய ச1 |
மய்யர்பி1த1மனோபு3த்3தி4ர்மாமேவைஷ்யஸ்யஸந்ஶயம் ||8,7||“ஆதலால், எப்பொழுதும் என்னை நினைவு செய்து, போர் செய்யும் கடமையையும் செய். மனமும் புத்தியும் என்னிடம் சரணடைந்தால், நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதில், எந்த சந்தேகமும் இல்லை”.
என்று கண்ணன் பகவத்கீதையில் (8.6, 8.7) கூறுவதை கருப்பொருளாக வைத்துள்ளது இந்த ஸ்லோகம்.
அபிமானத்தை பலப்படுத்துவது நமக்கும், மற்றவர்கும் நல்லதல்ல. இறைவனுக்கும் நமக்கும்தான் உண்மையான தொடர்பு. உண்மை இன்பம் அவரிடம் மட்டுமே! இறுதி காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாததால், எப்பொழுதும் இறைவனையே நினை என்பமே ஸ்லோகத்மில் அடங்கிநுள்ள அறிவுரை நமக்கு.
காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பட்டினத்தார்
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு (12)
என்று பட்டினத்தார் கூறுவதும் இதனையே.
ஒன்றுமே பயனில்லை என்று
பாபநாசம் சிவன்
உணர்தபின் பலனுண்டேன்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே
ஆதலினால் மனமே இன்றே
சிவ நாமம் சொல்லிப்பழகு அன்புடன்
நம்பிக்கெட்டவர் எவர் ஐயா – உமை
உமை நாயகனை திருமயிலையின் இறைவனை
என்று பாபநாசம் சிவன் எழுதிய பாடலும் இக்கருப்பொருளை வலியுறுத்துவதே.
Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.
Excellent breadth of knowledge covering Sanskrit and tamil epic scripts .
🫡🫡🫡🫡
🙏🙏🙏
One small inadvertent error . You have given Sanskrit version sloka 14 and
tamil version 13
Regards
Thank you for pointing out the mistake. Made corrections accordingly. Thank you again for your encouragement