
முக்கிய அறிவிப்பு
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை அறிந்தது
நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, ஆழ்ந்த தியானங்களின் மூலம், "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அந்த "காரணமற்ற காரணத்தை" "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர்.
அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்றும் கூறினர்.
நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, “இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான்” என்று சொல்லாமல் சொல்லி வைத்து, நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று முந்தைய பதிவினில் கண்டோம்.
இந்தப் பதிவினில் அந்த தத்துவ வெளிப்பாட்டின் பரிணாமத்தை நாம் அறிந்து அனுபவிப்பதற்கான அடிப்படை கொள்கைகளையும், தேவைகளையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
அடிப்படை கொள்கைகள்
நமது ஸநாதன தர்மத்தில், அண்டப் பரிணாமத்தைப் பற்றிய உள்நோக்கிய ஆய்வு, அடிப்படையில் மூன்று அடுக்கு நிலைகளில் புரியப்பட்டது. அவைகள் முறையே:
1. அதி உயர் நிலையான “காரண நிலை” ஆய்வு
2. நுண்நிலை ஆய்வு
3. பருநிலை ஆய்வு
இந்த மூன்று நிலை ஆய்வு, முந்தைய பதிவில் கூறியது போல, ஆராய்பவரின் ஆன்மீக சிந்தனை வளர்ச்சியைப் பொறுத்தது.
இந்த மூன்று-அடுக்கு ஆராய்ச்சியானது சில அடிப்படை அனுமானங்களைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் எந்தவிதமான மறுப்பும் இல்லாத நிலையில் இந்த அனுமானங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, அடிப்படைக் கோட்பாடுகளாகியது. அவைகள் முறையே:
1. நமது மறைகள், படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று கட்ட செயல்முறைகளாக உள்ளது பரிணாமம் என்று கூறுகிறது. இந்தப் பரிணாமம், ஆதி அந்தமிலா நீக்கமற நிறைந்த பரம்பொருளுலிருந்தே உருவாகுகிறது. இந்த அண்டமும் அப்படியே. இது உயர்நிலை ஆய்வின் அடிப்படை கோட்பாடு.
2. உருவாக்குதல் எனும் படைத்தல் ஒரு நிகழ்வு அல்ல. இது பரிணாமத்தில் ஒரு செயல்முறை. (Creation is not an event; it is a process of evolution ). உருவாக்கம் என்பது, இல்லாத ஒன்றை இருப்பு உள்ளதாக்குவதில்லை (can’t create something out of nothing) . படைத்தல் என்பது விதையில் அடங்கிய மரம் போல செயலின்றி உறைந்தோ, மரத்தை மறைக்கும் மாமதயானை போல வேறு வடிவிலோ இருப்பாகி உள்ளவற்றை வெளிப்படுத்துவதை மட்டுமே குறிக்கும். ஆக அடிப்படையில் உருவாக்கம்/படைத்தல்/ஆக்கல் என்றெல்லாம் கூறும் போது நாம் கூறுவது வெளிப்பாடைத்தான். இதுபோலத்தான் அழித்தலும் ஒரு செயல்முறையே.
3. பொருளையோ, ஆற்றலையோ ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று இன்றைய அறிவியல் சிந்தனை (law of conservation of matter and energy) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களின் சிந்தனைக்கு அடிப்படை கொள்கையாக இருந்தது. இவையிரண்டும் நுண்நிலை ஆய்வின் முடிவுகள்.
நடைமுறையில், பருநிலை ஆய்வில், எளியோருக்கும் புரியும்படி, ஒவ்வொரு செயல்முறைக்கும் ஒரு அதிபதியை புராணங்கள் வாயிலாக கோடிட்டுக் காட்டினர் நமது ரிஷிகளும், முனிவர்களும், ஞானியர்களும். படைத்தலுக்கு நான்முக கடவுளான பிரம்மா, காத்தலுக்கு நாராயணன் எனும் விஷ்ணு, அழித்தலுக்கு ருத்ரன் எனும் சிவன் என்று நமது புராணங்கள் உரைக்கின்றன.
அடிப்படை தேவைகள்
மேற்கூறிய அடிப்படை அனுமானங்கள்/கொள்கைகள்/கோட்பாடுகளுடன் கூடிய அவர்களின் ஆய்வுகளிலிருந்து, எந்தவொரு உருவாக்கத்திற்கும் (வெளிப்படுத்துதல்) அடிப்படையாக மூன்று தேவைகளை உறுதிப்படுத்துகின்றன. அவைகள்:
1. அறிவு காரணம் - இதனை வடமொழியில் நிமித்த காரணம் என்பர். இது, யாருடைய செயல்பாட்டினால் உருவாக்கம் ஏற்படுகிறதோ, யாருடைய செயலற்ற தன்மையால் உருவாக்கம் ஏதும் இல்லையோ, அதனைக்குறிப்பது. உருவாக்க நாயகன் என்று வேண்டுமானால் இக்காரணத்தை அழைக்கலாம்.
2. பொருள் காரணம் - இதனை வடமொழியில் சாதாரண காரணம் என்பர். இது உருவாக்கத்திற்கு வேண்டிய மூலப்பொருளை குறிப்பது. இந்த மூலப்பொருள் இல்லையென்றால், படைப்பு எனும் வெளிப்பாடு ஏதும் இல்லை.
3. பொது காரணம் - இதனை வடமொழியில் உபாதன காரணம் என்பர். இது உருவாக்கத்திற்கு வேண்டிய கருவிகள், உபரிப்பொருடகளைக் குறிக்கும்.
இந்த மூன்று தேவைகளை, சற்று விரிவாக காணலாம்.
அறிவு காரணம் (நிமித்த காரணம்)
படைப்பு என்பது பரம்பொருளான பிரம்மனின் வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பமே, அறிவு காரணம். எல்லாம் அவன் நடத்தும் நாடகம். அவனின்று ஓர் அணுவும் அசையாது. அறிவியல் விளக்கத்தில் இதனைப் பாரத்தோம் அல்லவா. பேரியக்கத்திற்கு முதலில் அனைத்தும் ஒருமை நிலையில் இருந்து; பின்னர் திடீரென ஏதோ நடந்தது, அண்ட விரிவாக்கம் ஏற்பட்டது என அறிவியல் விளக்குகிறது. அந்த “திடீர் நிகழ்வே” அந்த பரம்பொருளின் இச்சை - ப்ரம்மனின் ஸங்கல்பம். சுவாமி சிவானந்தரின் வார்த்தைகளில், "ஏகோஹம் பஹுஷ்யாமி - ஒருமையாகிய நான் பன்மையாக வேண்டும் என்ற உணர்வலையின் அதிர்வு. அந்த அதிர்வுதான் அறிவு காரணம். நிலத்தடியில் உள்ள விதை, முளைப்பதற்குமுன் அடையும் வீக்கத்திற்கு ஒப்பு இது”.
பொருட் காரணம் (சாதரண காரணம்)
பிரம்மனின் இச்சையெனும் மேற்கூறிய தூய உணர்வலையின் விவரிக்க இயலா மாயையான சக்தி - இதனை மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறுவர். மிகப்பழமையான இந்த அறிவாற்றல் அல்லாத சக்தி, மூன்று குணங்களைக் கொண்டது - சாத்விக, ரஜ, தாமஸ குணங்கள் (உணர்வு, செயல் மற்றும் செயலற்ற தன்மைக்கு ஒத்தவை); நற்குணம், அரச குணம், அறியாமை/மடமை குணம் என்றும் கூறலாம்.
இந்த முக்குண மாயை சூட்சும நிலையில் விதையில் அடங்கிய மரத்திற்கு ஒப்பியது. இதனைத்தான் அவ்யக்தம் எனும் வடமொழிச் சொல் என்கிறது. ஆழ்உறக்க (ஸுஷுப்தி என்பர் சமஸ்க்ருதத்தில்) நிலையில் அசைவிலா/அதிர்விலா நிலைதனில் மேற்கூறிய மூன்று குணங்களும் சமநிலையில் இருக்கும். இந்நிலையை ப்ரளய நிலை என்றும் கூறுவர். (ப்ரளயம் என்பதை அடுத்து வரும் பதிவில் காணலாம்) அதனால் தான், மாயையை குண ஸம்யதா என்று ஸமஸ்க்ருதத்தில் கூறுவர்.
இந்த மாயை எப்போது உருவாக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது, எனவே அது அநிர்வச்சனியம் அல்லது விவரிக்க முடியாதது என்றும் கூறுவர். பரம்பொருளைப் போல மாயையும் ஆதி அந்தமில்லாதது. அறிவிலா ஜடமான இந்த மாயை உருவாக்கப்பட்டதல்ல. பரம்பொருளைச் சார்ந்து இருப்பது. அதற்கென்று அறிவாற்றல் ஏதும் இல்லை. பரம்பொருளை அறியும் மெய்யறிவு கிட்டினால், மாயை மறைந்து விடும் என்றெல்லாம் ஆய்ந்து கண்ட நமது ரிஷிகள, இந்த மாயைதான் பொருட் காரணம் என்று தமது ஆய்வில் கண்டனர்.
பொது காரணம் (உபாதன காரணம்)
பொது காரணம் என்பது இடம், காலம் இவற்றை உள்ளடக்கியது. இது அழியா இடம், காலத்தைக் (eternal space and eternal time) குறிக்கும். உலகில் நடக்கும் எந்தவொரு படைப்புக்கும் இது பொருந்தும். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயல்முறைகளின் சுழற்சியே பரிணாமம் என்று ஆய்ந்து அறிந்த நமது ரிஷிகள், சுழற்சி பரிணாமத்தைப் பற்றி நாம் பேசும்போது, அழியா இடம், காலம் என்ற கொள்கை அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் பின்னர் "காலம்" என்பதை வரையறுத்து அதனை விவரித்தனர். அண்டப்பரிணாமத்தை பிரம்மாவின் ஆயுட்காலத்துடன் இணைத்தனர்.
(கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்)
காலமும் நேரமும்



முடிவுரை
அண்டப் பரிணாமத்தின் ரகசியம் அதனுள் வாழும் உயிரினங்களுக்குள்ளேயே உள்ளது. பதஞ்சலியின் கூற்றுப்படி, "பரிணாமம் வேண்டும்" என்ற இச்சையே பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் (யோக சூத்திரங்கள், IV. 2. 3). பருநிலையில், நடைமுறையில், இதனை தடைகளனைத்திலுமிருந்து விடுதலை பெற்று, முழு ஆற்றலையும் உணர வேண்டும் என்ற நமது இச்சைக்கு ஒப்பிடலாம். எனவே, பரிணாமம் என்பது ஒரு குருட்டுத்தனமான தற்செயலால் ஏற்படவில்லை - உள்ளார்ந்த தூய்மையான, சுதந்திரமான மற்றும் முழுமையான சுயத்தின் உண்மையான தன்மையை உணர, உயிரினத்தின் உள்ளார்ந்த தூண்டுதலே பரிணாம வளர்ச்சியின் மூலம் என்று கொள்ளலாம்.
கோழிக்குள் முட்டை வைத்து, முட்டைக்குள் கோழி வைத்து, பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் பரம்பொருளே அந்த உள்ளணுர்வுத் தூண்டுதல். அந்தப் பரம்பொருளின் தூய இருப்பே அண்டத்தை ஒளிர வைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை நமது சிந்தனை மற்றும் வாழ்வின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. உருவமற்ற பிரம்மன் மாயையினால் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது.
நமது வேதாந்தத்தில் இயற்கைக்கு ஒரு ஆன்மீக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பொருள்சார்ந்த விளக்கம் அல்ல. இயற்கையானது தன்னைத்தானே பரிணாமம் செய்துகொள்வது; அந்த பரிணாமத்தின் சாராம்சமாகவும் ஆதாரமாக இருப்பதும் ஆதி அந்தமிலா, நீக்கமற நிறை பரம்பொருளே என நமது மறைகள் கூறுகின்றன. இயற்கை அன்னை அந்தப் பரம்பொருளின் வெளிப்பாடு. கடலின் அலைகள், நெருப்பின் வெப்பம், மலரின் மணம், மண்ணின் வாசனை என வாழ்வில் நமக்கு அந்த வெளிப்பாடுகள் பல வகைகளில் இருக்கும்.
தன் இச்சைப்படி தன்னுள் இருக்கும் திரவத்தைக்கொண்டு அழகிய வலைதனைப்பிண்ணி, தன்னிச்சைப்படி அதனை தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சி போல, உயிரும் உணர்வும் கொண்ட மானிடரின் உடலில் உயிரற்ற ஜடப்பொருட்களான நகங்களும் முடிகளும் வளர்வது போல, அண்டத்தில் எண்ணற்ற வெளிப்பாடுகள் அந்த பரம்பொருளின் அருளினால்.
இந்த அடிப்படை கோட்பாட்டினை நாம் நன்கு உணர்ந்தால்தான், அண்டப்பரிணாமத்தை நாம் அறிந்துணர முடியும்.
அடுத்து வரும் பதிவுகளில், அண்டப்பரிணாம செயல்முறைகளை காணலாம்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!