சங்கரனின் வைரக் கூடம் – 4 – வாழக்கையெனும் ஓடம்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

சங்கரரின் வைரக்கூடத்தில், வைராக்கியம் எனும் வைரத்தை பட்டை தீட்டி மெருகேற்றிட,  நிலையாமையை உணர்ந்து, உடல், ஈட்டிய தனம் (செல்வம்),  உடல் மீதுள்ள பற்றுதலின் அடிப்படையிலான காமம் என்ற மூவகைப் பற்றினை விட வேண்டும் என்ற மூன்று செயல்முறைகளை அறிந்து, மன உறுதியுடன், மறுபடியும் கூடத்திற்கு விஜயம் செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி. வருக, வருக!

நம் சொந்த (குடும்பம், உடல்நலம் மற்றும் செல்வம்) பாதுகாப்பு, மன அமைதி என்று வரும்போது அன்றாட வாழ்வில் நாம் இதை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம்; இல்லையெனில், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் எதுவுமே இவ்வுலகில் தேவையில்லை/இருக்காது.

ஒருபுறம், வாழ்வு நிலையற்றது, அதற்காக காப்பீடு தேவை என்று உணர்ந்த நாம், மறுபுறம் நம்மை அறிய, வாழ்வில் மறைகள் கூறியபடி நடக்க வேண்டும் என்று வரும்போது, எந்த மனநிலையில் இருக்கிறோம்?

“மகனே! வாரம் ஒருமுறையாவது பகவத் கீதையைப் படிக்கலாம் வா” - தந்தையோ அல்லது தாத்தாவோ,

“இதெல்லாம் உங்களைப் போன்ற ஓய்வு பெற்றவர்களுக்காக அப்பா/தாத்தா. எங்களுக்கு தலைபோகும் வேலைகள் உள்ளன, தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் சமாளிக்க ஏராளமான போட்டிகள் மற்றும் சவால்கள் உள்ளன. உங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததைப் போல், வாழ்க்கை எளிதானது அல்ல” - மகன்/மகள்/பேரக்குழந்தைகள்

நம் இல்லங்களில் அடிக்கடி கேட்கப்படும் உரையாடல், அல்லவா! இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் ஒரு பெரியவருக்கும் இளைஞனுக்கும் இடையே நடைபெறும் மிகவும் பொதுவான உரையாடல் இது. இங்கே அடிப்படைக் கருப்பொருள், நாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், பகவத் கீதை போன்றவற்றைப் படிக்கும் நேரம் ஓய்வுக்குப் பிறகுதான், ஆக வாழ்க்கை கணிக்கக்கூடியது என்று முடிவு செய்கிறோம்.

ஆதிசங்கரர் இந்த இருவேறுபாட்டைப் புரிந்து கொண்டு நிலைமையின் அவசரத்தை உணர்த்துகிறார். ஆன்மிகக் குணத்தை வளர்த்துக்கொள்ள இப்போது உங்களுக்கு ஆரோக்கியம், மன மற்றும் அறிவுசார் திறன்கள் உள்ளன. எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? எனவே, இந்த பொன்னான நேரத்தை உள்நோக்கிப் பார்த்து, உங்களைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்துங்கள் என்று சங்கரர் அறிவுறுத்துகிறார்.

வாருங்கள், சங்கரனின் இந்த செயல்முறையை அறியலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

नलिनीदलगतजलमतितरलं

तद्वद्जीवितमतिशयचपलम् |

विद्धिव्याध्याभिमानग्रस्तं

लोकं शोकहतं समस्तम् ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

நளினி த3ளக3த ஜலமதி தரளம்

தத்3வத் ஜீவித மதி3ச’ய சபலம் |

வித்3தி4 வ்யாத்4யபி4மான க்3ரஸ்தம்

லோகம் சோ’கஹதம் ச ஸமஸ்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

தாமரை இலைமேல் தண்ணீர் போல

வாழ்க்கையில் என்றும் மிகவும் சஞ்சலம்

நோயும் பற்றும் விழுங்கிடும் உலகம்

துன்பம் ஒன்றே நிறைந்திடும் அறிவாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

नलिनीदलगतजलमतितरलं - नलिनी दल गत जलं अति तरलं - நளினி த3ளக3த ஜலம் அதி தரளம் - தாமரை, இலையில,  நீர், நிலையற்ற

तद्वद्जीवितमतिशयचपलम् - तद्वद् जीवितं अतिशय चपलम् - தத்3வத் ஜீவிதம் அதி3ச’ய சபலம் - அது போல, வாழ்க்கை, மிகவும், நிலையற்றது

विद्धिव्याध्याभिमानग्रस्तं - विद्धि व्याधि अभिमान ग्रस्तं - வித்3தி4 வியாதி அபி4மான க்3ரஸ்தம் - அறிவாய், நோய், பற்று, விழுங்கிடும் (ஆளாகும்),

लोकं शोकहतं च समस्तम् - लोकं शोक हतं च समस्तम् - லோகம் சோ’க ஹதம் ச ஸமஸ்தம் - உலகம், துன்பம், பீடித்திருத்தல், முழுவதும்

விளக்கவுரை

தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே! இது தான் இந்தப் பண்ணின் சாரம். இதை இப்போது ஆராய்வோம்.

இந்த ஸ்லோகத்தை விளக்க நாம் வேறெங்கும் செல்ல வேண்டாம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்தாலே போதும்.

கொடிய வைரஸின் வருகை, அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றுநோய் (இப்போது கூட அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதா என்று கடவுளே அறிவார்) - இந்த உலகத்தில் நம்முடைய இந்த நிச்சயமற்ற காலத்திலும் கூட, பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு பஞ்சமில்லை என்பதை நம் அனைவருக்கும் உணர்த்திடும் ஒரு வாழ்க்கைப் பாடம். உடல் ரீதியில் நோய், உணர்ச்சித் தளத்தில் பதற்றம், அறிவார்ந்த நிலையில் ஆணவம் தலைவிரித்தாடுவதைக் கண்டோம்.

இவை அனைத்தும் நமது அன்றாட அனுபவங்களே. இந்த மூன்று வகை மனக் கிளர்ச்சிகளுடன் வாழ நாம் பழகிவிட்டோம். அவைகளைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் வாழ்கிறோம். ஆகையினால் அதை கடக்க முயல்வதும் இல்லை.

பஜ கோவிந்தம் ஸ்லோகம் 4 இல், ஆதி சங்கரர், இந்த நமது அறியாமை மனதை தட்டி எழுப்ப முயற்சிக்கிறார். நமது வாழ்க்கை அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பிணிகளைக் கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர்.

தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கி நிற்க்கும் நீர்த்துளிகள் போல, எப்படி அந்த தாமரை இலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் வாழ்க்கையும். எந்த நேரமும் அந்த நீர்த்துளிகள் தடாகத்தில் விழ்நேரிடலாம். அதுபோல் தத்தளித்துக் கொண்டிருக்கிற நம் வாழ்வு , எந்த நிமிடமும் முடியலாம். சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என்கிறார். இதைவிட வேறு உகந்த உவமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உவமையை கைய்யாண்டிருக்கிறார்!

வாழ்க்கை என்பது அதிசய-சபலம் என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் கூறுகிறார். இதற்கு என்ன பொருள்? வாழ்க்கையை வீணடிக்க நேரம் இல்லை என்று அர்த்தம். செய்ய வேண்டியதை எதிர்காலத்திற்கு தள்ளிப் போடாதீர்கள். பொதுவாக விரும்பத்தகாத அல்லது கடினமானதை நாம் தள்ளிப்போடுவது இயல்பு. ஸ்ரீ சங்கராச்சாரியார், இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகிறார்.

வியாதி (உடலில் நோய்) மற்றும் அபிமானம், (மனதில் உள்ள நோய்களான பற்றுதல் மற்றும் தற்பெருமை) தவிர, நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு விஷயம் உள்ளது என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார். மக்கள் எப்போதும் சோகத்தின் மயக்கத்தில் இருக்கிறார்கள்; இந்த உலகம் எப்பொழுதும் துக்கம் நிறைந்தது. இந்த தொற்றுநோய்களின் போது இவை ஒவ்வொன்றும் உலகம் முழுவதும் முழு காட்சிக்கு வைக்கப்பட்டன அல்லவா.

எனவே, எதற்காக நாம் காத்திருக்கிறோம்? கோவிந்தன் துதிக்கு வாழ்க்கையில் ஏன் முன்னுரிமை இல்லை? கடவுளை வழிபடுவதை விட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள நாட்டங்கள் உள்ளன என்று நீங்கள் நினைத்தால், அந்த நாட்டங்கள் பெருமையையும், பற்றுதலையும், நோயையும் கொண்டு வந்து, துக்கத்தையோ அல்லது சோகத்தையோ ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, வாழ்க்கையின் உண்மையான தன்மையை உணர்ந்து, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

இதுவே இப்பண்ணின் சாரம்

தமிழ் இலக்கியத்தில் வாழ்வின் நிலையாமை

திருக்குறள்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.

“உறங்குவது போலுந் சாக்காடுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு” (குறள் - 339)
என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது.

தொல்காப்பியம்
” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானுநில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள். நூற். 78)என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

"பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்”

“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”

சித்தர் பாடல்

''நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி''

என்ற சித்தர் பாடிய பாட்டினை நாட்டுப்புற மக்கள் தங்கள் பாட்டாகவே கருதி வாழ்ந்து வந்தமையை நாம் காணமுடிகிறது.

வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து, வாழ்கின்ற நாட்களில் பயனுடையதாய் ஆக்காத, வாழ்வியல் தத்துவத்தை உணராத, மாந்தர்கள் இவ்வுடலை வீண் செய்து அழித்து விடுவதையே ''கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'' என்ற வரி உணர்த்துகிறது.

அம்பலவாணக் கவிராயர்

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழி போன்றது. புதல்வர், கிளை, மனை, மனைவி இவையெல்லாம் கானல் நீர். உயிரோ வெட்ட வெளிதனில் வைத்த தீபம். எனவே வீண்பொழுது போக்காமல் ஆண்டவனை நேயமொடு வழிபட அவனிடமே அருள் வேண்டி நிற்க வேண்டும் என்கிறார்.

காயமொரு புற்புதம் வாழ்வு மலைசூழ் தரும்காட்டில் ஆற்றின் பெருக்காம்கருணைதரு புதல்வர் கிளை மனை மனைவிஇவையெலாம்கானல் காட்டு ப்ரவாகம்மேயபுய பல வலிமை யிளமை அழகு இவையெலாம்வெயில் மஞ்சள், உயிர் தானுமேவெட்ட வெளிதனில் வைத்த தீபமெனவே கருதிவீண்பொழுது போக்காமலேநேயமுடனே தெளிந்து அன்போடுஉன் பாதத்தில்நினைவு வைத்து இரு போதிலும்நீர் கொண்டு மலர் கொண்டு பரிவு கொண்டர்ச்சிக்கநிமலனே யருள் புரிவாய் (19)
(காயம் = உடம்பு; புற்புதம் = நீர்க்குமிழி; பெருக்கம் = வெள்ளம்; கிளை = சுற்றம்; மனை = வீடு; ப்ரவாகம் = வெள்ளம்

முடிவுரை

பகவத் கீதையில் [13-9], பகவான் கிருஷ்ணர், எல்லா நேரத்திலும் நமக்கு பல்வேறு வகையான வலிகள் {ஜென்மத்தில்/பிறப்பில், ம்ருத்யு/மரணத்தில், ஜரத்தில்/முதுமையில், மற்றும் வியாதி/நோய், (ஜென்ம-மிருத்யு-ஜர-வியாதி-துக்கதோஷனு-தர்சனம்)} இருப்பதைப் பற்றி தொடர்ந்து சிந்தி என்று அறிவுரை வழங்குகிறார்.

இறைவனின் இந்த அறிவுரையைத் தான், ஆதி சங்கரர் இந்த பண்வழியாக நம் மூட மனதிற்கு நான்காவது செயல்முறையாகக் கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சிந்திப்போம். செயல்படுவோம். அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை

இறையருள் பெருக. வாழ்க வளமுடன்.


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading