
முகவுரை
நன்னூல் என்ற இலக்கண நூலின் சொல் அதிகாரத்தில் உள்ள “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்ற தொடர், வழக்கிழந்த இலக்கணக் கருத்துக்களை நீக்குவதும், புதிய வழக்குகளை ஏற்பதும் தவறில்லை என்பதைக் குறிப்பது. அதாவது,
இலக்கணம் காலந்தோறும் ஏற்படும் மாற்றத்திற்கு உட்பட்டது எனக் கூறுகிறது.
வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.
சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?
வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.
ஸமஸ்க்ருத ஸ்லோகம்
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
பகவத் கீதை 2.22
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!
ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!
பொருள் விளக்கம்
தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.
காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.
“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”
என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.
தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.
அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.
இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.
சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும் – ஒரு கண்ணோட்டம்
1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:
• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.
• ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.
3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.
உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!
அதுபோல, ஸூக்ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.
இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்
ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்லோகத்தின் உட்கருத்து
ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.
இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.
ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்ஷத்தை கொடுக்காது.
அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.
இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.
இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.
பாடலைக் கேளுங்கள்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.