ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 6

ஸ்லோகம்

ध्यायन्तस्त्वां कतिचन भवं दुस्तरं निस्तरन्ति
त्वत्पादाब्जं विधिवदितरे नित्यमाराधयन्तः ।
अन्ये वर्णाश्रमविधिरताः पालयन्तस्त्वदाज्ञां
सर्वं हित्वा भवजलनिधौ एष  मज्जामि घोरे ॥ ६॥

த்யாயந்தஸ்த்வாம் கதிசந பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி
த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த: ।
அந்யே வர்ணாஶ்ரமவிதிரதா: பாலயந்தஸ்த்வதாஜ்ஞாம்
ஸர்வம் ஹித்வா பவஜலநிதௌ ஏஷ மஜ்ஜாமி கோரே ॥ 6॥

தமிழாக்கம்

உனைத் தியானித்து நிச்சயம் கடந்திடுவர் கடத்தற்கரியதை சிலர் ! 

மறைவழி முறையாய் அனுதினம் உனை வழிபடுவர் வேறு சிலர் ! 

வாழ்வியல் வகுவழி வாழ்ந்து  களித்து உனதாணை காப்பர் சிலர் ! 

இவையேதுமின்றி கோரப் பிறவிப்பெருங்கடல் மூழ்கியுளேனே!! 6

சொற்களின் பொருள்

கதிசந – சிலர் 

த்வாம் – உன்னை

த்யாயந்த: – தியானிப்பவர்களாய் 

துஸ்தரம் – கடத்தற்கரிய (பிறவிப்பெருங்கடலை)

நிஸ்தரந்தி – நிச்சயமாக கடந்துவிடுகின்றனர்

இதரே – வேறு சிலர் 

த்வத்பாதாப்ஜம் – உன் திருவடித் தாமரைகளை 

விதிவத் – மறைகளில் கூறப்பட்டுள்ளபடி

நித்யம் – நாள்தோறும் 

ஆராதயந்த: – முறையாக வழிபடுகிறார்கள்

அந்யே – வேறு சிலர 

வர்ணாஶ்ரம விதி ரதா: – வாழ்வியல் வகுத்த நெறி வழி நடந்து மகிழ்ந்து, வர்ணாஸ்ரம விதிகளைக் கடைப்பிடித்து மகிழ்பவர்களாய்

த்வதாஜ்ஞாம் – த்வத் ஆஜ்ஞாம் – உனது ஆணையை 

பாலயந்த: – காப்பாற்றுகிறார்கள்

ஸர்வம் – இவை அனைத்தையும்

ஹித்வா – விட்டுவிட்டு, தவிர்த்து

ஏஷஹ – இந்த 

கோர – கொடூரமான

பவஜலநிதௌ – பிறவிப் பெருங்கடலில்

மஜ்ஜாமி – மூழ்கிக் கிடக்கிறேன், அந்தோ! 

பொருள் விளக்கம்

இந்த ஸ்லோகம் “உன்னை நான் அணுகவும தண்ணருள் வகுக்க இலையோ” என்று இறையிடம் தாயுமானவர் தன்னைத் தாழ்ந்த நிலையில் வைத்துப் பாடுதல் போல அமைந்துள்ளது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கிணங்க, அப்பைய தீக்‌ஷிதரின் தன்னடக்கத்தின் வெளிப்பாடு இந்த ஸ்லோகம்.

இறையை அடைய உலகோர் கடைப்பிடிக்கும் மூன்று வழிகளைக் கூறுகிறார் தீக்‌ஷிதர். 

  1. தியான மார்கம் (நிதித்யாஸன மார்கம்)
  2. வேதங்கள் கூறும் வைதீக கர்ம அனுஷ்டானம் 
  3. வாழ்வியல் நெறிகள்வழியான லௌகீக கர்மானுஷ்டானம்

1. தியான மார்கம்

“த்யாயந்தஸ்த்வாம் கதிசந பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி” என்ற முதல் சொற்றொடருக்கான விளக்கத்தை நாம் பகவத் கீதையில் காணலாம். 

“தை3வீ கு3ணமயீ ஏஷா மம மாயா து3ரத்1யயா (பகவத் கீதை 7.14), தெய்வீகமானதும்  (ப்ரம்மனை அதிஷ்டானாமாகக் கொண்டதும்), குணங்களின் வடிவமுமான இந்த என்னுடைய மாயையானது கடப்பதற்கு கடினமானது” என்றும், “எண்ணற்ற மனிதர்களுள் யாரோ ஒருவர்தான் மோக்‌ஷ மார்கத்தில் முயற்சிக்கிறார். முயற்சி செய்து மோக்‌ஷ மார்க்கத்தில்  இருப்பவர்களுள்ளும் யாரோ ஒருவர்தான் என்னை அறிகிறார்”

“மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு க1ஶ்சித்3யத1தி1 ஸித்3த4யே |
யத1தா1மபி ஸித்3தா4னாம் க1ஶ்சின்மாம் வேத்2தி2 த1த்1த்1வத1: ||7.3||

என்றும் அறிவுரைக்கிறான் கண்ணன் பகவத் கீதை (7.3).

அத்தகைய சிலர் மெய்யறிவு பெற்று, சுண்ணாம்புக் காளவாசலில் அடைத்து எரிக்கப்பட்டபோதும் 

“மாசில் வீணையும் மாலை மதியமும் 

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 

மூசுவண்டறைப் பொய்கையைப் போன்றதே 

ஈசன் எந்தை இணையடி நிழலே” 

என்ற திருநாவுக்கரசரின் மன உறுதி, ஒருமைப்பாடு, மன அமைதிகண்டு கடந்து செல்கின்றனர் 

மலர்மிசை ஏகினான் மாண்டி சேரந்தார்

நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3)

என்ற திருக்குறள், இத்தகையோரைக் குறிப்பது.

2. வேதங்கள் கூறும் வைதீக கர்ம அனுஷ்டானம் 

வழிபாட்டிற்கான சாஸ்த்திர விதி, நமது மறைகளில் தெளிவாக உள்ளது.

“ஆசமநம், ப்ராணாயாமம், விக்னேஸ்வர வந்தனம், குரு வந்தனம், ஸங்கல்பம், தீப பூஜா, கண்ட பூஜா, கலஸ பூஜா, ஸங்க பூஜா, ஆத்ம பூஜா, பீட பூஜா, த்யாநம், ஆவாஹநம், ஆஸநம், பாத்யம், அர்க்யம், ஆசமநம், ஸ்நாநம், வஸ்த்ரம் (ஆபரணம், பூணூல்), புஷ்பமாலா, அர்ச்சநா, தூபம், தீபம், நைவேத்யம், மங்களாரத்தி,  மந்த்ர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம், பாரிஜாத புஷ்பம், வேத கோஷம், சத்ரசாமராதி (தர்ப்பண) உபசாரங்கள், ப்ரதக்‌ஷிணம், நமஸ்காரம், ப்ராரத்தநா”, ஸமர்ப்பணம்

என்ற பகுதிகளடங்கியவை இவை.

அனுதினமும் இவ்வழிமுறைகளை கடைப்பிடிப்பத “த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த:” என்று கூறிகிறார் அப்பையர். 

3. வாழ்வியல் நெறிகள் வழியான லௌகீக கர்மானுஷ்டானம்

சமூகத் தொழில்களைப் பற்றியது வர்ண தர்மங்கள்; தனி மனித கடமைகளைப் பற்றியது ஆஸ்ரம தர்மங்கள்.

வர்ணம் என்பது தொழிற் குழு.  அவரவர் தொழிற்குழு விதிப்படி பணி புரிந்து இறையின் நியமத்தை கடைப்பிடிக்கின்றனர்.

ப்ரம்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்பரஸ்த்தன், சந்யாஸி ஆகியோர் அவரவருக்குறிய தர்மங்களை கடைப்பிடிக்கிறார்கள். 

தனிமனித வாழ்க்கைக்குறிய பொறுப்புகளையும், சமூகப் பொறுப்புகளையும் இறைப்பணி என்ற மனப்பாண்மையுடன் (கர்ம யோகம்) நிறைவேற்றுவதன் மூலம், இறைவனை வழிபடுகிறார்கள் 

பகவத் கீதை 18.41 முதல் 45 வரை இதனையே கூறுகிறது. இதன் விளக்கத்தை முந்தைய ஸ்லோகம் 5ல் கண்டோம்.

அப்பையரின் நிலை உரைத்தல்

ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே “துன்பம் தவிர்த்து நிலையான தூய இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்” என்பதில் ஐயமேதுமில்லை.

நம் மறைகள், அறத்தின் வழி நின்று, பொருள் தேடி, முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற வழி முறையைக் கூறுகின்றன. இதனை “புருஷார்த்தம்” என்பர்.

அந்த வீட்டினை  அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும், அன்றாடம் இடைவிடாது முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன்.

இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்  “நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?” என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோம்.

பின்னர், ஆதி சங்கரர் கூறியது போல, 

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு
மீண்டும் அன்னையின் வயிற்றில் கிடப்பு
கடக்க இயலா கரையிலா கடலே
கடத்திடு எம்மை கருணைக் கடலே

இதனைத்தான் இந்த ஸ்லோகத்தில், ஸர்வம் (இவை அனைத்தையும்) ஹித்வா (விட்டுவிட்டு, தவிர்த்து),ஏஷஹ (இந்த)  கோர (கொடூரமான) பவஜலநிதௌ (பிறவிப் பெருங்கடலில்), மஜ்ஜாமி (மூழ்கிக் கிடக்கிறேன், உலகியல் வாழ்வில் உழல்கிறேன்) – “ஸர்வம் ஹித்வா பவஜலநிதௌ ஏஷ மஜ்ஜாமி கோரே” என்கிறர் தீக்‌ஷிதர். 

ஸ்லோகத்தின் கருப்பொருள்

  1. மறைவழி இறை வழிபாட்டு வழி
  2. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்ம யோக வழி 
  3. தியானம் எனும்  ஞானயோகம் வழி

என்று வாழ்வதனில் பேரின்ப இலக்கை அடைய, இறையினையே இடைவிடாது நாடிட, உலகோர் எடுக்கவேண்டும் என்ற அறிவுரையை உள்வைத்துக் கூறுகிறார் அப்பையர்.

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் 3.4 (திருவாவடுதுறை) கூறும் கருத்தும் இதுவே.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்

திருஞானசம்பந்தர் தேவாரம்

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !