ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 8

ஸ்லோகம்

अर्कद्रोणप्रभृतिकुसुमैरर्चनं ते विधेयं
प्राप्यं तेन स्मरहर फलं मोक्षसाम्राज्यलक्ष्मीः ।
एतज्जानन्नपि शिव शिव व्यर्थयन्कालमात्मन्
आत्मद्रोही करणविवशो भूयसाधः पतामि ॥ ८॥

அர்கத்ரோணப்ரப்ருதிகுஸுமைரர்சநம் தே விதேயம்
ப்ராப்யம் தேந ஸ்மரஹர பலம் மோக்ஷஸாம்ராஜ்யலக்ஷ்மீ: ।
ஏதஜ்ஜாநந்நபி ஶிவ ஶிவ வ்யர்தயந்காலமாத்மந்
ஆத்மத்ரோஹீ கரணவிவஶோ பூயஸாத: பதாமி ॥ 8॥

தமிழாக்கம் 

எருக்கம் தும்பை மலரால் பூசை
என்றே உரைத்தன மறை நான்கும்!
அப்பூசை தரும் முக்திப் பேரின்பமென 
அறிந்தும் காலம் வினையம் புரிந்து
ஐம்புலனின்ப மயக்கம் கொண்டு 
ஆத்ம துரோகியென அதிவிரைவாய்
அதலம் நோக்கி வீழ்கின்றேன் 
பரமாத்மனே சிவபெருமானே !! ,8

சொற்களின் பொருள்

ஸ்மரஹர – காமத்தை எரித்தவனே 

அர்க த்ரோண ப்ரப்ருதி குஸுமைஹி – (எளிதில் கிடைக்கும்) எருக்கம், தும்பை முதலான (ப்ரப்ருதி) பூக்களால்

தே அர்சநம் – உன்னைப் பூசிக்க வேண்டும் என 

விதேயம் – வேதங்களில் கூறப்பட்டுள்ளது

தேந – அந்த வழிபாட்டினால் 

ப்ராப்யம் – கிடைக்கும் 

மோக்ஷஸாம்ராஜ்யலக்ஷ்மீ: – பேரின்ப வடிவான மோக்‌ஷம்

பலம் – பலன் 

ஆத்மந் – பரமாத்மாவான

ஸிவ ஸிவ – சிவபெருமானே

ஏதத் – இந்த உண்மையெல்லாம்

ஞாநந் அபி – அறிந்த பின்னும் 

கால – காலத்தை 

வ்யர்தயந் – வீணடித்துக்கொண்டு

கரணவிவஶோ – இந்திரியவயம் மயங்கி 

ஆத்மத்ரோஹீ – தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு

பூயஸா – மிக விரைவாக (அடிக்கடி)

அத: – கீழே

பதாமி – விழுந்துகொண்டிருக்கிறேன்.

பொருள் விளக்கம்

உன்னை ஆராதிப்பது அடியேனுக்கு சிரமமான காரியமில்லை. எருக்கு தும்பை முதலிய மணமற்ற, யாரும் வேண்டாத, எங்கும் கிடைக்கக்கூடிய புஷ்பங்களால் உன்னை அர்ச்சனை செய்தால் போதும். இவ்வளவு ஸுலபமான ஆராதனைக்கு ஏற்படும் பலமோ வீடுபேறு. இதை அறிந்திருந்தும் முக்தியைத் தேடிக்கொள்ளாத நான் ஆத்ம துரோகி என்பதில் ஐயமென்ன? சிவ சிவ என்ன பரிதாபம், நான் வீணாகக் காலத்தை விஷய சபலனாகவே கழித்து வருகிறேன். அதன் பயனாக அதோகதியை அடைகிறேன். 

உலகத்தில் கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு மஹத்தான சுகத்தையும் அடைய வெகு எளிய வழியை அறிந்திருந்தும் அதற்கு முயற்சி செய்யாமல் துக்கத்திலேயே உழன்று கொண்டிருப்பானாகில் அவன் எவ்வளவு மூடன், என 

ஜீவனாகிய நான் சிவனாகிய உன்னைச் சார்ந்திருப்பதை விட்டுவிட்டு அஸிவமாமாகிய உலகப் பொருட்களையும் உறவுகளையும் சாரந்திருக்கிறேன். என்னைப் பொருத்தருள்வீர் என்கிறர் தீக்‌ஷிதர் இந்த ஸ்லோகத்தில்.

இதுவும் ஆத்ம நிந்தனை முறையில் பக்தி. உடலுக்கு நன்மை செய்து, உயிருக்குக் கெடுதல் செய்யும் பாவியான ஆத்மத்ரோஹீ நான் என்கிறார்.

ஆத்மத்ரோஹீ – விளக்கம்

உயிருக்கு பிறப்பு, இறப்பு இல்லை. உயிர் வருவதும் போவதும் இல்லை. உயிருக்கு உடல் கிடைத்தது, மனிதன் பெற்ற பெரு வாயப்பு. 

உயிருக்காகத்தான் உடல். உயிர் மனமுடன் இணைந்திருக்கிறது. இந்த மனமே பரு உடலை, உயிருடன் இணைக்கிறது. அதனால் உயிர், உடலுக்கே உழைக்கிறது. உடல் உயிரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உண்மையில் உயிருக்காக இருக்கும் கூடு உடல். உயிருக்காக உடலைக் கவனி. உடலுக்காக உடலைக் கவனித்தால், உயிர் திரும்பித் திரும்பி உடலையே நாடும். மனிதன் ஒருவனுக்கே மீண்டும் உடல் எடுக்கா வாய்ப்பு உள்ளது. அப்படி அரிதாகப் பெற்ற உடலை வீண்டிப்பது கூடாது.  

இதனை ஈஸாவாஸ்ய உபநிஷத் (3), 

असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।
तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥

அசுர குண மடமையுடன் இருள் கொண்டு குருடரென
அகமுறை இறை உணர்வறியா ஆன்மக் கொலையாளிகள்

ஈஸாவாஸ்ய உபநிஷத் (3)

அல்லலெனும் மாசாம் பிறவிப் பிணி பெருவரே மூடரவர் என்று தன்னுடைய உடலைத் தான் எனக் கருதுபவது தற்கொலை என்பதைத் தெளிவாக கூறுகிறது. 

எனவே, உயிருடன் இணைந்த மனம் (தன்னுணர்வு) அழிய வேண்டும். அது அழிந்தால்தான், உயிர் உடலுடன் அடையாளம் கண்டுகொள்ள இயலாது.  அதற்கு மெய்யறிவு தேவை. மெய்யறிவிற்கு இன்றியமையாதது, இறையருள். இறையருளை நாடுவதே ஆன்மீகத்தின் முதல்படி.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 

என்று உடலை வளர்ப்பதனை திருமந்திரம் கூறுகிறதே என திருமந்திரத்தை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. 

திருமந்திரம் கூறும் உடம்பை வளர்க்கும் உபாயம், உடல் பரம்பொருளின் உறைவிடம் என்ற ஐயம் திரிபு அற்ற மன உறுதியுடன், நன்னெறி வழியில் உடலைப் பாதுகாப்பது என்பதே.