ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 9

ஸ்லோகம்

किं वा कुर्वे विषमविषयस्वैरिणा वैरिणाहं
बद्धः स्वामिन् वपुषि हृदयग्रन्थिना सार्धमस्मिन् ।
उक्ष्णा दर्पज्वरभरजुषा साकमेकत्र बद्धः
श्राम्यन्वत्सः स्मरहर युगे धावता किं करोतु ॥ ९॥

கிம் வா குர்வே விஷமவிஷயஸ்வைரிணா வைரிணாஹம்
பத்த: ஸ்வாமிந் வபுஷி ஹ்ருதயக்ரந்திநா ஸார்தமஸ்மிந் ।
உக்ஷ்ணா தர்பஜ்வரபரஜுஷா ஸாகமேகத்ர பத்த:
ஶ்ராம்யந்வத்ஸ: ஸ்மரஹர யுகே தாவதா கிம் கரோது ॥ 9॥

தமிழாக்கம் 

புலனின்பப் பொருள் பின்னே 
தரிகெட்டுத் தன்னிச்சையால்
திமிறி ஓடிடும் அகமுடிச்சுகள்
அடங்கியுள்ள காயம் தனில்
பிணையுண்ட என்செய்வேன்!
நுகத்தடி ஒன்றினிலே திமிறும்
முரட்டுக் காளையுடன் பூட்டிய
களைத்த தளர் இளங்கன்று 
என்செய்ய இயலும் காமகோபனே!! 9

சொற்களின் பொருள்

ஸ்வாமிந் – உயிரை ஆளும் இறைவனே – எனையாளும் இறையோனே

விஷம விஷய ஸ்வைரிணா – ஒழுங்கில்லாமல் + சுவை, ஒளி, ஒசை, ஊறு, சப்தம் எனும் புலப்பொருட்கள் + தன்னிச்சையாக. அதாவது 

(கரடு முரடான பிரதேசங்களில்) பல விதமான புலனின்பப் பொருட்களின் பின், கட்டுக்கடங்காமல், தண்ணிச்சையாக திமிறிக்கொண்டு ஓடும் 

வைரிணா – பகைவர்களான 

ஹ்ருதயக்ரந்திநா – இதய முடிச்சுகள் (அவித்யா காம கர்ம – அறியாமை, ஆசை, செயல்)- குறள் 360

ஸார்தம் – கூடியதான

அஸ்மிந் – இந்த 

வபுஷி – உடலான வண்டியில் 

பத்த: – பிணைக்கப்பட்ட 

அஹம் கிம் வா குர்வே – நான் என்னதான் செய்ய முடியும் 

ஸ்மரஹர – காமனை எரித்தோனே 

தர்பஜ்வரபரஜுஷா – திமிர் மிகுதியானால் கொதிப்புள்ள

தாவதா – பாய்ந்தோடும்

உக்ஷ்ணா ஸாகம் – காளையுடன் கூடிய

ஏபத்ர யுகே – ஒரே நுகத்தடியில் 

பத்த: – பூட்டப்பட்ட 

ஶ்ராம்யந் – சிரமத்தினால் சோர்வுற்ற

வத்ஸ: – இளங்கன்று 

கிம் கரோது – என்ன செய்யக்கூடும்

விளக்கம்

முன் சுலோகத்தில் கூறியதை இங்கு விரித்துரைக்கின்றார். ஸுலபமான துக்க நிவ்ருத்தி மார்க்கத்தை அறிந்திருந்தும் நான் துஷ்டத்தனமுள்ள விஷய வாஸனையினால் தோற்கடிக்கப் பட்டவனானேன். பார்ப்பதற்கு ஸுகம் போலவும் இறுதியில் துக்கத்தைத் தருவதுமான இந்திரியார்த்தங்களில் ஆவேசத்துடன் பாயும் அநேக காலவாஸனா ஜடிலமான என் மனம் என்னைத் தூக்கி வாரிக் கொண்டுபோய் அனர்த்தங்களுக்கு உள்ளாக்கி விடுகிறது.

நான் என்ன செய்வேன், ஒரு முரட்டுக் காளையுடன் ஒரே வண்டியில் பூட்டப் பெற்ற இளங்கன்று என்ன செய்யும்? காளை மேடுபள்ளம் பார்க்காமல் திமிரிக் கொண்டு அதிவேகமாய் ஓடவாரம்பிக்கும் போது இளங்கன்று எவ்வித பரிதாப நிலையை அடையும்?

வாஸனை முடிச்சுக்களேறிய திமிர் கொண்ட என் மனத்துடன் நானும் இச்சரீரமாகிற வண்டியில் கட்டப்பட்டிருக்கிறேன். பலமற்ற நான் (ஜீவன்) துஷ்டவாஸனைகளால் அடக்க வொண்ணாத என் மனம் இழுத்த இடமெல்லாம் பரிதபித்துக் கொண்டே ஒடுகிறேன். என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  

ஒரே நுகத்தடியில் பூட்டப்பட்ட முரட்டுக்காளையும், இளங்கன்றும் என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார் தீக்‌ஷிதர். கட்டுக்கடங்காது ஒடும் முரட்டுக்காளையுடன் இளம்கன்று படும்பாடு என்ற உருவகத்தைக் கூறி, முரட்டுக்காளை எனும் மனத்துடன், ஜீவன் எனும் இளங்கன்றின் நிலையை எடுத்துரைக்கிறார் அப்பையர். 

சீராரும் நின் தேஜோமயானந்த

தெரிசங் காட்டு பகலே

தேகாதியாகும் ப்ரபஞ்ச இருளாகியே

திண்டாடும் மும்மலப் பேய்

போராடுது என்னுடன், நான் ஏழை, அதனுடன்

போராட முடிவதில்லை ,

புலையாடல் ஒருநாள் இரண்டு நாளோ? இது

பொறுக்கவும் படுவதில்லை

ஆரோடு சொல்லி என் குறையாறுவேன்? எனக்கு

அன்னையே! அப்பனே! உன்

ஆறுதலையன்றி வேறில்லை , நீ நழுவவிடில்

அடியேன் அலைந்து போவேன்

ஓராலின் நிழலில் உறைந்து சனகாதியர்க்கு

உள்ளபடி அருள் தெய்வமே!

ஒன்றாகி ஆனந்த உருவாகி என் உயிர்க்கு

உயிரான பரமசிவமே!

என்ற, தரும்புர ஆதினம் பத்தாவது குருமகாசன்னிதானம் சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளிய தக்‌ஷிணாமூரத்தி திருவருட்பா, மும்மலப் பேய்களின் போராட்டம் தனையே பிரதிபலிக்கிறது. 

உணரச்சிப் பெருக்கு நிறைந்த உள்ளத்துடன் இணைந்திருக்கும் என்னை, உள்ளத்திலிருந்து விடுவிப்பாயாக என்பதே இப்பண்ணின் சாரம்.


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading