ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 10

ஸ்லோகம்

नाहं रोद्धुं करणनिचयं दुर्नयं पारयामि
स्मारं स्मारं जनिपथरुजं नाथ सीदामि भीत्या ।
किं वा कुर्वे किमुचितमिह क्वाद्य गच्छामि हन्त
त्वत्पादाब्जप्रपतनमृते नैव पश्याम्युपायम् ॥ १०॥

நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி
ஸ்மாரம் ஸ்மாரம் ஜநிபதருஜம் நாத ஸீதாமி பீத்யா ।
கிம் வா குர்வே கிமுசிதமிஹ க்வாத்ய கச்சாமி ஹந்த
த்வத்பாதாப்ஜப்ரபதநம்ருதே நைவ பஶ்யாம்யுபாயம் ॥ 10॥

தமிழாக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன் அண்ணலே!
கருபிறப்பின் பெருவலி எண்ணிஎண்ணி அஞ்சி  நடுங்குகிறேன் நான்! 
என் செய்வேன் பரிகாரம் என்னவென்று எங்கு செல்வேன் அந்தகோ !
உன் மலர்ப்பாதம் பணிவதன்றி வேறேதும் அறிந்திலேன் யான்!! 10

சொற்களின் பொருள்

நாத – தலைவனே 

துர்நயம் – கட்டுப்பாடுகளுக்கு அடங்காத (நயம் = வழிநடத்துதல்)

கரணநிசயம் – இந்திரியக் கூட்டங்களை (நிசயம் = சமூகம்)

அஹம் – நான்

ரோத்தும்- அடக்கியாள 

ந பாரயாமி – ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன்

ஜநிபதருஜம் – ஜனி பத ருஜம். – பிறப்பின் (ஐனி) வழியில் (பத) உள்ள களைப்பை, சிரமத்தை (ருஜம்)

ஸ்மாரம் ஸ்மாரம் – எண்ணி எண்ணி 

ஸீதாமி – நடுங்குகிறேன்

பீ4த்3யா – அச்சத்தினால்

ஹந்த – அய்யகோ 

கிம் வா குர்வே – நான் என் செய்வேன்

கிம் உசிதம் – என்ன (தகுந்த) பரிகாரம்

க்வ – எங்கு (துன்பத்தை நீக்கிட)

அத்ய – இப்பொழுது (இங்கே)

கச்சாமி – செல்வேன் 

த்வத் பாதாப்ஜ ப்ரபதந் ருதே – உன் திருவடித்தாமரைகளில் அடைக்கலமாகுவதைத் தவிர

நைவ – வேறேது

பஶ்யாம் யுபாயம் – அறிந்திலேன் வழி

விளக்கம்

“நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி” – விளக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன்  என்ற சொற்றடரின் விளக்கத்திற்கு தாயுமானவரை அண்டுவோம்:

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே

தாயுமானவர்

மிக்க கடினம் யாதெனில் “மனத்தை  அடக்கி  சும்மா  இருக்கின்ற திறம்  அரிது”.  ஆராய்ந்தால், உடலானது உயிரைத் துன்புறுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.

“ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம்

என்னை மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா
நின் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம்

“திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்”  என்ற கோபால கிருஷ்ண பாரதி பாடல் , கருவிலிருந்து வலியுடன் களைப்பாய் வெளிவரும் பிறப்பினை நொந்துவதற்கான “ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம். “இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரென்னும் துயில் உறாது” என்கிறார் தாயுமானவர்.

“இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கும் எனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார் தீக்‌ஷிதர்”.

மந்திரம் கூறும் கருத்து

ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (பிறப்பு இறப்புச் சுழலில்) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு, விஷயங்களில் இயற்கையாகவே நுழையும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது. 

மாசுகள் படிந்த மனதிற்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவனின் புலம்பல் இது. “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் இரு கமல மலர்ப் பொற்பாதங்களை சரணடைகிறேன்,  எனக்கு வழி காட்டி நீ ஒருவனே என்ற சீவன், சிவனை நோக்கிப் புலம்புவதே இந்த ஸ்லோகம்.