ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 13

ஸ்லோகம்

ஸர்வம் க்ஷேப்தும் ப்ரபவதி ஜந: ஸம்ஸ்ருதிப்ராப்தமாக:
சேத: ஶ்வாஸப்ரஶமஸமயே த்வத்பாதாப்ஜே நிதாய ।
தஸ்மிந்காலே யதி மம மநோ நாத தோஷத்ரயார்தம்
ப்ரஜ்ஞாஹீநம் புரஹர பவேத் தத்கதம் மே கடேத ॥ 13॥

தமிழாக்கம்

சுவாசம் அடங்கும் வேளையிலே
உள்ளம் உன்பாதம் பணித்திட்டு 
பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி 
எறிய இயலும் புரமெரி நாதனே ! 
ஒருகால் அக்காலம் என் உள்ளம்
ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு
தவறிட்டால் உனதடி பணிந்திட
எங்கனம் எனக்கு கை கூடும் !!  13

சொற்களின் பொருள்

நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ! 

புரஹர – முப்புரத்தை எரித்தோனே 

ஜந: – மனிதன் (உயிர்) 

ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் 

சேத: – மனதை (சித்தத்தை) 

த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்

நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து) 

ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும் 

ஸர்வம் – அனைத்து

ஆக3ஹ – பாபங்களையும்

ஷேப்தும் – உதறி எறிந்துவிட

ப்ரபவதி – முடியும் (எனினும்,) 

தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்

யதி – ஒரு வேளை 

தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்) 

மம மநோ – என் மனது
ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக

பவேத் – ஆகிவிட்டால்

தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)

கதம் மே – எப்படி எனக்கு 

கடேத – கைகூடும்

விளக்கம்

எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.

திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம் 

இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.

இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று

சரணம் பவித்ரம், விததம் புராணம் !
யேன பூதஸ்தரதி துஷ்க்ருதாநி !
யேன பவித்ரேன ஷுத்தேன பூதாஹ !
அதி பாப்மானமராதிம் தரேம !
லோகஸ்ய பவித்ரம் சரணம் நோ லோகே ஸ்திரம் த³தாது !

தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் ! 

என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது. 

  1. இடது திருவடி குறிப்பது
    • அபர ஞானம்
    • கர்ம காண்ட ஞானம்
    • உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
    • சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
  2. வலது திருவடி குறிப்பது
    • பர ஞானம்
    • ஞான காண்ட ஞானம்
    • உண்மையை உணர்த்துவது
    • யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 

வளிமுதலா எண்ணிய மூன்று 

என்கிறது திருக்குறள் (941).

நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.

  1. வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
  2. பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
  3. சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது  இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

2 thoughts on “ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 13”

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading