ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 15

ஸ்லோகம்

अद्यैव त्वत्पदनलिनयोरर्पयाम्यन्तरात्मन्
आत्मानं मे सह परिकरैरद्रिकन्याधिनाथ ।
नाहं बोद्धुं शिव तव पदं न क्रिया योगचर्याः
कर्तुं शक्नोम्यनितरगतिः केवलं त्वां प्रपद्ये ॥ १५॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

அத்யைவ த்வத்பதநலிநயோரர்பயாம்யந்தராத்மந்
ஆத்மாநம் மே ஸஹ பரிகரைரத்ரிகந்யாதிநாத ।
நாஹம் போத்தும் ஶிவ தவ பதம் ந க்ரியா யோகசர்யா:
கர்தும் ஶக்நோம்யநிதரகதி: கேவலம் த்வாம் ப்ரபத்யே ॥ 15॥

தமிழாக்கம்

இக்கணமே உன்பதமலர் பணிந்திட்டேன் உளமுறையோனே,
மனமுடன் மெய்யும் உறவுடன் உடமையும் மலைமகள்நாதா !
உனதடி உணரவும் உடற் பணியுடன் பயிற்சிதனையும்
புரிய இயலாது வழியேதுமறியாது் உனையொருவனின்
துணை நாடியே சரணடைந்தேன் சிவபெருமானே !! 15

சொற்களின் பொருள்

ஶிவ – மங்கலஹரமானவரே! சிவ பெருமானே! 

அத்ரிகந்யாதிநாத – மலைமகளின் நாதனே! 

அந்தராத்மநஹ – உள்ளத்தினுள் உறைபவரே ! உயிருக்கு உயிரானவரே! 

த்வத் – உன்

பத நலிநயோஹோ – திருவடித் தாமரைகளில்

மே – என் 

ஆத்மாநம் ஸஹ – உடல், மன வளாகத்துடன் கூட

பரிகரைஹி – உறவுகள், உடைமைகள் அனைத்தையும்

அத்யை யேவ – இப்பொழுதே, இன்றே

அர்ப்பயாமி – அர்ப்பணிக்கிறேன் 

தவ பதம் – உன்னடியினை, உன் இறை நிலையை, மோக்‌ஷத்தை 

போத்தும் – அறிவதற்கும் (உணர்வதற்கும்)
ந ஶக்நோமி – இயலாதவனாக இருக்கிறேன்

 க்ரியா யோகசர்யா: – கிரியை, யோகம் வழியாக அதாவது வழிபடுதல், தியானம் முதலான சாதனைகளை

ந கர்தும் (ஶக்நோமி) – செய்ய இயலாதவனாக இருக்கிறேன்

அநிதரகதி:- வேறு வழியின்றி 

கேவலம் த்வாம் ப்ரபத்யே – உன் ஒருவனையே சரணடைந்து சார்ந்துள்ளேன்

விளக்கம்

சைவ சித்தாந்தத்தில், இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர். 

1. இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

2. அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.

நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே 

தாயுமானவர்

3. சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.

4. இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.

  1. சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்), 
  2. உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்), 
  3. பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும். 
  4. சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.   

மரணம் எப்பொழுது வரும் என்பதை அறிந்திலேன் நான். இங்கு இருப்பதோ இரவலாக கிட்டியது. “நம் மனே அல்லீநே! இல்லி சும்மனே பந்திதீனே!” (எம் வீடு அங்குதான்; இங்கு சும்மா வந்துள்ளேன்) என்கிறார் புரந்தர தாசர். எனவே இமைப்பொழுதும் என் நெஞ்சம் நீங்காதான் தாழ் இப்பொழுதே பணிகிறேன்.

“பெருமானே, என் உடல், உயிர் அனைத்திலும் இப்போது நீதான் நிறைந்திருக்கிறாய். இனி நான் செய்கின்ற செயல்கள் யாவும் நீ செய்வதுதான். நான் சரியான காரியங்களைச் செய்தாலும், தவறான செயல்களைப் புரிந்தாலும் அத்தனைக்கும் நீ தான் பொறுப்பு ” என்றும்

“அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?
இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே?”

என்றும் இறைவனிடம் கேட்கிறார் மாணிகக வாசகர். 

இதே மனநிலையில் உள்ள அப்பைய தீக்‌ஷிதர்,

“ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன். அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன்”.

என தன்னை அர்பணிக்கின்றார் ஆண்டவனிடம்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !