ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 16

ஸ்லோகம் 16

यः स्रष्टारं निखिलजगतां निर्ममे पूर्वमीशः
तस्मै वेदानदित सकलान् यश्च साकं पुराणैः ।
तं त्वामाद्यं गुरुमहमसावात्मबुद्धिप्रकाशं
संसारार्तः शरणमधुना पार्वतीशं प्रपद्ये ॥ १६॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

ய: ஸ்ரஷ்டாரம் நிகிலஜகதாம் நிர்மமே பூர்வமீஶ:
தஸ்மை வேதாநதித ஸகலாந் யஶ்ச ஸாகம் புராணை: ।
தம் த்வாமாத்யம் குருமஹமஸாவாத்மபுத்திப்ரகாஶம்
ஸம்ஸாரார்த: ஶரணமதுநா பார்வதீஶம் ப்ரபத்யே ॥ 16॥

தமிழாக்கம்

ஆதியில் அண்டம் படை அயனைப் படைத்து
ஆகம வேதங்களை அவனுக்குப் புகட்டி 
ஆத்ம புத்திதனை ஒளிர்விக்கும் ஈசனாம்
ஆதிகுரு உமையவனைப் பிறவிப்பிணி உழல்
அடியேன் அடைகின்றேன் சரணாகதி !! 16

சொற்களின் பொருள்

ய: ஈஶ – எந்த சிவபெருமான்

பூர்வம் – படைப்பின் துவக்கத்தில் 

நிகிலஜகதாம் – அனைத்து உலகங்களின்

ஸ்ரஷ்டாரம் – படைத்தவரைப், படைப்பாளியைப் 

நிர்மமே – படைத்தாரோ

யஹ – எவர்

தஸ்மை – அவருக்கு (அந்த பிரம்மனுக்கு) 

புராணை: ஸாகம் – புராணங்களுடன் 

ஸகலாந் – அனைத்து 

வேதாந் – வேதங்களையும்

அதி3தஹ – உபதேசித்தாரோ

தம் – அந்த 

அத்யம் – ஆதியான

குரும் –  குருவை

பார்வதீஶம் – பார்வதி நாயகனை

ஆத்மபுத்திப்ரகாஶம் – என் மனதையும், புத்தியையும் ஒளிர்விக்கின்ற த்வாம் – உம்மை
ஸம்ஸாரார்த: – பிறவிப்பிணியில உழலும்

அஸோ – இந்த 

அஹம் – நான் 

அதுநா -இப்பொழுது 

ஶரணம் ப்ரபத்யே – முழுமையாகச் சரணடைகிறேன்

விளக்கம்

யார் படைப்பின் தொடக்கத்தில் பிரம்ம தேவரைப் படைத்து (“யோ ப்ரஹ்மானாம் விததாதி  ரூபம்”) அவரிடம் வேதங்களைக் கொடுத்து (“யோ வை வேதாஷ்ஷ்ச ப்ரஹிநோதி தஸ்மை”), இந்த படைப்பை படைக்கும்படி செய்தாரோ, என்னுடைய மனதையும் புத்தியையும் ஒளிர்விக்கும் அந்த இறைவனை (“தம் தேவ ஆத்மபுத்திப்ரகாஸம்”) மோக்‌ஷத்தை விரும்பும் நான் சரணடைகிறேன் (“முமுக்‌ஷுர்வை  சரணமஹம் ப்ரபத்யே”)

என்கிறது ஷ்வேதாஷ்த்வரோப உபநிஷத் 6.28. அதே போல இங்கு தீக்‌ஷிதர் கூறுகிறார். 

சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. ஷ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீமத் பாகவதத்தின் தியான ஸ்லோகமும் இதனை கூறுகிறது. பகவத் கீதை அத்தியாயம் 15 இதைப் பற்றியே (15.1-15.4). 

அப்படிப்பட்ட ஆண்டவன் ஆத்ம, புத்திப்ரகாஶம்; அதாவது இறைவன் உணர்வாக இருக்கிறார்; நான், உணர்த்த உணர்பவனாக இருக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அப்பைய தீக்‌ஷிதர்.