
ஸ்லோகம் 19
ध्यातो यत्नाद्विजितकरणैर्योगिभिर्यो विमुक्त्यै (विमृग्यः)
तेभ्यः प्राणोत्क्रमणसमये संनिधायात्मनैव ।
तद्व्याचष्टे भवभयहरं तारकं ब्रह्म देवः
तं सेवेऽहं गिरिश सततं ब्रह्मविद्यागुरुं त्वाम् ॥ १९॥
தமிழ் ஒலிபெயர்ப்பு
த்யாதோ யத்நாத்விஜிதகரணைர்யோகிபிர்யோ விமுக்த்யை (விம்ருக்ய:)
தேப்ய: ப்ராணோத்க்ரமணஸமயே ஸம்நிதாயாத்மநைவ ।
தத்வ்யாசஷ்டே பவபயஹரம் தாரகம் ப்ரஹ்ம தேவ:
தம் ஸேவேঽஹம் கிரிஶ ஸததம் ப்ரஹ்மவித்யாகுரும் த்வாம் ॥ 19॥
தமிழாக்கம்
பொறி வென்ற யோகியரின் பெரு முயற்சித் துதிப்பொருளாய்,
அவர்தம் இறுதி மூச்சுக் காற்று முடியும் தருணமதில், தானே
முன்நின்று முக்திக்கு வித்தாகும் மும்மல அச்சம் போக்கிடும்
முழுமை அறிவு உரைத்திடும் மும்மறைக் கருவுரை ஆசானுன் மும்மலர்ப்பாதம் பணிந்திடுவேன் எப்போதும் மலையோனே !! 19
சொற்களின் பொருள்
கிரிஶ - மலையோனே
விஜிதகரணைர் - பொறிகளை வென்றவர்களான
யோகிபி - யோகிகளால்
யத்நாத் - பெரு முயற்சியால்
த்யாதஹ - தியானிக்கப்படுகின்ற
யஹ - எந்த
தேவஹ - இறைவன்
விமுக்த்யை (விம்ருக்ய:) - மோக்ஷத்தின் பொருட்டு (தேடப்படுகின்ற)
தேப்ய: - அந்த யோகிகளுக்கு
ப்ராண உத்க்ரமண ஸமயே - பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம்
ஆத்மநா ஏவ - தானே
ஸம்நிதாய - காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்ஷத்தை அளிக்கிறார்)
பவபயஹரம் - பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற
தாரகம் - சம்சாரத்தைக் கடக்கின்ற
தத் ப்ரஹ்ம - அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை
வ்யாசஷ்டே - உபதேசிக்கிறாரோ
தம் - அத்தகைய
ப்ரஹ்மவித்யாகுரும் - மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய
த்வாம் - உம்மை
அஹம் - நான்
ஸததம் - எப்போதும்
ஸேவே- வழிபடுகிறேன்
விளக்கம்
பொறிகளை வென்றவர்களான யோகிகளால் பெரு முயற்சியால் தியானிக்கப்படுகின்ற, மோக்ஷத்தின் பொருட்டு தேடப்படுகின்ற, எந்த இறைவன் அந்த யோகிகளுக்கு பிராணம் உடலிலிருந்து கிளம்பும் சமயம் தானே காட்சி கொடுத்து (உபதேசித்து, மோக்ஷத்தை அளிக்கிறார்) பிறவித் துன்பமாகிய அச்சத்தை நீக்குகின்ற சம்சாரத்தைக் கடக்கின்ற அந்த (அகண்டமான) மெய்ப்பொருளை
உபதேசிக்கிறாரோ, அத்தகைய மெய்யறிவு புகட்டும் ஆசானாகிய
உம்மை நான் எப்போதும் வழிபடுகிறேன் என்று பிராரத்திக்கும் தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில் மறைமுகமாக, இந்திரிய நிக்ரஹம் செய்ய முடியாத, தர்மத்தை அனுஷ்டிக்க இயலாதவனாக நான் உனைச் சரணடைகிறேன் கூறுகிறார்.
பிரம்மவித்யை என்ற சொல்
- ஜீவனை ப்ரம்மன் என்று புரியவைக்கும் வித்யை.
- ஜீவாத்மாவை, பரமாத்மாவாகப் புரியவைக்கின்ற வித்யை.
- இறைவனைப் பற்றிய அறிவு
- உயிர் இறைவனாகவே இருக்கிறது என்ற அறிவைப் புகட்டுகின்ற வித்யை. (“ஜீவோ ப்ரம்மைவ நா பரஹ”)
- த்வைத பக்தி செய்தவனுக்குத்தான் அத்வைத ஞானத்தை உபதேசிக்க முடியும்.
என்றவைகளைப் பற்றியது.
இந்த ஸ்லோகம் நமக்கு கூறுவது:
- யோகியாக இருத்தல்.
- புலனடக்கம் பழகுதல்.
- விடாமுயற்சி செய்து இறைவனை தியானித்தல்
- அவ்வாறு தியானிப்பவர்களுக்கு, இறைவனே வந்து அகண்ட ப்ரம்மோபதேசம் செய்வார்.
- இறைவன் ப்ரம்மவித்யா குருவாக இருக்கிறார்
- அவரை நாம் வழிபடவேண்டும்