பாடல்


ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்‌ 
ஆகின்ற ஆக்கைநீர்மேல்‌ 
அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்‌ 
அறியாத காலமெல்லாம்‌ 
புந்திமகி முறவுண்‌ டுடுத்தின்ப’ மாவதே 
போந்தநெறி என்றிருந்தேன்‌ 
பூராய மாகநின தருள்வந்‌ துணர்த்தஇவை 
போனவழி தெரியவில்லை 
எந்தநிலை பேசினும்‌ இணங்கவிலை யல்லால்‌ 
இறப்பொடு பிறப்பையுள்ளே 
.. எண்ணினால்‌ நெஞ்சது பகீரெனுந்‌ துயிலுரு(து) 
இருவிழியும்‌ இரவுபகலாய்ச்‌ . 
செந்தழலின்‌ மெழுகான தங்கம்‌இவை என்கொலோ 
சித்தாந்த முத்திமுதலே 
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே : 
சின்மயா னந்தகுருவே. 

விளக்கம்

ஐந்துவகை யாகின்ற பூதபேதத்தினால்‌ ஆகின்ற ஆக்கை

நிலம்‌, நீர்‌, நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐவகை எனும்பூத மாதியை வகுத்து, அதனுள்‌ அசரசர பேதமான யாவையும்‌ வகுத்த இறையிடம் வேண்டினார் முந்தைய பாடலில் தாயுமானவர்.

எங்கும்‌ வியாபகமாய்‌ இருந்து‌ நீல நிறம்‌ படைத்திருப்பது போன்று தென்படுகிற ஆகாசம் எனும் வெளிக்கு நிறமில்லை, செயலில்லை. அவ்வெளியில்தான் மரம்‌ செடி கொடிகள்‌, பறவைகள்‌, விலங்குகள்‌, மக்கள்‌ ஆகிய எல்லா உயிர்களுக்கு உரிய உடல்கள்‌ மீதமுள்ள நான்கு பூதங்களால்‌ ஆயிருக்கின்றன. இதனை பஞ்சீகரணம் என்பார்கள். தத்வ போதம் எனும் மறை, இந்த படைப்பு முறையை மெளிவாக விளக்குகிறது. ஆகாசம்‌ என்‌னும்‌ பூதத்தில்‌ அவைகள்‌ நிலைத்திருக்கின்றன. உடலுக்கு ஆக்கை என்பது ஒரு பெயர்‌. இக்கோட்பாட்டை ஐந்து வகையாகின்ற பூத பேதத்தினால்‌ ஆகின்ற ஆக்கை என்று தாயுமானவர்‌ இயம்புகின்ரார்‌. இந்த ஆக்கையைப்பற்றிய உண்மை யாது என்று இனி ஆராய்ந்து பார்ப்போம்‌.

அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்‌ அறியாத காலமெல்லாம்‌

நேற்று செடி மயமாய்‌ இருந்த உணவுப்‌பொருள்‌ இன்றைக்கு நமக்கு உணவாக ‌உடலுக்குள்‌ நுழைகிறது. இவ்‌வுடலிலிருந்து அதன்‌ வெவ்வேறு பகுதிகள்‌ விரைவில்‌ அல்‌லது நாளடைவில்‌ திரும்பவும்‌ மண்ணுக்குப்‌ போய் விடுகின்றன. இப்படி ஓயாது மண்ணின்‌ கூறுபாடு இடம்‌ மாறி அமைந்துகொண்டிருக்கிறது, சில நாளைக்கு முன்பு சமுத்‌திர நீராயிருந்தது ஆவியாக மாறி மேலே போனது, பின்பு மழையாக கீழே வந்து, நதியாகி நாம்‌ அருந்தும் நீராகிறது. உடலில்‌ சிறிது நாள்‌ தங்கிவிட்டு, திரும்பவும்‌ ஆவியாக சுவாசத்‌தில்‌ கலந்தோ, வியர்வையாக உடலினின்று வெளிவந்தோ அது நமக்கு அன்னியமானதாய் விடுகிறது. சென்ற வாரம்‌ பல்லாயிரம்‌ மைல்களுக்கு அப்பால்‌ பசிபிக்‌ மஹா சமுத்திரத்தின்‌ மீது இருந்த காற்று வேகமாக இடம்‌ மாறி வந்து இன்‌றைக்கு நம்‌ உடலினுள்‌ புகுந்து உயிர்‌ வாழ்க்கைக்குத்‌ துணை புரிகிறது. நாளைக்கு நம்மைவிட்டு அது எவ்வளவு தூரம்‌ அப்பால்‌ போய்விடுமென்பது நமக்குத்‌ தெரியாது. இப்படி நான்கு பூதங்களும் ஓயாது இடம்‌ மாறிக் கொண்‌டிருந்து, ‌ நமக்கு ‌ அமைத்துள்ள ஆக்கையில்‌ தாற்காலிகமாகக்‌ கொஞ்ச காலம்‌ தங்கியிருந்து பிறகு அப்‌பால்‌ போய்விடுகின்றன. இதற்கிடையில்‌ இந்த உடலை‌ நம்முடைய நிஜசொருபமென்று இதன்மீது நாம்‌ வைத்திருக்கின்ற அபிமானத்துக்கு ஓர்‌ அளவு இல்லை. இத்தகைய உடல் நமக்குச்‌ சொந்தமாக எவ்வளவு காலத்‌துக்கு இருக்குமென்பது அடுத்த கேள்வி.

நீரிலிருந்து நீர்க்‌குமிழி உண்டாகிறது. நீரினுடைய ஒரு பகுதி மேல்‌ மூடி போன்று அரை உருண்டையாக அமைகிறது, அதனுள்‌ காற்று சிறிது அடைபட்டிருக்கிறது. நீரும்‌ காற்றும்‌ சேர்ந்து அத்தகைய வடிவு எடுக்கின்றபொழுது அதை நீர்க்‌குமிழி என்கிறோம்‌. நீரின்மீது அது மிதந்து கொண்டிருக்‌கிறது. எக்காலத்தில்‌ உடைந்து‌ பழையபடி நீராகவும்‌, காற்றாகவும்‌ ஆகும் என்பதனை நாம்‌ நிர்ணயிக்க முடியாது; அது மிக மிக நிலையற்றது.

நம்முடைய உடலும்‌ அதற்கு ஒப்பானது. எப்பொழுது இவ்வுடல்‌ கூற்று கலைந்து பட்டுப்போம்‌ என்பது நமக்குத்‌ தெரியாது. ஒரு நொடிப்பொழுதில்‌ மனிதனுடைய உடலைச்‌ சாம்பலாக்கி பஞ்ச பூதங்களாகப்‌ பிரித்து விடுகிற ஆற்றல்‌ மின்சக்திக்கும்‌ அக்னிக்கும்‌ இருக்கிறது. ஒரு மனிதன்‌ இன்றைக்கு இருக்கின்றான்‌. நாளைக்கு அவன்‌ இல்லாது போய்விடுகின்றான்‌. நாளைக்குத்‌ தான்‌ இருக்க மாட்டான்‌ என்பதை இன்று அவன்‌ நினைப்பதில்லை. தொன்றுதொட்டு இன்றுவரை தோன்றிய உடல்கள்‌ அனைத்தும்‌ நீர்க்குமிழி போன்று ஓயாது அழிந்து பட்டுக்‌ கொண்டே இருக்கின்றன.

குமிழி நீரின் ஒரு பகுதிதான், ஆனால் அதற்குள் காற்று புகுந்தவுடன் தனி வடிவம் பெற்றுத் தன்னை நீரின் நின்றும் வேறாக எண்ணிக் கொள்கிறது. அதுபோலவே, பரம்பொருளின் ஒரு பகுதியாகிய ஆன்மா, உடலுக்குள் புகுந்தவுடன் தன்னைத் தனித்துவமான ஒன்றாக (அகங்காரம்) நினைத்துக் கொள்கிறது. குமிழி எப்போது உடையும் என்று தெரியாது; அதுபோலவே இந்த உடலின் ஆயுளும் கணிக்க இயலாதது.

இப்பொழுது இருக்கின்ற உடல்கள், ‌ எதிர்காலத்தில்‌ இருக்கமாட்டா. அப்படி இருந்தும்‌ ஒவ்வொரு ஜீவனும்‌ தன்னுடைய உடல்‌ வாழ்க்கை என்றென்றும்‌ நிலைத்திருக்கும்‌ என்றே மனக்கோட்டை கட்டி வருகிறான்‌. இக்கோட்பாட்டை “நீர்மேல்‌ அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்ன தான்‌ அறியாத காலமெல்லாம்”‌ என்று அவர்‌ பகர்கின்றார்‌.

யாக்கை நிலையாமையின் சாரத்தை பல தமிழ் ஞானிகளும் சைவ சித்தாந்த அறிஞர்களும், கவிஞர்களும் எண்ணற்ற கவி வடிவிலே எழுதியுள்ளனர். யாக்கை நிலையாமை/நிலையாமை என்ற அத்தியாயங்கள் திருமந்திரத்திலும், திருக்குறளிலும் உள்ளன.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

என்கிறது திருக்குறள் (336).

புந்திமகி முறவுண்‌ டுடுத்தின்ப மாவதே போந்தநெறி என்றிருந்தேன்‌

உடலுக்கு அழிவு எந்த நொடிப்பொழுதில்‌ வேண்டுமென்றாலும்‌ அமைந்துவிடும்‌. ஆனால்‌ அதைப்பற்றி மனிதன்‌ அறிந்துகொள்ளாதிருப்பது அவனுக்கு ஒருவிதத்தில்‌ நலம்‌
தருகிறது. தனக்கு இன்ன நாள்‌ மரணம்‌ வரப்போகிறது
என்பதை மனிதன்‌ அறிந்துகொண்டால்‌ அவன்‌ மகிழ்வுற்‌றிருக்க மூடியாது ; வாழ்க்கையில்‌ ஊக்கம்‌ கொள்ள முடியாது. தொண்டு கிழவனும்‌ தான்‌ இன்னும்‌ ‘ நெடுங்காலம்‌ உலகத்தில்‌ இருக்கப்‌ போவதாகவே எண்ணி வருகின்றான்‌. அந்த எண்ணத்துடன்‌ அவன்‌ நின்றுவிடுவதில்லை. தனக்கு உடல்‌ வாழ்க்கை நித்தியமானது என்பதைத்‌ தனது செயல்‌ மூலம்‌ அவன்‌ நிருபிக்கின்றான்‌. உணவு தேடுதல்‌, வாழ்க்கையின்‌ முக்கியமான நிகழ்ச்சி ஆகிறது. இது எல்லா உயிர்களுக்கும்‌ பொதுவானது. உணவின்‌ பொருட்டு அவை ஓயாது அலைந்து திரிகின்றன. அதற்குமேல்‌ மனிதன்‌ உடை அணிர்து கொள்ளுதற்காக என்று ஒரு தனி முயற்சி எடுத்துக் கொள்கின்றான்‌ உடைக்காகவென்று விலங்குகளும்‌, பறவைகளும்‌ அலைந்து திரிகிறதில்லை. எங்கெங்‌திருந்தோ பஞ்சு, பட்டு, உரோமம்‌ முதலியவைகளை மனிதன்‌ சேகரித்து வந்து அவைகளைக்கொண்டு உடைகளை ஆயத்‌தப்படுத்துவது அவனுடைய பெரும்‌ செயல்களில்‌ ஒன்றாகும்‌. நல்ல உணவைச்‌ சேகரித்துவிட்டால்‌ அவன்‌ உள்ளத்தில்‌ மகிழ்வு உண்டாகிறது. அரிய நல்ல உடைகளைச்‌ சேகரித்துவீட்டாலும்‌ அவனுக்கு அகமகிழ்ச்சி உண்‌டாகிறது. வேண்டியவாறு உணவும்‌ உடையும்‌ அகப்பட்டுவிட்டால்‌ அவன்‌ இன்பம்‌ துய்ப்பவன்‌ ஆகின்றான்‌. உண்டியும்‌ உடையும்‌ அகப்பட்டுவிட்டால்‌ திருப்தியுண்டாகிறது-
மேற்கொண்டு பெறுதற்கு என்ன இருக்கிறத! என்கின்ற
பூரிப்பும்‌ வருகிறது. கண்டமே காட்சி, கொண்டதே கோலம் என்கின்ற தீர்மானமும்‌ உண்டாகிறது. புந்தி என்பது உள்ளம்‌ அல்லது அறிவு எனப்‌ பொருள்படுகிறது. போந்த நெறி என்பது தகுந்த வாழ்க்கை முறை எனப்‌ பொருள்படுகிறது. இக்கருத்துக்களையெல்லாம்‌ “புந்தி மகிமுற உண்டு உடுத்து இன்பமாவதே போ ந்ததெறி என்றிருந்தேன்”‌ என்று தாயுமானவர்‌ பகர்கின்றார்‌.

பூராய மாகநின தருள்வந்‌ துணர்த்தஇவை போனவழி தெரியவில்லை

போந்த நெறி என்று இருந்தேன்‌ என்று பகர்தலில்‌ பொருள்‌ மிகப்‌ புதைந்திருக்கிறது. இதனை தாயுமனவரின் இந்த அடுத்த சொற்றொடரிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

நடைமுறையில், வீட்டிலிருந்து பயணத்தை துவங்கியபின், வீடு வந்து சேருவதே பயணத்தின் முடிவு. உயிர்களனைத்தும்‌ இத்தகைய பெரும்‌ பயணம்‌ போய்க்கொண்டிருக்கின்‌றன. ஐவகை பூதங்களால் படைக்கப்பட்ட அனைத்தும் இறையிடமிருந்து புறப்பட்டவைகள்‌. திரும்பி அங்குச்‌ சென்று விடுங்கால்‌ அவைகள்‌ முக்தி பெறுகின்றன. வீடு என்பது முக்திக்கு. மற்றொரு பெயர்‌, ‘வீடுபெறநில்‌” என்பது வாழ்க்கையின்‌ மேலாம்‌ கோட்பாடு. அதற்குக்‌ கீழ்‌ இரண்டு படித்தரங்கள்‌ இருக்கின்றன.

1. ஜட நிலை
2. சேதன நிலை

கல்‌ முதலியவை ஐடநிலை, உயிரற்றவைகளை. ஜடநிலையினின்று சேதன நிலைக்கு மாறி அமைவது ஒரு பெரிய முன்னேற்றம்‌. ஆனால்‌ அதற்கு நெடுங்காலம்‌ பிடிக்கிறது. சேதன நில என்பது உணர்‌வோடு கூடிய உயர்நிலை. அந்த நிலையில்‌ பல பிறவிகள்‌ மாறி அமைகின்றன. புல்‌ பூண்டு துவங்கி படைக்கும கடவுளாம் நான்முகன் வரை அனைத்தும்‌ சேதன நிலைக்கு வந்தவைகள்‌. இவை யாவும்‌ உணவு உண்டு உடல்‌ வாழ்க்கையில்‌ மகிழ்ந்திருக்கின்றன. மனிதன் உட்பட‌ இக்கூட்டத்தைச்‌ சேர்ந்தவருக்கு பொதுவாக, ‌வாழ்க்கையில்‌ அதை விட மேலான குறிக்கோள்‌ இருக்கிறது என்பது விளங்குவதில்லை.

மக்களாகிய நாம்‌ உண்டு உடுத்து மகிழ்வுற்றிருப்‌பது வாழ்க்கையின்‌ உயர்ந்த குறிக்கோள்‌ என்று எண்ணி வருகிறோம்‌. அதைவிட மேலான வாழ்க்கை ஒன்று நமக்கு இருக்கிறது என்பதை அறியாத நிலையில்‌ இருக்கிறோம்‌. இறைவனுடைய அருள்‌ என்னும்‌ ஞான வெளிச்சம்‌ நம் மனது என்னும்‌ காரிருள்‌ அறைக்குள்‌ வந்ததும்‌ வாழ்க்கையைப்‌ பற்றி நாம்‌ கொண்டிருந்த எண்ணம்‌ அறவே மாறிவிடுகிறது. உண்டு உடுத்து இன்புற்றிருப்பது வாழ்க்‌கையின்‌ குறிக்கோள்‌ அல்ல; முற்றிலும்‌ மனபரிபாகம்‌ அடைந்து இறையருளுக்குப் ‌பாத்திரமாய்‌, பிறகு இறைவனுடைய சொருபத்தில்‌ நமது வாழ்வு முக்தி பெறுவது வாழ்க்கையின்‌ குறிக்கோள்‌ என்பது தெளிவுபட விளங்குகிறது. உடலோடு கூடிய இன்பவாழ்வு சிறு பிள்ளைகளின்‌ விளையாட்டுப்‌ போன்றது என்பது அப்‌பொழுது விளங்குகிறது, சிறுபிள்ளைகள்‌ பொம்மைகளை
வைத்துக்கொண்டு வினையாடுகின்றன, அப்பொழுது தம்‌
தாயைப்பற்றி அவைகள்‌ நினைப்பதில்லை. ஆனால்‌ தாய்‌
தென்பட்டவுடன்‌ பொம்மைகளை எறிந்துவிட்டுத்‌ தாயிடம்‌
இடுகின்றன. அருளுக்குப்‌ பாத்திரமாகும்‌ ஜீவர்களின்‌ நிலையும்‌ அத்தகையது. இக்கருத்துக்களை பூராயமாக “நினதருள்‌ வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை” என்று தாயுமானவர்‌ இயம்புகிறார்‌.

எந்தநிலை பேசினும்‌ இணங்கவிலை ‌

இறைவனுடைய அருளுக்குப்‌ பாத்திரமாகாது உடல்‌பற்று வைத்து, உடல்‌ வாழ்க்கைதான்‌ போந்த நெறி என்று மகிழ்வுற்று இருக்கின்றபொழுது இது வாழ்க்கையின்‌ முடிவான குறிக்கோள்‌ அல்ல என்பதை விவேகிகள்‌ எவ்வளவு தான்‌ விளக்கிச்‌ சொன்னாலும்‌ அதற்கு மனம்‌ இணங்குவதில்லை. செவிடனுக்குச்‌ செய்கின்ற உபதேசம்‌ எவ்விதத்‌திலும்‌ அவனுக்குப்‌ பொருள்படுவதில்லை. அங்ஙனம்‌ உடல்‌ பற்றில்‌ ஆழ்ந்து கிடப்பவருக்கு‌ பாரமார்த்திக விஷயங்களைப்பற்றி எவ்‌வளவுதான்‌ நல்லுபதேசம்‌ செய்தாலும்‌ அது பயனற்றதாய்ப்‌ போய்விடுகிறது. இக்கருத்தை , எந்தநிலை பேசினும்‌ இணங்கவிலை என்கிறார்‌ அவர்‌.

அல்லால்‌ இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால்‌ நெஞ்சது பகீரெனும்‌

அப்படியானால்‌ இறைவனுடைய அரூனைப்‌ பெறும்‌ பரியந்தம்‌ நாம்‌ உண்டு உடுத்துக்‌ களித்துக்‌ காத்திருக்கத்தானே வேண்டும்‌ என்று உடல்பற்று வைத்திருக்கிறவர்கள்‌ சமாதானம்‌ கூறலாம்‌. அத்தகையவர்களுக்கு வாழ்க்கையின்‌ உட்கருத்தை இறைவன்‌ அருள்‌ கூர்ந்து வேறொரு பாங்கில்‌ வழங்கிவருகிறார்‌. மனிதன்‌ ஒருவன்‌ எவ்வளவுதான்‌ உடல்‌ பற்று வைத்திருந்தாலும்‌ அவன்‌ மறக்க முடியாத பாங்கில்‌ உடல்‌ வாழ்க்கையைப்‌ பற்றிய உண்மை ஒன்றை இறைவன்‌ புகட்டி வருகின்றார்‌. அந்த போதனைக்கு முடிவே இல்லை. இரவும்‌ பகலும்‌ அந்த நல்லுபதேசம்‌ நிகழ்ந்துகொண்டே
இருக்கிறது. கணந்தோறும்‌ உயிர்கள்‌ பிறந்து கொண்டிருக்‌கின்றன. கணந்தோறும்‌ உயிர்கள்‌ இறந்து கொண்டும்‌ இருக்கின்றன. இவ்விரு நிகழ்ச்சிகளும்‌ மிக அற்புதமானவைகள்‌. இக்நிகழ்ச்சிகளுக்கு விலக்கானவர்கள்‌ யாரும்‌ இல்லை. பிறந்த உயிர்கள்‌ அனைத்தும்‌ ஒருநாள் இலாவிட்டால் ஒருநாள் ‌இறந்தே ஆகவேண்டும்‌. இதைப்பற்றிய எண்ணம்‌ ஒவ்வோர்‌ உயிர்க்கும்‌ இடையிடையே வருகிறது.

மரணத்தைக்‌ குறித்து அஞ்சுவது எல்லா உயிர்களுக்கும்‌ பொதுவானது. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு ஜீவனுக்கு உடல்பற்று அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு மரணத்தைப்‌ பற்றிய அச்சமும்‌ அதிகமாகிறது. இந்தப் பிறவிதான் முதல் என்று தோன்றும். முதல் நாள் சாப்பிட்டதே நமக்கு மறந்துவிடும்போது பல பிறவிகளின் நினைவுகள் எப்படி இருக்கும்? முற்பிறவிகள் குறித்து மறைப்பு இறைவன் கொடுத்த வரம். கடவுள் அருள் இருந்தால்தான் மறுபிறவிக் கொள்கையே புரியும்.

பல பிறவிகள் பிறந்து இறந்திருக்கிறோம் என்று நினைக்கவே பகீரென்று உள்ளது. இப்போதே பிறவிச்சுழலில் இருந்து விடுபடவேண்டும் என்று தோன்றுகிறது.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு
மீண்டும் அன்னையின் வயிற்றில் கிடப்பு
கடக்க இயலா கரையிலா கடலே
கடத்திடு எம்மை கருணைக் கடலே

என்கிறார் ஆதி சங்கரர், பஜ கோவிந்தத்தில் (21).

இது எத்தனையாவது பிறவி என்பதும் தெரியாது. எத்தனையோ மனிதப்பிறவிகளில் செய்த புண்ணியத்தினால் மீண்டும் மனிதப்பிறவி கிடைத்துள்ளது. அதனால் இந்த பிறப்பு இறப்பை எண்ணினாலே பகீரென்றது என்கிறார்.

இக்கருத்தை “அல்லால்‌ இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால்‌ நெஞ்சது பகீரெனும்”‌ என்று அண்ணல்‌ இயம்புகின்றார்‌.

துயிலுரு(து) இருவிழியும்‌ இரவுபகலாய்ச்‌ செந்தழலின்‌ மெழுகான தங்கம்‌இவை என்கொலோ

மரணத்தைப்‌ பற்றிய எண்ணம்‌ மனிதனைப்‌ பண்படுத்த வல்லது. அவனை விரைவில்‌ திருத்தி அமைத்தற்கென்றே அது அமைந்துள்ளது. ஜீவர்களுக்கு உடல்‌ வாழ்க்கையில்‌ பற்றை
அகற்றுதல்‌ பொருட்டு மரணத்தின்‌ வாயிலாக, இறைவன்‌
உயிர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர்‌ இடத்திற்கு மாற்றி
விடுகிறார்‌. இடையில்‌ ஏற்பட்ட பற்றுதலை ஒழிக்க உயிர்கள்‌
ஒருப்படுவதில்லை; ஆதலால்‌ மரணத்தைக்‌ குறித்து எண்‌ணித்‌ தூக்கம்‌ பிடியாமல்‌, விழிகள்‌ இரண்டும்‌ விழித்த வண்‌ணமாய்‌. சிவந்து, தீயில்‌ இட்ட மெழுகு போன்று உடலிலுள்ள உறுப்புக்கள்‌ இரவும்‌ பகலும்‌ உருகுகின்றன. துன்பம்‌ நிறைந்த இவ்வுடல்‌ வாழ்க்‌கையை இறைவன்‌ ஏன்‌ படைத்துள்ளான்‌ ௭ன ஏங்கியிருப்பவர்களும்‌ உண்டு. ஆனால்‌ இத்தகைய துன்பங்களில்‌ இறைவனுடைய அருள்‌ மறைமுகமாய்‌ அமைந்திருப்பதை யாரே அறிகின்றவர்‌?்மண்ணின்று வெட்டி எடுத்த பொன்‌ தாதுவைத்‌ தீயிலிட்டு உருக்க உருக்க அது தூயதாகிறது. மாசு எல்லாம்‌ தானாக அகன்று போய்வீடுகிறது. அதே பாங்கில்‌ மரணத்தைக்‌ குறித்துத்‌ துன்பப்படுவதன்‌ மூலம்‌ உயிர்கள்‌ தூய்மையடைகின்றன. தூய்மையடைந்த பின்பே அருளை ஏற்க அவைகளுக்குத்‌ தகுதியும்‌ வந்தமைகிறது. இறைவனுடைய அருள்‌ என்ற தென்றல்‌ ஓயா து அடித்துக்‌ கொண்டிருக்கிறது. அதற்கு ஓய்வு இல்லை. ஆனால்‌ பரிபக்குவம்‌ அடையாத ஜீவர்களுக்கு அது வெகு தூரத்தில்‌
இருப்பது போன்ற எண்ணம்‌ வருகிறது. பக்குவம்‌ அடைந்‌தவர்களுக்கோ அதைவிடச்‌ சொந்தமானது வேறு எதுவுமில்லை. இதை அறியாமையினால்,‌ ஜீவர்கள்‌ வருந்துகின்றனர்‌.

இஹ சேதவேதீதத ஸத்யமஸ்தி
ந சேதிஹாவேதீன்மஹதீ விநஷ்டிஃ |
பூதேஷு பூதேஷு விசிந்த்ய தீராஃ
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி ||

என்கிறது கேன உபநிஷத் (2.5). மனிதனாகப் பிறந்ததன் ஒரே நோக்கம், நமக்குள் இருக்கும் அந்த பிரம்மத்தை் (இறைத்தன்மையை/ஆத்மாவை) உணர்வதுதான். அதை “இப்பிறவியிலேயே” செய்ய வேண்டும் என்று உபநிஷத் வலியுறுத்துகிறது. நாமெல்லாம் மரணத்திற்குப் பிறகுதான் சொர்க்கம் அல்லது முக்தி கிடைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், வாழும் போதே ஞானம் பெறுவதுதான் உண்மையான ஆன்மீகம். இதைத் தவறவிட்டால், அதைவிடப் பெரிய நஷ்டம் மனித வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

இக்கருத்துக்களை “துயிலுரு(து) இருவிழியும்‌ இரவுபகலாய்ச்‌ செந்தழலின்‌ மெழுகான தங்கம் ‌இவை என்கொலோ“ என்று ஞான வள்ளல்‌ விளம்புகின்றார்‌.

“சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயானந்த குருவே”

பிறகு தாம்‌ போற்றும்‌ தெய்வமாகிய சிவபெருமானைத்‌ தென்முகமாய்‌ எழுந்தருளியிருக்கும்‌ மூர்த்தி என்றும்‌ அவர்‌
சிறப்பாக சிரகிரி என்று அழைக்கப்படும்‌ திருசிராப்பள்ளியில்‌ எழுந்தருளியுள்ளார்‌ என்றும்‌ மனதற்ற நிலையில்‌ அவர்‌
உணரப்படுகிறார்‌ என்றும்‌ முக்திக்கு அவரே மூலகாரணம்‌
என்றும்‌ ஞானமும்‌ ஆனந்தமும்‌ வடிவெடுத்தவராய்‌ அவர்‌
இலங்கிக்கொண்டிருக்கிறார்‌ என்றும்‌ அவரைப்‌ போற்றிப்‌
பாராட்டுகிறார்‌. அக்கோட்பாடு “சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயானந்த
குருவே” என அவர்‌ பாடலில்‌ வந்துள்ளது.

முடிவுரை

நம்மில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணராமல் இருக்கிறார்கள். அநித்யம் புரிவதில்லை. இறைவன் அனுக்ரஹம் இருந்தால்தான் அநித்யம் புரியும். அநித்யத்தைச் சார்ந்திருக்கக்கூடாது. இறைவன் அருள் பூரணமாக வந்துவிட்டால் உலக வாழ்க்கையில் இருக்கும் பற்று நன்றாக நீங்கிவிடும். எத்தனைபேர் நம்மை உலக வாழ்க்கையில் தூண்டினாலும் நம்மால் அதில் ஈடுபட முடியாது. மறுபிறவி என்பது இருக்கிறது. அதை எண்ணிப்பார்த்து உடனே இப்பொழுதே பிறவியிலிருந்து விடுபடுவதற்கு வழி தேடவேண்டும்.

இதுதான் இந்தப் பாடல் உள்ளிட்ட அறிவுரை நமக்கு.

உலக வாழ்க்கை என்பது நிலையற்றது (அநித்யம்) என்பதை உணர்வதே ஆன்மீகத்தின் முதல் படி. அந்த அநித்யத்தை உணர்ந்து, உலகப் பற்றுகளை நீக்கி, இறைவனின் அருளைத் துணையாகக் கொண்டு, வாழும் போதே ஜீவன் முக்தி அடைய வேண்டும் என்ற உன்னதக் கருத்தை இப்பாடல் நமக்கு போதிக்கிறது. தாயுமானவரின் இந்த வரிகள் வெறும் கவிதை அல்ல; அது ஒரு ஜீவனின் ஆன்மீகப் பரிணாம வளர்ச்சியை விளக்கும் ஒரு வரைபடம் (Map of Spiritual Evolution).

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading