பகவத் கீதை ஸ்லோகம் 2.22- மரணம் – பழையன கழிதலும் புதியன புகுதலும்

முகவுரை


ந‌ன்னூ‌ல் எ‌ன்ற இல‌க்கண நூ‌லி‌ன் சொ‌ல் அ‌திகார‌த்‌தி‌ல் உ‌ள்ள “பழையன க‌ழிதலு‌ம் பு‌தியன புகுத‌லு‌ம் வழுவல கால வகை‌யி னானே” எ‌ன்ற தொட‌ர், வழ‌க்‌கிழ‌ந்த இல‌க்கண‌க் கரு‌த்து‌க்களை ‌நீ‌க்குவது‌ம், புதிய வழ‌க்குகளை ஏ‌ற்பது‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்‌பதைக் குறிப்பது. அதாவது,
இல‌க்கண‌ம் கால‌‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்டது எனக் கூறு‌கிறது.  

வீட்டில் உள்ள பயனற்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுவே இதன் அடிப்படைத் தத்துவம்.

சரி, பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலில் வரும் ஒரு தத்துவத்திற்கும், போகிப் பண்டிகைக்கும், பகவத்கீதைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது, பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்னை புகுத்தலுக்கும், பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? போர்க்களத்தில் பார்த்தனுக்கு, சாரதியான கண்ணன் இதைப்பற்றி என்ன அறிவுரை வழங்கினான்?

வாருங்கள், ஒரு முக்கியமான ஸ்லோகத்தை அறிய முற்படுவோம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா2 விஹாய
நவாநி க்3ருஹ்ணாதி நரோபராணி!

ததா2 ஸரீராணி விஹாய ஜீர்ணா
ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே3ஹீ!!

பகவத் கீதை 2.22

பொருள் விளக்கம்

தொப்புள் கொடி உறவாக தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருள், செயல்முறை என்று பலவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

காலன் விதித்திட்ட வேளை வந்தால் செத்து மடிகிறோம். நாம் இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய்; இந்த யாக்கை நிலையாதது என்று நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம். மரணம் என்பது ஒரு கசப்பான உண்மை என்பதை உணர மறுக்கிறோம். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளத்தான் பகவான் கண்ணன் பார்த்தனுக்கு இந்த ஸ்லோகம் வழியாக அறிவுரை வழங்குகிறான்.

“எப்படி ஒரு மனிதன் நைந்து போன ஆடைகளை கழட்டிவிட்டு வேறு புதியவற்றை அணிந்து கொள்கிறானோ, அப்படியே தேஹத்தில் உறைபவன், நைந்து போன உடல்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”

என்று பகவான் ஶ்ரீக்ருஷ்ணர் மரணத்தைப் பற்றி கூறுகிறார்.

தாய், குழந்தைக்குப் பழைய அழுக்கான உடுப்பைக் கழட்டிவிட்டு புதியதை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. ஆனால் தாயார் குழந்தை அழுவதைப் பொருட்படுத்துவதில்லை. குழந்தைக்கு “ஹிதம்” (நன்மை) என்று, புதியதை மாற்றிக் கொடுக்கிறாள்.

அது போல, பகவானும் ஜீவனுக்கு ஹிதமாக அவன் அழுவதை கவனியாமல் அவன் உடலை மாற்றிக் கொடுக்கிறார். உடலுக்கு உடை ஆடை; உயிருக்கு உடல் ஆடை.

இதைப் புரிந்தவர் அழுவதில்லை; புரியாதவர் அழுகின்றனர். அதனால்தான் “செத்த பிணத்தைப் பார்த்து சாகாத பிணம் அழுகிறது” என்பர் ஞானியர்.

சொற்களின் உபயோகமும், அவைகளில் பதிந்துள்ள உட்கருத்துக்களும்ஒரு கண்ணோட்டம்

1. “ஜீர்ணாநி” என்பதற்கு நைந்து போனது என்ற பொருளாகும். இந்த சொல் துணிகளுக்குப் பொருந்தும். நைந்த உடலென்று பகவான் ஒப்பிடுவது, வயதாகித் தேய்ந்த (நலிந்த) உடலுக்குத்தான் மரணமெனும் உடை மாற்றத்தைக் குறிப்பதல்ல. சிறு வயதிலும் மரணமெய்தலாம். உடல் நலிவு என்பது, “ஆயுள் முடிந்தது” என்ற பொருளில் கூறப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

2. உடையை மாற்றிக் கொள்பவன் ஒரே சமயத்தில் பல உடைகளை (உள்ளாடை, வேஷ்டி, சட்டை, அங்கவஸ்த்திரம் என) மாற்றிக் கொள்ளமுடியும். உயிரைப் (ஜீவாத்மாவைப்) பொருத்தவரை, ஒரே உடலைத்தானே மாற்ற இயலும் என்று இருக்கையிலே, “வாஸாம்ஸி”, “ஸரீராணி”, என்று பன்மையில் பகவான் கூறுவதன் உட்கருத்து என்ன என்பதை இருவகையில் ஆயவேண்டும்:

• ஜீவன் இதுவரை எவ்வளவு உடல்களை விட்டுப் புதிய உடல்களை அடைந்திருக்கிறதோ, அவற்றுக்குக் கணக்கு கிடையாது. வரும் காலத்திலும், ப்ரம்ம ஞானமெனும் ஆத்ம ஞானம் கிட்டும்வரை, இன்னும் எத்தனைப் பழைய உடல்களைவிட்டுப் புதிய உடல்களை அடையப் போகிறது என்பதும் தெரியாது. எனவே சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

• ஸ்தூலம், ஸூக்‌ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்கள் ஜீவனுக்கு உள்ளன. இந்த உடலுவிட்டு அடுத்த உடலை அடையும்போது, இந்த மூன்றும் மாறுகின்றன. ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஒவ்வொருவருக்கும் குணமயமான, அவனுக்கே உரித்தான, தனித்தன்மையுடைய “வ்யஷ்டிப்ரக்ருதி” அமைகிறதே, அது காரண ஸரீரம். இதையே “ஸ்வபாவம்” என்பர். மனிதன் எப்படிச்செயல்படுகிறானோ, அதற்கு ஏற்றவாறு ஸ்வபாவம் மாறுகிறது. இந்த ஸ்வபாவத்திற்கு ஏற்றவாறுதான் உயிர் பிரியும்போது மனதில் எண்ணமும் உண்டாகிறது. அதன்படிதான் அவனுக்கு ஸூக்‌ஷ்ம ஸரீரம் அமைகிறது. காரணம், ஸூக்‌ஷ்மம் என்ற இரு ஸரீரங்களுடன் இந்த உடலை (ஸ்தூல ஸரீரத்தை) விட்டுப்பிரிந்த பின்னர், ஸூக்‌ஷ்மத்திற்கேற்றவாறு அடுத்த பிறவியில் ஸ்தூல ஸரீரத்தைப் பெற்று, காரண ஸரீரத்திற்கேற்றவாறு அடைந்த அந்த அடுத்த உடலில் அவனது ஸ்வபாவம் அமைகிறது. இப்படி மூவுடலும் மாறுவதால், சொற்களில் பன்மை உபயோகம் சரியே.

3. ஆத்மாவிற்கு அசைவில்லை, போக்குவரத்து இல்ல. எனவே ஜீவாத்மா எனும் “தேஹி” அடுத்த உடலைப் போய் சேர்கிறான் என்று சொல்வது எப்படி பொருந்தும் என்பதை இப்போது ஆய்வோம்.

உண்மையில் ஆத்மாவிற்கு அசைவில்லை, செயலில்லை, எந்த நிலையிலும் போக்குவரத்தும் இல்லை. ஆனால், ஒரு குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போகும்போது, அதற்குள் இருக்கும் ஆகாயம் போகவில்லையானாலும், குடத்துடன் சம்பந்தத்தால் அது போவதாக நினைக்கிறோம் அல்லவா!

அதுபோல, ஸூக்‌ஷ்ம ஸரீரம் போகும்போது, அத்துடன் இணைந்த ஆத்மாவும் போவதாகத் தெரிகிறது. இதை உலகத்தார்புரிந்து கொள்ளவே, உயிர் வந்து போவதாக கற்பனை செய்து கூறப்பட்டது. “தேஹீ” என்றால் சரீரத்தை உடையவன் என்று பொருள். தேஹத்தை உற்ற உயிர் என்பர். ஆகவே உடலின் சம்பந்தத்தால் அவனிடம் போக்குவரத்து என்ற தோற்றம் ஏற்படுகிறது.

இதனால்தான இந்த ஸ்லோகத்தில் துணியைப் பற்றிக் குறிப்பிடும்போது “க்ருஹ்ணாதி” (ஏற்பது) என்றும், உயிரைப் பற்றிக் கூறும்போது “ஸம்யாதி” (செல்லுதல்) என்ற சொல்லும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

3. “நர”, “தேஹி” என்ற சொற்களின் விளக்கம்

ஆடையை அணிவது, நைந்தது, துறப்பது என்பவைகள் எல்லாம் மனிதனுக்கே உரித்தானது. எனவே இந்த ஸ்லோகத்தில் முதல் சொற்றொடரில், மனிதனைக் குறிக்கும் “நர” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல்களின் போக்குவரத்து என்பது, உடலபிமானமுடைய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். எனவே இரண்டாவது சொற்றொடரில் “தேஹி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

ஆத்மா உடல் எடுப்பதில்லை, ஸூக்‌ஷும ஸரீரம் மட்டுமே உடல் எடுக்கிறது. ஸூக்‌ஷ்ம ஸரீரமே (mind) பயணிக்கிறது. தூய உணர்வாகிய நான் எங்கும் பயணிப்பதில்லை. நான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.

இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியை உடையது. காரணமும் காரியமும் மாயத்தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே.

ஆத்மா எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. அனுபவங்கள் அனைத்தும் மாயை. அனுபவிப்பவனைப் பற்றிய உண்மையே நமக்கு முக்தியை கொடுக்கும். எந்த அனுபவமும் மோக்‌ஷத்தை கொடுக்காது.

அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே என்கிறான் கண்ணன்.

இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத அருமையான திரையிசைப் பாடலாக வடித்துள்ளார்.

பாடலைக் கேளுங்கள்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பிறந்த நாள் மழலை

சுவரில் வரைந்த சித்திரம் (நன்றி-தீபா)

என் கடன் பணி செய்து கிடப்பதே (பகவத் கீதை 2.47)

முகவுரை

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஔவையின் கூற்றின்படி, ஏழுபத்தொன்று வருடங்களுக்குமுன் அரிதான பிறவியை எடுத்த இந்நாளில், அடியேன் இதுவரை கடந்து வந்த பாதையையும் அந்த பாதையின் அடிப்படையையும் அறிய  முயன்றேன்.

அந்த முயற்சியின் முடிவில் கிடைத்த அறிவின் தொகுப்பை எனது மழலையில் மொழிகிறேன் கீழ்வருமாறு:

1. சாதாரண நடுத்தர குடும்பத்திலிருப்பவன் நடந்து வரும் பாதையெனும் ஆறிலிருந்து அறுபது வரையிலான வாழ்வு,

இளமையில் கல்வி,
அறவழியில் பொருளீட்டுதல்,
மனைமாட்சி

என்ற மூன்று படலங்களத் தழுவியது. என் பாதையும்கூட அதுதான்.

2.“காயேன வாசா மனஸா” என்று உடல், வாக்கு, மனம் வழி ஆண்டவனைச் சார்ந்திருந்து, உலகியல் பலன்களை விரும்பாமல், கல்வி புகட்டி மனத்தூய்மையுடன் அறச்செயல்கள் புரிந்திட்ட அன்னை தந்தையின் அறிவுரைகளால், இளவயதிலிருந்தே எனக்கு கிட்டியது அறநெறிப்படி திட்டமிட்டு ஸமபுத்தி மனப்பான்மையுடன் வாழும் ஒழுக்கமிகு வாழ்க்கை. பெற்றோரின் வடிவில் இறையருள் கிட்ட, என்ன பெருந்தவம் செய்தேன் என்று இன்றும் அறியேன் அடியேன்.

3. இளமையில் கல்வி, பொருளீட்டுதல், மனைமாட்சி என்ற மூன்று படலங்களில், தர்மத்தை கடைப்பிடிக்கும்போது கொள்ள வேண்டிய மனோபாவனையை அடைந்திட, பெற்றோரின் அன்றாட எளிய வாழ்க்கையே எனக்கு இலவசமாகக் கிடைத்த பயிற்சிக்கூடம்.

4. இன்பம் “அவன்” கொடுத்தது, துன்பம் எனது முன்வினைப் பயனாலே; ஆகவே இன்பத்தில் களித்திடாமலும், துன்பத்தில் துவண்டிடாமலும் அவர்கள் வாழ்ந்த எளிமையான அனுதின வாழ்வே இன்றும் எனக்கு வழிகாட்டி.

இப்படி, அறிவின் துணை கொண்டு இருமைகளில் சமமான மனப்பான்மை என்பது தான் எனது அறுபது கடந்த ஆன்மீகம் தழுவிய வாழ்வின் அடிப்படை.

சரி, நீ என்ன பெரிய மனிதனா? என்ன சாதித்தாய் இவ்வுலகில்? உன் சுய சரிதையால் எங்களுக்கு என்ன? என்று நீங்கள் வினவுவது எனக்குத் தெளிவாக கேட்கிறது. நான் பெரியவனல்ல; நான் சாதனையாளன் அல்ல. நான் ஒரு சாமான்யனே! எனினும், இன்று நான் அறிந்திடும் பகவத் கீதையின் ஸ்லோகத்திற்கு இது முகவுரையாகும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததனால்தான் இந்த சுயசரிதை.

இப்போது கீதையின் ஸ்லோகத்தைக் காண்போம்.

ஸமஸ்க்ருத ஸ்லோகம்

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 2.47 ||

தமிழில் எழுத்துப் பெயர்ப்பு

கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசனா |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி || 2.47 ||

தமிழாக்கம்


1. உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.

2. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை.

3. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே.

4. மேலும் உனக்கு கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது”

என்று நான்கு அறிவுரைகள் வழங்குகிறான் கண்ணன். அதாவது,

1. செயலின்மையில் நாட்டம் வேண்டாம்.
2. செயலின் பலனிலும் நாட்டம் வேண்டாம்.
3. செயலில் மட்டுமே உன் நாட்டம் இருக்கட்டும்.

4. செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு தகுதி இருக்கிறது.
5. செயலைத் (கடமையைத்)துறப்பதற்கு உனக்கு தகுதி வரவில்லை.
6. செயலைத் துறக்க வேண்டுமானால், செயலின் பலனை விரும்பாமல் சில காலம் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் செயலைத் துறக்க தகுதி ஏற்படும்.

என்று கண்ணன் பார்த்தனுக்கு விளக்குகிறான்.

கர்ம யோகம் புரியாமல், கர்ம சந்யாஸம் செய்ய முடியாது. அதைமீறி கர்ம சந்யாஸம் செய்தால் அதனால் துக்கம் விளையும்.

விளக்கவுரை

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கு ஏற்றவாறு மனிதனுக்கு கர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கர்மங்களை “கர்மணி” என்ற சொல் குறிக்கிறது. மறைகளில் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட பாவச்செயல்களை “கர்மணி” என்ற சொல் குறிக்காது. ஏனெனில், பாவ கர்மங்களைச் செய்ய அவசியமோ, பொறுப்போ மனிதனுக்கு கிடையாது. விருப்பு-வெறுப்புகளினால் உந்தப்பட்டு அவற்றில் ஈடுபடுகிறான். அது அவனுடைய பொறுப்பிலா செய்கை. அதனால் அத்தகைய செயல்கள் புரிபவனுக்கு, துன்பங்களை அனுபவிக்கக்கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அறம் வழி நடந்து புரியும் வினைகளே “கர்மணி”.

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு

உனக்கு செயல் புரிய மட்டுமே தகுதி உள்ளது என்ற இந்தக் கூற்றில்:

1. மனித உடலில்தான் ஜீவனுக்குப் புதிய கர்மங்கள் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவன் தன் பொறுப்பிற்கு ஏற்றவாறு இறைவனுடைய கட்டளையை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அந்த கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்ற ஒட்டுதல்/பற்று இருக்கக்கூடாது. அந்த கர்மங்களை ஆற்றுவதை இறைவனை அடைவதற்கு ஸாதனமாக கருதவேண்டும். அரிதான மானிடப்பிறவி கிட்டியிருப்பது பரம்பொருளை அறிந்துணரவே என்று வினைகள் புரிந்திட வேண்டும்.

2. மனிதனுக்கு கர்மங்களை ஆற்ற மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றைச் செய்யாமல் விடுவதற்கு அவனுக்கு சுதந்திரம் கிடையாது. தன்முனைப்பால், பிடிவாதமாக கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்றாலும்கூட அவனால் விட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது ஸ்வபாவம் (இயல்பு) வலுக்கட்டாயமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கச் செய்யும். இந்த நிலையில் அவனுடைய பொறுப்பை நிறைவேற்றாமல், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தினால், விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டுவிடுவதால்,மறைகள் விதித்த விதிகளை மீறியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே நீ ஆற்றவேண்டிய கர்மங்களை ஆற்றத்தான் வேண்டும், தவிர்க்கக்கூடாது.

3. பிறப்பு-இறப்பு (ஜனன-மரணம்) என்ற பிறவிப்பிணியிலிருந்து (ஸம்ஸார பந்தத்திலிருந்து) விடுதலை பெறுவதற்காகவும், பிறருக்கு நன்மை செய்வதற்காகவும், ஜீவனுக்கு மனம், புத்தி, புலன்களுடன் கூடிய இந்த மனித உடலை (ஸரீரத்தை) அளித்து, அதன்மூலம் செயல்கள் செய்ய விஷேஷ சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகையை நல்விதத்தில் பயன்படுத்தினால் கர்மபந்தத்திலிருந்து விடுதலை பெற்று பரம்பொருளை அறிந்துணர இயலும். தவறாகப் பயன்படுத்தினால் தண்டனையுடன், அந்தப் பொறுப்பும் பிடுங்கப்படும். அதாவது மறபடி மனிதப்பிறவி பெறுவதற்கான தகுதியை இழக்கிறான். இதனை உணர்ந்து தன் பொறுப்பை நல்முறையில் நிறைவேற்ற வேண்டும்.

என்ற மூன்று முக்கிய உட்கருத்துக்கள் அடங்கியுள்ளன.

கர்ம பயன்களில் ஒருகாலும் உனக்கு உரிமையில்லை

எந்த கர்மத்திற்கு என்ன பயன்? அந்தப் பயன் எப்பிறவியில் கிடைக்கும்? எந்த முறையில் கிடைக்கும்? என்று மனிதன் அறிய மாட்டான். 

தன் விருப்பப்படி தான் வாழும் காலத்தில் அவற்றைப் பெறவும் முடியாது; விரும்பி முயன்றாலும் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அவன் விரும்புவது ஒன்று; அவனுக்கு கிடைப்பது ஒன்று. அவன் விரும்புவதை அடையும் சந்தர்ப்பம் அவன் கையில் இல்லை. கர்மங்களின் பயனை விதிப்பது இறையருள் (அத்வைத வேதாந்தத்தில் முன்வினைப் பயன் எனும் ப்ராரப்தம் என்பதே இறையருள் என்ற விளக்கம் உள்ளது). விருப்பு, வெறுப்பு, ஆசை இவையெல்லாம் அறியாமையே. இவைகளால் இவ்வாழ்வில் விளைவதனைத்தும் (இன்பம், துன்பம்) நிரந்தரமல்ல. அவைகள் உண்மையான ஸுகத்தை அளிக்காது.

“ஆசை அறுமின், ஆசை அறுமின்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்”

என்று திருமூலர் கூறுவதும் இதுவே.

கர்ம பயன்கள் கோருவதற்கு காரணம் ஆகாதே

மனம், புத்தி, புலன்கள் மூலமாக நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும்

1. தான் செய்வதாக கருதும் எண்ணம் (“மமதை”)
2. பற்று (“ஆஸக்தி”)
3. அச்செயல்களில் உள்ள நுண்ணிய விருப்பம் (“வாஸனா”)
4. எதிர்பார்ப்புகள்

ஆகிய இவைகள்தான் கர்மங்களின் பயன்களுக்கு காரணம் ஆகும்.

கர்மத்திலும், கர்மபலனிலும் பற்றுள்ளவனுக்கு இவைகள்தான் கிட்டும்.

அறிவின் துணைகொண்டு, இருமைகளை சமமான மனதால் எதிர்கொண்டு “வினை புரிபவன் நானல்ல, வினைப் பயனும் எனதல்ல, அனைத்தும் அவன் செயல்” என்ற மனப்பான்மை உடையவனை, புரியும் கர்மங்களும், கர்ம பயன்களும் ஒட்டாது. அவன் புதிதாக பாபச் செயல்களேதும் புரியவே மாட்டான்.

முன்னால் செய்யப்பட்ட பாவங்களும், இப்பொழுது செய்கின்ற பற்றற்ற கர்மங்களின் ப்ரபாவத்தினால் சாம்பலாகி விடுகின்றன. இக்காரணத்தினால் அவன் பாவச்செயல்களின் பயன்களுக்கு காரணம் ஆகமாட்டான். இவ்விதம் கர்மங்களை ஆற்றுபவனுடைய எல்லாக் கர்மங்களும் மறைந்துவிடுகின்றன. அவன் மாறுதலற்ற உயர்ந்த பதவியை அடைவான் என்கிறான் கண்ணன்.

கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது

மறைகளில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைப் புரிவதற்கு மாறாக, தடை செய்யப்பட்ட கார்யங்களைச் செய்வது, செயலாற்றும் உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். அது போல, வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றுக்கு ஏற்றவாறு எவனுக்கு எந்த கர்மம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பதுகூட உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. 

விதிக்கப்பட்ட கர்மங்களை மோஹத்தினால் தியாகம் செய்வது “தாமஸ த்யாகம்”; உடல் நோகும் என்று பயந்து தியாகம் செய்வது “ராஜஸ த்யாகம்”. விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் மனிதன் கர்ம யோகத்தில் ஸித்தி பெற முடியாது. ஆகவே, எக்காரணம் கொண்டும் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விடுவதற்கு நீ விரும்பக்கூடாது என்பது கண்ணன் கூறும் அறிவுரை.

முடிவில் ஒரு கேள்வி


ஆறிலிருந்து அறுபதுவரை இந்த ஸ்லோகத்தை அறிந்திராமல் வாழ்ந்திடினும், இதன் சாரத்தின்படி அமைந்ததே என் வாழ்வு என்பது இப்போது என் கருத்து. அதனால்தான் என்னவோ, இறையருளால், அன்றும் இன்றும் படுத்தவுடன் உறங்குகிறேன் கவலைகளேதுமின்றி.


1. அன்றாட வாழ்வில் இந்த ஸ்லோகம் உதவுமா?

2. முகவுரையாக கூறப்பட்ட சிறுவனின் சுய சரிதைக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ………..
பதிலும், முடிவும் உங்களுடையது.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

Lessons for Life – 1 – Objective Tensions and Subjective Confusions

I am starting a new series on “Lessons for Life” as per my limited understanding of our Scriptures. When we talk about lessons, we should be clear as to why are we looking for lessons. If we analyse this “why”, a little bit deeper in our own life, we end up with the basic issue which explains the title for the first topic – Objective Tensions and Subjective Confusions. We all are subjected to; no exceptions.

The choice of words directly takes us back in time and space to Kurukshetra, the battle field and the opening chapter of Bhagwad Gita.

Here is my limited understanding summarised and presented in Tamil and English. Please feel free to comment and offer your valuable inputs & suggestions for me to continue my learning.

என் சிற்றறிவுக்கு எட்டிய கண்ணோட்டம்

காயமெனும் பாத்திரம், போடுவது நாடகம்,

ஆடி ஒய்வதில் இல்லை சந்தேகம் – எனினும்

மாறுவதையும் மடிவதனையும் மறுத்திட்டு,

பாசமுடன் பந்தமென்று சொந்தம் கொண்டு

மடமையுடன், மனதினிலே இன்பம் தேடி

கடமைதனை விலக்கிட்டு, காண்டீபம் நழுவிட

பரமனிடம் ஏவுகனை பெற்ற பார்த்தனவன்,

சரணமடைந்தான் தனது சந்தேகம் தீர்த்திடவே

சிரம் தாழ்த்தி வணங்கிட்டு போர்களத்தில்

பரம்பொருளாம் தேரோட்டி கண்ணணிடம் !

My limited understanding of the core issue

A mind with illusion leads to lack of clarity resulting in despondency. “When a man with a sense of duty is caught in illusion, even then he can’t bear to face the sense of reality which is the naked fact of his lapse from duty. He usually covers it up with an inquiry into principles”.

In this world of bitter competition, each one of us is compelled to battle constantly with things and beings. The external challenges persecute us. Deep within ourselves also, we have become helpless slaves to our uncontrollable desires and undisciplined thoughts. We modern humans have come to shreds and is torn between objective tensions and subjective confusions. The former is not in our control and we cant escape.

Lesson 1 – So, our success is measured by the extent we control our inner subjective confusions.