
ஸ்லோகம்
आनन्दाद्यः कमपि च घनीभावमास्थायरूपं
शक्त्या सार्धं परममुमया शाश्वतं भोगमृच्छन् । भोगमिच्छन्
अध्वातीते शुचिदिवसकृत्कोटिदीप्ते कपर्दिन्
आद्ये स्थाने विहरसि सदा सेव्यमानो गणेशैः ॥ ४॥
ஆநந்தாத்ய: கமபி ச கநீபாவமாஸ்தாயரூபம்
ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா ஶாஶ்வதம் போகம்ருச்சந் । (போகமிச்சந்)
அத்வாதீதே ஶுசிதிவஸக்ருத்கோடிதீப்தே கபர்திந்
ஆத்யே ஸ்தாநே விஹரஸி ஸதா ஸேவ்யமாநோ கணேஶை: ॥ 4॥
தமிழாக்கம்
பேரின்பப் பெருங் கடல்நீரின் உறைபனியென
பெயரிலா வடிவமுடன் உமையொரு பாகனாய்
அழியாப் பேரின்பம் விழைந்து, இருமூன்று
பாதைகளுக் கப்பால் கோடை கால கோடிசூரிய
ஒளியுடனே என்றும் முதல்வனாய் உலவுகிறாய்,
முக்கணங்கள் போற்றிடும் செஞ்சடையனே !! 4
சொற்களின் பொருள்
கபர்திந் - ஜடாதாரிந் - சடைமுடி தரித்தோனே (நமஹ் கபர்திநே ச - என்று ஶ்ரீருத்ரம் கூறுகிறது)
ஆநந்தாப்த்ய: - பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்) அப்தி - நீர், கடல்
கநீபாவம் - உறைவடிவமாக (இறுக்கமாக) கநீ - உறைந்த, இறுகிப்போன
கமபி ச - (கிமபி ச) ஏதோ ஒரு, வர்ணிக்க முடியாத
ரூபம் - வடிவத்தை
ஆஸ்தாய - எடுத்துக்கொண்டு
ஶக்த்யா - சக்திதேவியாகிய (மாயையுடன்)
உமயா - உமையோடு
ஸார்தம் - கூடியவராய்
பரமம் - மேலான
ஶாஶ்வதம் - அழிவிலா, நிலையான
போகம்ருச்சந் । (போகமிச்சந்) - போகம் இச்சந் - இன்பத்தை விரும்பியவராய்
அத்வாதீதே - ஆறு பாதைகளிக்கப்பால், ஆதாரங்களுக்கப்பால்
ஶுசி கோடி திவஸ க்ருத் - கோடைகால கோடி சூரியனுக்கு நிகரான
தீப்தே - ஒளியுடன்
கணேஶை: - கணங்களால்
ஸேவ்யமாநோ - வழிபடப்படுவராய்
ஸதா - எப்பொழுதும்
ஆந்நே ஸ்தாநே - முதலிடத்தில்
விஹரஸி - உலவுகிறீர்
பொருள் விளக்கம்
ஆதிதேவன் வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது என்ற உட்கருத்தை முந்தைய ஸ்லோகத்தில் கூறிய அப்பைய்ய தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில் அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு,
- எவ்வித ஸ்வரூபம்,
- எந்த ஸ்தானம்,
- எவ்வித பரிவாரங்கள்
என்பதை விரித்துரைக்கின்றார். இறைவனின் உயர்ந்த நிலையை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. உயர்ந்த நிலையை தியானிப்பவன் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருப்பான்.
இறைவனின் ஸ்வரூபம்
இறைவன் துன்பமே இல்லாத பேரின்ப வடிவமாக இருக்கிறார். இதனை “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்றார் திருநாவுக்கரசர்.
இறைவன் இருப்பது ஆனந்தமலை, ஆனந்தக்கடல். “ஆநந்தாப்த்ய”: “கநீபாவம், அதாவது பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்), உறைவடிவமாக (இறுக்கமாக) என்பது. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். இது நிர்விகல்ப சமாதி நிலையைக் குறிப்பது.
அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. இதனைக் குறிப்பதே “ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா” என்ற சொற்றொடர். சக்திதேவியாகிய (மாயையுடன்) உமையோடு கூடியவராய் என்பது சவிகல்ப சமாதியைக் குறிக்கும்.
“ ஶாஶ்வதம் போகம்ருச்சந்” என்ற சொற்றொடருக்கு, இரு விளக்கங்கள் கூறப்படுகின்றன:
- இந்த உமையொருபாகனான இறைவனே, உடல் எடுத்து, இந்த பிரபஞ்சத்தில் உள்ள இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறார் என ஒரு விளக்கம். (பால கிருஷ்ணன் ஆலிலையிலிருந்து கொண்டு, தனது வலது கால் கட்டைவிரலையே சுவைப்பது போல )
- பரம்மானந்த ஸ்வரூபமான பரம்பொருள் மாயா சக்தியுடன் இணைந்து, உலகில் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்று மற்றொரு விளக்கம்.
அது பழச்சுவையென அமுதமென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
என்று இதனை அழகாக வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.
அத்3வாதீதே – இறைவனின் இடம் (ஸ்தானம்) – விளக்கம்
அத்3வாதீதே என்பது ஆறு பாதைகளைக் கடந்து, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால், ஆறு தத்துவங்களுக்கு அப்பால் என்ற பொருளாகும். அத்வா என்றால் மார்கம். அத்வாதீதம் என்பது மார்கத்தின் முடிவு (மார்கத்தைக் கடந்தது)
ஆகம சாஸ்த்திரங்களில் இது விரிவாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உடல், மனம், வாக்கிற்கு அப்பாற்பட்டவராக, ஆன்மீக சாதனையின் எல்லையாக, அதாவது
- மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களைக் கடந்து என்றும்
- மூலாதாரம் – தொப்புளுக்குக் கீழ்
- ஸ்வாதிஷ்டானம் – தொப்புளுக்குக் கீழ்
- மணிபூரகம் – தொப்புள்
- அநாஹதம் – ஹ்ருதயம்
- விஷுத்தி – கழுத்து
- ஆஞ்ஞா – புருவமத்தி
2. இயற்கையின் வெளிப்பாடுகளாகளைக் கடந்ததாகவும்
- வர்ணம் – எழுத்து
- பதம் – சொல்
- மந்த்ரம் – மந்திரம்
- புவநம் – பிரபஞ்சம்
- தத்துவம் – ஐம்பூதத் தத்துவங்கள்
- கலா – ஸூக்ஷும ஐம்பூதங்கள்.
அறியலாம்.
ஆக, அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும் என்ற உட்கருத்துடையது இந்த ஸ்லோகம்.
அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.(கணங்கள் – தேவ, ரிஷி, பூத கணங்கள்).
ஸ்லோகத்தின் கருத்துரை
ஆனந்தமே வடிவான சிவபெருமானை, மாயையுடன் (சக்தியுடன்) கூடி, ஆனந்தத்தை விரும்புவர் போல் செயல் புரியும் பரமேஸ்வரனை, அனைத்து தாவர ஜங்கமும் (பூத கணங்களாய்ப்) போற்றுகின்றன..
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்ற திருவாசகமே இந்த ஸ்லோகத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது.