ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 7

ஸ்லோகம்

उत्पद्यापि स्मरहर महत्युत्तमानां कुलेऽस्मिन्
आस्वाद्य त्वन्महिमजलधेरप्यहं शीकराणून् ।
त्वत्पादार्चाविमुखहृदयश्चापलादिन्द्रियाणां
व्यग्रस्तुच्छेष्वहह जननं व्यर्थयाम्येष पापः ॥ ७॥

உத்பத்யாபி ஸ்மரஹர மஹத்யுத்தமாநாம் குலேঽஸ்மிந்
ஆஸ்வாத்ய த்வந்மஹிமஜலதேரப்யஹம் ஶீகராணூந் ।
த்வத்பாதார்சாவிமுகஹ்ருதயஶ்சாபலாதிந்த்ரியாணாம்
வ்யக்ரஸ்துச்சேஷ்வஹஹ ஜநநம் வ்யர்தயாம்யேஷ பாப: ॥ 7॥

தமிழாக்கம்

உயர்பண்பு நிறை பேர்குலமதனில் உதித்தும் 
உன் புகழ்கடலெழு நீர்த்திவலை அருந்தினும்
புலனின்ப நாட்டமதனால் உன்திருவடி தொழாப்
பாவியென அற்பங்களில் தினவுகொண்டு, அந்தகோ
பிறவிதனை வீணடிக்கின்றேனே, காமற்காய்ந்தனே !! 7

சொற்களின் பொருள்

ஸ்மரஹர – மன்மதனை (காமனை) அழித்தவனே, காமகோபன், காமற்காய்ந்தான்

அஸ்மிந் – இத்தகைய

மஹதி – மிகவும் உயர்ந்த

உத்தமாநாம் – பண்பட்ட

குலே – குலத்திலே 

உத்பத்யாபி – உத்பத்ய அபி – பிறந்திருந்த போதிலும் 

அஹம் – நான் 

த்வத் – உன்னுடைய

மஹிமஜலதே – மகிமைகளாகிய பெருங்கடலினுடைய 

ஶீகராணூந் – ஶீகர் அணூந் – சிறு திவலைகளை 

ஆஸ்வாத்ய அபி – அருந்திய போதிலும

இந்திரயாநாம் – இந்திரியங்களின்

சாபலாத் – சபலத்தால் (புலனின்ப நாட்டத்தால்) 

த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய – த்வத் பாத அர்சா விமுக ஹ்ருதய – உன் திருவடிகளை வழிபடுவதிலிருந்து விலகிய உள்ளம் படைத்தவனாய்

ஏஷ – இந்த 

பாப: – பாவியானவன்

துச்சேஷ் – அல்பமான விஷயங்களில்

வ்யக்ர: – பரபரப்புடைநவனாய்

ஜனநம் -பிறவியை 

வ்யர்தயாமி – வீணடித்துக் கொண்டிருக்கிறேன்

அஹஹ – அந்தோ ! 

பொருள் விளக்கம்

சிவபெருமானை, ஸ்மரஹர என்று அழைக்கிறார் தீக்‌ஷிதர். ஸ்மர என்றால் நினைத்தல். எல்லாராலும் எப்பொழுதும் நினைக்கப்படுவது காமம் (இனக் கவரச்சி, பாலுணர்ச்சி).  எனவே ஸ்மர என்பது காமனைக் குறிப்பது. ஸ்மர அரி என்பது காமத்தை அழிப்பது எனவாகும். மன்மதனை அழித்தவன் என்பது சொற்பொருளாயினும் இதன் கருப்பொருள் இவ்வாறு:

இந்த சொல், விஷயத் த்யானத்தைப் பற்றிய எச்சரிக்கை. இந்திரிய விஷயங்கள் பற்றிய முதல் எண்ணங்களை ஏற்காது, அந்த எண்ணங்கள் நுழையும்போதேஅவற்றைப் பகைவர்கள் என்று அறிகிறான் அறிவாளி. பொருளின்ப எண்ணங்கள், பொருட்களுடனான உறவை ஏற்படுத்தும். அந்த உறவு ஆசையில் அவாவில் தள்ளும். அவா எனும் காமத்தடையினால் கோபம் வரும். கோபம் வந்தால் புத்தி தடுமாறும். குழப்பம் ஏற்படும். குழப்பத்தினால் சாஸத்திரத்தில் கற்றது மறக்கும். கற்றது மறந்தால், புத்தியிருந்தும் பயனில்லை. பயனிலா புத்தியால் பிறவியால் பயனேதுமில்லை.

“ஸங்கஹ – காமஹ – க்ரோதஹ – ஸம்மோஹஹ – ஸம்ருதி விப்ரமஹ – புத்தி நாஸஹ – ப்ரநஸ்யதி” 

பற்று – ஆசை – கோபம் – மயக்கம் (பகுத்தறிவின்மை) – நினைவு தவறுதல் – புத்தியின் அழிவு – அழிவு (வாழ்வின் குறிக்கோளை அடையத் தகுதியற்றவனாகுவது) என்று ஒன்று மற்றொன்றை விளைவித்து, அழிவிற்கு இட்டுச் செல்வன. எனவே

விஷயத்யானம் ஸர்வ (புருஷார்த) அனர்த்த ஹேது: – புலனின்பப் பொருட்களை கண்ணுதல் மனிதப் பிறவியை வீணடித்துவிடும்.

தர்மானுஷ்டானம் விஷய க்ரஹனம் ப்ரஸாத ஹேது: – முறையான அறவழியில் செல்கின்ற புலனின்ப நுகர்ச்சி, உள்ளத்தைத் தெளிவுபடுத்திப் புலனின்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பதைக் குறிப்பது. இதற்கு “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்ற குறள் சொல் மிகப் பொருத்தமானது.

ஆக, ஸ்மர ஹரி என்று இறைவனை அழைப்பது, என்னுடைய காமத்தையும் அழித்திடுவாய் என்ற பிராரத்தனை.

“இந்திரியாநாம் சாபலாத் த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய” என்ற சொற்றொடர்,

“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், “இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்” என்றும் மாணிக்கவாசகர்

கூறுவதிற்கு ஒப்பு.

இந்திரிய கட்டுப்பாடில்லை என்றால் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்று மாணிக்கவாசகர்  கூறும் புலையனாவோம் நாம் என்பதை ஆத்ம நிந்தனை மூலம் நமக்கு எடுத்துரைத்து, பொய்மையைப் பெருக்காதே என்று அறிவுரைக்கும் ஸ்லோகம் இது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

இந்த ஸ்லோகம் “ஆத்ம நிந்தை” – தன்னுடைய குற்றங்களைக் கூறுதல் என்ற வடிவில் அமைந்துள்ளது. இத்தகைய ஸ்லோகங்கள் மூலம் நாம அறிவது, அரிதாகப் பெற்ற இப்பிறவியின் மூலம் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. இடைவிடாது இறைவன் நாமத்தில் நிலைத்திட வேண்டும் என்று முந்தைய இரு ஸ்லோகங்களில் கூறப்பட்ட கருத்து இந்த ஸ்லோகத்திலும் வலியுறுத்தப்படுகிறது. 

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிராணடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே!!  

திருமந்திரம் (2090)

“ஸம்ப்ராப்தே, ஸந்நிஹிதே காலே, நஹி நஹி ரக்‌ஷதி டுக்ருங்கரணே”  என்கிறார் ஆதி சங்கரர், பஜ கோவிந்தத்தில்.

ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் | 
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர
ஸம்ஸ²ய: ||

பகவத் கீதை 8.5

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை என்கிறான் கண்ணன்.

இறைவாக்கு பொய்யாகுமோ?