பஜ கோவிந்தம் என்று அழைக்கப்படும் “மோக முத்கரா”வைப் பற்றிய எனது பதிவைத் தொடங்கியபோது, சமூக ஊடகங்களில் “மூட மனம்” கொண்ட எனக்கும், கற்றறிந்தவர்களுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
“மோஹ முத்கரா” என்பது 31 ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு. இதற்கு பின்னர் பஜ கோவிந்தம் என்று பெயரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆதி சங்கரரும், அவரது சீடர்களும் காசியில் வழங்கியது என்றும் கூறப்படுகிறது. நிலையற்றவற்றை நிலையென நம்பி வாழும் நம் மருட்சியுடை (மோஹம்) மனதை தட்டி எழுப்பும் சம்மட்டி (வடமொழியில் முத்கரா என்பர்) அடிகள் இவை. இது மறுக்க இயலா உண்மை.
அதே நேரம், “உண்மை என்றுமே உறைக்கும்” என்ற உலக இயல்புற்கேற்ப, சங்கரனின் சம்மட்டி அடிகள் என்று கொடுத்த தலைப்பு பொருத்தமானதல்ல, அது வன்முறையைக் குறிக்கும் சொல், அச்சொல்லிற்கும் ஆதி சங்கரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் சில பெரியோர்களின் கருத்துக்களையும் நாம் மதித்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு தலைப்பின் மேல் பற்றை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சமஸ்க்ருத மொழியில் வைராக்கியம் (वैराग्य) என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. நாம் விரும்பும் எந்த ஒரு வைரத்திற்கும் மேலான விலையிலா வைரம் இந்த வைராக்கியம். ஆதி சங்கரரும் அவரது சீடர்களும் “மோஹ முத்கரா”வில் உள்ள ஸ்லோகங்கள் வழியாக, நம் உடல் மன வளாகமெனும் சுரங்கத்துள் ஒளிந்துள்ள இந்த வைராக்கியத்தை நம்மிடமிருந்து வெளிக்கொணரவே முயல்கின்றனர்.
எனவே, இந்த வலைதள தொடர்பதிவின் தலைப்பை
“சங்கரனின் வைரக் கூடம்”
என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டும் இடம் வைரக் கூடம். ஒவ்வொரு ஸ்லோகமும் நம்முள் ஒளிந்திருக்கும் வைராக்கியம் எனும் பற்றிலா வைரத்தை, தோண்டி எடுத்து, பட்டை தீட்டி ஒளிர வைக்கும் செயல்முறை (process) என்பதே இத்தலைப்பின் பொருள். இரும்பை சம்மட்டி அடியால் மாற்றுவதை விட, வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டுவது என்பது வன்முறையிலா செயலெனத் தோன்றும் காரணமே இத்தலைப்பின் தோற்றம்.
இந்த மாற்றம் வலைதளப்பதிவுகளில் (blogs) இரண்டாவது ஸ்லோகத்திலிருந்தும் (01-12-2022), வலைதள ஒலிப்பதிவத் தொடரில் (podcast) மூன்றாவது ஸ்லோகத்திலிருந்து (23-12-2022) நடைபெறும்.
இந்த “தலைப்பு மாற்றம்” தமிழ் பதிவுகளுக்கு மட்டுமே. ஆங்கிலப் பதிவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
There is no change in respect of the blogs in English on the subject and it continues to be “Sankara’s Smithy”.
சங்கரனின் வைரக்கூடத்திற்கு வருகை தந்து, தோண்டி எடுத்து, பட்டை தீட்டி மெருகேற்றி பற்றிலா நம் வைராக்கியத்தை வெளிக் கொணர்வோம். வாருங்கள்.