
முக்கிய அறிவிப்பு
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.
மந்திரவாதி
அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.
ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.
அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.
“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்
முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.
அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.
அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.
மந்திரக் காட்சி
பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது.
அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.
எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.
நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.
அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.
ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.
முடிவுரை
இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம். அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.
எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.
இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்

இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!
Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.