முகவுரை 

இறையியல் அல்லது ஆன்மிகத்தில் ஆழமாகச் செல்லச்செல்ல பேரின்பம் அதிகரிக்கிறது என்பது பெரியோர்கள் கண்ட உண்மை.

இறைவனுடைய அருளால், அவர் மீது அன்பு பூண்டு உலகப்பற்று நீக்கி மெய்ஞ்ஞானம் பெற்று அதில் நிலைபெற்று இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனையாக முதல் பாடல் இருக்கிறது.

பாடல்


அங்கைகொடுமலர்தூவி யங்கமதுபுளகிப்ப
வன்பினாலுருகிவிழிநீ
ராறாகவாராத முத்தியினதாவேச
வாசைக்கடற்குண்மூழ்கிச்
சங்கரசுயம்புவே சம்புவேயெனமொழி
தழுதழுத்திடவணங்குஞ்
சன்மார்க்கநெறியிலாத் துன்மார்க்கனேனையுந்
தண்ணருள்கொடுத்தாள்வையோ
துங்கமிகுபக்குவச் சனகன்முதன்முனிவோர்க
டொழுதருகில்வீற்றிருப்பச்
சொல்லரியநெறியையொரு சொல்லாலுணர்த்தியே
சொரூபானுபூதிகாட்டிச்
செங்கமலபீடமேற் கல்லாலடிக்குள்வளர்
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (1)

விளக்கவுரை

சுவாமி ஓம்காரானந்தாவின் விளக்கம்

ஆதி குருவிடம் அருள் வேண்டும் தாயுமானவரின் இப்பாடலில் ஆதி குருவின் இலக்கணத்தை (ஸ்வரூபத்தை) அழகிய தமிழில் எடுத்துக்கூறி, பின் தன் நிலையை அறிவித்து, அருள் வேண்டுகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும் என சுவாமி ஓம்காரானந்தா இங்கனம் விளக்குகிறார்.

ஆதி குருவின் ஸ்வரூபம்

 1. விடா முயற்சியுடன் விவேகம், வைராக்யம் போன்ற அதிஉயர்வும், பரிசுத்தமும் கூடிய சிறப்புமிகுந்த பக்குவங்கள் (துங்கமிகு பக்குவம்) நிறைந்து, இல்லறம் பூண்டாது, இறைவனின் படைப்பில் நிவ்ருத்தி மார்க்கத்தில் வழியாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்களான, இறைவனிடம் மெய்ஞான உபதேசம் பெற்று அந்த ஞானத்திலேயே பற்றற்ற தன்மையுடன்,  “अनित्यम् असुखं लोकम्” இந்த உலக சுகம் நிலையற்றது என்பதைப் புரிந்துகொண்டு கடவுளைச் சார்ந்து இருந்து, இளமையிலேயே வைராக்யத்தை அடைந்து, சிஷ்ய பரம்பரையில் வரும் ஆதி சிஷ்யர்களான, நன்கு ஆழ்ந்து சிந்திப்பவர்களான,  “நான்மறை ஆறங்கமுதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வர்” என பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ள சனகர், சநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் ஆகிய முனிவர்கள் பணிவுடன் நன்றாக வணங்கி பக்கத்தில் இருக்க, 

2. இடம், காலம், செயல் கடந்து, வாக்கினால் விளக்க முடியாத,  வாக்கினை விளக்கிடும், இனம் குணம், செயல், உறவு இவை ஏதுமிலா, சப்த பிரமாணத்திற்கு வேறான (கேனோபநிஷத் 1.5),

3. அக்னியில் வெப்பம், ஒளி என்பவை இயல்பான ஸ்வரூபம் என்பது போல அனைவரில் ஸச்சிதாநந்த ஸ்வரூபம் என்ற போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனாக உள்ளுறைந்திடும் ஆன்மாவைப் பற்றிய அறிவினை (அந்த சொல்லரிய நெறியை), 

4. கட்டை விரலை (பரமாத்மாவைக் குறிப்பது) விட்டு விலகி மற்ற மூன்று விரல்களுடன்  (இவைதனை பலவிதமாகக் கூறலாம்;  ஆணவம், கன்மம், மாயை, ஜாக்ரத், ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தைகள், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள், ஸ்தூல, ஸூக்ஷ்ம காரண சரீரங்கள், என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்) சேர்ந்து இருக்கும், 

5. ஆள்காட்டி விரலை (ஜீவாத்மாவைக் குறிக்கிறது) பிடித்து இழுத்து கட்டை விரலுடன் (பரமாத்மாவுடன்) சம்பந்தப்படுத்தி, பரமாத்மாவுடன் சம்பந்தப்பட்டவுடன், அது பரிபூர்ண திருப்தியாக, ஆனந்தமாக இருக்கிறது என்பதை உபதேசம் செய்ய, சொல்லையும்‌ சைகையையும்‌ கடந்த நிலையில்‌ இருக்கும் சின்முத்திரையாகக் காட்டி (சொரூப அநுபூதி காட்டி), தன்னில் களித்திருக்கும் (அகத்தின் அழகினை முகத்தில் காட்டி)  

6. சித் ஸ்வரூபமாய், ஆனந்த மயமாய், திரிஸிரகிரி எனும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில், இயற்கையின்‌ அமைப்புக்கு அறிகுறியான, சிறு வித்தில் உருவான பெருந்தருவான ஆல்‌ வகைகளுள்‌ ஒன்றான கல்லால்‌ மரத்தடியில், செங்கமல பீடமேல் அமர்ந்திருக்கும், சித்தாந்தம் வழியாக அறிந்து கொள்ளப்படும், அறியாமையை மெய்யறிவால் அகற்றி, முக்திக்கு காரணாமாம் தக்‌ஷிணாமூர்த்தியே ! 

தாயுமானவரின் வேண்டுதல்

உன்னுடைய பரிபூரணமான அருளைக் கொடுத்து என்னைக் ஆள்வாயாக! என்பதே இப்பாடலின் முக்கிய கருத்து. 

பொதுவாக அருள் வேண்டும் என்பது நமக்கு, அபிராமி பட்டர் கூறும் 

கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும்,  துய்யநின் பாதத்தில் அன்பும்

எனும் பதினாறு அருள் வகைகள்தான்.

பணமும், பதவியும் நிறைய இருந்தால் கடவுள் அருள் பூரணமாக இருப்பதாக பொதுவாக மக்கள் நினைப்பர். பொருள் உலகம் நன்றாக அமைவதே அனுக்ரஹம் என்று நினைக்கிறார்கள். எனினும் 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள

என்கிறது திருக்குறள் (241).

இப்பாடலில், தாயுமானவர் வேண்டுவது தண்ணருள்; அதாவது பக்தி, ஞான வைராக்யம் எனும் உண்மையான அருள், பொருட் செல்வமல்ல.

ஆதி சங்கரர்  “ஞான வைராக்ய சித்தாந்தம் பிக்‌ஷாந் தேஹி” என வைராக்யத்தையும் ஞானத்தையும் பலமாகப் பெறுவதற்காக அன்னபூரணி அன்னையாரிடம் பிரார்த்தனை செய்தார் என்பதனையும், விவேகாநந்தரிடம், காளியிடம் போய் உன் பணக்கஷ்டத்திற்காக பிரார்த்தனை செய் என்று ராமகிருஷ்ணர் சொன்னபோது, அவரால் அப்படி கேட்க முடியவில்லை. ஞான வைராக்யத்தையே கேட்டார் என்பதனையும் நினைவு கூற வேண்டும். 

சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்

அங்கைகொடு  மலர்‌ தூவி

இரண்டுபேர்‌ முடவர்‌ ஆகிவிட்டார்கள்‌. வலது கையை  இழந்‌தவர்களாக ஒரு கூட்டத்தினுள்‌ அவர்கள்‌ தென்பட்‌டார்கள். அங்கஹீனன்‌ ஆவது குறைபட்ட உடல்‌ வாழ்க்கையாகிறது. ஆயினும்‌ இவ்‌ இரண்டு முடவர்களின்‌ நிலைகள்‌  வெவ்வேறு பாங்குடையவைகள்‌ ஆயின. ஒருவன்‌ திருடினான்‌. திருடுகின்றபொழுது கைப்பிடியாக அகப்பட்டுக்‌கொண்டான்‌. அவன்‌ கையைத்‌ துண்டித்து அவனைத்‌ துரத்தி விட்டார்கள்‌. வாழ்நாள்‌ முழுதிலும்‌ அது ஒரு வெளிப்படையான தண்டனையாய்‌ இருக்கட்டுமென்று அவர்கள்‌ அப்படிச்‌ செய்துவிட்டார்கள்‌, அத்தகைய விருத்தாந்தத்‌துடன்‌ சபை நடுவே வந்தவன்‌ அவமானத்துக்கு உட்பட்டவன்‌ ஆனான்‌. ஆனால்‌ மற்றவனுடைய விருத்தாந்தம்‌ வேறு விதமானது. இயங்கும்‌ யந்திரம்‌ ஒன்றனுள்‌ அகப்பட்டுக்‌ கொண்ட குழந்தை ஒன்றை மரணத்தினின்று வெற்றிகரமாகக்‌ காப்பாற்றினான்‌. அப்பெருமுயற்சியில்‌ அவனுடைய கை, யந்திரத்தில்‌ துண்டிக்கப்பட்டது, இவன்‌ சபை நடுவே வந்தபொழுது அங்கஹீனத்தை முன்னிட்டுப்‌ பாராட்டப்‌பட்டான்‌. இவனுடைய துண்டிக்கப்பட்ட கை ஒரு விதத்‌தில்‌ அழகுடன்‌ பொலிந்த கை ஆனது, அரும்பெரும்‌ செயலைச்‌ செய்ததே அதற்குக்‌ காரணமாயிற்று. கை ஒன்றுக்கு  அழகு உண்டாவது ஆபரணங்களை முன்னிட்டன்று. ஆபர்‌ணங்கள்‌ பூட்டி யாருடைய கையையும்‌ அலங்கரித்துவிடலாம்‌, ஆனால்‌ நற்செயலே செய்து கொண்டிருக்கும்‌ கை, அழகிய கை ஆகிறது. நற்செயல்களிலெல்லாம்‌ சிறந்தது  ஆண்டவனை ஆராதிப்பது. இறைவனைப்‌ போற்றுவதால்‌ மேன்மை உண்டாகிறது. இறைவனைப்‌ போற்றுதற்கு உபாயங்கள்‌ பல உள. அத்தனைவித உபாயங்களின்‌ வாயிலாக மனதைக்‌ கடவுளிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌. ஆராதனையின்‌ உட்கருத்து அதுவேயாம்‌, நொந்தமனதைக்‌ கடவுளிடம்‌ ஒப்படைப்பது முறையன்று. பண்பட்ட நல்ல மனதையே கடவுளுக்கு உரியதாக்க வேண்டும்‌. நல்ல மனதுக்‌குப்‌ புறச்சின்னமாய்‌ அமைந்திருப்பது மலர்‌. அதனிடத்துப்‌ புதுமையும்‌, எழிலும்‌, மணமும்‌ திகழ்ந்துகொண்டிருக்கின்‌றன. மனது யாண்டும்‌ மலர்போன்று இருத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய மனதைக்‌ கடவுளிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக்‌ கையால்‌ வழிபடுபவன்‌ ஒருவன்‌ மலரை எடுத்துக்‌ கடவுளுக்குத்‌ – தூவுகிறான்‌. அச்செயல்‌ பாராட்டத்தக்க சிறந்த செயல்‌ ஆகிறது. அங்கை என்பது அழகிய கை. அதனால்‌ செய்யப்படுகிற சிறந்த செயலை அங்கைகொடு  மலர்‌ தூவி என்கிறார்‌ தாயுமானவர்‌. 

அங்கமது புளகிப்ப 

உடலின்‌ உறுப்புக்களுக்கு அங்கங்கள்‌ என்று பெயர்‌. அங்கங்களின்‌ தொகையே உடல்‌ ஆகிறது. உள்ளத்தில்‌ உண்டாகிற உணர்ச்சி உடலில்‌ உண்டாகிற சில மாறுதல்‌கள்‌ வாயிலாக வெளியாகிறது. உணர்ச்சி வெவ்வேறு வடிவெடுக்கிறது. அன்பு, அச்சம்‌, சினம்‌, பொறாமை ஆகியவை யாவும்‌ உணர்ச்சியின்‌ வெவ்வேறு தோற்றங்கள்‌. புளகித்தல்‌ என்னும்‌ சொல்‌ மயிர்‌ சிலிர்த்தல்‌ எனப்‌ பொருள்‌படுகிறது. அச்சத்தாலும்‌, ஆச்சரியத்தாலும்‌, பேர்‌ அன்பினாலும்‌, சினத்தர்லும்‌ உடல்‌ புளகிப்பதுண்டு.  உணர்ச்சியின்‌ வேறுபாட்டுக்கு ஒப்ப புளகிப்பு ஆனது உடலில்‌ வெவ்‌வேறு பயன்களை விளைவித்து விடுகிறது. சினத்தால்‌ உண்‌டாகும்‌ புளகிப்பு உடலை நஞ்சு ஆக்குகிறது, பயத்தால்‌ உண்டாகும்‌ புளகிப்பு உடலை மாய்த்துவிடுவது போன்று தேய்க்கிறது. அன்பால்‌ அல்லது ஆனந்தத்தால்‌ உண்டாகும்‌ புளகிப்பு உடலைப்‌ பண்படுத்தித்‌ தூயதாக்குகிறது. உள்ளத்தில்‌ உண்டாகிற உணர்ச்சிகளில்‌ எல்லாம்‌ உயர்ந்‌தது இறைவனிடத்துக்‌ கொண்டுள்ள பேரன்பு. அது ஆனந்தமாக வடிவெடுக்கிறது. அதன்‌ புறச்சின்னம்‌ உடலிலும்‌ தென்‌படுகிறது. அத்தகைய தோற்றத்தை அங்கமது புளகிப்ப என்கிறார்‌ தாயுமானவர்‌.

அன்பினால்‌ உருகி

உடலும்‌ உள்ளமும்‌ உருகுதற்குப்‌ பல காரணங்கள்‌ இருக்கின்றன. துயரத்தால்‌ உருகுதல்‌, கோபத்தால்‌ உருகுதல்‌, பொறாமையினால்‌ உருகுதல்‌ முதலியன வாழ்க்கையைக்‌  குலைத்து விடுகின்றன. காமத்தால்‌ உருகுவது அதைவிடக்‌ கொடியது. தூய அன்பினால்‌ உருகுவதும்‌ உண்டு. தூய அன்பினால்‌ உருகுகின்றபொழுது அது வெண்ணெயை உருக்குவதற்கு ஒப்பாகிறது. வெண்ணெயை உருக்கி  மாசை நீக்கி மணம்‌ நிறைந்த நெய்யாக மாற்றுகிறோம்‌. மனிதனுக்குக்‌ கடவுளன்பும்‌ அதற்கு ஒப்பான தூய அன்பும்‌ உண்டாகுமானால்‌ அவன்‌ உருகி உயர்ந்த மனிதனாக வடிவெடுக்கின்றான்‌. அப்படி அவன்‌ மேலோனாக மாறி அமைவதை அன்பினால்‌ உருகி என்கிறார்‌ அண்ணல்‌. 

விழிநீர்‌ ஆறு ஆக 

கண்ணீர்‌ சிந்துவது உயிர்களின்‌ செயல்‌. உள்ளத்தில்‌ உண்டாகும்‌ விதவிதமான விகாரங்களுக்குச்‌ சிந்துகின்ற  கண்ணீர்‌ புறச்‌ சின்னமாகிறது. மாண்டவர்களைக்‌ குறித்துப்‌ புரண்டு அழுது குடம்‌ குடமாகக்‌ கண்ணீர்‌ கொட்டுபவர்‌ உளர்‌. பேரும்‌ புகமுக்காகப்‌ பரிதவித்துக்‌ கண்ணீர்‌ உகுப்‌பார்‌ இருக்கின்றனர்‌. காம நோயால்‌ வருந்திக்‌ கண்ணீரைப்‌ பெருக்குவாரும்‌ இருக்கின்றனர்‌. இத்தகைய கண்‌ணீர்கள்‌ எல்லாம்‌ உண்மையில்‌ மனிதனைச்‌ சிறுமைப்‌ படுத்‌துபவை‌. இவை யாவும்‌ துன்பக்‌ கண்ணீர்‌. இவைகளுக்கு மாறாக இன்பக்கண்ணீர்‌ என்பது ஒன்று உண்டு. அது அருள்‌ தாகத்தால்‌ வருவது, கடவுள்‌ நாட்டத்தால்‌ ஏற்படும்‌ கண்ணீர்‌ அது. உணர்ச்சியின்‌ வேகத்துக்கு ஒப்ப விழிநீர்ப்‌ பெருக்கு மிகைபடுவதுண்டு. மனிதனிடத்‌துள்ள பாபங்களையெல்லாம்‌ கழுவவல்லது கடவுளை நாடிச்‌ சிந்தும்‌ கண்ணீர்‌ என்கிறார்‌ ஸ்ரீ ராமகிருஷ்ணர்‌. நிலையற்ற உலக வாய்ப்புக்களுக்காகக்‌ குடம்‌ குடமாகக்‌ கண்ணீர்‌ சிந்துபவர்‌ இருக்கின்றனர்‌. கடவுளுக்காகவென்று கண்‌ணீர்‌ சிந்துவாரைக்‌ காண்பது அரிதிலும்‌ அரிது என்று மேலும்‌ அதே பரமஹம்ஸர்‌ பகர்ந்துள்ளார்‌. பாராட்டத்தக்க அத்தகைய இன்பக்‌ கண்ணீரை விழிநீர்‌ ஆறு ஆக என்‌கிறார்‌ தாயுமானவர்‌. 

ஆராத முக்தியினது ஆவேச ஆசைக்‌  கடற்குள்‌ மூழ்கி

பலதரப்பட்ட கடல்கள்‌ இருக்கின்றன. பரந்த நீர்நிலைகளைக்‌ கடல்கள்‌ என்று நாம்‌ பகர்கிறோம்‌, இனி, லக்ஷியார்த்தத்தில்‌ வேறு சில நிலைகள்‌ கடல்கள்‌ என்று கொள்‌ளப்படுகின்றன. பிறவியை ஒருவர்‌ பெருங்கடல்‌. என்றார்‌. இன்னொருவர்‌ ஆசையைக்‌ கடல்‌ என்றார்‌. ஆசைக்‌ கடல்‌களுள்‌ இருதரப்பட்டவைகள்‌ இருக்கின்றன:

  1. மனிதனை மரணத்தினுள்‌ ஆழ்த்தும்‌ கடல்‌ உண்டு. மண்‌ ஆசை, பொன்‌ ஆசை, போகத்தில்‌ ஆசை மயமான கடல்கள்‌ மனிதனைக்‌ கெடுத்துவிடுகின்றன. 
  2. கடவுள்‌ மீது வைத்துள்ள ஆசையே மனிதனைப்‌ படிப்படியாக மேல்நிலைக்கு எடுக்கின்‌றது. 

ஆசையினுடைய வேகம்‌ அதிகரித்து வீட்டால்‌ அது ஆவேசம்‌ என்று பொருள்படுகிறது. பயித்தியம்‌ பிடித்தவன்‌ போன்று பேராசைக்காரன்‌ நடந்துகொள்கிறான்‌. இங்கும்‌ அங்கும்‌ அலைந்து திரிகின்றான்‌. ஓய்வு ஒழிச்சல்‌ அவனுக்கு இல்லை. பெரும்‌ பிரயத்தனம்‌ எடுத்துக்‌ கொள்‌கின்றான்‌. பொருந்தியவைகளையும்‌, பொருந்தாதவைகளையும்‌ பெருமிதமாகப்‌ பேசுகின்றான்‌.  கடவுள்‌ நாட்டத்தில்‌ செல்லுகிற ஒரு மனிதனுக்கும்‌ அத்தகைய ஆவேசம்‌ வந்து விடுகிறது. கடவுளை நாடுவதும்‌ முக்தியை நாடுவதும்‌ ஒன்றேயாம்‌. உலக பந்த பாசங்களினின்று விடுபடுவது முக்தி. உலக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகள்‌ அனைத்தினின்றும்‌ விடுபடுவது முக்தி. கடவுளை அடைகின்றவனிடத்து இக்குறைபாடுகள்‌ அனைத்தும்‌ அகன்று வீடுகின்‌றன, முக்தியை அடைவதும்‌ கடவுளை அடைவதும்‌ ஒன்றே. ஏனைய ஆசைகள்‌ தெவிட்டிப்போய்‌ விடுகின்ற சிறிய இன்பங்களை நல்குகின்நன. கடவுள்‌ நாட்டம்‌ என்கின்ற ஆசை தெவிட்டிப்போகாத பேரானந்தத்தையும்‌, பேரன்பையும்‌ உண்டுபண்ணுகிறது, அத்தகைய தெவிட்டாத நிலை  ஆராத நிலை எனப்படுகிறது. இக்கோட்பாடுகளையெல்லாம்‌ தொகுத்தெடுத்து ஆராத முக்தியினது ஆவேச ஆசைக்‌  கடற்குள்‌ மூழ்கி என்கிறார்‌ தாயுமானவர்‌. 

சங்கர சுயம்புவே சம்புவே

கடவுளும்‌ கடவுளுடைய பெயரும்‌ இணைபிரியாதவைகள்‌. மக்களுக்கு நாம்‌ வைக்கும்‌ பெயர்‌ அத்தகையதன்று. ஞானசம்பந்தன்‌ என்‌று ஒருவனுக்குப்‌ பெயர்‌ வைக்கின்றோம்‌. உண்மையில்‌ அவனுக்கும்‌ ஞானத்துக்கும்‌ ஒரு சம்பந்தமும்‌ இல்லாது போய்விடக்கூடும்‌. இயற்கையினுடைய அமைப்பு அத்தகையதன்று. இயற்கையில்‌ ஒவ்வொரு பொருளும்‌  ஒரு சப்த சொரூபமாக இருக்கிறது. ஒரு பொருளிடத்‌திருந்து எத்தகைய ஓசை அல்லது ஒலி உதித்துக்கொண்‌டிருக்கிறது என்பது நமக்கு விளங்குவதில்லை. ஆயினும்‌ ஒவ்வொரு பொருளும்‌ ஓசை சொரூபமே. அதை முன்னிட்டே பொருளுக்குப்‌ பதார்த்தம்‌ என்கின்ற பெயர்‌ வந்துள்ளது. பதம்‌ என்பது சொல்‌ அல்லது ஓசை. அதற்கு அமைந்த பொருள்‌ அர்த்தம்‌ எனப்படுகிறது. பதமும்‌ அதனுடைய அர்த்தமும்‌ சேர்ந்தே இயற்கையிலுள்ள ஒவ்வொரு பொருளுமாம்‌. எப்பொருளிடத்திருந்து எத்தகைய ஓசை வந்து கொண்டிருக்கிறது என்பதை ஆன்‌றோர்‌ அறிந்துகொள்கின்றனர்‌. அத்தகையவர்களே மெய்ப்பொருளை அறிந்துகொள்ள வல்லவர்‌ ஆகின்றனர்‌. கடவுளிடத்திருந்து வரும்‌ ஓசையை அவர்கள்‌ உணர்கின்றனர்‌. பின்பு அதை அவர்களே எடுத்து ஓதுகின்றனர்‌. அவர்கள்‌ கேட்டறிந்த ஓசையைத்‌ தான்‌ சிவன்‌ என்றும்‌, சங்கரன்‌ என்றும்‌, நாராயணன்‌ என்‌றும்‌ இன்னும்‌ பலபெயர்களாக வெளியிட்டிருக்கின்‌றனர்‌. இத்தகைய ஓசைகள்‌ வலிவு வாய்ந்தவைகள்‌. அவைகளை நாம்‌ உறுதியாகப்‌ பிடித்துக்கொண்டால்‌ அந்த ஓசைக்கு அடிப்படையாய்‌ இருக்கும்‌ மூலப்பொருளை அறிந்துகொள்ள வல்லவர்‌ ஆகின்றோம்‌. இக்காரணத்தை முன்னிட்டே கடவுளும்‌ கடவுளுடைய நாமமும்‌ ஒன்றே என்று சொல்லப்‌பட்டிருக்கிறது. கடவுளுக்கு எண்ணிறந்த நாமங்கள்‌ இருக்‌கின்றன, அவைகளில்‌ சிலவற்றை ஆராய்ந்து பார்ப்போம்‌. 

சங்கரன்‌ என்பது அவனுக்கு அமைந்த பெயர்களில்‌ ஒன்று. நலத்தைச்‌ செய்பவன்‌ என்று அது பொருள்படுகிறது. அது மட்டுமல்லாது இந்தச்‌ சொல்லைத்‌ திரும்பத்‌ திரும்ப நாம்‌ உச்சரித்தால்‌ நலத்தைச்‌ செய்யும்‌ பாங்கு நமக்கே வந்து அமைந்துவிடுகிறது. சுயம்பு என்பது அவனுக்கு அமைந்‌துள்ள மற்றொரு பெயர்‌. தானாகத்‌ தோன்றியவன்‌ என அது பொருள்படுகிறது. தோற்றுவித்தபடி தோன்றுவது  செயற்கைப்‌ பொருளின்‌ இயல்பு. கண்ணாடிப்‌ பாத்திரம்‌ ஒன்று நாம்‌ தோற்றுவித்த பிரகாரம்‌ அமைகிறது. இயற்கை நாம்‌ தோற்றுவித்த பிரகாரம்‌ அமையாது. நம் ‌ உடலில்‌ வளரும்‌ உரோமம்‌ ஒன்றை மாற்றி அமைக்க நமக்கு முடியாது. அது தானாகவே தோன்றுகிறது என்று சொல்லலாம்‌. இப்பிரபஞ்சம்‌ முழுதுமாய்த்‌ தோன்றியிருப்பவர்‌ கடவுள்‌. யாராலும்‌ ஏவப்பட்டு அல்லாது, தன்‌ பெருமையைத்‌ தானே விளக்குகின்ற பாங்கில்‌ அவன்‌ இவ்வுலகனைத்‌துமாய்‌ இருக்கின்றான்‌. சுயம்பு என்னும்‌ சொல்‌ இக்‌கருத்தை விளக்குகிறது. சில பொருள்களோடு தொடர்வு வைப்பதால்‌ துன்பம்‌ வருகிறது, நஞ்சு நிறைந்த நீரும்‌, நிலமும்‌, காற்றும்‌ இருக்கின்றன. அவைகளோடு தொடர்வு வைத்தால்‌ மமக்குத்‌ துன்பம்‌. நமக்குச்‌ சகம்‌ தரும்‌ வேறு சில பொருள்கள்‌ இருக்கின்றன, தூய நிலையில்‌ உள்ள அனலும்‌, புனலும்‌, நிலனும்‌ தத்தம்‌ போக்கில்‌. நமக்குச்‌  சுகம்‌ நல்குகின்றன, இனி, கடவுளோவெனின்‌ எல்லா  உயீர்களுக்கும்‌ யாண்டும்‌ சுகம்‌ விளைவிப்பவராவார்‌. அக்‌கருத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கிறது சம்பு என்‌னும்‌ சொல்‌, இறைவனுக்கு அமைந்துள்ள பெயர்கள்‌ எல்‌லாம்‌ அவனுடைய மகிமைகளை விளக்குதற்கென்றே அமைந்‌தவைகளாம்‌, அத்தகைய பெயர்களைக்‌ கொண்டு நாம்‌ அவளை அழைக்கின்ற பொழுதெல்லாம்‌ அவனுடைய மகிமைகளையே நமது மனத்தகத்துள்‌ அமைத்துக்‌ கொள்கின்றோம்‌. இக்கோட்பாட்டை சக்கர சுயம்புவே சம்புவே என்று தாயுமானவர்‌ இயம்புகின்றார்‌. 

மொழி தழுதழுத்திட வணங்கும்‌ 

இறைவனை க்‌ கூவியழைக்கின்ற பாங்கிலும்‌ பல படித்‌தரங்கள்‌ இருக்கின்றன. பேசும்‌ யந்திரங்கள்‌ இக்காலத்தில்‌  அமைக்கப்‌ பெற்றிருக்கின்றன. இறைவனுடைய திருநாமத்தை ஓலமிட்டுக்கொண்டிருப்பது அந்த யந்திரங்களுக்‌கும்‌ இயலுகிறது. மக்களுள்‌ பலர்‌ இறைவனுடைய திருநாமத்தை ஓதுகின்றனர்‌. உணர்ந்து ஓதினாலும்‌ உணராது  யந்திரம்‌ போன்று ஓதினாலும்‌ ஓதுதற்கு ஏற்ற அளவு உள்‌ளத்தில்‌ சிறு மாறுதல்‌ அமையப்‌ பெறுவது உயிர்‌ வாழும்‌ மக்களுக்கு சாத்தியமாகிறது. ஆதலால்‌ யந்திரம்‌ ஓலமிடுவது போன்றே மனிதன்‌ ஒருவன்‌ இறைவனுடைய நாமத்தை ஓயாது ஓலமிட்டுக்கொண்டிருந்தால்‌ அவனுக்கு நலன்‌ ஏற்‌படுகிறது. அவனுக்கு அமைகிற நலன்‌ யந்திரத்துக்கு உண்டாகாது. ஏனென்றால்‌ மனிதன்‌ உணர்ச்சியுடன்‌  கூடியவன்‌, யந்திரத்துக்கு அந்த உணர்ச்சியில்லை, இந்த உணர்ச்சியைப்‌ பன்மடங்கு வலிவுடையதாக்கும்‌ வல்லமை மனிதனுக்கு இருக்கிறது, உணர்ச்சியைப்‌ பேருணர்ச்சியாக மாற்றுமளவு மனிதன்‌ அதிவிரைவில்‌ தன்‌ அமைப்‌பையே மாற்றிவிட வல்லவன்‌ ஆகின்றான்‌. பேருணர்ச்‌சியை எப்படி அறிந்துகொள்ள முடியும்‌ என்பது அடுத்த கேள்வி, ஒருவன்‌ உணர்ச்சியோடு பேசுகிறான்‌. மற்‌ஜொருவன்‌ உணர்ச்சியின்றிப்‌ பேசுகிறான்‌. உணர்ச்சியோடு பேசுகின்றவன்‌ மற்றவர்களுடைய உள்ளத்திலும்‌ உணர்ச்‌சியை ஊட்ட வல்லவனாகின்றான்‌. உணர்ச்சியற்றுப்‌ பேசுகின்றவனுக்கு அது சாத்தியமாவதில்லை. உணர்ச்சி மிக மேலான நிலைக்குப்‌ போய்விட்டால்‌ நா குளற ஆரம்‌பித்து விடுகிறது; சொல்லே தெளிவற்றதாய்ப்‌ போய்‌விடுகிறது. எனினும்‌ உள்ளத்தை அவ்வுணர்வு ஆழ்ந்து பற்றிப்‌ பிடிக்கிறது. இறைவனுடைய திருநாமத்தை அத்‌தகைய பேருணர்வு நிலையிலிருந்து நா குளறிக்கொண்டு சொல்லுகின்ற இடத்து அது மிகப்‌ பெரிய போற்றுதல்‌ ஆகின்றது. மொழி தழுதழுத்திடல்‌ என்பது நா குளறுதலுக்கு அமைந்துள்ள மற்றொரு சொல்தொடர்‌. போற்றப்‌படும்‌ பொருளிடத்து ஒன்றுபடும்‌ நிலை வணங்குதல்‌ எனப்‌ பெயர்‌ பெறுகிறது. இக்கருத்தைச்‌ சங்கர சுயம்புவே சம்புவே எனவும்‌ மொழி தழுதழுத்திட வணங்கும்‌ என்று அவர்‌ இயம்புகின்றார்‌. 

சன்மார்க்க நெறியிலா துன்மார்க்கனேனையும்‌ 

மார்க்கம்‌, நெறி, ஆறு, பாதை, வழி ஆகிய “இவை யாவும்‌ ஒரே கருத்தை விளக்கும்‌ பல சொற்களாம்‌. ஓடுகின்ற நீர்ப்பெருக்கை ஆறு என்று சொல்லுகிறோம்‌. ஓர்‌ இடத்தில்‌ நின்றுவிட்டால்‌ அது ஆறு ஆகாது. இடம்‌ மாறி அது ஓயாது போய்க்கொண்டே இருக்க வேண்டும்‌… அப்பொழுது அது ஆறு என்னும்‌ பெயர்‌ பெறுகிறது. மனிதனும்‌ அந்த நீர்ப்‌ பெருக்குப்‌ போன்று ஓயாது போய்க்‌கொண்டே இருக்கிறான்‌. தான்‌ போய்க்கொண்டிருப்பது பெரிதும்‌ அவனுக்கு விளங்குவது இல்லவேயில்லை. ஓயாது போய்க்கொண்டிருக்கின்ற பூமி இருந்த இடத்திலே இருப்‌பது போன்று தென்படுகிறது, பூமி இடம்‌ மாறிப்‌ போய்க்‌ கொண்டிருந்தாலும்‌ நிலைமா றிப்‌. போய்விடுவதில்லை. மனிதன்‌ இருந்த இடத்திலே இருக்கலாம்‌. ஆனால்‌ அவன்‌ ஓயாது நிலைமாறிப்‌ போய்க்கொண்டிருக்கின்றான்‌. ஓடுகின்ற நீரோடை ஓட ஓட சுவறிப்‌ போய்விடுமானால்‌ ஒரு விதத்தில்‌ அந்த சுவறிப்போன நிலை அதற்கு துன்மார்க்கமாகிறது. ஓடுகின்ற ஓடை உயிர்களுக்கும்‌ பயிர்களுக்கும்‌ வளத்தை வழங்க ஓடுமானால்‌ நீரோடைக்கு அது சன்மார்க்கமாகிறது. நிலைமாறி அமைந்துகொண்டிருக்கிற மனிதன்‌ உயர்ந்தநிலைக்‌குப்‌ போய்க்கொண்டிருப்பானாகில்‌ அது சன்மார்க்க நெறி. சத்‌ பொருளை நோக்கிப்‌ போயிருப்பதென அது பொருள்‌படுகிறது. . கடவுள்‌ ஒருவரே சத்பொருள்‌. மெய்ப்பொருள்‌ என்பதும்‌ சத்பொருள்‌ என்பதும்‌ ஒன்றே, நிலைமாறிப்‌ போய்க்கொண்டிருக்கிற மனிதன்‌ பெருநிலையினின்று வழுவிச்‌ சிறுநிலைக்கு இறங்கிவிடுவதும்‌ உண்‌ டு. அப்படி இறங்குபவன்‌ துன்மார்க்கத்தில்‌ போகின்றவன்‌ ஆகின்றான்‌. முறையாகக்‌ கடவுளை வணங்குபவர்கள்‌ எல்லாம்‌ சன்மார்க்‌கத்தில்‌ போய்க்கொண்டிருக்கிறார்கள்‌, கடவுளை மறந்து கீழ்மையில்‌ புகுகின்றவர்கள்‌ எல்லாம்‌ துன்மார்க்கத்தில்‌ போகின்‌றவர்களாகிறார்கள்‌. இவ்விரண்டையும்‌ தெளிவுபட தாயுமானவர்‌ பிரித்துக்‌ காட்டுகிறார்‌. பிறகு தெய்வத்‌திடத்து தமது பணிவைத்‌ தெரிவித்தல்‌ பொருட்டும்‌, தீவிரமாகப்‌ பெருநெறியில்‌ போகவில்லை என்பதை விண்ணப்பித்தல்‌ பொருட்டும்‌ சன்மார்க்க நெறியிலா துன்மார்க்கனேனையும்‌ என்று முறையிடுகின்றார்‌. 

தண்ணருள்‌ கொடுத்து ஆள்வையோ

“மலையுச்சியிலிருந்து கீழே உருட்டப்பட்ட கல்‌ திரும்பவும்‌ உச்சிக்கு வந்துவிட முடியாது. கீழ்மைமை நோக்கியே அது உருண்டு போய்க்கொண்டிருக்கிறது. உயர்‌ நிலையினின்று தாழ்ந்த நிலைக்கு இறங்குகின்ற மனிதனுக்கு உய்வு இல்லையா என்னும்‌ கேள்வி வருகிறது. அப்படிக்‌ கீழ்மையடையும்‌ மனிதனுக்கும்‌ உய்வு உண்டு. அந்த உய்வுக்குக்‌ கடவுளுடைய அருளைப்பற்றிய உணர்வே உற்ற உபாயமாகிறது. சகோர பக்ஷி என்பது ஒன்று வானத்திலேயே வாழ்ந்திருக்கிறது என்னும்‌ ஐதிகம்‌ ஒன்று உண்டு. அது கீழ்கிலையில்‌ பூமிக்கு இறங்குவதில்லை. மிக உயரத்தில்‌ வானத்தில்‌ வாமும்‌ அது அங்கு முட்டையீடுகிறது. முட்டை பூமியின்‌ ஆகர்ஷண வேகத்தால்‌ கீழே விழுகிறது. அப்படி விழும்‌ வேகத்தில்‌ அது வெப்பம்பெற்று குஞ்ச உரு எடுத்து மேல்‌ ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவந்து விடுகிறது. பொரித்த பின்பும்‌ அது கீழே விழுந்துகொண்டிருக்கிறது, அப்படி விழுகின்‌றபொழுது அதற்கு ஓர்‌ உணர்வு வருகிறது. தனக்கு நிலையான இடம்‌ வானத்தில்‌ உயர இருக்கிறதென்‌றும்‌, கீழே தரையில்‌ தான்‌ இறங்கிவிடலாகாதென்றும்‌ அது மேல்‌ நோக்கிப்‌ பறந்து தன்‌ யதாஸ்தானமாகிய வானவெளியைப்‌ போய்ச்‌ சேர்ந்துவிடுகிறது. அது போன்று ஜீவர்களாக ஆன்மாக்கள்‌ மண்ணுலகுக்கு வந்திருப்பது இறங்கிய நிலை. கடவுளிடத்திருப்பது தங்களுக்குச்‌ சொந்தமான நிலை. கீழ்நிலைக்கு வந்துள்ள தாம்‌ இன்னும்‌ கீழ்மையில்‌ போகின்றோமே என்று உணர்ந்து கடவுளிடத்து விண்‌ணப்பிக்கின்றபொழுது அவருக்கு அருள்‌ சுரக்கின்றது. அந்த உயிரைக்‌ காக்கவேண்டும்‌ என்கிற கருணை அவருக்கு வந்துவிடுகிறது. எல்லாவிதமான இனிமையையும்‌ அமைதியையும்‌ தரவல்லது அந்த அருள்‌. தாகத்தை அடக்கவல்லது தண்ணீர்‌. இறைவன்பால்‌ உயிரை எடுத்துச்‌ செல்லவல்லது அந்த இறைவனுடைய தண்‌ அருள்‌. இறைவனுடைய அருளும்‌ உயிரினுடைய அருள்‌ நாட்டமும்‌ ஜன்று சேர்ந்து விட்டால்‌ சகோரபக்ஷியின்‌ குஞ்சு சகோர பக்ஷியிடத்தே போவது போன்று ஜீவாத்மன்‌ பரமாத்மாவிடம்‌ மேல்‌ நோக்‌கிப்‌ போக ஆரம்பித்து விடுகிறான்‌. அந்நிலையில்‌ அவன்‌  ஆட்கொள்ளப்‌ பெறுபவன்‌ ஆகின்றான்‌. சன்மார்க்கத்தின்‌ விளைவே அப்பொழுது அவனுக்கு வந்துவிடுகிறது. ஜீவாத்‌மாக்கள்‌ உய்வு அடைவதற்கு இது ஒன்றே உற்ற உபாயம்‌. இக்கோட்பாட்டை உணர்ந்துள்ள தாயுமானவர்‌ தண்ணருள்‌ கொடுத்து ஆள்வையோ என்று பரிந்து கேட்கின்றார்” என்று விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தா‌. 

முடிவுரை

ஒப்புயர்வற்ற கடவுளிடம் உள்ள பக்தி மிகவும் சக்தி வாய்ந்தது, அது மிகவும் வீழ்ச்சியடைந்தவர்களைக் கூட சீர்திருத்த முடியும். வேதங்களில், அஜாமிலன் மற்றும் வால்மீகி போன்றவர்களின் கதைகள் அனைத்து இந்திய மொழிகளிலும் பிரபலமாக உள்ளன. வால்மீகியின் அடாவடித்தனமான செயல்கள் மிகவும் அதிகமாக இருந்ததால், ராமரின் நாமத்தில் உள்ள இரண்டு எழுத்துக்களான ‘ரா … ம’ வை அவரால் உச்சரிக்க முடியவில்லை. அவருடைய பாவம் அவரை தெய்வீகப் பெயரை எடுப்பதைத் தடுத்தது. எனவே, மரா மரா மரா என்று திரும்பத் திரும்பச் சொன்னால் தானாக ராம ராம ராம என்ற சப்தத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘மரா’ என்று தலைகீழாகப் பாட வைப்பதன் மூலம் அவரை பக்தியில் ஈடுபடுத்த அவரது குரு நினைத்தார். இதன் விளைவாக, வால்மீகி போன்ற ஒரு ஆன்மா கூட அனன்ய பக்தியின் (பிரத்தியேக பக்தி) செயல்முறையால் சீர்திருத்தப்பட்டு ஒரு புராண துறவியாக மாறினார்.

அதர்மவனாக இருப்பவனும் என்னிடம் பக்தி செலுத்தினால், அவனை அதன் மாற்றி அமைக்கிறேன் என பகவத்கீதையில் (9.30) கண்ணன் அறிவுரைப்பது இதனையே.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Quote of the week

Either Lead, follow or get out of the way – Choice is yours

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading