பாடல் 

ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
அத்துவித வாஞ்சையாதல்
அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி
ஆகும்அறி வவிழஇன்பந்
தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோக
சாதனம் விடுத்ததெல்லாஞ்
சன்மார்க மல்லஇவை நிற்கஎன் மார்கங்கள்
சாராத பேரறிவதாய்
வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து
வாய்க்கும் படிக்குபாயாம்
வருவித் துவட்டாத பேரின்ப மானசுக
வாரியினை வாய்மடுத்துத்
தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்றுகாண்
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.  

யாரிடம் வேண்டுகிறார் தாயுமானவர்?

“சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயானந்த குருவே” என பரம்பொருளான ஆதி குருவிடம் வேண்டுகிறார். சிரகிரி என்னும் மலையில் ஞானத்தை வழங்கி மோக்ஷத்திற்குக் காரணமாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே, சின்மயானந்த வடிவமாக இருந்து, சின்மய வடிவம் நீ என்று சீடர்களுக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் குருநாதரே என்று அழைக்கிறார் தக்ஷிணா மூர்த்தியை.

வேண்டப்படுபவரின் இலக்கணங்கள் என்ன ? 

பொதுவாக ஏதாவது ஒன்றை நாம் மற்றவரிடமிருந்து பெற வேண்டுவதற்குமுன், வேண்டப்படுபவர் (வேண்டியதை தருபவர்),  வேண்டப்படும் பொருள்,  மற்றும் வேண்டுபவர், இம்மூன்றினையும் தெளிவாக அறிந்திட வேண்டும். தாயுமானவர் வேண்டப்படும் இறையின் இலக்கணங்களை, ஆழமான பொருள் பதிந்த சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். அவைகளை இப்போது காண்போம்.

1. சன் மார்க்கங்கள் சாராத பேரறிவு

மார்க்கம்‌ என்பதற்கு வழி அல்லது நெறி என்பது பொருள்‌. வழியில்‌ செல்லுகிறவன்‌ விரும்புகிற இடத்தை அடைகிறான். சேரும்‌ இடமே அவன்‌ கொண்டுள்ள குறி ஆகும்‌. நெறியைப்‌ பின்பற்றுபவன்‌ குறியை அடைகிறான்‌. பின்பு நெறியே குறியாய்‌ விடாது. அதாவது நடந்துகொண்டே இருப்பது வாழ்வின்‌ நோக்கமல்ல;  நாடிய இடத்தைப்‌ போய்ச்‌ சேருவதே நோக்கமாகும்‌, கடவுளை அடைவது பெருவாழ்வின்‌ நோக்கமாகும்‌.

சாக்தம், சைவம், வைஷ்ணவம், காணாபத்யம் போன்ற ஆறுவகை மதங்கள், கர்ம காண்டம், பக்தி காண்டம் போன்ற வழிகளைச் சாராது, அவைகளால் பாதிக்கப்படாமல், அவைகளைக் கடந்து,  அவைகளுக்கெல்லாம் உயிரை அளித்துவிளங்கச்செய்யும் பேரறிவாய் (ப்ரக்ஞாநம், பேருணர்வு, ஸுத்த சைதன்யம்) இருப்பதே இலக்கு.

அப்பேரறிவு வடிவினனாகிய பெம்மானுக்கு போக்கு இல்லை, வரவு இல்லை, புணர்வு இல்லை. நீக்கமற அவரே எங்கும்‌ நிறைந்துள்ளார்‌. எனவே பரம்பொருள்‌ அடைதற்குப்‌ பயணம்‌ போதல்‌ என்னும்‌ செயல்‌ புரியவேண்டியதில்லை. இருந்தபடி இருந்த இடத்தில்‌ இறைவனை உணரலாம்‌; அலை எங்ஙனம்‌ சர்வகாலமும்‌ கடலிலேயே இருக்‌கிறதோ அங்ஙனம்‌ ஜீவாத்மாவுக்கும்‌ பரமாத்மாவுக்கும்‌ பிரிக்கமுடியாத தொடர்வு இருந்து வருகிறது. அலையானது தன்‌ வடிவத்தைக்‌ கலைத்து விட்டால்‌ கடல்‌ மயமாய்‌ வீடுகிறது, ஜீவாத்மன்‌ தன்னுடைய ஜீவபோதத்தைக்‌ கலைத்துவிட்டால்‌ பரபோதம்‌ எஞ்சியிருக்கிறது. ஜீவனாக இருக்‌கின்ற பொழுதும்‌ ஜீவபோதத்தைக்‌ கலைத்தபொழுதும்‌ பரமாத்மாவுக்கு அன்னியமானவனாக ஜீவாத்மன்‌ எப்‌பொழுதாவது இருந்தது கிடையாது, இக்‌ கோட்‌பாட்டை அடிப்படையாகக்‌ கொண்டே ஜீவாத்மாவுக்‌கம்‌ பரமாத்மாவுக்கும்‌ உள்ள இணக்கத்தை அஸ்பர்ச யோகம்‌ என்று சாஸ்திரம்‌ இயம்புகிறது. சென்றடைய வேண்டிய புதிய தொடர்பல்ல அது; எப்போதும் இருந்த அபேத ஸ்வரூபமே அஸ்பர்ச யோகத்தின் கருத்து. சென்றடையாத இணக்கம்‌ என அது பொருள்படுகிறது.

பிறரைப்‌ பார்ப்பதற்கு நாம்‌ புறப்பட்டுப்‌ போகிறோம்‌; பேட்டிக்காகக்‌ காத்‌திருக்கிறோம்‌. தன்னைத்தானே உணர்தற்கு எங்கும்‌ போக வேண்டியதில்லை. வசதியான வேளை வரவேண்டுமென்று காத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. தன்‌ அறிவுக்கு அறிவாய்‌ இருக்கும்‌ பேரறிவின்கண்‌ தன்னைப்‌ பொருந்தப்பண்ணுதல்‌ அதை விட மிக எளியது ஆகிறது. அதாவது பரமாத்மா போதத்தைப்‌ பெறுவதை விட மிக எளியது ஜீவாத்மனுக்கு வேறு ஒன்றுமில்லை. அதற்குச்‌ சாதனங்கள் பல புரிதல்‌ என்பது உண்மையன்று. மனதைப்‌ பக்குவப்‌படுத்துதற்கே சாதனங்கள்‌ பல அமைந்துள்ளன. பரம்‌பொருளை அடைதல்‌ எண்ணிய மாத்திரத்தில்‌ நல்லறிவு படைத்தவனுக்குக்‌ கைகூடி விடுகிறது,

இக்கோட்பாட்டை இவை நிற்க என்‌ மார்க்கங்கள்‌ சாராத பேரறிவு‌ என்று தாயுமானவர்‌ இயம்புகின்றார்‌. . 

2. “வாக்கு மனம்‌ அணுகாத பூரணப்பொருள்‌”

“வாக்கு மனம்‌ அணுகாத பூரணப்பொருள்‌” எனத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

விதவிதமான நகைகள்‌ யாவும்‌ பொன்னால்‌ ஆனவை‌. பொன்‌ இன்னதென்று பகருமிடத்து நகைகளுக்கு மூலப்பொருள்‌ விளக்கம்‌ பெறுவதாகிறது. அதே பாங்கில்‌ பேரறிவாய்‌ இருக்கின்ற பெரிய பொருளே, பூரணப்பொருள்‌ என்று இயம்பப்படுகிறது. அப்படி இயம்புகின்ற இடத்து அதை உண்மையில்‌ நாம்‌ விளக்கி விட்டோமா என்னும்‌ கேள்வி எழுகிறது.

ஜீவர்களாகிய நமக்கு மூலகாரணமாய்‌ இருக்கும்‌ பூரணப்‌ பொருளை வாக்கால்‌ விளக்கவும்‌ முடியாது; மனதால்‌ கிரகிக்‌கவும்‌ முடியாது. எதையெல்லாம்‌ மனது கிரகிக்கிறதோ அது பிரபஞ்சத்தைச்‌ சார்ந்தது. மனது கிரகிக்கிற அறிவும்‌ ஆனந்தமும்‌ அந்த மனதோடு கலந்த ஆத்ம சொருபம்‌.

பாத்‌திரத்துக்குள்ளிருக்கும்‌ நீருக்கும்‌ அரிசிக்கும்‌ அடுப்பிலிருக்‌கும்‌ அக்கினியின்‌ உஷ்ணம்‌ எட்டுகிறது. அவ்‌வுஷ்ணத்தை ஏற்று நீரும்‌ அரிசியும்‌ கொதிக்கின்றன. கொதிக்கின்ற இவ்வஸ்துக்களின்‌ மூலம்‌ அக்னியின்‌ உஷ்ணத்தை ஒருவாறு நாம்‌ உணர்ந்து கொள்கிறோம்‌, உண்மையில்‌ அக்னி இந்த நீரோடும்‌ அரிசியோடும்‌ சம்பந்தப்படாத தனி பூதமாகிறது.

அதே விதத்தில்‌ பரமாத்மாவின்‌ பேரறிவு மனதோடு கலந்து. வருகிறபொழுது நாம்‌ படைத்துள்ள அறிவு ஆகிறது. அதை வாக்கால்‌ எடுத்து விளக்குகிறோம்‌, இந்த மனமும்‌ வாக்கும்‌, அற்ற நிலையிலேயே பூரணப்பொருள்‌ முற்றிலும்‌ தன்மயமாய்‌ இருக்கிறது. இந்த மனமும்‌ வாக்கும்‌ நமக்கு உற்றவைகளாக இருக்கின்றபொழுது இவைகள்‌ மூலம்‌ உணரப்படுகின்ற அறிவு மூல அறிவின்‌ தோற்றமேயாம்‌. மூல அறிவு யாண்டும்‌ வாக்கிற்கும்‌ மனதிற்கும்‌ எட்டாதது. இக்கோட்‌பாட்டை “வாக்கு மனம்‌ அணுகாத பூரணப்பொருள்‌” என்கின்றார்‌ தாயுமானவர்‌ என சுவாமி சித்பவானந்தர் விளக்குகிறார். 

தனக்குப் புறம்பாக இருக்கும் பொருட்களைத்தான் வாக்கும் மனமும் அறிய முடியுமே தவிர, தன்னை அறிய முடியாது.  மெய்ப்பொருள் அனைவருக்கும் ஆதாரமாக அனைவரின் உண்மை வடிவமாக இருக்கிறது. அபூர்ணமானதுதான் வாக்குக்கும் மனதிற்கும் எட்டும். பூர்ணமானது வாக்குக்கும் மனதிற்கும் எட்டாது. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாததால் அப்படி ஒரு பொருள் இல்லை என்றும் சொல்ல முடியாது. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமல் அதே சமயம் வாக்கையும் மனதையும் ஒளிர்வித்துக்கொண்டு ஒரு பொருள் இருக்கத்தான் செய்கிறது. கொதிக்கும் நீர், அதனில் வேகும் அரிசி இவை கொண்டு, இவை இரண்டிற்குமே உறவு இல்லாத நெருப்பின் சூட்டை அறிவது போல, பேரறிவே வடிவான அந்த பூரணமான தூய உணர்வினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

எல்லாவற்றையும் அறியும் பொருளை எந்தப் பொருளைக் கொண்டும் அறியமுடியாது. சூரியனின் துணை கொண்டு எல்லாப் பொருளையும் அறிகிறோம். சூரியனை எதைக்கொண்டு அறிகிறோம். அது தானே விளங்குகிறது. விளக்கு எல்லாப்பொருட்களையும் விளக்குகிறது. தன்னைத்தானே விளக்கிக்கொள்கிறது.  அதுபோல பரம்பொருள், எல்லாவற்றையும் விளக்குகிறது, தன்னைத்தானே விளக்கிக்கொள்கிறது. விளங்குவதை வைத்து, விளக்கும் பொருளை அறிய வேண்டும்.

என்ன வேண்டுகிறார் தாயுமானவர்?

“நீ முன் நிற்பது என்று காண்?” என்பதே வேண்டுதல். எனக்கு எப்போது உன் காட்சி கிட்டும் என்ற நேரடிப் பொருளுக்குள் உறைந்திருக்கும் கருப்பொருளை இப்போது ஆய்வோம்.

நடுக்கடலில் கப்பலில் போகும் போது கரை எப்போது வருமோ என்று ஏங்கிடும் பயணிகளுக்கு எங்கு பார்த்தாலும் கரை இருப்பது போலத் தோன்றும். ஆனால் நெருங்கிப் போனால் அது கரையாக இருக்காது. அது ஒரு ப்ரமை. உண்மையில் கரை இருப்பதில்லை.  அதுபோலத்தான் கடவுள் கடவுள் கண்முன் தோன்றுவார் என்பது. கடவுள் ப்ரத்யக்ஷம் ஆவார் என்பது அவரவருடைய தனிப்பட்ட நம்பிக்கை. ஸாஸ்த்ரத்தில் பலமான ப்ரமாணம் கிடையாது.

நீ முன் நிற்பது என்று காண்? என்றால், அறிவே வடிவாகிய நீ எனக்கு என்றைக்குத் தெள்ளத்தெளிவாக விளங்கப்போகிறாய்? அது எப்பொழுது என்னிடத்திலே நிலைத்திருக்கப்போகிறது? என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.  நம்முடைய கனவுலகம்போல, இதுபோன்ற விஷயங்கள் அவரவர்க்கு மட்டுமே உண்மையானது. வ்யாக்யானத்தில், நான்கு புஜங்கள், மூன்று கண்களுடன் தோன்றும் ஸிவபெருமானையே சொல்கிறார்கள்.  இங்கு புரிந்துகொள்ளவேண்டிய பொருள், எனக்கு ஞானமும், ஞானத்திலே தெளிவும், ஆழ்ந்த நிலைத்த தன்மையும் தேவை என்பதே.

“ஞானம் என்பது  பரமார்த்த வஸ்துவைப் பற்றிய ஞானம்; மற்றவை எல்லாம் அஞ்ஞானம்தான். அறியப்பட வேண்டியதை நான் இப்பொழுது உனக்கு வெளிப்படுத்துகிறேன், மேலும் இதை அறிவதன் மூலம் ஒருவர் அழியாத நிலையை அடைகிறார். இது இருப்புக்கும் இல்லாததற்கும் அப்பாற்பட்ட ஆரம்பமற்ற ப்ரஹ்மம்” 

என்ற பகவத் கீதையில் (13.12,13) கண்ணனின் அறிவுரை, மனிதனுக்கு வாழ்க்கையில் தலையாய தேவை மெய்யறிவு எனும் ஆத்ம ஞானமே என்பதை வலியுறுத்துகிறது.

மேலும், “ஒளிவளர் விளக்கே, உலப்பிலா ஒன்றே, உணர்வுசூழ் கடந்தோர் உணர்வே”  என திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பாவும், ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு முக்கிய மகாவாக்கியங்களில் ஒன்றான “பிரக்ஞானம் பிரம்ம” (Prajnanam Brahma) –  “தூய அறிவே/உணர்வே பிரம்மன்” (Consciousness is Brahman) என்பதும், இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பரம்பொருள், நம்முள் இருக்கும் அறிவாற்றலே என்பதை உணர்த்துகிறது. 

என்றைக்கு “அறுதி உண்மை” எனும் இந்த ஞானம் பெற்று அதில் நிலைத்து நிற்கப்போகிறேன் யான் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அத்தகையவர்களுடைய நிலையில் தன்னை வைத்துப் பாடுகிறார் தாயுமானவர்.

இங்கே ஞானம் என்பது ஆத்ம ஞானம், மெய்யறிவு என்பதாகும். அதாவது இறையைப்பற்றிய உண்மையும் என்னைப்பற்றிய உண்மையையும் என்று முற்றிலும் உண்மையாக உணர்ந்து, அதில் நிலைத்து நிற்கப் போகிறேன் என்பவரின் நிலையை பிரதிபலிக்கும் வண்ணம் “நீ முன் நிற்பது என்று காண்? “ என குருவிடம் தான் பணிந்து வேண்டுகிறார் தாயுமானவர் என்று விளக்குகிறார் சுவாமி ஓம்காரானந்தா.

வேண்டப்படுபவர் கிட்டுவாரா?

“வாக்கு மனம்‌ அணுகாத பூரணப்பொருள்‌” என்கிறாரே தாயுமானவர்; அத்தகையவரிடத்தில் “நீ முன் நிற்பது என்று காண்?” என வேண்டுதல் முறையோ? அத்தகையவர் கிட்டுவாரா? என்றெல்லாம் கேள்வி எழும். அதற்கு பதிலாகத்தான் “வந்து வாய்த்தல்”‌ எனும்‌ கோட்பாட்டினை பெயரளவிலே வைத்து அச்சொல்லின்மூலம் அதன் உட்கருத்தை வெளியிடுகிறார் தாயுமானவர் என கருப்பொருளை விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தா. அவரின் அருளுரையை அறிய முயல்வோம்.

மனம்‌ ஒடுங்கிய விடத்துப்‌ பூரணப்பொருள்‌ உள்ளபடி இருக்கிறது. அந்த முழு உணர்வு, மனதற்ற நிலையாகி‌ விடுவதால்,‌ மனம்‌ அற்றுப்‌ போவதற்குப்‌ “பரபோதம்‌ வந்து வாய்த்‌தல்‌” என்ற மொழியின்‌ மூலம்‌ பகரப்படுகிறது. இப்படிப்‌ பரபோதம்‌ வந்து வாய்ப்பதற்கு எடுத்துக்கொள்ள வேண்‌டிய உபாயம்‌ யாது என்னும்‌ கேள்வி அடுத்து வருகிறது. சாதனங்கள்‌ பல புரிந்து மனதைத்‌ தூயதாக்குகின்றோம்‌. தூய மனது ஒடுங்கிப்போய்‌ மனதற்ற நிலையாய்‌ மாறிவிடுவது மிக எளிது. ஆக, ஆத்மசாதகர்கள்‌ கையாளும்‌ சாதனங்கள்‌ அனைத்தும்‌ மனதை மாய்த்து விடுதற்‌பொருட்டே.

மனது ஒடுங்கியும்‌ ஒடுங்காதும்‌ இருக்கின்ற நிலை ஒன்று உண்டு. அதை ஒரு உபமானத்தைக்கொண்டு வீளக்கலாம்‌. தூய மனது சுத்தமான கண்ணாடியைப்‌ போன்றது. சுத்தமான கண்ணாடியின்‌ வாயிலாக அப்புறம்‌ இருக்கிற பொருளை உள்ளபடி காணமுடியும்‌, கண்ணாடியின்மீது தூசி படிந்து விட்டால்‌ அப்பால்‌ உள்ள பொருளை உள்ளபடி காண முடியாது. கண்ணாடியை உடைத்தெறிந்துவிட்டால்‌ அப்பால்‌ உள்ள வெட்ட வெளி தன்மயமாய்‌ எஞ்சியிருக்கிறது.

அதுபோல, ஜீவன்‌ ஒருவன்,‌ தன்‌ மனதை அறவே ஒடுக்கிவிட்டால்,‌ அலையும்‌ கடலும்‌ ஒன்றாவது போன்று, ஜீவனும்‌ பரமாத்மாவும்‌ யாண்டும்‌ உள்ளபடி ஒன்றாய்‌ விடுகின்றன. அப்படி மனது அற்றுப்போன தறுவாயில்‌ அந்தத்‌ தூய மனதைக் கொண்டே அனுபவிக்‌கின்ற இன்பத்துக்குத்‌ தெவிட்டாத பேரின்பம்‌ என்று  பெயர்‌.

தாகத்தில்‌ தவித்திருப்பவனுக்கு, நல்ல நீர்‌ கைக்கு அகப்படுகின்றபொழுது, அதை அவன்‌ எடுத்துப்‌ பருகுகின்றபொழுது, தாக சாந்தியையும்‌ திருப்தியையும்‌ ‌ அனுபவிப்பது போன்றது அந்த பேரின்பம். ‌

ஆத்ம சாதகனோ பரம்பொருளில்‌ கலந்‌திருத்தல்‌ என்னும்‌ நாட்டம்‌ கொண்டவனாய்‌ இருக்கிறான்‌. நல்ல மனம்‌ அடையப்பெற்றான பிறகு அப்‌பரம்பொருள்‌ முற்‌திலும்‌ தனக்குரியது, தான்‌ அப்‌ பரம்பொருளுக்கு உரியவன்‌ என்பதை நன்கு அறிந்துகொள்கின்றான்‌. பரம்பொருளே தன்‌ உயிர்க்குயிராய்‌ உள்ளிருப்பதையும்‌ காண்‌கின்றான்‌. இதற்காகத்தான்‌ பல பிறவிகளில்‌ அவன்‌ சாதனங்கள்‌ புரிந்து வந்திருக்கின்றான்‌. இப்பொழுது சாதனம்‌ சாத்தியமாய்க் கொண்டு வருகிறபொழுது பேரின்ப அனுபவம்‌ தானாக முன்வந்து நிற்கிறது. அது முன்வந்து நிற்‌கின்றதனை “வந்து வாய்த்தல்” என்கிறார் தாயுமானவர்.

உவட்டாத பேரின்‌பம்‌ என்பது தெவிட்டிப்‌ போகாத பரமானந்தம்‌ எனப்‌ பொருள்படுகிறது, பஞ்சேந்திரியங்களுக்கு் விஷயமாகின்‌ற  இன்பங்கள்‌ தெவிட்டிப்‌ போய்விடுகின்றன. இந்திரியங்களுக்கும்‌ மனதுக்கும்‌ அப்பால்‌ இருக்கின்ற பேரின்பமோ தெவிட்டாதது. சுகவாரி என்பது இன்பத்தை விளைவிக்கும்‌ நன்னீர்‌ எனப்‌ பொருள்படுகிறது. வாய்‌ மடுத்தல்‌ என்றால்‌ வாயில்‌ வைத்து அருந்த ஆரம்பிப்பது எனப்‌ பொருள்படுகிறது. தேக்கித்‌ திளைத்தல்‌ என்பது நிறைய அனுபவித்தல்‌ எனப்‌ பொருள்படுகிறது. சித்தம்‌ என்பது மனம்‌ புத்தி ஆகிய அந்தக்கரணத்துக்கு அமைந்துள்ள மற்றொரு பெயர்‌ ஆகும்‌, சித்தத்தின்‌ அந்தம்‌ சித்தாந்தம்‌. அது மனதற்ற ஒடுங்கிய நிலை; அதனின்று விடுதலையடைதலே உண்மையான முக்தி, மனிதனைப்‌ பந்தப்படுத்தியது மனது.  அம்மனதை அகற்றிவிடுகிற படம்பிடித்துக்‌ காட்டியிருக்கிறார்‌. 

வேண்டுபவரின் நிலை என்ன?

வேண்டுதல், வேண்டாமை இலாத சிரகிரி விளங்கவரு சின்மயானந்த குருவான தக்ஷிணா மூர்த்தியிடம், என் முன்னே தோன்றி எப்போது அருள்புரியப் போகிறீர்கள்? எப்போது இந்த ஞானமும் தெளிவும் எனக்கு உண்டாகப்போகிறது? என்று வேண்டிடும் தாயுமானவர், இத்தனை நாட்கள் தான் எப்படி இருந்தேன் என்பதைச் சொல்கிறார். 

தன்னை “ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது நிலையை விளக்குகிறார். இந்த உடலை சத்யம் என்று நினைத்து காப்பாற்றிக்கொண்டு வரும் எனக்கு எப்படி ஞாநம் விளங்கப்போகிறது? எப்படி அந்தப் பேரானந்தம் கிடைக்கப்போகிறது? என்று கேட்கிறார் தாயுமானவர்.  பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டது யாக்கை என்றும் சொல்வதுண்டு. “ஐந்து வகையாகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற ஆக்கை, நீர்மேல் அமர்கின்ற குமிழியென நிற்கின்ற” என்று இனிவரும் ஐந்தாவது பாடலில் கூறுகிறார் தாயுமானவர்.

ஆற்றங்கரை ஓரத்தில் மணல்களால் ஆன கரை, நீர் பெருகும்போது இடிந்து போவது போல போகும் உடலை உண்மை என்று நினைக்கும் பாவியாக உள்ளேன் என்கிறார் தாயுமானவர். துன்பம் அதிகமானால், இந்த உடலை விட்டுப்போக சிலர் விரும்புகிறார்கள். சிலர் சௌகரியமாக இருந்தால் போக விரும்பாமல் இருக்கிறார்கள்.  இந்த உடல் நாம்தான் என்று நினைத்து பொன்னெனக் காப்பாற்றுகிறோம். சத்யம் என்று நினைக்கிறோம். திட்டங்கள் போடுகிறோம். நிலையிலா உடலின்மீதுஅபிமானம் அதிகமாக உள்ளது. “பொய்யெல்லாம் மெய்யாக பொருத்தி வைத்த பொய்யுடலை மெய்யென்றால் மெய்யாய்விடுமோ பராபரமே” என்கிறார் தாயுமானவர், பராபரக்கண்ணியில். இங்கே “மெய்” என்பது உபசார வழக்கு. உடல் மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்கு சாதனமாக இருப்பதால் உபசாரமாக மெய் என்று சொல்கிறார்கள். ஆனால் இது மெய் அல்ல. எல்லாப்பொய்யும் சேர்ந்தது இது.  இறையருளும், புண்ணியமும் இருந்தால், சரீரம் நாம் இல்லை என்பது புரியும். எனவே மரணத்திற்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். எப்போது மரணம் வரும் என்பது தெரியாது என்பமைக் கருப்பொருளாக வைத்தது இந்த “ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி” என்ற சொல்.

அத்துவித வாஞ்சையாதல் அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி ஆகும்” என்று அடுத்து தனது நிலையைக் கூறுகிறார். தேகத்தையே ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு அத்வைத தத்துவத்தைத் தெரிந்துகொள்ள நினைப்பது, அரியகொம்பில் தேனை முடவனிச் சித்தபடி ஆகும்.

இன்னும்‌ தேக உணர்வில்‌ ஊன்றியிருப்பவனுக்கு த்வைத அனுஷ்டானமே முற்றிலும்‌ பொருத்தமானது. தேக உணர்வைத்‌ தாண்டும்‌ தறுவாயில்‌ இருப்பவனுக்கு விசிஷ்டாத்வைத அனுஷ்டானம்‌ பொருந்தும்‌. தேகாத்ம புத்தி அல்லது தேகத்தைத்‌ தான்‌ என்று கருதுகின்ற உணர்ச்சி அத்வைத அனுஷ்டானத்துக்குச்‌ சிறிதும்‌ ஒவ்வாது. ஆதி சங்கரர்‌ போன்றவர்கள்‌ சின்னஞ்சிறு வயதிலிருந்தே உடல்‌ உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில்‌ இருந்தார்கள்‌. அத்‌வைத அனுஷ்டானத்துக்கு அத்தகையவர்களே தகுதியுடையவர்கள்‌ ஆகின்றார்கள்‌. அதற்கு மாறாக உடல்‌ உணர்வில்‌ அழுந்திக்‌ கிடக்கின்ற சாதகன்‌ ஒருவன்‌ அத்வைத வேதாந்தத்தை அனுஷ்டிக்க முயன்றால்‌ அதனால்‌ அவன்‌ சிறிதேனும்‌ முன்னேற்றம்‌ அடைய முடியாது. “அத்வைத வாக்கியங்களை மனப்பக்குவமின்றி தவறாகப் புரிந்துகொள்வது ஆன்மிக அலட்சியத்திற்கோ அஹங்காரத்திற்கோ வழிவகுக்கலாம்.

கையில்லாதவன்‌ முடவன்‌. மரம்‌ ஏறுவதற்கு கைகால்‌ ஆகிய இரண்டு வித உறுப்புகளும்‌ இன்றியமையாதவைகள்‌. மரக்கொம்பிலிருக்கும்‌ தேனை எடுக்க முயலுகின்றவனுக்கு திடகாத்திரம்‌ வேண்டும்‌. முடவன்‌ ஒருவன்‌ அதைப்பெற வாஞ்சை கொள்வானாகில்‌ அது பொருளற்ற ஆசையாய்‌ விடுகிறது.

இக்கோட்பாட்டை அத்துவித வாஞ்சையாதல்‌ அரிய கொம்பில்‌ தேனை முடவன்‌ இச்சித்தபடி ஆகும்‌ என்று அவர்‌ இயம்புகின்றார்‌.  எங்கேயோ ஒரு உச்சாணிக்கொம்பில் கட்டியுள்ள தேன் கூட்டிலுள்ள தேனை ஒரு முடவன் சாப்பிடவேண்டும் என்று நினைத்தால் எப்படியோ அப்படியே என்று சொல்கிறார். 

தேஹாத்ம புத்தியுள்ள நான் நிலையில்லாத இந்த தேஹத்தில் ஆத்ம புத்தியைப் பிடித்துவைத்துக் கொண்டிருக்கும் எனக்கு, தேஹத்திற்கு அதீதமான அத்வைத ஆத்ம ஞானத்தைப் பெற விரும்புகின்ற தன்மையானது முடன் அரிய கொம்பில் தேனை இச்சித்ததுபோல இருக்கிறது. சரீரத்தின்மீது அபிமானம் உள்ளது. அபிமானத்தைக் கடந்த நிரபிமான மெய்ப்பொருளை தெரிந்துகொள்வது என்பது நடக்கும் காரியமாகத் தோன்றவில்லை. என்றாலும், பிரார்த்தனை செய்கிறேன் என்கிறார்.  

தாயுமானவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

“அறி வவிழஇன்பந்தாக்கும்வகை யேதி” 

அறிவு அவிழ்தல்‌ என்னும்‌ செயலை இரண்டுவித வடிவங்களில் புரிந்துகொள்ளலாம் என்னு சுவாமி சித்பவானந்தர் விளக்குகிறார்.

  • கட்டுகளைத்‌ தளர்த்தி வீடுதற்கு அவிழ்த்தல் என்ற பொருளில் ‌ 
  • அவிழ்தல்‌ என்னும்‌ சொல்லுக்கு இளகுதல்‌ என்ற பொருளில்‌
  1. நமது அறிவு ஒரு விதத்தில்‌ நம்மைக்‌ கட்டிப்‌ பிடித்திருக்கிறது, உடலை “நாம்‌” என்று ‌ எண்ணி வருகிறோம்‌, இப்படி எண்ணுதற்கு அறிவு வேண்டியவாறு இடம்‌ தருகிறது, தளைகளில்‌ மிகக்‌ கொடிய தளை தன்னைத்‌ தேகம்‌ என்று எண்ணிக்கொள்வது. இத்தளைகளினின்‌று விடுதலையடைவதே நமது குறிக்கோள்‌. வானத்தினின்று மழையெனப் பெய்த தூய நீர், ‌ தரையில்‌ வந்து விழுகின்றவுடன்‌ ஒவ்வோர்‌ இடத்திலும்‌ ஒரு புதிய உபாதியைப்‌ பெற்றுவிடுகிறது ஆற்றுநீர்‌, சேற்றுநீர்‌, கிணற்றுநீர்‌, கடல்‌ நீர்‌, சாக்கடை நீர்‌ இப்படியெல்லாம்‌ இடபேதத்தை முன்னிட்டு அதற்கு பெயர்கள்‌ வந்துவீடுகின்‌றன. திரும்பவும்‌ அதைத்‌ தூயநீர்‌ ஆக்குதற்கு அதை உருக்கி ஆவியாக மாற்றி, திரும்பவும்‌ நீராக உறையச்‌ செய்தால்,‌ அனைத்து உபாதிகளினின்று அந்த நீர்‌ விடுதலையடைந்து நன்னீர்‌ ஆகிறது.  அதுபோல, தளைகளால் வரையறுக்கப்பட்ட “நாம்” நம்மை உபாதிகளிலிருந்து விடுவித்துக்கொள்வது அறிவு அவிழ்தலாகும்.
  2. அவிழ்தல்‌ என்னும்‌ சொல்லுக்கு இளகுதல்‌ என்ற பொருள்‌ ஒன்று உண்டு.  ஆத்ம சாதகனுடைய அறிவு பெரிதும்‌ இளக வேண்டும்‌. இளகிய பின்பு அதைப்‌ பிடித்துள்ள பொருளற்ற பல எண்ணங்‌களை அவ்‌அறிவினின்று போக்கிவிடலாம்‌. பூமியில்‌ படிந்து கெட்டுப்போயிருந்த நீர்‌ நன்னீர்‌ ஆவது போன்று, அறிவு இளகி தூய அறிவாகும்போது, ‌ அது ஆனந்த சொருபமாகவும்‌ மாறிவிடுகிறது, அழுக்குப்படிந்த அறிவு துன்பத்தை வருவித்துக்‌கொள்கிறது. தூய அறிவு ஆனந்த சொருபமாக இலங்குகிறது. 

ஆக, அறிவைத்‌ தூய அறிவாகத்‌ துலக்குதலே ஆத்ம சாதனமாகிறது. அதற்கு உற்ற உபாயங்கள்‌ பல இருக்கின்‌றன. வெவ்வேறு வகைப்பட்ட நீர்கள், நன்னீர்‌ ஆகுவதற்கு  வெவ்வேறு உபாயங்கள்‌ இருக்கின்றன. இதேபோல், மெய்யறிவு தெளிவாக விளங்கி (அறிவு அவிழ) ப்ரஹ்ம ஞான ஆனந்தத்திலேயே நிலைத்திருக்க (இன்பம் காக்கும் வகை), எந்தச்‌ சாதகனுக்கு எந்த உபாயம்‌ முற்றிலும்‌ பொருத்தமானது என்பதை அவன்‌ அறிந்துகொள்ளவேண்டும்‌.  மனிதனுடைய அறிவைத்‌ தாக்கியிருக்கும்‌ விதவிதமான உபாதிகளை அகற்றுவதைக்‌ குறித்து “அறிவு அவிழ இன்பம்‌ தாக்கும்‌ வகை ஏது” என்று தாயுமானவர்‌ வினவுகின்றார்‌. 

சரியைகிரி யாயோக சாதனம் விடுத்ததெல்லாஞ்சன்மார்க மல்லஇவை நிற்க

ஆத்ம சாதனங்கள்‌ எவை என்பதைக்‌ குறித்துச்‌ சான்‌ரோர்கள்‌ ஏற்கனவே பாகுபடுத்தி வைத்துள்ளார்கள்‌. வெவ்வேறு சரியை, கிரியை, யோகம், ஞாநம் என்ற ஆகமங்களில் சொல்லப்பட்ட சாதனங்கள்‌ இருக்கின்றன. அவைகளை‌ செய்தும்,‌ சாதகர்களில்‌ பலர்,  ஆன்மீக‌ முன்னேற்றமடையாது பழைய கீழ்நிலையிலேயே நின்று விடுகின்றனர்‌. அதற்குக்‌ காரணம்‌ யாது என்பதை ஆராய்ந்து பார்த்தால்‌ உண்மை விளங்கும்‌. ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். 

“ஆலயம்‌ தொழுவது சாலவும்‌ நன்று” என்னும்‌ கோட்பாடு பிறந்துள்ளது. எனினும்‌ தொழுவதற்கு ஆலயம்‌ செல்பவர்களில்‌ சிலர்,‌ சாதனத்‌தில்‌ முன்னேற்றம்‌ அடைவதற்கு மாறாக, பிற்போக்கில்‌ போய்வீடுகின்றனர்‌. வழிபாட்டின்‌ மூலமாக அறிவைப்‌ பண்படுத்துதற்குப்‌ பதிலாக இவர்‌ எளிதில்‌ இகலோக வாய்ப்புக்களைப்‌ பெற்றுவிட இறைவனுடைய துணையை நாடுகின்றனர்‌. தாங்கள்‌ எதற்குத்‌ தகுதியற்றவர்களாய்‌ இருக்கின்றார்களோ அதைத்‌ தங்களுக்குத்‌ தந்தருளும்படி இறைவனிடம்‌ வேண்டுகின்றனர்‌. இத்தகைய வேண்டுதலால்‌ அறிவு மேலும்‌ மழுங்கிவிடுகிறது; பந்தபாசம்‌ அதிகரிக்கிறது. ஓயாது ஆலய வழிபாடே செய்துகொண்டிருக்கும்‌ அர்ச்சகர்களில்‌ பலர்‌ மனநிலையில்‌ மிகமிகக்‌ கீழ்மையுற்றிருப்பதைக்‌ காணலாம்‌. வழிபாட்டை வெறும்‌ ஜீவனோபாயத்துக்காகவென்று முறைதவறிக்‌ கையாண்டதே அவர்கள்‌ அடைந்த கீழ்மைக்குக்‌ காரணமாகும்‌.

சரியை, கிரியை, யோகம்‌, ஞானம்‌ ஆகிய நான்கும்‌ மேலோர்களால்‌ அங்கீகரிக்கப்பட்டுள்ள நல்ல ஆத்ம சாதனங்களாகும்‌, நல்‌லொழுக்கமே வடிவெடுத்திருப்பது சரியையாகும்‌, நல்ல  ஆசாரம்‌ சரியையில்‌ அடங்குகிறது. ஒருவன்‌ நித்தமும்‌ நீராடி நெற்றியில்‌ ஏதோ அணிந்து அங்கீகரிக்கப்பட்டுள்ள  சில அனுஷ்டானங்களை  யந்திரம்‌ போன்று ஒழுங்காகச்‌ செய்து வருகின்றான்‌. அதற்கிடையில்‌ அப்படி அவ்‌வனுஷ்‌டானங்களைச்‌ செய்யாதவர்களைவிட  தான்‌ மிக மேலானவன்‌ என்று அவன்‌ அகங்கரித்துக்‌ கொள்கின்றான்‌; எனவே சரியை என்னும்‌ ஆத்ம சாதனத்தில்‌ அவன்‌ நலன்‌ ஒன்றும்‌ அடைந்தவன்‌ அல்லன்‌. ஆண்டவனுக்கும்‌. ஆருயிர்களுக்கும்‌ பணிவிடை பண்ணுவது கிரியை. அதைப்‌ பணிவுடன்‌ பண்ணவேண்‌டும்‌; சிலர்‌ தற்பெருமைக்காக என்று கிரியை புரிகின்றனர்‌.அத்தகையவர்க்கு அந்தச்‌ சாதனம்‌ நலன்‌ ஒன்றும்‌ செய்வதில்லை. யோகம்‌ இறைவனை அடைவுதற்கு உற்ற உபாயம்‌. பின்பு யோக சாதனங்கள்‌ சில சித்தியை உண்டுபண்ணுகின்‌றன்; சித்தியில்‌ மயங்கிவிடுகின்றவர்கள்‌ இறைவனுடைய அருளுக்குப்‌ புறம்பாய்விடுகின்றனர்‌. அறிவு ஆனது, முறையாக அவிழ்ர்‌ந்து போகாததே அதற்குக்‌ காரணமாகும்‌.

இறைவன்பால்‌ இந்தச்‌ சாதனங்கள்‌ மனிதனை எடுத்துச்‌ செல்லுவதால்‌ இவைகளுக்குச்‌ சன்மார்க்கம்‌ என்றுபெயர்‌ வந்துள்ளது. கடவுள்‌ சத்பொருள்‌. மெய்ப்பொருள்‌ என்பது அதன்‌ விளக்கம்‌, சத்பொருளிடத்து எடுத்துச்‌ செல்லும்‌ வழிக்கு.  சன்மார்க்கம்‌ என்னும்‌ பெயர்‌ வந்துள்ளது. விவேகத்‌தோடும்‌, பக்தியோடும்‌, பணிவோடும்‌ கூடிய நெறிமுறையோடு செய்யாத சாதனம்‌ நெடுநாளாக நடைபெற்றுக்‌ கொண்டிருந்தாலும்‌ அது நிஷ்பிரயோஜனமாய்ப்‌ போய்விடுகிறது. இக்கோட்பாட்டை நாள்‌ சரியை கிரியா யோக.: சாதனம்‌ விடுத்ததெல்லாம்‌ சன்மார்க்கமல்ல என்று நெறி வழுவிய சாதனங்களைத்‌ தாயுமானவர்‌ விமர்சனம்‌ செய்‌கின்றார்‌. 

முடிவுரை 

தாயுமானவரின் இப்பாடலில் 

• படிப்படியாகத்தான் சாதனைகளைச் செய்யவேண்டும் .

• ஞானத்தைப் பெற்று சரீரத்திலே ஆத்ம புத்தியை விடுவதற்குப் பழகவேண்டும்.

•அந்த ஞானத்திலேயே நிலைத்திருக்கவேண்டும் 

என்ற அறிவுரை அடங்கி இருக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற ஆன்மிக படிகள் அரும்பு, மலர், காய், கனி என்பனவற்றுடன் முறையே ஒப்பிடப்பட்டுள்ளது. எப்படி ஒரு பழம் அரும்பாக மலர்ந்து, காயாக மாறி, கனியாக கனிந்துள்ளதோ அப்படி, ஒரு ஆன்மிக ஸாதகன், சிவ ஆகமங்களில் சொல்லப்பட்டப்படி, சரியை, கிரியை, யோகம் ஞானம், என்பதைப் படிப்படியாக நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பேரின்பத்தின் தன்மையை வர்ணித்துள்ளார். சிறிய இன்பம் என்பது பொறிகளால் நுகரப்படுவது. பேரின்பம் என்பது மனதால் அநுபவிக்கப்படுவது அல்ல. அறிவினால் அறிந்துகொள்ளப்படுவது. இதனை “விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனிபோல் அன்றோ பராபரமே” என்று பராபரக்கண்ணியில் கூறுகிறார் தாயுமானவர்.

போதும் என்று நிறுத்தத் தோன்றாத (உவட்டாத ) பேரின்பமான ஆனந்தக் கடலான (சுக வாரி) அந்த பேரறிவே வடிவான அந்த பூரணமான தூய உணர்வினை (ஞானத்தை) உபதேசம் செய்து (வாய்மடுத்து), அந்த இன்பத்தையே தேக்கி அநுபவித்து, குறைவில்லாத ஆனந்ததில் திளைத்திருக்கவேண்டும். அதனால் கிடைப்பது பரிபூர்ண ஆனந்தம்; பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தம். அதற்கு நீங்கள் அருள் புரிவது எப்போது?  நீங்கள் முன்னே தோன்றி எப்போது அருள்புரியப் போகிறீர்கள்? அதாவது எப்போது இந்த ஞானமும் தெளிவும் எனக்கு உண்டாகப்போகிறது என்று வினவுகிற வகையில் தனது வேண்டுதலை பணிவுடன் பதிவு செய்கிறார் தாயுமானவர்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

2 responses to “சின்மயானந்த குரு – பாடல் 2”

  1. UTHA KUMAR Avatar
    UTHA KUMAR

    pranams.i look forward for many like this to understand&know the parabra brahman. Thank you

  2. Ganesh Avatar

    Nice one!

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading