
இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது (Amazon Kindle Edition)
முகவுரை
தாயுமானவர், இப்பாடலில் ஆன்மிக வாழ்க்கையில் சாதகன் ஒருவன் அடையவேண்டிய நிலையைக் குறிப்பிடுகிறார். அடைய விரும்புபவன், அடையப்படும் பொருள், அதற்கான முயற்சி இவை அனைத்தும் முற்றிலும் நீங்கிய நிலையை அடைவதே நம்முடைய குறிக்கோள். வாழ்நாள் முழுவதும் சாதனம் செய்துகொண்டே இருப்பது நம்முடைய நோக்கம் அல்ல. மஹான்கள் சாதனை புரிவது மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கே. அவர்களுக்கு எதுவும் அடையவேண்டிய அவசியம் இல்லை.
இருமைகள் அற்ற நிலையை அடைய வேண்டும் என்பது இருமைகள் அற்ற நிலையை அறிந்துகொள்வது என்பதே என ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.
பெரும்பாலான வழிமுறைகள், மோக்ஷம் என்பது அடையப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இறைவனை அறிந்து அவனிடம் பக்தி செலுத்தினால் மோக்ஷத்தை அடைவோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆதிசங்கரர், இதற்கு மாற்றாக ஸ்ருதி, யுக்தி அனுபவங்கள் வாயிலாக மோக்ஷம் என்பது அடையப்படுவது அல்ல. அறிந்துகொள்ளப்படுவது என்று நிரூபிக்கிறார்.
அப்படி அறிந்து கொள்ள பரம்பொருளின் சொருபத்தை பல பொருள்மிகு சொற்களால் எடுத்துரைக்கின்றார் தாயுமானவர்.
பாடல்
கூடுத லுடன்பிரி தல்அற்றுநிர்த் தொந்தமாய்க்
குவிதலுடன் விரிதலற்றுக்
குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான
குறியற்று மலமுமற்று
நாடுதலு மற்றுமேல் கீழ்கடுப் பக்கமென
நண்ணுதலு மற்றுவிந்து
நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று
ஞாதுருவின் ஞானமற்று
வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிரண்டற்று
வாக்கற்று மனமுமற்று
மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே
வாய்மடுத் துண்டவசமாய்த்
தேடுதலு மற்றவிட நிலையென்ற மெளனியே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.
விளக்கம்
கூடுதுலுடன் பிரிதலற்று
இயற்கையிலுள்ள பொருள்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் உண்மை ஒன்று விளங்கும், அவை யாவும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிப்போக முயன்று கொண்டிருக்கின்றன. இயற்கையிலுள்ள உயிர்களுள் மனிதன் மிக முக்கியமானவன். எண்ணிப் பார்க்கும் திறன் அவனுக்கு உண்டு. தாங்கள் எப்பொருளினின்று தோன்றி வந்தவர்கள், அந்த முலப்பொருளுக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன, மூலப்பொருளைத் திரும்பவும் போய் எட்டுவது எங்ஙனம் ஆகிய இக்கேள்விகள் ஞான நெறியில் செல்லுகின்றவர்களுடைய உள்ளத்தில் எழுகின்றன. தெய்வீகம் என்னும் பெரிய பேறு மனிதனுக்கு அன்னியமாயிருந்து பிறகு அவன் அதை வந்து கூடுதலன்று. எதையெல்லாம் மனிதன் கூடுகின்றானே அதனிடத்திருந்து அவன் ஒரு காலத்தில் பிரிந்தாக வேண்டும்.
இறைவனை விட்டுப் பிரிவதும் இல்லை. சேர்வதும் இல்லை. தெய்விகம் மனிதனுக்குச் சொந்தமாயுள்ளது. யாரும் அதை அவனிடத்திருந்து அகற்றிவிட முடியாது. அது அவனின் இயல்பு. மறைந்திருக்கும் அந்நிலையைத் தோற்றத்துக்குக் கொண்டு வருவது முயற்சியின் விளைவு. இக்கோட்பாட்டை கூடுதுலுடன் பிரிதலற்று என்று அவர் இயம்புகின்றார்.
நிர்த்தொந்தமாய்
இரும்பு தீ மயமாய்த் திகழ்கின்றபொழுது அதை தீ என்று உபசாரத்துக்குச் சொல்லலாம். உண்மையில். இரும்பு வேறு, தீ வேறு. ஆதலால் இரும்பும் தீயும் தொந்தமானவை, ஒன்று மற்றொன்று அல்ல என்பது அதன் பொருள்.
மனிதன் வேறு, கடவுள் வேறு அல்ல. கடவுள் தன்மை, தனது அறியாமையால் மறைந்திருக்கின்றபொமுது மனிதன் என்னும் பெயர். கடவுள் தன்மை மிளிரும்பொழுது மெய்ப்பொருள் என்னும் பெயர். எனவே மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்வு நிர் தொதந்தமாம் உள்ளது என்று அவர் இயம்புகிறார்.
குவிதலுடன் விரிதலற்று
கணக்கற்ற எண்ணங்கள் மனிதனிடத்திருந்து உதிக்கின்றன. இந்த எண்ணங்கள் எல்லாம் உறங்குகின்ற நிலையில் அவனிடத்தில் குவிந்து கிடக்கின்றன, விழித்தெழுந்திருந்து அவன் வியவகாரங்கள் செய்கின்ற நேரம் எண்ணங்கள் எல்லாம் விரிவடைகின்றன, எண்ணத்தின் விரிவே வாழ்வு என்னும் பெயர் பெறுகிறது.
இறைவனிடத்தில் குவிவதும் இல்லை. உலகத்தை நோக்கி விரிவதும் இல்லை. மனிதன் தன்னுடைய நிஜ சொரூபத்தை சுவானுபூ தியில் உள்ளபடி அறிந்து கொள்கின்ற பொழுது தனது ஆத்ம சொரூபத்துக்கு குவிதலுடன் விரிதலற்று இருக்கும் நிலை யாண்டும் சொந்தமானது என்பதை அறிந்து கொள்கிறான். இதனைத்தான் குவிதலுடன் விரிதலற்று என்கிறார் தாயுமானவர்.
இங்கே மாண்டூக்ய உபநிஷத் சாரத்தை ஆராய்ந்தால்,
- விஸ்வ — வெளி நோக்கிய விரிதல்
- தைஜஸ — உள் நோக்கிய மனோவியாபாரம்
- பிரஜ்ஞ — குவிந்த காரணநிலை
- துரியம் — குவிதலும் இல்லை, விரிதலும் இல்லை
என்பது தெளிவாகிறது.
குணமற்று
இயற்கை முழுதும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என முக்குண மயமானது.
சூரிய வெளிச்சத்துக்கு நிறமில்லை. ஆனால் அவ்வெளிச்சத்தை முப்பட்டைக் கண்ணாடியில் செலுத்துகின்றபொழுது ஏழு நிறங்களாகப் பிரிகிறது. நிறமற்ற வெளிச்சம் நிறமுள்ளதாக காட்சியளிக்கிறது.
அதே போல, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணபேதம் மாறி அமைந்திருப்பதால் இயற்கை தென்படுகிறது. ஏழு நிறங்களும் திரும்பவும் ஒன்றித்துவிட்டால் நிறமற்ற வெளிச்சமாகிவிடும்; முக்குணங்களும் ஒன்றித்துவிட்டால், இயற்கை என்னும் பெயர் போய் மெய்ப்பொருள் என்னும் பெயர் வந்துவிடுகிறது. முக்குணத்தில் மனிதன் கட்டுண்டிருக்கின்றபொழுது மனிதன் இயற்கை சொருபம், அப்பொழுது அவனை ஜீவாத்மன் என்கின்றோம், முக்குணங்கள் அவனிடத்து ஒடுங்கி மறைந்து பட்டுப்போய் விடுங்கால் அவன் மெய்ப்பொருள் சொரூபமாய் விடுகின்றான். இந்நிலையை அவர் குணமற்று என்கின்றார்.
இதனை, கண்ணன் கீதையில் (14.20)
கு3ணானேதா1னதீ1த்1ய த்1ரீன்தே3ஹீ தே3ஹஸமுத்3ப4வான் |
ஜன்மம்ருத்2யுஜராது3:கை2ர்விமுக்1தோ1 ம்ருத1மஶ்னுதே1 ||20||
நாம் மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டால், மாயையின் ஆதிக்கத்தால் பிணைக்கப்படமாட்டோம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். இந்த வழியில், ஆன்மா பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு அழியாத நிலையை அடைகிறது.
வரவினொடு போக்கற்று
போக்கும் வரவும் இல்லாது என்பது இதன் பொருள். ஆழ் உறக்கம் எனும் சுழுத்தி அவஸ்தையில் மனிதனுக்குப் போக்கும் இல்லை, வரவும் இல்லை.
இருக்கும் இடத்தைவிட்டு ஒருபொருள் நகர்ந்திட்டால் அது போக்கு. இல்லாத இடத்தில் தோன்றுங்கால் அது வரவு. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைவது முக்குண பேதங்களாலான மனிதனின் இயல்பு. குணமற்ற (குணங்களைக் கடந்த) நிலையை அவன் அடையும்பொழுது இடம், காலம், இருமை எனும் பேதம் இவை அனைத்தும் முக்குண மனதின் கற்பனையே; மனம் ஒடுங்கிடின் போக்கும் இல்லை, வரவும் இல்லை எனக்கு என்ற தெளிந்த ஞான நிலை. அக்கோட்பாட்டை வரவினொடு போக்கற்று என்று தாயுமானவர் இயம்புகின்றார்.
நிலையான குறியற்று
நமது மறைகள் வாழ்வின் பொருள் என்பதை புருஷார்த்தம் என்கிறது. புருஷார்த்தம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பவற்றை குறிக்கும். இதனையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் கூறுவர். அறத்தின் வழி நின்று, பொருள் தேடி, முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். அதாவது, முதலில் தர்மத்தை அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அதன் பிறகு இந்தச் சின்ன சின்ன இன்பங்களை எல்லாம் விடுத்து, இறுதியில் நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே, வேதங்கள் கூறும் வாழ்வியல் முறை எனும் நான்கு புருஷார்த்தங்கள்.
“தன்னைக் கட்டுதல் அறம், பிறர் துயர் தீர்த்தல் பொருள், பிறர் நலம் நாடுதல் இன்பம், உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு” என்று பாரதியார் எளிமையாக இதை எடுத்துரைப்பார்.
அறத்தின் அடிப்படையில் அனைத்து செயல்களைப் புரிந்து, பொருளீட்டி, இன்பம் துய்த்து, இறைநிலையாம் முக்தியை “அடைவதே” பிறவியின் குறிக்கோள் என்பது கோட்பாடு. ஆக, நிலைத்திருக்கும் ஒன்றினை குறியாகக் கொண்டு, அதை அடைதற்குப் பல நெறிகளைக் கையாளுகிறோம் நாம் வாழ்வில். அதை அடைந்தான பிறகு, அது சென்றடையாப் பொருள் என்னும் உண்மை விளங்கி, அது முற்றிலும் தன்மயமாகிவிடுகின்றபொழுது, தனக்குத் தானே அது குறியாய் இருப்பதில்லை, இக்கருத்தை நிலையான குறியற்று என்று தாயுமானவர் சொல்லுகிறார்.
மலமுமற்று
மலம் என்பது, “அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்” என்கிறார் வள்ளுவர் (குறள் 35). இந்த மன அழுக்குகளினால், வாக்கிற்கும் ஐவகை அழுக்குகள் உண்டு:
- புறங்கூறல்.
- பொய்சொல்லல்.
- பயனற்ற சொற்களைச் சொல்லுதல்.
- பிறர்குற்றத்தையே பேசுதல்.
- கோள் கூறல்.
புத்திக்கும் ஆறு அழுக்குகள் உண்டு
- அஞ்ஞானம் – அறியாமை
- ஸம்ஸய – ஐயுறுதல், சந்தேகம்
- விபர்யய – தவறாக புரிந்துகொள்வது
- விப்ரலப்தி – உண்மையை மறைத்து/திரித்துதன்னையும், பிறரையும் ஏமாற்றுவது
- ப்ரமாத – கவனக்குறைவு
- அபடுகரணத்வம் – குன்றிய அறிவாற்றல்
இத்தகைய மாசுக்களை கபடம், ஆணவம், கர்வம், கோபம், கடுமை, மற்றும் அறியாமை எனும் அசுர குணங்கள்” என்று கிருஷ்ணன் கீதையில் (16.4) விளக்குகிறார்.
விருப்பு வெறுப்பே அனைத்து மாசுக்களின் பெற்றோர். பதஞ்சலியின் யோக சூத்திரங்கள், ஐவகை “க்லேஶ”ங்களைக் கூறுகிறது:
- “அவித்யா” (மாயை அல்லது அறியாமை) க்லேஶங்களில் முதன்மையானது, ஏனென்றால் அது மற்றவைகளுக்கு அடிப்படையாகும். அவித்யாவை அழிப்பதன் மூலம், மற்ற க்லேஶங்கள் இனி ஒரு தடையாக இருக்காது. எதிர்மறையான பழக்கங்களை உறுதியாக நிறுவி, மாற்றத்தைத் தடுப்பதன் மூலம் அவித்யா தூய உணர்வான ஆத்மாவை மறைக்கிறது.
- “அஸ்மிதா” (அஹங்காரம்) என்பது தன்னுணர்வின் மீதும் தன்னுணர்வால் உடல் மன வளாகத்தின் மூலம் அறியப்படும் யதார்த்தத்தின் மீதுமான பற்று.
- “ராக” என்பது விருப்பு
- “த்வேஷ” என்பது வெறுப்பு
- “அபினிவேஷா” (வாழும் விருப்பம்) வாழ்க்கையில் துன்பம் நிறைந்திருந்தாலும், வாழவேண்டும் என்ற ஆசை நிறைந்து மரணபயம் கொள்வது.
நமது வேதங்களும், உபநிடதங்களும், மனக்கட்டுப்பாட்டின் எதிரிகள் என ஆறு பகைவர்களை அறிவிக்கின்றன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் (kama — lust, craze, desire; krodha — anger, hatred; lobha — greed, miserliness, narrow minded; moha — delusory emotional attachment; mada — pride, stubborn mindedness; matsarya — envy, jealousy, show or vanity, and pride). இவைகளே அந்த ஆறு பகைவர்கள்.
சைவ சித்தாந்தம் மலங்களை ஆணவ மலம், கண்ம மலம், மாயா மலம் என மூன்றாக பிரித்து அறிவுரை வழங்குகிறது.
முதலில் மலத்தை நாம் பிடிக்கிறோம். பிறகு அவை நம்மைப் பிடிக்கிறது (கவ்வுகிறது). விருப்பு வெறுப்பு (ராக த்வேஷம்), அலைபாயும் தன்மை (விக்ஷேபம்), அறியாமை (அஞ்ஞானம்), சந்தேகம் (ஸம்சயம்), விபரீதம் இவை அனைத்தும் நம்மைக் கவ்வும் மலங்கள். இந்த மனப்பிணிகள் இருக்கும் வரை, மனம் மாசு படைந்து, இன்னல்கள், துயரம் சுடர் விட்டு எரிந்துகொண்டே இருக்கும் நம்முள். அவ்வியம், ஆணவம், லோபம், அருளின்மை, பேராசைப் பிசாசு எனும் தீய குணங்களை உடைய நான் எவ்வளவு மோசமாகவனாக இருந்திடினும், என் உள்ளத்தில் உறை மலங்களை நீக்கிடு என புராண நிகழ்வினை எடுத்துக்காட்டி வேண்டினார் அல்லவா தாயுமானவர் மூன்றாவது பாடலில் .
எனவே வாழ்வின் இலக்கான வீடுபேறு அறிந்துணர, நாம் செய்யும் செயல்களனைத்தின் நோக்கம் நம் “மூட” மனதினில் புதைந்து கிடக்கும் மாசுக்களை முதலில் களைவதே ஆகும்.
இதனைத்தான் “அனைத்து அறன் மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்கிறார் திருவள்ளுவர் (குறள் 34). மனதுக்கண் மாசிலனாதல் ஒன்றே இலக்கு. வேறு எதுவம் அறனல்ல, அவை “ஆகுல நீர பிற”.
ஆக, மனக் கட்டுப்பாட்டிற்கு வழி, நம்முள் உறை மலங்களை அகற்ற வேண்டும். அடக்க வேண்டும். இது தான் பிரச்சனை. இந்த பிரச்சனை புதிது ஒன்றும் இல்லை.
“கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே, வீசும் காற்றை அடக்குவதை விட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.” – அர்ஜுனன் (பகவத் கீதை 6.34). “மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும் மனதை வசப்படுத்தலாம்” – ஆண்டவன் கண்ணன் (பகவத் கீதை 6.35).
மனத்துக்கண் மாசிலனாதலுக்கு பல இடையூறுகள் இருக்கின்றன. ஆனால் நிச்சயமாக, முடியாதது அல்ல. “உனது மேன்மைக்கும், கீழ்மைக்கும் நீயே காரணம்” என்ற கண்ணனின் கூற்று பொய்யாகாது. அப்படி, உடல், வாக்கு, மனத்துக்கண் மாசிலன் ஆனவருக்கு, அதாவது தெள்ளத் தெளிந்தவர்க்கு ஜீவன் சிவ சொரூபமென்பது ஆன்றோர் அனுபவம். அதாவது மலங்கள் அகன்ற பிறகு ஜீவன் சிவமாக மாறுவதில்லை; ஜீவன் எப்போதும் சிவமே; மலங்கள் அறியாமையை ஏற்படுத்துகின்றன; அந்த அறியாமை அகன்றால் சீவன் தன்னை சிவனாகவே அறிகிறான். நம் உடல் மன வளாகமதை முற்றிலும் செப்பனிட்டால் இப்பிரபஞ்சமே பிறகு நமக்குப் பரம்பொருளாய் காட்சி அளிக்கிறது. நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம் என்று நன்கு அறிந்துணர்ந்து, தனது ஆத்மாவான பரம்பொருள் எனும் வெள்ளித்திரையில் நடைபெறும் திரைப்படமே உலகமும் வாழ்வும் என்று உறுதியுடன் கவலைகளேதுமின்றி மகிழ்வுடன் தனது ஆத்மாவில் நிலைத்து, அறிவால் உலகம் மறையும் இந்நிலையை “தூரியம்” எனும் இறைநிலை என்கிறது மறைகள். இந்த இறைநிலையில், உலகில் இருந்து கொண்டு அகிலத்தோடு உறவாடினும் அல்லல்கள் ஏதுமில்லை, தன்னை அறிந்த ஞானிக்கு.
அதற்குத் தேவையான அடிப்படை, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் மாசுகள் களைந்த மனம். இப்படி மெய்யறிவால் தன்னுணர்வைக் கரைத்திட்டால்தான், இந்தத் துயரச்சுடரை அணைத்திடலாம். இத்தகைய பிணிகள் இல்லாத சமநோக்குடைய மனமே, ஆர்ப்பரிக்கும் அதிர்வலைகள் ஏதுமிலாத ஆழ்கடல் போல அமைதி காக்கும் அந்த நிலையை “மலமுமற்று” என்கின்றார் தாயுமானவர்.
நாடுதலுமற்று
நமக்கு அன்னியமாய் இருக்கின்ற ஒன்றை அடைய முயல்வதே நாடுதல். மனதில் மலங்கள் உள்ளவறை கடவுள் நமக்கு அன்னியமானவர் என்ற எண்ணம் நம்முள். மலமற்ற மனதில், நாம் தேடித்திரிகின்ற தெய்வம் தான் நம் மனத்தகத்து நம் சொருபம் என்னும் உண்மை நமக்கு உதயமாகி, அதை நாடுதற்குப் பதிலாக நம்மை அதன் மயமாக்கி அதனுடன் ஐக்கியமாகிறோம். இச்செயலை “நாடுதலுமற்று” என்கின்றார் தாயுமானவர்.
மேல் கீழ் நடுப் பக்கமென நண்ணுதலும் அற்று
நண்ணுதல் என்பது கிட்டுதல் ஆகும். அது என்ன மேல், கீழ், நடுப் பக்கமென கிட்டுவது? ஆராய்வோம்.
முடி மன்னர் ஆகில் மூவுலகம் அது ஆள்வார்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
என்று திருமந்திரம் (1601) கூறுகிறது.
தேவர்கள் வாழும் விண்ணுலகம், மனிதர்கள் வாழும் மண்ணுலகம், அசுரர்கள் வாழும் பாதாளவுலகம், ஆகிய மூன்று உலகங்களைக் குறிப்பது இது. இதுவே மிகவும் பொதுவான அண்டவியல் கருத்து. இதனையே மேல், நடு, கீழ்ப்பக்கம் என்பதனை கோடிட்டுக் காட்டுகிறார் தாயுமானவர்.
எனினும், இந்து புராணங்கள் பதினான்கு உலகங்களை வரையறுக்கின்றன (இதனை கிரகங்களென குழப்பமடையக் கூடாது). ஈரேழு உலகம், 14 லோகங்கள் என நாம் கேட்டிருப்போம். அந்த உலகங்கள் நாம் வாழக்கூடிய பூமிக்கு மேலே ஆறு உலகங்கள் உள்ளன. நம் பூவுலகிற்கு கீழே ஏழு உலங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்படுகிறது.
நம்மை நாம் அறிய முயலும் நமது வாழ்க்கைப் பயணத்தில், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என வாழ்ந்திட்டு, மனத்துக்கண் மாசிலனாகி, பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடி சேர இத்தகைய பாகுபாடுகளை ஊக்குவிப்பான்/தடுப்பானாக எடுத்துரைத்தது நமது மறைகள்.
அதனை வகுத்த அவ்வாழ்க்கையை நடத்திட்டு, குரு உபதேசத்தால் மெய்யறிவினை அடைந்தவருக்கு இத்தகைய பாகுப டுகள், வேற்றுமைகள் ஏதும் இல்லை என்பதை மேல் கீழ் நடுப் பக்கமென நண்ணுதலும் அற்று என்கிறார் தாயுமானவர்.
விந்து நாதம் அற்று
சைவ சித்தாந்த தத்துவவியலில், பிரபஞ்ச உற்பத்தியையும் (Creation) ஆன்மாவின் ஆன்மீகப் பரிணாமத்தையும் விளக்குவதற்கு நாதம், பிந்து, கலை (கலாதி) ஆகிய தத்துவங்கள் மிக முக்கியமான அடிப்படைகளாகும்.
- நாதம் என்பது பிரபஞ்சத்தின் ஆதி ஒலி; இது ஐந்து சிவ தத்துவங்களில் முதலாவதான சிவ தத்துவத்தைக் குறிக்கும். இது ஒலி வடிவமானது.
- நாதத்தின் சுருக்கமே அல்லது ஒடுக்கமே பிந்து எனப்படும். நாதம் என்பது பரந்து விரிந்த அதிர்வு என்றால், பிந்து என்பது ஒரு புள்ளியில் குவிந்த ஆற்றல். சிவபெருமானின் ‘செயல் சக்தி’ (கிரியா சக்தி) தொழிற்படும்போது பிந்து தோன்றுகிறது. இது சிவ தத்துவங்களில் இரண்டாவதான சக்தி தத்துவத்தைக் குறிக்கும். இது ஒளி வடிவமானது.
- இந்த இரண்டு சுத்த தத்துவங்களின் துணையோடு, மலங்களில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்கள் உய்வடைவதற்காக, அவற்றின் அறிவையும் செயலையும் தூண்டி உலக அனுபவத்தைக் கொடுக்கும் கருவிகளே கலை முதலான (கலாதி) தத்துவங்கள் ஆகும். கலை, வித்தை, அராகம், காலம், நியதி ஆகியவைகளைக் குறிப்பது. சுத்த மாயையிலிருந்து நாதமும் பிந்துவும் தோன்றிய பிறகு, அசுத்த மாயையிலிருந்து ஆன்மாவின் பொருட்டுத் தோன்றும் கருவிகளே இவை. இதில் ‘கலை’ என்பது முதன்மையானது.
சைவ சித்தாந்தத்திற்கு நாதமும் பிந்துவும் பிரபஞ்ச உருவாக்கத்தின் உண்மையான அஸ்திவாரக் கற்கள். இறைவன் உலகை படைக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள் (சுத்த மாயை). ஆனால் வேதாந்தத்திற்கு (அத்வைதம்), பிரம்மம் எவ்வித மாற்றமும் அடைவதில்லை. கயிற்றில் பாம்பு தோன்றுவது போல, பிரம்மத்தின் மீது மாயையினால் நாத, பிந்து, கலாதி போன்ற பிரபஞ்சத் தோற்றங்கள் பிரமைகளாக ஏற்படுகின்றன.
சைவ சித்தாந்தத்தில், நாத, பிந்து தத்துவங்களைக் கடந்து, கலாதி கருவிகளின் உதவியோடு ஆன்மா தூய்மை பெற்று சிவஞானத்தைப் பெற வேண்டும். இது கிரியை மற்றும் ஞானம் கலந்தது. வேதாந்தத்தில், ஓங்கார உபாசனையில் நாதத்தையும் பிந்துவையும் தியானித்து, இறுதியில் ஒலியும் புள்ளியும் அற்ற ‘அமாத்ரா’ (மாத்திரையற்ற / ஒலியற்ற) துரிய நிலையை (பரப்பிரம்மத்தை) அடைவதே இலக்கு. இங்கு நாத-பிந்துக்கள் இறுதி இலக்கை அடைவதற்கான ஒரு படிக்கட்டுகள் மட்டுமே, அவை நிலையானவை அல்ல.
எனவே, கோட்பாட்டு ரீதியாக இரண்டு தத்துவங்களும் நாத, பிந்து, கலை என்ற சொற்களையும் அதன் ஆன்மீகப் பயணப்பாதையையும் ஏற்றுக் கொண்டாலும், சைவ சித்தாந்தம் அவற்றை ‘உண்மை’ (Real) என்றும், வேதாந்தம் அவற்றை ‘ஒப்பீட்டு உண்மை’ (Relative Reality / Vyavaharika Satya) என்றும் வரையறுக்கின்றன.
நாத, பிந்து தத்துவங்களைக் கடந்து, கலாதி கருவிகளின் உதவியோடு ஆன்மா தூய்மை பெற்று இறையை அடைந்த நிலை , நாதம் எனும் ஸூக்ஷ்ம காரணம், பிந்து எனும் அதிசூக்ஷ்ம காரணம் எல்லாவற்றையும் கடந்த நிலை. அதாவது “விந்து நாதமும் அற்று” எனும் நிலை
ஐவகைப் பூதபேதமும் அற்று
ஐவகை எனும்பூத மாதியை வகுத்த ஆண்டவனை நான்காவது பாடலில் வேண்டிய தாயமானவர், இங்கே மற்றொரு கருத்தை உள்வைக்கிறார்.
பஞ்ச பூதங்களெனும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றிவந்த முறையிலேயே, ஒன்றனுள் ஒன்று ஒடுங்கிவிடவும் கூடும். ஒடுங்கிய நிலையில் இந்த ஐந்து பூதங்களையும் பாகுபடுத்த முடியாது. ஒரு அபேத நிலையில் அவைகள் மறைந்து விடுகின்றன. இக்கூற்றை ஐவகை பூதபேதமுமற்று அதாவது ஐந்து வகையான பூத பேதங்களும் நீங்கி என்று தாயுமானவர் கூறுகிறார்.
ஞாதுருவின் ஞானமற்று
அறிபவனின் அறிவும் அற்று என்று பொருள்படும் இச்சொற்றொடர்,
“ஞாதா, ஞாநம் ஞேயம்” எனும் “த்ருபுடி” அற்றது என்னும் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஆத்ம போத ஸ்லோகத்தை (41) அடிப்படையாகக் கொண்டது.
ஞாத்ரு-ஞான-ஞேய-பேத: பராத்மநி ந வித்யதே |
சிதானந்தைக-ரூபத்வாத் தீப்யதே ஸ்வயமேவ ஸ: || 41 ||
ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த சுலோகத்தில் அத்வைத வேதாந்தத்தின் மிக முக்கியமான ‘திரிபுடி ரஹிதம்’ (மூன்று வேறுபாடுகள் அற்ற நிலை) என்ற தத்துவத்தை விளக்குகிறார்.
திரிபுடி என்றால் என்ன? உலகியல் அறிவில் எப்பொழுதும் மூன்று விஷயங்கள் இருக்கும்:
- 1. அறிபவன் (Knower – நான்)
- 2. அறியும் செயல் அல்லது அறிவு (Knowledge – அறியும் திறன்)
- 3. அறியப்படும் பொருள் (Known – புத்தகம், மரம், மனிதர்கள் போன்ற புறப்பொருட்கள்)
நாம் உலகத்தை உணரும்போது இந்த மூன்று பிரிவுகளும் தனித்தனியாகத் தெரிகின்றன. ஆனால், பரமாத்ம தத்துவத்தில் இந்த வேறுபாடுகள் இருப்பதில்லை. ஆன்மாவில் ஏன் இந்த வேறுபாடு இல்லை? உலகில் ஒரு பொருளைப் பார்க்க நமக்குக் சூரிய ஒளியோ அல்லது விளக்கின் ஒளியோ தேவைப்படுகிறது. விளக்கு வேறு, விளக்கால் அறியப்படும் பொருள் வேறு. ஆனால் ஆன்மா என்பது ‘சிதானந்த ஏக ரூபம்’ – அது தூய அறிவு வடிவமாகவும், எல்லையற்ற ஆனந்த வடிவமாகவும் மட்டுமே உள்ளது. அதற்குள் “அறிபவன், அறியப்படும் பொருள்” என்ற பாகுபாடு கிடையாது. அது ஒற்றைத்தன்மை (Homogeneous) கொண்டது. கடலில் அலைகள், நுரை, குமிழிகள் என்று பல வடிவங்கள் தெரிந்தாலும், உண்மையில் அவை அனைத்தும் தண்ணீரே தவிர வேறில்லை. அதுபோல, ஆன்ம ஞானம் சித்திக்கும்போது அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் அனைத்தும் ஒன்றாகவே உறைந்துவிடுகின்றன. ஆன்மாவை அறிவதற்கு வேறு ஒரு அறிவோ அல்லது ஒளியோ தேவையில்லை. எரியும் ஒரு விளக்கை இருட்டில் பார்க்க நமக்கு இன்னொரு விளக்கு தேவையில்லை; அது தன் ஒளியாலேயே தன்னைக் காட்டிக்கொள்கிறது (சுயமேவ தீப்யதே -தானாகவே ஒளிர்தல்).
சுழுத்தியில் உண்டாகின்ற இந்த அபேதநிலை நம்மிடத்தில், மறைந்து கிடக்கின்றது. இந்த இருமைகள் அற்ற நிலையை
- ஸமாதியில் (யோக முறை) படுத்து உறங்காமல் விழிப்புணர்வோடு மனதைப் பரம்பொருளில் மனதை ஒருமுகப்படுத்தி (லயப்படுத்தி) அடையலாம் அல்லது
- இருமைகளை மெய்யுணர்வால் பொய்யென்று நிச்சயத்து (ஞான முறை) அதாவது இன்ப துன்பங்கள் நம்மைத் தாக்காமல் அறிவு என்ற கவசத்துடன் உலக நிகழ்ச்சிகளுக்கு அளவுக்கு மீறிய மதிப்பு கொடுக்காமல், ஸத்யம் என்று கருதாமல் மித்யா என்று புரிந்து மதிக்காமல் இருக்கலாம்.
இதனை “தூங்காமல் தூங்குவது” என்பர். இக்கோட்பாட்டை ஞாதுருவின் ஞானமற்று என்று தாயுமானவர் சொல்லுகிறார்.
வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிரண்டற்று வாக்கற்று மனமுமற்று மன்னுபரி பூரணச
நடைமுறையில் இருமைகளடங்கிய இவ்வுலக வாழ்வில் ஏதேனும் ஒன்றைக் குறித்து வாட்டமுறுதல் நம்மிடத்தில் நிகழ்கிறது. வியவகாரநிலை எல்லாம் கடந்து அதீத நிலைக்குப் போய்விடுகின்றபொழுது எல்லாம் ஏகமாய் விடுகின்றதால், அங்கு வாடுதல் அல்லை. அந்த அதீத நிலையை ஏகமாய் என்று சொல்லுகிற இடத்து ஒன்று எனப் பொருள்படுகிறது.
ஒன்று என்று சொல்லுகிறபொழுதே அதற்கு மேற்பட்ட இரண்டோடு அதைச் சீர்தூக்குகிறோம் ; உண்மையில் சீர்தூக்குதல் என்கின்ற செயலுக்கே ஆங்கு இடமில்லை, ஒப்பிடுதல் என்கின்ற செயலுக்கே இடமில்லாது என்பதனால், அப்பெருநிலை ஒன்றற்று இரண்டற்று ஆனது.
மனம், மொழி, மெய் (காயேந வாசா மனஸா) இவைகளால் ஒன்றை விளக்கும்போது, அதற்கு நாம் எல்லை ஒன்றை கட்டிவிடுகின்றோம். விளக்கம் என்று சொல்லுமிடத்து அது வரையறைக்கு உட்பட்டது. பரம்பொருளின் சொருபமோ எதனுடனும் சீர்தூக்கப்படுவதன்று. வாக்கின் முலம் அது பகரப்படுவதுமன்று. விளக்கத்தில் அடங்காத பொருளாக இருப்பதனால் அது ஒன்றுதான் மனிதனுடைய நாவினால் எச்சில்படாதது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகிறார். மனதுக்கு எட்டாத ஒன்றை வாக்கினால் சொல்ல முடியாது. பரம்பொருளோ மனதுக்கு எட்டுவதன்று. இக்கோட்பாட்டை வாக்கற்று மனமுமற்று என்று தாயுமானவர் சொல்லுகின்றார்.
எல்லையில் அடங்காததை பூரணம் என்னும் சொல் குறிக்கிறது. இயற்கையில் இருப்பவைகள் எல்லாம் எல்லைக்கு உட்பட்டவைகள். பூரணப்பொருளிடத்து எல்லாம் அடக்கம். மேலும் அதை பரிபூரணம் என்று சொல்லுகிற இடத்து குறை ஒன்றும் இல்லா நிறை நிலையாக அது ஆகிவிடுகிறது. ஆராய்கின்ற அளவுக்கு நிறைநிலையே அதன்கண் தென்படுகிறது. எனினும் ஆராய்ச்சியில் அது அடங்காததாகிவிடுகிறது. வெட்டவெளி எங்ஙனம் அண்டங்கள் அனைத்தையும் தன்னகத்து அடக்கி வைத்துக் கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலும் இருக்கின்றதோ, அப்படி பரிபூரணத்தில் யாவும் நிலைத்இருக்கின்றன. அவை யாவுக்கும் அப்பாலாகவும் அது இருக்கிறது. அதற்குப் போக்கு இல்லை, வரவு இல்லை, யாண்டும் இருக்கிறபடி இருந்து வருகிறது, அதன் நிலைப்பேற்றை மன்னுதல் என்னும் சொல் குறித்துக்காட்டுகிறது.
சுகவாரி தன்னிலே வாய்மடுத் துண்டவசமாய்த்
உயிர்கள் நிலைபெற்றிருப்பதற்கு நீர் முற்றிலும் அவசியமானது. வாரி என்றால் நீரைக் குறிக்கிறது. நீருடன் ஒப்பிட்டுப் பரம்பொருள் சுகவாரி என்று அழைக்கப்படுகிறது. இன்பமனைத்துக்கும் அதுவே இருப்பிடமாதலால் இச்சொல் அதற்குப் பொருத்தமானதே.
நீரை வாய் வைத்துப் பருகி மகிழ்கிறோம். பரம்பொருளிடத்திருந்து நாம் பெறுகின்ற பேரானந்தத்தை நாம் அறிந்தாக வேண்டும் எனவே சுகவாரி தன்னிலே வாய்மடுத்து உண்டு என்று தாயுமானவர் கூறுகிறார்.
பாரமார்த்திக நீரை அருந்தியவுடன் அது பேரானந்தத்தில் மனிதனைக் கொண்டு சேர்த்துவிடுகிறது. ஆதலால்தான் அது சுகவாரி என்று அழைக்கப்படுகிறது. அதை அருந்தியவுடன் மனிதன் தன் வசத்தை ஒதுக்கிவிட்டுப் பரவசம் அடைந்து விடுகின்றான். பேறு அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது. சுகவாரி தன்னிலே வாய்மடுத்து உண்டு அவசமாய் என்று இந்நிலையைத் தாயுமானவர் விளக்குகின்றார்.
இக்கருத்தினையே, ஆதி சங்கரர் தனது சிவானந்த லஹரி எனும் பதிவில்,
“உன் மெய்ஞான அறிவுவதனில் ஊற்றெடுத்து ஆறனவே பெருகி ஓடி, என் பாவப்புழுதி களைந்து, எண்ணங்களெனும் கால்வாய் வழி அல்லலெனும் மாசுடை பிறவிப்பிணி தீர்த்து என் மனமடு சேர்ந்து அடையட்டும் சிவப்பேரின்ப அலை”
என்கிறார்.
தேடுதலு மற்றவிட நிலை என்ற
நாம் சாதாரணமாய் உண்ணும் உணவும் பருகும் நீரும் நம்மிடத்து ஜீவபோதத்தை வளர்க்கின்றன. உடல் அபிமானத்தைக் காத்து வைப்பதற்கே நாம் உணவேற்று வருகிறோம். இந்த உணவு உடலைப் பேணுவதுபோன்று பரிபூரணத்தைப் பற்றிய உணர்வு பரிபூரணத்தின்கண் நம்மை. எடுத்துச் செல்லுகிறது. தன்னிடத்துள்ள குறைகளை நீக்குதற்கே ஜீவன் எண்ணிறந்த பிறவிகளை எடுத்து வந்தான். குறைகளை அகற்றுகின்ற அளவு புதிய குறைகள் தோன்றிக் கொண்டே வந்தன. கடலில் அலைக்குப் பிறகு அலை வருவது போன்று மனிதன் வாழ்ந்திருக்கும் பரியந்தம் குறைகளும்
வந்து கொண்டே இருக்கின்றன. உடலுக்கு வேண்டிய உணவை உண்டுகொண்டிருப்பதற்கிடையில் பசி திரும்பத் திரும்ப வந்துகொண்டிருப்பது போன்று குறைபாடுகளும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. பரிபூரணம் என்னும் இந்தப் பரிபூரணப் பேரானந்தநிலை புறஉலகில் எங்கேயோ தேடிக் கண்டுபிடிக்கப்படுவதன்று. இதுகாறும் ஜீவனிடத்திருந்த சிற்றுணர்வு, பரவசம் அடைந்தான பிறகு பேருணர்வாக விரிந்துவிடுகிறது. தன்னில் தானாய் உள்ள நிலை அது. அதை, தேடுதலு மற்ற இடம் நிலை என்று அவர் பகர்கின்றார். தேடுபவனே தேடப்படும் பொருளாக இருப்பதை உணர்ந்து அதில் நிலைத்திருப்பதைக் குறிப்பது.
மெளனியே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே.
இதைக் காட்டி அருளியவர் தாயுமானவரின் குருவாகிய மெளனி. எங்கும் நிறைந்துள்ள, திருச்சிராப்பள்ளி ‘சிரகிரி’ (மலைக்கோட்டை) என்னும் தலத்திலும் எழுந்தருளி, முற்றிலும் தன்னில் தானாய் விளங்கி, உயிர்கள் அனைத்திற்கும் பரமகுருவான தக்ஷிணாமூர்த்தியே அந்த மெளனகுருவாகவே வந்து தமக்கு பாரமார்த்திகப் பெருநிலையைக் கொடுத்து அருளியதாகவும் அது மனதையெல்லாம் கடந்துள்ள முக்திநிலை என்றும் தமது பாடலில் தாயுமானவர் விளக்குகிறார்.
முடிவுரை
இப்பாடலில், இருமைகளற்ற நிலையே (நிர்த்வந்த்வ நிலை) நமது குறிக்கோள் என்று குரு உபதேசம் செய்ததாகச் சொல்கிறார் தாயுமானவர். ஞாநம் வந்த பிறகு, ஸாதகன் என்ற தன்மை, ஸாதனம் என்ற தன்மை, ஸாத்யம் என்ற தன்மை எதுவும் கிடையாது. த்ரிபுடி கிடையாது, த்வந்த்வம் கிடையாது. அறிபவன் அறியப்படுபொருள், அறிவு, அறிவதற்குரிய கருவி இதெல்லாம் கிடையாது. இருமைகளான லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி, ஸாத்யம்-ஸித்தம் இவையெவையும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
நமது சாஸ்திரம், முதலில் குறிக்கோள் தேவை என்றுதான் உபதேசங்கள் ஆரம்பிக்கும். சிலகாலம் சென்றபின், நீ அதுவாக இருப்பதை அறிந்துகொள்வதுதான் உன்னுடைய குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று பக்குவப்படுத்துவதற்காகக் கூறப்படும். பிறகு குறிக்கோள் தேவையில்லை என்பதுதான் குறிக்கோள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
மனிதன் உண்மையான நிம்மதியைப் பெற விரும்பினால் இருமைகளை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது. இன்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் துன்பத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இன்பத்தைப் போற்றி மதிக்காதவர் துன்பம் வரும் காலத்தில் வருந்துவதில்லை.
அற்றேமென்று அல்லற்படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். (திருக்குறள் : 626)
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (திருக்குறள் : 623)
யம் ஹி ந வ்யத2யன்த்1யேதே1 பு1ருஷம் பு1ருஷர்ஷப4 |
ஸமது3:க2ஸுக2ம் தீ4ரம் ஸோ ம்ருத1த்1வாய க1ல்ப1தே1 ||15||
எவன் இருமைகளுக்கு வசப்படாமல் இருக்கிறானோ அவனே முக்தி பெறுவதற்குத் தகுதி உடையவன் என்று கீதையில் (2.15) பகவான் கூறுகிறார்.
இந்த உட்கருத்தை வைத்ததே இப்பாடல்.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
Leave a Reply