இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது (Amazon Kindle Edition)

https://www.amazon.in/சின்மயானந்த-குரு-தாயுமானனவர்-பாடல்-தாயுமானவர்-ebook/dp/B0HKS11TNP/ref=sr_1_1?dib=eyJ2IjoiMSJ9.lo1Ey8TvH1pkD6I8ZTRK3A.H7MeNc9AerLO40qWQ7VP2sflrWbfrS5TPQU6fmHIAgs&dib_tag=se&qid=1792891365&refinements=p_27%3Aஎழிலரசன்++பொன்னுஸ்வாமி&s=digital-text&sr=1-1&text=எழிலரசன்++பொன்னுஸ்வாமி+

பாடல்


போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப்
புனிதமாய் அவிகாரமாய்ப்
போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின்
பூரணம் புகலிடமதா
ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின்
அருள்பின்னும் அறிவின்மைதீர்த்
தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற்
கறிவாவ தேதறிவிலா
ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக்
கீடான காயமேதென்
இச்சா சுதந்திரஞ் சிறிதுமிலை இகபரம்
இரண்டினுள் மலைவுதீரத்
தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 10

விளக்கம்

போதமாய்

மெய்ப்பொருளுக்குக்‌ கடவுள்‌ என்னும்‌ பெயர் வந்துள்ளது. நம்மைக் கடந்தும் நமக்குள்ளும் இருப்பது அந்த பரம்பொருள். கடவுளுக்குக்‌ கணக்கற்றபேர்,‌ கணக்கற்ற விளக்‌கங்கள் உண்டு. ‌ மெய்யை எத்தனைபேர்‌ எடுத்துரைத்தாலும்‌ அதன்கண்‌ உள்ள மெய்ம்மை அத்தனையவருக்கும்‌ பொதுவாகும்‌. கடவுளுக்குக்‌ கொடுத்துள்ள விளக்கங்களுள்‌ மிகமிக எளியது “ப்ரக்ஞானம்‌ பிரம்ம” – உணர்வு எனும் பேரறிவே பரம்பொருள்‌ என்னும்‌ மஹாவாக்கியம்‌. இது ஐதரேய உபநிஷத் (3.3) வாக்கியம். தூய உணர்வான பரம்பொருளை, தாயுமானவர்‌ போதமாய்‌ என்று இயம்புகிறார்‌. 

ஆதி நடு அந்தமும்‌ இல்லாததாய்‌

ஒரு இசைக் கச்சேரியில், இசையை ஆழ்ந்து ரசிக்கின்ற வேளையில்,‌ ரசித்தல்‌ என்‌னும்‌ அனுபவத்துக்கு ஆரம்பம்‌, முடிவு என்கின்ற வரையறைகள் ஏதும் இல்லை. அந்நிலையில் ரசிகன்,‌ ‌காலத்‌தையே கடந்தவனாகி, ரசிகன், ரசித்தல், ரசிக்கும் இசை என்ற பேதங்கள் இல்லாமல் இருக்கும் இருப்பு அது.

அதுபோல, பரம்பொருளைப் பற்றிய அறிதல் எனும் அதிஉயர் நிலையில், ஆரம்பம்‌, நடு, முடிவு போன்ற வரையறைகள்‌ ஏதும் அற்று, பரம்பொருள்‌ எனும் பேருணர்வு சொரூபமாகவே இருக்கும் உணர்வு நிலையை, ஆதி நடு அந்தமும்‌ இல்லாததாய்‌ என்று தாயுமானவர்‌ சொல்லுகின்றார்‌. அதாவது, நிர்விகல்ப சமாதி எனும் மனவிருத்தி தற்காலிக நிவிருத்தி நிலையைக் கடந்து, காலத்திற்கும், அனுபவ நிலைகளுக்கும், மன இயக்கங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளைக் குறிப்பது.

புனிதமாய்

ஒரு பொருள்‌ முற்றிலும்‌ தன்மயமாய்‌ இருக்குமாகில்‌ அது புனிதம்‌ வாய்க்கப்பெற்றது. அதற்கு அன்னியமான மற்றொரு பொருள்‌ அதில்‌ வந்து சேர்ந்துவிடுமாகில்‌ அது புனிதத்தை இழந்துவிடுகிறது. கறந்தெடுத்த ஆவின்பால்‌. இருக்கிறது. அதில்‌ வேறு பொருள்‌ எதையும்‌ நாம்‌ சேர்க்கவில்லை, அப்பொழுது அது தூய நிலையில்‌ இருக்கிறது. வானத்தினின்‌று மழைநீர்‌ பொழிகிறது. பூமியில்‌ படுதற்கு முன்பு அது தூய நிலையில்‌ இருக்கிறது. பூமியில்‌ பட்டவுடன்‌ அதன்‌ புனிதம்‌ கெட்டுவிடுகிறது. பூமியில்‌ படாத தூய மழை நீரைப்‌ புனிதமானது என்று பகரலாம்‌, பிறகு அந்த மழைநீரை எடுத்துப்‌ பாலில்‌ கலக்கினால்‌ பாலின்‌ தூய்மை போய்விடுகிறது. ஏனென்றால்‌ தூய நன்னீரும்‌ பாலுக்கு அன்னியமான பொருள்‌. ஒரு பொருள்‌ மற்றொரு பொருளோடு கலக்கப்பெறுமிடத்து அதன்‌ புனிதம்‌ போய்‌ விடுகிறது. புலன்களால் அறியப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இத்தன்மை ஒப்பும்.

புலன்களால் அறிய இயலாத பரம்பொருளோடு எதையும்‌ காம்‌ கலக்க முடியாது. ஏனெனில், அத்துடன்‌ கலக்குதற்கு,  அன்னிய பொருள்‌ எதுவும்‌ இல்லவே இல்லை. அனைத்தும் அதுவே – ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம்” என்கிறது உபநிஷத். சாண்டோக்ய உபநிஷத் 6.2.1 இதனை एकमेवाद्वितीयम् அதாவது “ஒன்றே; இரண்டற்றது” என்கிறது. யாண்டும்‌ அது தன்மயமாய்‌ இருக்கிறது. ஆதலால்‌ பரம்பொருளைக்‌ குறித்து புனிதமாய்‌ என்று அவர்‌ இயம்புகின்றார்‌. 

அவிகாரமாய்

நல்ல கண்ணாடியின்‌ மூலமாக வெளியில்‌ உள்ள பொருள்கனைப்‌ பார்த்தால்‌ அவைகளின்‌ காட்சியில்‌ திரிவு ஒன்றும்‌ ஏற்படாது, உள்ளபடி அவைகள்‌ தோன்றும்‌. அத்தகைய நேரான தோற்றத்‌துக்கு விகாரப்படாத நிலை அல்லது அவிகாரமுள்ள நிலை என்னும்‌ பெயர்.

அதுபோல, ‌மக்களாகிய நாம்‌ மனது என்‌னும்‌ கண்ணாடியால்,  புறவுலகைப்‌ பார்க்கிறோம்‌. மனத்துக்கண் மாசுகள் இருப்பதால், வெவ்வேறு விகாரங்களை எடுப்பது மனதின்‌ இயல்பு. மனதுக்குரிய விகாரங்களுக்கேற்ப ‌ புறப்‌பொருள்களின்‌ தோற்றம்‌ மாறுபட்டு நமக்கு விளங்குகின்றது. 

பரம்பொருள்‌ கண்ணாடியின்‌ மூலமாகக்‌ காணப்படுகிற 

பொருள்‌ அன்று. “மன விகாரங்கள் அடங்கியபோது தானே வெளிப்படும் சுயபிரகாச சித்தம்” எனும் பேருணர்வே பரம்பொருள்‌ ஆகிறது. அது யாண்டும்‌ தன்‌மயமாய்‌ இருப்பதனால்‌, அதனிடத்து எந்தவிதமான மாறுதலும்‌ உண்டாகாதிருப்பதனால்‌, அதை அவிகாரமாய்‌ என்று தாயுமானவர்‌ இயம்புகின்றார்‌. 

போக்கு வரவில்லாத இன்பமாய்‌ நின்றநின்‌

உயிர்கள்‌ அனைத்தும்‌ வாழ்க்கையில்‌ பெரும்‌ பற்றுதல்‌ கொள்வது, இன்‌பத்தைப்‌ பெருக்கவும்‌ அதைக்‌ காத்து வைப்பதற்கே என்றால் அது மிகையாகாது. எவ்வுயிர்க்கும்‌ நிலைத்த இன்பம்‌ வந்து வாய்ப்பதில்லை. பகலைத்‌ தொடர்ந்து இரவு வருவது போன்று இன்பத்தை நாடுகிறவர்களுக்கெல்லாம்‌ துன்பமும்‌ வந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலான உயிர்களுக்கு இன்பத்தைத்‌ துன்பத்தோடு சீர்தூக்கிக்‌ காட்டினால்‌ மட்டும்‌ அது விளங்குகிறது. மரணத்தில்‌ துன்பம்‌, ஜனனத்தில்‌ இன்பம்‌ என வாழ்க்கையில்‌ ஒன்றைத்‌ தொடர்ந்து மற்றது வருவது இயல்பு. இப்படி உயிர்கள்‌ அடைகின்ற இன்பத்துக்குப்‌ போக்குவரவு உண்டு. 

இன்பத்துக்குப்‌ பிறப்பிடம்‌ அல்லது இருப்பிடம்‌ எது?  பகுத்தறிந்து ஆராய்ந்து பார்த்தால், இன்பம் என்பது நமது சொரூபமே. அதை நாம் உணரும் போது இன்புறுகிறோம்; உணராவிடில் இன்பம் இல்லை எனவோ, துன்பப்படுகிறேன் என்றோ கூறுகிறோம். இன்பம்‌ உண்மையில்‌ கடவுளின் சொரூபம்‌. இன்பம்‌ வேறு, கடவுள்‌ வேறு அல்ல. இன்பத்‌துக்கு ஆனந்தம்‌ என்பது மற்றொரு பெயர்‌. ஆனந்தம்‌ பிரம்மம்‌ என்பது ஒரு மஹாவாக்கியம்‌. ஆனந்தத்தை நாடுகிற உயிர்கள்‌ எல்லாம்‌ உண்மையில்‌ பரம்பொருளையே நாடுகின்றன. பரம்பொருள்‌ யாண்டும்‌ இன்ப சொருபம்‌. உயிர்கள்‌ அடைகின்ற இன்பம்‌ இடையிடையே மறைக்கப்படுவது போன்று பரமாத்மாவிடத்துள்ள இன்பத்தை எதுவும்‌ மறைப்பதில்லை. அது யாண்டும்‌ பரமானந்த சொரூபமாய்‌ இருக்கிறது. தைத்திரீய உபநிஷத் இதனை आनन्दो ब्रह्मेति व्यजानात् “ஆனந்தமே பிரம்மம்” என்கிறது.இக்கோட்பாட்டைப்‌ போக்கு வரவில்லாத இன்பமாய்‌ நின்றநின்‌ என்ற சொல்லடுக்கில்‌ தாயுமானவர்‌ விளக்கிக்‌ காட்டுகின்றார்‌. 

பூரணன்‌ புகல்‌ இடமதாய்‌ 

இயற்கையில்‌ நிறைநிலை என்றும்‌ குறைநிலை என்றும்‌ இரண்டு இயல்புகள்‌ இருக்கின்றன. காற்று நிறைந்திருக்‌கும்‌ இடம்‌ ஒன்று உண்டு, அது குறைந்திருக்கும்‌ இடமும்‌ இருக்கிறது. நிறைந்த இடத்திலிருந்து குறைந்த இடத்துக்குக்‌ காற்று போவது இயல்பு. கடலில்‌ நீர்‌ நிறைந்‌திருக்கிறது. தடாகத்தில்‌ நீர்‌ இடையிடையே குறைந்து போகிறது, அதன்‌ குறைவை நிறைவேற்றுதற்குக்‌ கடல் நீர்‌ ஆவியாகக்‌ கிளம்பி மேகமாக மாறி மழையாகப்‌ பெய்து ஓடையாக வந்து தடாகத்தின்‌ குறைவை நீக்கி வைக்கிறது, இங்ஙனம்‌ குறைவுகளையெல்லாம்‌ நிறைவபடுத்தும்‌ செயல்‌ இயற்கையில்‌ இருந்து கொண்டிருக்கிறது. 

நிறைநிலைக்குப்‌ பூரணம்‌ என்று பெயர்‌. எதற்குப்‌, போக்கும்‌ வரவும்‌ புணர்வும்‌ இருக்கிறதோ அது நிறை பொருள்‌ ஆகாது. எது யாண்டும்‌ தன்மயமாய்‌ நிறைவாய்‌ இருக்‌கிறதோ அது பூரணப்‌ பொருள்‌. பூரணத்தை அடைதலே வாழ்க்கையின்‌ குறிக்கோள்‌. குறைபட்டிருக்கும்‌ எதனிடத்‌தும்‌ மனிதனுக்குத்‌ திருப்தி உண்டாவதில்லை. நிறைந்திருப்‌பதனிடத்தே அவனுக்குத்‌ திருப்தி வருகிறது. கடலை எட்டுகின்ற நதி ஒரு விதத்தில்‌ பூரணத்தை எட்டியதாகிறது. மேற்கொண்டு அது செய்வதற்குச்‌ செயல்‌ ஒன்றுமில்லை. அதேபாங்கில்‌ பூரணத்தை மனிதன்‌ எட்டிவிடுவானாகில்‌ மேலும்‌ அவன்‌ பெறுதற்கு ஒன்றுமில்லை, கடவுள்‌ பூரணன்‌ என்று பகரப்படுகிறார்‌. கடவுளை அடைகின்ற உயிர்கள்‌ எல்லாம்‌ பூரணத்தை அடைந்தவர்கள்‌ ஆகின்றார்கள்‌. உயிர்‌களுக்குப்‌ புகலிடமாய்‌. இருப்பதும்‌ அந்தப்‌ பூரணமே, இக்‌கோட்பாட்டைத்‌ தாயுமானவர்‌ பூரணன்‌ புகல்‌ இடமதாய்‌ என்று இயம்புகின்றார்‌. 

ஆதரவு வையாமல்

இம்மண்ணுலக வாழ்க்கையில்‌ உயிர்களுக்கு நிலைத்த ஆதரவு ஒன்றுமில்லை. மக்கள்‌ இங்கு பெறுகின்ற ஆதரவுகள்‌ எல்லாம்‌ தாற்காலிகமானவைகள்‌. நதிக்குப்‌ புகலிடம்‌ கடல்‌. அதை அடைந்த பிறகு தகுந்த ஆதரவை அது பெற்றுவிட்டது எனலாம்‌. மக்களுக்கு ஆதரவாய்‌ இருப்பது பரம்பொருள்‌. பரம்பொருளை அடைந்தான பிறகு ஆதரவைப்‌ பெற்றாய்‌ விட்டது. அதைப்‌ பெறுதற்கு முன்பு மனிதனுக்கு ஓய்வு ஒழிவு இல்லை. முயற்சிகளும்‌ ஓயாது நடைபெற்றுக்‌கொண்டே இருக்கும்‌. அத்தகைய வியவகார நிலையை “ஆதரவு வையாமல்”‌ என்று அவர்‌ இயம்புகின்றார்‌. 

அறிவின்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின்‌ அருள்‌ ஆகில்‌ 

இன்பத்தைப்‌ பெறுதற்கும்‌ பூரணத்தை அடைதற்கும்‌ உயிர்கள்‌ முயன்று வருகின்றன. ஏதோ சிறிதளவு இன்‌பத்தை இடையிடையே பெறுவதும்‌ பூரணத்தை எட்டிவிட்டதாக சிற்சில வேளைகளில்‌ எண்ணிக்‌ கொள்வதும்‌ மக்களுடைய இயல்பு. அங்ஙனம்‌ இன்பத்தைப்‌ பெறுதற்‌கும்‌ பூரணத்தை அடைதற்கும்‌ ஏதுவாய்‌ இருப்பது அறிவு. மக்கள்‌ பெற்றுள்ள அறிவு நிலைத்த அறிவன்று. மேகங்‌களுக்கிடையிலுள்ள குரியன்‌ அல்லது சந்திரன்‌ தொடர்ந்து வெளிச்சம்‌ கொடுப்பதில்லை. வெளிச்சம்‌ கொடுப்பதும்‌, பிறகு அது கொடாது மறைந்து போவதும்‌ சூரிய சந்திரர்‌களுக்கிடையில்‌ நடைபெற்று வருகிறது.

நாம்‌ பெற்றுள்ள அறிவும்‌ இடையிடையே மறைக்கப்படுவதாகவும்‌ பிறகு தெளிவு பெறுவதாகவும்‌ மாறி மாறி அமைந்து வருகிற்து. அறிவு தெளிவு பெற்றிருக்கின்ற வேளையில்‌ தகுந்த நல்வினைகளை ஆற்றுகிறோம்‌. அறிவு மறைந்துகிடக்கின்ற வேளைகளில்‌ தகாத தீவினைகளையும்‌ சில சமயங்களில்‌ செய்துவிடுகின்றோம்‌. நிலைத்துள்ள தெளிந்த அறிவு நம்மிடத்து இல்லாதிருப்பதே இதற்குக்‌ காரணமாகிறது.

ஜீவர்‌களுக்கு ஜீவபோதம்‌ இருக்கும்‌ பரியந்தம்,‌ அறிவில்‌ மறைவும்‌ தெளிவும்‌ மாறிமாறி அமைந்துகொண்டே இருக்கும்‌. இறைவனுடைய பிரபஞ்ச நடைமுறை என்னும்‌ பெருந்திட்டத்தில்‌ அமைந்திருப்பது இதுவே‌. ஆக, பாரமார்த்த நிலையில் உண்மையான மறைவு ஏதுமிலா பரம்பொருள், நடைமுறையில் (வியவஹார நிலை) ஈஸ்வர சிருஷ்டியில் மாயையென இயங்குகிறது என்பது தெளிவாகிறது. இக்கோட்பாட்டை அறிவினை மறைப்பது நின்‌ அருள்‌ பின்னும்‌ அறிவின்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின்‌ அருள்‌ ஆகில்‌ என்று தாயுமானவர்‌ சொல்லுகின்றார்‌. 

எளியனேற்கு அறிவாவது ஏது அறிவிலா ஏதம் வருவகையேது

மனிதன்‌ ஏன்‌ துக்கப்படுகிறான்‌ என்கிற இந்தக்‌ கேள்வி பல்‌லாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. அதே கேள்வி இன்றைக்கும்‌ பலர்க்கிடையில்‌ எழுந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம்‌ ஆண்டுகளுக்குப்‌ பின்பும்‌ இக்கேள்வி எழும்‌. எனவே இது எக்காலத்துக்கும்‌ பொதுவான கேள்வி. இதற்கு விடை இல்லையா என்று மேலும்‌ கேட்கலாம்‌. எக்காலத்திலும்‌ இதற்கு விடையும்‌ இருக்கிறது.

மனிதன்‌ படுகிற துக்கத்துக்கெல்லாம்‌ அடிப்படைக்‌ காரணம்‌ அஞ்ஞானம்‌.  அஞ்ஞானத்தினால் அவன் புரியும் வினைகளின் முடிவு, இன்ப துன்பமெனும் இருமை. அஞ்ஞானம் அவனிடம் இருக்கும்வரை இந்தச் சுழலிலிருந்து (இதனை சம்சாரம் என்பர்) விடுதலை இல்லை. உண்மையில்‌ இத்தகைய பரிதாபகரமான நிலையிலா மனிதன்‌ இருக்கின்றான்‌? இக்கோட்பாட்டை  “எளியனேற்கு அறிவாவது ஏது அறிவிலா ஏதம் வருவகையேது” அதாவது, எளியவனான எனக்கு ஞானம் எப்படி வரும், ஞானம் இல்லாத நிலைவருவது எப்படி? என்கிறார்‌ அவர்‌.

வினையேது

சீவன் என்பது கர்ம சொரூபம். சீவன் இருக்கும்வரை கர்மம் எனும் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். அப்படிப் புரிகையில் வினை புரிபவன் நான் எனும் அபிமானம் அவனை விட்டு அகலும் வரை அவனுக்கு இருமை எனும் சிரமம் உண்டு. 

நடந்து செல்லுகின்‌ற மனிதன்‌  தனது மூட்டையை‌ கையில்‌ அல்லது தலையில்‌ எடுத்துச்‌ சென்றாகவேண்டும்‌. ஆனால்‌ அம்மனிதன்‌ இருப்புப்பாதை வண்டி ஒன்றனுக்குள்‌ ஏறியான பிறகும்‌ தன்‌ சுமையைத்‌ தலையிலேயே வைத்திருப்பானாகில்‌ அது பரிதாபகரமான நிலையாகிறது. வண்டியில்‌ ஓர்‌ இடத்தில்‌ சுமையை இறக்கி வைத்துவிட்டால்‌ அது தன்னோடு வந்துகொண்டிருக்கும்‌.  அதைச்‌ சுமக்கவேண்டிய சிரமம்‌ அவனுக்‌கில்லை.

அதுபோல, இறைவனுடைய அருளை அறிந்துகொள்கிற வரை,  அவரவர் வினையெனும்  ‌ மூட்டையை அல்லும்‌ பகலும்‌ அவரவர் சுமந்து கொண்டேயிருக்கின்றனர்‌. இறைவனுடைய அருளால்‌ 

எல்லாம்‌ நிகழ்கின்றன என்று அறிகின்றவர்கள்‌ தங்கள்‌ 

வினையை இறைவனுடைய வினை என்று உணர்ந்து இறைவனிடம்‌ ஒப்படைத்து விடுகிறார்கள்‌. பிறகு அவர்களுக்கு 

வினை வளர்வதில்லை. வினைக்கு அவர்கள்‌ கர்த்தாக்கள்‌ 

ஆவதும்‌ இல்லை. இக்கோட்பாட்டைத்‌ தாயுமானவர்‌, வினையேது அதாவது அறியாமையால் வரும் வினை ஏது என்ற கேள்வியால்் எடுத்துரைக்கிறார்.

வினைதனக்கு ஈடான காயமேது

தாயுமானவர் அடுத்து கேட்கும் கேள்வி வினைக்கு தகுந்த உடல் ஏது? காயம்‌ என்பது உடல்‌. காயத்தைப்‌ படைத்திருப்பது. ஜீவாத்மனுடைய மற்றொரு கூறு ஆகிறது. காயம்‌ வெங்‌காயம்‌ போன்றது. அதன் (வெங்காயத்தின்)‌ மேல்‌ சருகை உரிக்க உரிக்க உள்ளிருக்கும்‌ பகுதி சருகு ஆக மாறி அமைகிறது, ஜீவாத்மனுக்கு வினையிருக்கும்‌ வரையில்‌ அதன்‌ புறத்‌தோற்றமாக உடல்‌ வாழ்வு அவனுக்கு வந்து அமைகிறது. விதவிதமான உடலங்களை எடுத்தவர்களாக எண்ணிறந்த ஜீவாத்மாக்கள்‌ தென்படுகிறார்கள்‌. அவரவர்‌ வினையை நிறைவேற்றிக்‌ கொள்வதற்கான உடலங்களை அவர்கள்‌ 

எடுத்து வருகிறார்கள்‌. விலங்கின்‌ உடல்‌, பறவையின்‌ உடல்‌, 

மக்களின்‌ உடல்‌, தேவர்களின்‌ உடல்‌ ஆகிய எல்லா உடல்களும்‌ அவரவர்‌ செய்யும்‌ கர்மத்துக்கு ஏற்ற பாங்கில்‌ வந்து அமைந்திருக்கின்றன. கர்மம்‌ எத்தகையதோ உடல்‌ அத்‌தகையது. கர்மம்‌ இருக்கும்‌ வரையில்‌ உடல்‌ எடுப்பதை யாரும்‌ நிறுத்திவிட முடியாது. தான்‌ செய்யும்‌ கர்மங்களையெல்லாம்‌ இறைவனுக்கு உரியவைகள்‌ என்று அவனிடம்‌ ஒப்படைத்துவிட்டால்‌ புதிய உடல்‌ எடுக்கும்‌ அவசியம்‌ இல்லாது போய்விடுகிறது. இக்கோட்பாட்டினை வினை தனக்கு ஈடான காயமேது என்று தாயுமானவர்‌ கூறுகிறர் இக்கேள்வி மூலம்.

என்‌ இச்சா சுதந்தரம்‌ சிறிதுமிலை

உடலெடுத்தவன் வினை புரிய வேண்டும் என்பது நியதி. எனினும், என்னென்ன வினைகளை எங்கணம், எவ்விடம், எந்நேரம் புரியவேண்டும் எனும் இச்சா சுதந்தரம்‌ என்னும்‌ முரண்பாடு ஒன்றனுக்கு உட்பட்டிருப்பவன்‌ ஜீவாத்மன்‌. சரி, நம்மிடத்‌தில் பரி ‌ பூரண இச்சா சுதந்திரம்‌ உண்டா என்பதை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்‌.

துன்பம்‌ நிறைந்துள்ள இம்மண்ணுலகில்‌ வாழ்ந்திருப்பதில்லை 

என்று தீர்மானித்து உயிரை உடலினின்று ஓட்டி விடுகிற இச்சா சுதந்திரம்‌ நமக்கு உண்டா? நாம்‌ எண்ணிய எண்‌ணமெல்லாம்‌ ஈடேறும் பொருட்டு நெடுங்காலம்‌ இம்மண்ணுலகில்‌ வாழ்ந்திருக்க வேண்டும்‌ என்று இச்சித்து அவ்‌விச்சையைப்‌ பூர்த்தி பண்ணி வைக்‌கும்‌ இச்சா சுதந்திரம்‌ நமக்கு உண்டா? 

நமது இச்சா சுதந்‌திரத்தை ஆராய்ந்து பார்க்கிற இடத்து ஓர்‌ உண்மை விளங்‌குகிறது. நமது இச்சா சுதந்திரங்களுக்கு வரையறை உண்டு. சிற்சில செயல்களுக்கு நமக்கு இச்சா சுதந்தரம்‌ இல்லை. இன்னும்‌ நன்றாகத்‌ துருவி ஆராய்ந்துபார்த்தால்‌ இச்சா சுதந்தரம் ‌ ஏதோ சிறிதளவு படைத்திருப்பவர்‌ போன்று தென்படும்‌ நமக்கு, உண்மையில்‌ இச்சா சுதந்தரம்‌ இல்லவே இல்லை என்பது விளங்கும்‌. உள்ளிருக்கும்‌ அருள்‌ சக்தி ஒன்று ஆட்டுவிக்கிற பிரகாரம்‌ நாம்‌ ஆடுகின்றோம்‌, பேசவிக்கின்ற பிரகாரம்‌ நாம்‌ பேசுகிறோம்‌. அதற்கிடையில்‌ நாம்‌ இச்சா சுதந்தரம்‌ படைத்தவர்களாக நம்மைப்பற்றி எண்ணி இறுமாப்பு எய்துகிறோம்‌. நீராவி யந்திரத்தை நீராவி இயக்குவது போன்று நம்முள்‌ உள்ள அருள்‌ சக்தி நம்மை இயக்குகிறது.  அதற்காக, இதனால் நமக்கு சுதந்திரம் இல்லை, எதற்கு இந்த முயற்சிகளெல்லாம் என்பது மடமை. சாதனையின் அவசியத்தை குறைப்பதில்லை இது. வியவஹாரத்தில் சாஸ்திர அனுசரணை அவசியம்; அந்நிலையில் கர்த்துருத்துவம் உபாதி அளவில் ஏற்கப்படுகிறது; ஞானத்தின் பின் அது மித்யை எனத் தெரிகிறது. இக்கோட்பாட்டை என்‌ இச்சா சுதந்தரம்‌. சிறிதுமிலை என்று தாயுமானவர்‌ சொல்லுகிறார்‌. 

இகபரம்‌ இரண்டினுள்‌ மலைவு தீர

ஜீவர்களாகிய நமக்கு மண்ணுலக வாழ்வு என்பது ஒன்று இருக்கிறது. நாம் ‌ எடுத்துள்ள உடலத்தை உகுத்‌தான பிறகு பரவாழ்வு என்பது நமக்கு அமைகிறது, அது மண்ணுலக வாழ்வைவிட மேலானது என்று நாம்‌ கருதி வருகிறோம்‌. தேவர்கள்‌ என்று இயம்பப்பெறுகிறவர்கள்‌ எல்லாம்‌ மக்களைவிட மேலானவர்கள்‌ என்று கருதுகிறோம்‌. ஆனால்‌ உண்மையில்‌ மக்களும், தேவர்களும்  ஒருவித மயக்கத்துக்கு உட்பட்டவர்களேயாம்‌, தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனாய்‌ இருக்கிற தேவேந்திரனுக்கே மலைவு வந்துவிடுகிறது என்பது ஐதிகம்‌. மலைவு என்றால்‌ மயக்கம்‌ அல்லது பிராந்தி. ஒருகாலத்தில்‌ தேவேந்திரன்‌ தான்‌ பன்றி ஆகிவிட்டதாக எண்ணிக்கொண்ட புராணத்தை நாம் அறிவோம்.

கடவுள்‌ சொரூபமாக இருக்க வேண்டிய உயிர்கள்‌ வெவ்வேறு ஜீவ சொருபங்களாகத்‌ தங்களை எண்ணிக்கொண்டு துன்புறுகின்றனர்‌. மலைவு என்பது இதுவே. இறைவனுடைய அருளுக்குப்‌ பாத்திரமாகின்‌றபொழுது இந்த மலைவு தானே அகன்று போய்விடுகிறது. இக்கருத்தை இகபரம்‌ இரண்டினுள்‌ மலைவு தீர  என்று தாயுமானவர்‌ சொல்லுகின்றார்‌. 

தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ 

மலைவு நிறைந்த வாழ்வை மருள்‌ நிறைந்த வாழ்வு எனலாம்‌. அதற்கு நேர்‌ எதிரிடையாய்‌ இருப்பது அருளைப்‌ பெற்றுள்ள வாழ்வு ஆகும்‌. ஜீவனுக்குச்‌ சொந்தம்‌ என்று கருதப்படுகின்ற அனைத்தையும்‌ கடவுளுக்குச்‌ சொந்தம்‌ என்று உணர்தல்‌ வேண்டும்‌. இறைவனுடைய அருள்‌ கிட்டிவிட்டால்‌ இந்த உணர்வும்‌ தானே வந்துவிடுகிறது.

தனக்குச்‌ சொந்தம்‌ ஒன்றும்‌ இல்லை, எல்லாம்‌ இறைவனுக்‌குச்‌ சொந்தம்‌ என்கின்ற மனநிலையைப்‌ பெறுவதால்‌ ஜீவனுக்கு வருகிற லாபம்‌ என்ன என்கின்ற கேள்வி எழக்‌கூடும். ‌ஜீவபோதம்‌ நிறைந்துள்ள வாழ்வே யாண்டும்‌ தீங்கு நிறைந்த வாழ்வு ஆகிறது. நலம்‌ கேடு ஆகிய இரண்‌டும்‌ கலக்கப்பெற்றிருப்பது ஜீவர்களுடைய வாழ்வு. இன்‌னும்‌ அதை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கிற இடத்து,  நலத்தை விடத்‌ தீங்கு அதிகமாக ஜீவர்களுடைய வாழ்க்கையில்‌ அமைந்திருக்கிறது. இடையிடையே சிறிதளவு இன்பம்‌ ஜீவர்‌களுக்கு எட்டுகிறது. அந்த இன்பத்தைப்‌ பெறுதற்காகப்‌ பலவிதமான தீங்குகளுக்கு ஜீவன்‌ ஆளாக வேண்டும்‌. உடல்‌ வாழ்க்கையில்‌, ஒவ்வொரு படித்தரத்திலும்‌ தீங்கே பெரிதும்‌ நிறைந்திருக்கிறது. அதற்கிடையில்‌ ஒரு சிறிதளவு நலமும்‌ நலத்தினின்று வருகிற இன்பமும்‌ கிட்டுகிறது. இந்தச்‌ சிறிய ஊதியத்துக்காக அவ்வளவு பெரிய அல்லலுக்கு மனிதன்‌ ஆளாகவேண்டுமா என்கின்ற கேள்வி வருகிறது.

மனிதன்‌ அருளுக்குத்‌ தன்னைப்‌ புறம்பாக வைத்துக்கொள்‌கின்ற வரையில்‌ தீங்குகள்‌ அதிகரிக்கின்றன. அருளுக்குப்‌ பக்கத்தில்‌ வரவர, தீமைகள்‌ குறைகின்றன. குளிரில்‌ வருந்துகின்றவன்‌ நெருப்புக்குப்‌ பக்கத்தில்‌ வரவர குளிரின்‌ கொடுமையினின்‌று விடுபடுவது போன்று இறைவனுடைய அருளுக்கு உரியவன்‌ ஆகின்ற அளவு ஜீவனுடைய தீமை குறைந்துவிடுகிறது. முற்றிலும்‌ இறைவனுடைய அருளுக்‌குப்‌ பாத்திரமாய்விட்டால்‌ தீது அறவே அகன்று போய்‌விடுகிறது. ஜீவனுக்கு அப்பொழுது பாரமார்த்திகப்‌ பெரு வாழ்வு துவங்குகிறது. கடலுக்குப்‌ பக்கத்தில்‌ வந்துவிட்ட  நதி கிட்டத்தட்ட கடல்போன்று அகன்றதாகத்‌ தென்படுகிறது.

அருளுக்கு முற்றிலும்‌ பாத்திரமாயிருக்கின்ற ஜீவன்‌, தெய்வப்‌ பெற்றியே நிறைந்தவன்‌ ஆய்விடுகின்றான்‌. இக்‌கருத்தைத்‌ தீதுஇல்‌ அருள்கொண்டு இனி உணர்த்தி யெனை ஆள்வையோ என்று தாயுமானவர்‌ சொல்லுகின்றார்‌. தீய விஷயத்தில் போகும் மனதை நீக்கி எனக்கு அனுக்ரஹம் செய்து உண்மையை உணர்த்தி எனை ஆள்வாயோ என வேண்டுகிறார்.

சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே

முக்திக்கு முதல்‌ காரணமாய்‌ இருப்பவனே, சிரகிரியின்மீது  

தென்முகமாக எழுந்தருளியிருக்கும்‌ பரமாச்சாரிய வடிவினனே, ஞான சொரூபமாக இலங்கும்‌ குருவே, என்னிடத்‌துப்‌ புகுந்திருக்கும்‌ ஜீவபோதத்தைப்‌ போக்கிவிட்டு உன்‌ பரபோதத்திலேயே யான‌ நிலைத்திருக்கும்படி அருள்புரிவாயாக என்று அவர்‌ வேண்டிக்கொள்கிறார்‌..

முடிவுரை

அஞ்ஞானத்தால் வரும் கர்மாவும், அதனால் வரும் ஜன்மாவும் உன்னுடைய அனுக்ரஹம்தான். என் இச்சா சுதந்திரம் சிறிதும் இல்லை. இகலோக வாழ்க்கை ஸ்வர்க வாழ்க்கை இதிலெல்லாம் இருக்கும் விருப்பம் தீர விருப்பம் எனக்கு. தீய விஷயத்தில் போகும் மனதை நீக்கி எனக்கு அனுக்ரஹம் செய்து உண்மையை உணர்த்தி எனை ஆள்வாயோ?

ஒரு பாடலில் அனுக்ரஹம் பண்ணியதாகவும் இன்னொன்றில் பண்ணுவாயா என்று கேட்பதாகவும் இருக்கிறது. மனதில் நிஷ்டை ஏற்படும் காலத்தில் இப்படியெல்லாம் பிரார்த்தனை செய்வது என்ற பொருளில் இந்தப் பாடல்கள் அருளப்பட்டுள்ளன.

அனைத்தும் உன்னருளே! என் முயற்சி என்பது ஒன்றுமே இல்லை என்பது கருத்து. நாம் முயற்சி செய்து அடையவேண்டியதை அடைந்த பின் சொல்லவேண்டியது இது. அப்போது நமக்கு கர்வம் இருக்காது. முயற்சி பண்ணாமல் சொல்வதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம்.


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Designed with WordPress

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading