இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது (Amazon Kindle Edition)

பாடல்
தாராத அருளெலாந் தந்தருள மௌனியாய்த்
தாயனைய கருணைகாட்டித்
தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே
சாகவத சம்ப்ரதாயம்
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை
ஒன்றோ டிரண்டெனாமல்
ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம்
ஒலியெனவும் உணர்வுறாமல்
பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற
பரமஅநு பூதிவாய்க்கும்
பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை
பதிந்தநின் பழவடியர்தஞ்
சீரா யிருக்கநின தருள் வேண்டும் ஐயனே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 9
பொருள்
யாருமே கொடுக்காத அருளெலாம் தந்து, மௌனமாக, தாயைப் போல கருணை காட்டி, ஞானத்தில் மனதை ஒருமுகப்படுத்துவதைக் குறிப்பிடும் தொடர்ந்து வரும் சம்ப்ரதாயப்படி என் திருமுடியில், குருநாதர் தன் திருவடியை வைத்து, ஆராய்ச்சி பண்ண வேண்டிய அவசியமில்லாமல், மந்திர ஜபம் செய்யவேண்டிய அவசியமில்லாமல், மோக்ஷத்தை அடைய முயற்சி செய்யவேண்டிய அவசியமில்லாமல், ஒன்று இரண்டு என்றெல்லாம் நினைக்க அவசியமில்லாமல், ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம் ஒலியெனவும் உணர்வு உறாமல், பாராது பார்ப்பதே பரம அநுபூதி கிட்டும் பண்பு என்றுணர்த்தியதை, நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. எனவே நான் பிரார்த்திப்பது, எல்லாவற்றையும் கடந்த அந்நிலையில் பதிந்த நின் பழ அடியர் தம் சீராய் இருக்க நின்னருள் வேண்டும்(அதாவது, ஏகாந்த வாசம் அல்லது சத்சங்கத்திலேயே இருந்து ஞான நிஷ்டை பெறவேண்டும்) ஐயனே என் குருவான தக்ஷிணாமூரத்தியை வேண்டுகிறார் தாயுமானவர் இப்பாடலில். இதன் விளக்கத்தை இப்போது காண்போம்.
விளக்கம்
தாராத அருளெலாந் தந்தருள மௌனியாய்
நாம் பெறக்கூடியவைகள் இரண்டு இருக்கின்றன:
- பொருள்
- அருள்.
இவ்வுலக சம்பந்தமான பேறு அனைத்துக்கும் பொருள் என்பது பொதுப் பெயர்; ஐம்பொறிகளால் நுகரப்படுபவைகள்.
- ஒருவனுக்குரிய பொருளை இன்னொருவனுக்கு எடுத்து வழங்கலாம். தகுதியற்றவனுக்கும் பொருளை எடுத்துக் கொடுத்து விடமுடியும்.
- அருளோ அத்தகையதன்று. ஐம்பொறிகளால் அதை நுகரமுடியாது, ஆனால் மனதால் அதை உணரலாம். மனிதனிடத்துள்ள அஞ்ஞான இருளையும், பிரபஞ்ச வாழ்வு எனும் கீழ்மையையும் அகற்றி மெய்யறிவையும், பேரின்பத்தையும் உண்டுபண்ண வல்லது அருள்.
அருளை வழங்க எல்லாருக்கும் இயலாது. அது இறைவனுக்கே உரியது. இறைவனுடைய அருட்செல்வர்களாய் இருக்கும் நிறைஞானிகள் சிலர் ஓரளவு அதை எடுத்து வழங்கமுடியும். அப்படி அவர்கள் அதை வழங்குகின்றவிடத்தும் அது இறைவனிடத்திருந்து வருகிறது என்று ஞானிகள் இயம்புகின்றனர். எனவே அருட்செல்வம் தெய்வத்துக்கும் தெய்விகப்பண்பு அமையப் பெற்றவர்க்குமே உரியதாகிறது. இறைவனது அருளைப் பெறுதலில் பல படித்தரங்கள் இருக்கின்றன. ஏகதேசம் பரிபக்குவம் அடைந்த சாதகன் ஒருவனுக்கு, தெய்வம் தன்னிடத்து இரண்டறக்கலத்தல் என்னும் அருளை நல்குவாராகில் அது அருள் பேற்றினுள் ஒப்பு உயர்வு அற்றதாகிறது. அத்தகைய பேறு தாயுமானவருக்குக் கிடைத்தது. தாம் பெற்ற அருள் பேற்றினை அதற்கேற்ற சொற்றொடர்களைக்கொண்டு தெரிவிக்கின்றார். “தாராத அருளெலாந் தந்தருள” என்பது அவருடைய வாக்கு.
அந்த ஒப்பற்ற வாய்ப்பினைக் கொடுத்து உதவதற்கு இறைவன் எப்படி வந்தார்? அதற்கு அவர் மெளனியாய் என்று விடை கொடுக்கிறார். தாயுமான சுவாமிகளுக்கு ஞானோபதேசம் செய்தற்குத் திருமேனி தாங்கி எழுந்தருளியவர் மெளனகுரு.
குரு வேறு கடவுள் வேறு என்று ஆத்ம சாதகர்கள் கருதுவதில்லை, குருவைக் கடவுளாகக் கருதுவது அவர்கள் அனைவருடைய இயல்பு. கடவுளே தக்ஷிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்றார். அவர் செய்வது மெளனோபதேசம். எனவே திருமேனி தாங்கி தாயுமானவரை ஆட்கொள்ள வந்தவரும், தக்ஷிணமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானும் மெளனி என்னும் சொல்லுக்கு இலக்கு ஆகின்றனர். தாயுமான சுவாமிகளுக்கு மனத்தகத்து எழுந்தருளியிருந்த மெளனகுரு, தக்ஷிணாமூர்த்தி. புறத்தில் காட்சி கொடுத்து அவரை ஆட்கொள்ள வந்த மெளனகுரு திருமூலர் மரபில் வந்தவராகும். உள்ளத்திலும் புறத்திலும் முற்றிலும் ஒத்திருந்த அருட்பேறு இப்பொழுது அவருக்குக் கிட்டியது, அதைத் தாராத அருள் என்று அவர் விளக்குவது முற்றிலும் பொருத்தமானது.
தாயனைய கருணைகாட்டி
கடவுளுக்குக் கருணாகரன் என்று பெயர். கருணைக்கு இருப்பிடம் என அது பொருள்படுகிறது. கடவுள் ஒருவரே கருணை காட்ட வல்லவர். முறைதவறி நாம் அச்சொல்லை மக்களுக்கு உரியதாக்குகின்றோம். நாம் ஜீவகாருண்யம்
படைத்திருக்க வேண்டும் என்று பேசுகிறோம். கருணையின் உட்கருத்தை அறிந்தால் அச்சொல்லை நாம் நமக்குரியது
ஆக்கமாட்டோம்.
பால்கடலைக் கடைந்ததின் விளைவாக நஞ்சு உண்டாயிற்று, அதை ஏற்றுக்கொள்ள யாருக்கும் இயலவில்லை. அதை எதிர்க்க யாரும் துணியவில்லை. ஆனால் தம்மைத் தஞ்சமடைந்த உயிர்கனைக் காத்தல் பொருட்டு கடவுள் அதைத் தமக்குரியது ஆக்கிக் கொண்டார். உயிர்கள் அனைத்துக்கும் நலன் புரிதலும், அதன் விளைவாக வரும் துன்பங்களையெல்லாம் தனக்குரியதாகவே இருக்கட்டும்
என்னும் மனநிலை கருணையென்று இயம்பப்படுகிறது.
மக்களைப் பெற்றெடுத்த தாய்மார் சிலரிடம் அத்தகைய மனநிலையை ஒரு சிறிதளவு காணலாம், கடவுளிடத்துத்தான் அது முற்றிலும் நிறைந்திருக்கிறது. தாயினிடத்தும் சில வேளைகளில் நாம் அதைக் காண்பதால் தென்படுகின்ற தாயன்பை உபமானமாகவும், தென்படாத கடவுளின் கருணையை உபமேயமாகவும் வைத்துத் “தாயனைய கருணை காட்டி” என்று தாயுமானவர் இயம்புகின்றார். I
தாளிணையென் முடிசூட்டி
குருவினிடமிருந்து சிஷ்யன் பெறுகின்ற தீக்ஷை பல பாங்குகளில் நிகழ்வதுண்டு. ஸ்பர்ச தீக்ஷை, சக்ஷி” தீக்ஷை, ஸ்ரோத்ர தீக்ஷை, சங்கல்ப தீக்ஷை என தீக்ஷைகள் பலதரப்படுகின்றன். சிஷ்யனுடைய திருமேனிமீது குரு கை வைத்துச் செய்யும் தீக்ஷைக்கு ஸ்பர்ச தீக்ஷை என்று பெயர். அதில் மற்றுமோர் உயர்ந்த நிலை உண்டு. குரு முற்றிலும் பரபோதத்தில் இருக்கின்றபொழுது சில வேளைகளில் தமது திருவடிகளை சிஷ்யனுடைய மேனியின்மீது அல்லது சிரசின்
மீது காட்டுகின்றார். குருவிடமுள்ள பரபோதம் அப்பொழுது சிஷ்யனுக்கும் உண்டாகிறது. எரிந்து கொண்டிருக்கிற விறகுக் கட்டையைத் தொடுவதால் உலர்ந்த விறகுக்கட்டையிலும் தீ உண்டாகி விடுவது போன்றது. மனிதன் கால் எனும் ஆதாரத்தில் வாழ்வதுபோல குருநாதர் ஞானம் எனும் ஆதாரத்தில் வாழ்கிறார். குருவின் தாள்களைத் தாங்குவதன் பொருள், குருநாதரின் ஞானம் தனக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடும் நம்முடைய ஆணவங்கள் நீங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் புறச் சடங்கு. தமது திருவடிகளால் குரு தன்னைத் தீண்டினால் அது தனக்குக் கிடைப்பதற்கரிய பேறு என்று சிஷ்யன் உணருகிறான். அத்தகைய வாய்ப்பு தாயுமான சுவாமிகளுக்குக் கிடைத்தது, தாளிணை என் முடிசூட்டி என்று அவர் இயம்புகின்றார். குருவினுடைய திருவடிகள் இரண்டையும் தமது சிரசில் தரித்துக் கொள்ளுவதற்கான வாய்ப்பு தமக்குக் கிடைத்தது என்று அவர் தெரிவிக்கின்றார்.
அறிவிற் சமாதியே சாகவத சம்ப்ரதாயம்
கருணை கூர்ந்து குரு செய்து வைத்த தீக்ஷையினால் தமக்கு சமாதிநிலை கிட்டியதென்று அவர் கூறுகிறார். சமாதிநிலை என்றால் என்ன என்பது நம் போன்றவர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிக அண்மையில் தோன்றிய மஹாபுருஷர். அவருக்கு அடிக்கடி சமாதிநிலை கூடிவிடும். அக்காட்சியைக் காணப்பெற்றவர்கள் அவர் முன்னிலையில் ஓர் அலாதியான ஆனந்தத்தை அனுபவித்தனர். அதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள அவர்கள் ஆசை கொண்டனர். எனவே அந்த சமாதிநிலையைத் தங்களுக்கு விளக்கிக் கூறும்படி பல அன்பர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் வேண்டிக்கொண்டனர். “சொல்லில் அடங்காத அதை நான் எங்ஙனம் சொல்லால் விளக்குவேன்?”’ என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். பின்பு அவர்களுக்கு விளங்கக்கூடிய ஓர் உபமானத்தைக்கொண்டு ராமகிருஷ்ணர் சமாதிநிலையை விளக்கினார். அன்பர் ஒருவரைப் பார்த்து உனக்கு விருப்பமான உணவுப் பொருள் எது?” என்று கேட்டார், பாதாமி அல்வா தனக்கு மிக விருப்பமானது என அந்த அன்பர் தெரிவித்தார். “உன் மேனி முழுதும் நாவு ஆய்விட்டதாக நினைத்துக்கொள். மிகப்
பெரிய பாத்திரம் ஒன்றனுள் உனக்கு விருப்பமான அந்தப் பாதாமி அல்வா முறையாக சித்தப்படுத்தி வைத்திருக்கிறது என்றும் வைத்துக்கொள். உன்னை அதனுள் அமுக்கிவைத்தால் உடல் முழுதிலும் அந்தச் சுவையை ரசிப்பாய் அல்லவா? அப்படி அதை நீ ரசிப்பதைவிடப் பன்மடங்கு உயர்ந்த ஆனந்த நிலையாகும் சமாதி” என்று அவர் விளக்கினார்.
அதே சமாதியை ஆன்றோர் மற்றொரு வகையிலும் பேரானந்த நிலையினை விளக்கியிருக்கின்றனர்.அது பேரறிவு நிலையாக அமைவதும் உண்டு. அறிவு அளவையில் அடங்காது திரண்டு வருகின்றபொழுது அது பேரறிவு .ஆய்வீடுகிறது. அதன் திரட்சியை எதனோடும் ஒப்பிட முடியாது. கரை காணாத உணர்வு, தங்கு தடையற்ற உணர்வு, தெள்ளத் தெளிந்த உணர்வு இத்தகைய சொற்களைக் கொண்டு அப்பேரறிவு நிலையை ஏதோ ஒருவாறு விளக்குகிறோம். சொல்லால் விளக்குவது குறைபட்ட விளக்கம். அப்பேரறிவிலேயே திளைத்து விடுங்கால் அது மெய்யான விளக்கமாகிறது. அப்படித் தாம் பெற்ற அனுபவத்தை “அறிவிற் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம்” என்று தாயுமானவர் சாட்டுகின்றார்.
சாசுவத சம்ப்ரதாயம் என்றால் என்ன? எக்காலத்துக்கும் எது பொருந்துகிறதோ அது சாசுவதமானது. சம்ப்ரதாயம் என்பது முடிவு அல்லது கொள்கை. தொன்றுதொட்டு காலமெல்லாம் தோன்றி வந்துள்ள ஆன்றோர் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த முடிவு அதுவே என சாசவத சம்ப்ரதாயம் என்னும் இரண்டு சொற்கள் பொருள்படுகின்றன. அதாவது சமாதிநிலையை அடையும் ஒருவன் பேரறிவுப் பெருவெளியில் ஒன்றுபட்டு விடுகின்றான் என்பது அதன் கருத்து.
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை ஒன்றோடிரண்டு எனாமல் ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம் ஒலியெனவும் உணர்வுறாமல்
உலகில் நாம் பெறுகிற பேறுகள் பல காரண காரியமாய் வந்தமைகின்றன. கணக்குப் போடுகிறேம், கணக்கை அறிந்து கொள்கிறோம். விரும்புவதைப் பெறுகிறோம், மகிழ்கிறோம். இப்படி உலக நிலையில் நாம் பெறுகிற அறிவும் இன்பமும் காரண காரியமாய் வந்தமைகின்றன.
ஆனால் சமாதி நிலையில் உண்டாகும் தெள்ளத் தெளிந்த பேரறிவு நிலையானது காரண காரியம் என்னும் கோட்பாட்டில் அடங்காது எனினும் அதைப் பெறுவதற்கான மனதைப் பரிசுத்தப்படுத்தியாக வேண்டும். என்னென்ன உபாயங்களைக் கையாண்டால் மனது பரிசுத்தமடைகிறது என்பதை அவர் இப்பொழுது விளக்குகிறார்.
ஓராமல் ஓர்தல் என்னும் சொல் ஆராய்தல் எனப் பொருள்படுகிறது. உலகில் நாம் பெற்று வருபவைகளுள் நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று ஓர்கிறோம். முறையாக ஓர்ந்து பார்த்தால் பரம்போருள் ஒன்றே நித்தியமானது என்பதும் உலகிலுள்ள ஏனைய யாவும் நிலையற்றவைகள் என்பதும் நமக்கு விளங்கும். இப்படி இடையறா விசாரம் செய்தால் மனது தெளிவடைகிறது. ஆனால் சமாதியோ அப்படி ஓர்வதின் விளைவன்று, ஆதலால் அதை ஓராமல் என்று அவர் இயம்புகின்றார்.
மந்திரமும் உன்னாமல் – மனதை உறுதிப்படுத்துகிற எண்ணத்துக்கு மந்திரம் என்று பெயர். கட்வுளின் திருநாமங்களாக அமைந்துள்ள சில சொற்கள் உள்ளன. அவைகளை நாம் ஓயாது உச்சரித்துக் கொண்டிருந்தால் மனது
உறுதியடைகிறது; மந்திரஜபம் என்று அதை சொல்லுகிறோம். “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமசிவாய” என்னும் கோட்பாடு மந்திர ஜபமாகிறது. ஓயாது மந்திர ஜபம் செய்பவருக்கு மனது சுத்தியடைகிறது. உறுதியையும் அது பெற்றுவிடுகிறது. வெறும் மந்திர ஐபத்தாலேயே வேடனுடைய நிலையிலிருந்த ஒரு மனிதன் வால்மீகி மஹரிஷியாக மாறியமைந்த வரலாறு நமக்குத் தெரியும்.
ஆனால் அப்படி மனம் பண்பட்டு விடுவதின் விளைவாக சமாதிநிலை வந்து நமக்கு அமைவதன்று. முற்றிலும் மனபரிபாகம் அடைந்தான பிறகும் சமாதிநிலை கூடாது போய்விடலாம். மனபரிபாகத்தோடு சேர்ந்து இறைவனுடைய அருளும் துணைபுரிய வேண்டும், இக்கோட்பாட்டை மந்திரமும் உன்னாமல் என்று தாயுமானவர் சொல்லுகிறார். உன்னுதல் என்னும் சொல் நினைத்தல் அல்லது ஐபித்தல் எனப் பொருள்படுகிறது.
முத்திநிலை ஒன்றோடு இரண்டெனாமல் – சமாதிநிலை கூடுகின்ற இடத்து முக்தி தானே வந்து அமைந்துவிடுகிறது. முக்தி என்னும் சொல் விடுதலை எனப் பொருள்படுகிறது. யாருக்கு எதனிடத்திலிருந்து விடுதலை என்ற கேள்வி பிறக்கலாம். ஜீவாத்மாவுக்கு ஜீவபோதத்திலிருந்து விடுதலை உண்டாகிறது.
கடலில் உள்ள அலை ஒன்றுக்கு அலை என்கின்ற எல்லையினின்று விடுதலை வந்துவிட்டால் அது வடிவத்தையும் அந்த வடிவத்துக்குரிய பெயரையும் இழந்துவிடுகிறது. அதனால் அதற்கு நஷ்டம் ஒன்றுமில்லை. அது கடலோடு கடலாய் விடுகிறது. அலையாக வடிவெடுத்திருந்த போதிலும் அது உண்மையில் கடல் சொரூபமே. அலையையும் கடலையும் சீர்தூக்குதற்கு ஒன்று இரண்டு என்கின்ற எண்ணிக்கைகளைக் கையாளுவது பொருந்துமா என்னும் கேள்வி பிறக்கக்கூடும். ஆங்கு, ஒன்று இரண்டு என்கின்ற எண்ணிக்கை பேச்சுக்கு உதவுகிறதே ஒழிய பொருள் விளக்கத்துக்கு உதவுவதில்லை.
அதுபோல, சமாதிநிலையில் ஆத்மா ஜீவபோதத்தை இழந்து பரபோதத்தைப் பெற்றுவிடுகின்றபொழுது அந்த நிலையை விளக்குதற்கும் இந்த எண்ணிக்கைகள் பயன்படமாட்டா. இக்கருத்தை முத்திநிலை ஒன்றோடு இரண்டெனாமல் என்று தாயுமானவர் சொல்லுகின்றார்.
ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும். நாதமாம் ஒலியெனவும் உணர்வுறாமல் – கடவுளுக்குக் கொடுத்துள்ள பல விளக்கங்களுள் அவர் ஜோதி சொரூபம் என்பது ஒரு விளக்கமாகும், பிரபஞ்சத்தில் தென்படுகின்ற சூரியன், சோமன், அக்னி முதலியவைகளை உபமானமாகக் காட்டி அவருடைய ஜோதி சொருபம் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இருள் நிலையோடு ஒப்பிடுமிடத்தே உலகில் ஜோதி சொரூபமாயுள்ள
சூரியன், சோமன், அக்னி முதலியவைகளுக்கு விளக்கம் கிடைக்கிறது. ஒன்றோடு ஒன்று சீர்தூக்கி அறியப்படுகின்ற ஞானங்கள் அனைத்தும் இவ்வுலகைப் பற்றியவைகளாகும். கடவுள் ஒளிவடிவினர் என்பது உண்மை; ஆனால் இருளுக்கு அன்னியமாயிருக்கிற சூரிய ஒளி போன்றதல்ல கடவுளின் ஒளி. ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு சமாதி நிலையில் கடவுளுக்கு அன்னியமாக இன்னொரு பொருள் இல்லை. எனவே கடவுளினிடத்துள்ள ஒளி பிரபஞ்சத்திலுள்ள ஒளி போன்று அல்லாது ஆத்மஜோதியாகிறது.
பிரபஞ்சம் முழுதும் வடிவை உடைத்ததாகவும் வடிவைக் கடந்ததாகவும் இருக்கிறது. வடிவைக் கடந்த நிலையில் வெட்டவெளி தென்படுகிறது, இந்த வெட்டவெளிக்கு ஒரு எல்லை கிடையாது, வெட்டவெளியை ஜட ஆகாசம் என்கிறோம். இந்த ஆகாசத்தோடு கடவுள் ஒப்பிடப்படுகின்றார். ஆனால் உணர்வு அற்ற ஜட ஆகாசம் போன்றவர் அல்ல அவர். அவர் சித் ஆகாசம், அறிவுப் பெருவெளி என அச்சொல் பொருள்படுகிறது. ஆனால் வெளி என்று சொல்லுகிற இடத்து அதற்கு அன்னியமாய் இருக்கும் வடிவங்களோடு அதை ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட்டு அறியப்படுவதெல்லாம் உலகப் பொருளைப்பற்றிய ஞானமாய்வீடுகிறது. கடவுளோ உலக அமைப்பைக் கடந்தவர்; எனவே வெளி என்னும் சொல் அவரை முற்றிலும் விளக்கி விடாது.
கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்லலாமா என்னும் கேள்வி அடுத்தபடியாக வருகிறது. கைலை மலையில் எமுந்தருளியிருக்கும் நாதனை உருவம் உடையவனாகவே உலக மக்கள் கருதுகின்றனர். வைகுண்ட நாதனாகிய விஷ்ணுவுக்கும் மக்கள் அங்ஙனம் உருவம் கற்பிக்கின்றனர். முழஉருவத்தைக் கற்பித்தால்தான் சிவனை விஷ்ணுவினின்று வேறுபட்டதாக விளக்கமுடியும். பூமியில் உருவம் படைத்துள்ள கண்டங்களை ஆசியா என்றும், ஐரோப்பா என்றும் பாகுபடுத்த இயலுகிறது. ஆனால் மேலே உள்ள ஆகாசத்தை ஆசியாவுக்குரிய ஆகாசமென்றும் ஐரோப்பாவுக்குரிய ஆகாசமென்றும் பிரிவுபடுத்த முடியாது. கடவுளுக்கு நாம் உருவம் கொடுத்துவிட்டால் அவரை ஒரு எல்லைக்குள் அடைத்து விடுகின்றோம். எல்லையில் அடங்கியபொருள் எங்கும் நிறைபொருள் ஆகாது. எனவே அவருக்கு ஒரு வடிவம் கொடுப்பது அவருடைய நிறை நிலைக்கு முரண்பட்டதாகும்.
கடவுளை நாத பிரம்மம் என்கின்றோம். நாதம் என்னும் சொல் ஒலி எனப் பொருள்படுகிறது. இயற்கை முழுதுக்கும் ஒலி வடிவம் உண்டு. கடவுளும் அவருக்கு அமைந்துள்ள பெயரும் இணைபிரியாதவைகள் எனக் கருதப்படுகின்றன, சிவன், நாராயணன் என்ற பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. அவைகள் மந்த்ர சொருபம்; ஓசை வடிவங்களாக அவை யாண்டும் நிலைத்திருக்கின்றன என்பது கோட்பாடு. ஆனால் ஓசையும் இவ்வுலகை ஒட்டியதே; ஒருவித ஒசை இன்னொருவித ஓசையினின்று பிரித்தெடுத்துக் காட்டப்படுகிறது, அப்படிப் பிரிப்பதால்தான் மொழி உண்டாகிறது. ஓசையின்கண் மாறுபாடு ஏற்படாவிட்டால் மொழி தோன்றுதற்கே இடமில்லாது போய்விடும்.
இனி ஓசையில் தோற்றம், ஒடுக்கம் என்பன இருக்கின்றன. கடவுளை ஒலி வடிவம் என்று விளக்குமிடத்து அவருக்குத் தோற்றமும், ஒடுக்கமும் உண்டு என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டிவரும்; ஆனால் அத்தகைய மாறுபாடு ஒன்றும் மெய்ப்பொருளினிடத்து உண்டாவதில்லை. ஆகவே இத்தகைய விளக்கங்கள் எல்லாம் அவரை உள்ளபடி காட்டித்தரமாட்டா. இந்த விளக்கங்கள் எல்லாம் சித்த விருத்தி–மனதில் விகாரங்களாக–வந்தமைகின்றன. சமாதி நிலையில் எஞ்சியிருக்கும் மெய்ப்பொருளோ இவ்விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது.
இக்கருத்துக்களையெல்லாம் தொகுத்து ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும். நாதமாம் ஒலியெனவும் உணர்வுறாமல் என்று தாயுமானவர் இயம்புகின்றார்.
பாராது பார்ப்பதே ஏது சாதனமற்ற பரம அனுபூதி – பொருள்களை உணர்தற்கு ஐம்பொறிகளும் பயன்படுகின்றன. எந்தப் பொறியின் மூலமாகப் புற உலகத்தை நாம் நுகர்ந்தாலும் பார்த்தல் என்னும் சொல் எல்லாப் பொறிகளுக்கும் பொதுவாகிறது. ஆதலாலே கண்ணால் அப்பொருளைப் பார் என்றும், சொல்லுவதைக் கேட்டுப்பார் என்றும், ஒன்று கடினமானதா என்பதைத் தெரிந்துகொள்ளுதற்கு அதைத் தொட்டுப்பார் என்றும்,
நாற்றம் நல்லதா அல்லது கெட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளுதற்கு முகர்ந்துபார் என்றும், உணவு எப்படி
அமைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுதற்கு
சுவைத்துப்பார் என்றும் சொல்லுகிறோம். இங்ஙனம்
பார்த்தல் என்னும் செயல் ஐம்பொறிகளுக்கும் பொதுவாய்
வந்தமைகிறது.
பரம்பொருளை சாக்ஷாத்கரிப்பதற்கு இந்தக் கண் உதவாது, பொறிகள் ஐந்துமே அதற்குப் பொருந்த மாட்டா. மனதுக்கும் அது அப்பாற்பட்டது. எனினும் சமாதி நிலையில் அதைப்பற்றிய உணர்வைப் பெறுவது இப்பிரபஞ்சப் பார்வைகள் அனைத்துக்கும் மிக உயர்ந்ததாகிறது, இக்கருத்தை பாராது பார்ப்பதே என்று அவர் இயம்புகின்றார்.
சாதனம் என்னும் சொல் பழக்கம் எனவும் உபாயம் எனவும் பொருள்படுகிறது. எத்தகைய பழக்கம் பெற்று கடவுளை உணர்தல் என்னும் கேள்வி வரக்கூடும். அல்லது எத்தகைய ‘உபாயத்தைக் கையாண்டால் அவரை அடையப்பெறலாம் என்கின்ற கேள்வியும் வரக்கூடும். உண்மையில் அவர் சென்றடையாச் செம்பொருள். செய்த சாதனத்தினின்று உருவெடுக்கும் சாத்தியம் அல்ல அவர்.
அப்படியானால் சாதனங்களுக்குத் தேவையில்லையோ என்னும் கேள்வி வரும். சாதனங்களுக்குத் தேவை உண்டு. ஐம்பொறிகளையும் மனதையும் ஒமுங்குப்படுத்தி அவைகளை
ஒடுக்கி விடுதற்கே சாதனங்கள் பயன் படுகின்றன. சூரியனை
மேகங்கள் மறைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் சூரியன் மேகங்களால் மறைக்கப்படுபவன் அல்லன். காற்றடித்தோ அல்லது மழை பெய்தோ மேகங்கள் தட்டழிந்து போய்விட்டால் சூரியன் தனது சுயம் பிரகாசத்துடன் ஒளிர்வது தென்படுகிறது. மேகத்தை அகற்றுவது போன்றது ஆத்ம சாதனங்கள். மனது என்னும் மேகத்தை உரு அழிப்பதற்குச் சாதனங்கள் முற்றிலும் தேவையாய் இருக்கின்றன.
அங்ஙனம் கருவிகரணங்கள் எல்லாம் ஒடுங்கியவிடத்து சமாதி நிலையில் மெய்ப்பொருள் முற்றிலும் தன்மயமாய் ஒளிர்கிறது. ஆத்ம சாதகன் அடைய வேண்டிய முடிவான பாரமார்த்திகப் பெருநிலையை ஆங்கு அவன் அடைந்தவன் ஆகிறான். அதைப் பாராது பார்ப்பதே ஏது சாதனமற்ற பரம அனுபூதி என்னும் சொல்தொடரில் தாயுமானவர் விளக்குகிறார்.
பரம அனுபூதி வாய்க்கும் பண்பென்று உணர்த்தியது – பரம அனுபூதி என்பது முடிவான அனுபவம் எனப் பொருள்படுகிறது. அனுபூதியின் உட்பொருள் நமக்கு விளங்கவேண்டும்.
தான் பெற்றிருந்த பிறப்பு இறப்பு என்பனவெல்லாம் வெறும் மதி மயக்கத்தால் வந்தவைகள் என்பதை மெய்ஞானம் வருகின்றபொழுது அவன் அறிந்துகொள்கிறான். அது பரம அனுபூதி என்று சொல்லப்படுகிறது, சாதனங்கள் எல்லாம் மனதைப் பண்படுத்துதற்குப் பயன்படுகின்றன. மனது பண்பட்டான பிறகு அது இருக்கும் இடம் தெரியாது மறைந்து போய்விடுகிறது. மனதற்ற நிலையில் தனது நிஜ சொரூபமாகிய ஆத்மபோதம் அல்லது பரபோதம் சாதகனுக்கு வந்துவிடுகிறது.
கனவு கண்டுகொண்டிருந்தது அஞ்ஞான நிலை. அதைவிட்டு
விழித்துக்கொண்டதற்கு எது உபாயமாய் இருந்ததோ அது சாதனம். இதுகாறும் இயம்பிய நித்திய அநித்திய வஸ்து விசாரம், மந்திரஜபம், ஞான ஒளி, சங்கல்ப விகல்ப மற்ற மனவெளி, உபாசனை மூர்த்தியாகிய உருவம், அதன்
பெயராகிய நாதம் அல்லது ஒலி ஆகிய யாவும் சாதனங்களாக வாய்க்கலாயின. அந்தச் சாதனங்களே நேராக சாதகனுக்குப் பரபோத்த்தை உண்டுபண்ணிவிடவில்லை. அவனுடைய மனதை வெல்லுதற்கு அவை யாவும் பயன்பட்டன. தனக்குச் சொந்தமாயுள்ள பரபோதத்தை அறிந்து கொள்ளுதற்கு மனது என்னும் திரை நீங்கப்பெற வேண்டும். சாதனங்கள் – யாவும் அதற்கு உபாயமாய் இருந்தன. இக்கருத்தை பரம அனுபூதி வாய்க்கும் பண்பென்று உணர்த்தியது என்று தாயுமானவர் இயம்புகிறார்.
பண்பு என்னும் சொல் இங்கே உபாயம் எனப் பொருள்படுகிறது.
“பண்பென்று உணர்த்தியது பாராமல் அந்நிலை பதிந்த நின் பழ அடியர்தம் சீராயிருக்க நினதருள் வேண்டும் ஐயனே”
இத்தகைய பார்வையைப் பெற்றதன்பிறகு அந்த அனுபூதிமானுக்கு மற்றொரு சிறிய அவா வந்துவிடுகிறது. அது அஞ்ஞானத்தின் விளைவால் வருவதன்று, ஞானத்தின் முதிர்ச்சியால் வருகின்ற அவா அது. அத்தகைய உயர்ந்த மனநிலையை சாதாரணமான உலக மக்களுக்கிடையில் உண்டாகும் ஒருவித வாஞ்சையோடு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒப்பிட்டுக் கூறுகின்றார். கஞ்சாக் குடித்துப் பழகிய ஒரு மனிதனுக்கு அம்மயக்கத்தில் ஒருவித ஆனந்தம். உண்டாகிறது. அவன் திரும்பத் திரும்பக் கஞ்சாவெறியை
நாடுகின்றான். ஆனால் தனியாக அதை அனுபவிக்க அவன்
விரும்புவதில்லை. கஞ்சாக் குடிகாரர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவன் தேடியலைகின்றான். அத்தகைய குடிகாரர்கள் அகப்பட்டுவிட்டால் அவன் பூரிப்பு மிகக்கொள்ளுகின்றான். சில வேளைகளில் அத்தகைய குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் அன்பால் கட்டித் தழுவிக்கொள்வதுண்டு. கஞ்சாவைக் கசக்கி, குழாயில் வைத்து தீ மூட்டி, அவர்கள் வட்டமிட்டு. உட்கார்ந்து பேருக்கு ஒரு தம் இழுக்கின்றபொழுதே அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது ! ஈசுவரானுபூதி வாய்க்கப்பெற்றவர்களுடைய நிலை இத்தகையது. தாம் அடையப்பெற்ற பரம அனுபூதியை அடைந்துள்ள வேறு சான்றோர்களைக் காண்கின்றபொழுது அதனால் அவர்களுக்கு வரும் பரமானந்தம் சுவானுபூதியில் தாம்பெற்ற பரமானந்தத்தைவிடப் பன்மடங்கு உயர்ந்ததாகிறது. அத்தகைய நல்லார் இணக்கத்தின்பொருட்டு உடல் வாழ்க்கையிலேயே கொஞ்சம் நிலைத்திருக்கவும் அப்பெருமக்கள் விரும்புகின்றனர், “பண்பென்று உணர்த்தியது பாராமல் அந்நிலை பதிந்த நின் பழ அடியர்தம் சீராயிருக்க நினதருள் வேண்டும் ஐயனே” என இக்கருத்தைத் தாயுமானவர் இயம்புகின்றார்.
அனுபூதிமான்௧ள் பரம்பொருளில் இரண்டறக் கலந்துவிடுகின்றனர். தாங்கள் பெற்ற பெரும் பேறு அதனைப் பாரினில் உள்ளோர்க்குப் பகர்தற்கு அவர்கள் வருவதில்லை, அப்படி வருகின்ற யாரோ சிலர்தான் இத்தகைய சத்சங்கத்தில் பேரானந்தம் கொள்ளுகின்றனர். நாம் கஞ்சாக் குடிகாரர்களைச் சான்றாக எடுத்துக்கொண்டோம். ஆனால் கஞ்சா வெறியில் அவர்கள் சீராகிருப்பதில்லை. சீர்கெட்டவர்கள் ஆய்விடுகின்றனர். பாரமார்த்திகப் பெருநிலைக்குச் சென்றவர்களோ மறந்தும் ஒழுங்குப்பாட்டினின்று தவறிவிடுவதில்லை, ஜாக்கிரதம், சொப்னம், சுழித்தி ஆகிய மூன்று அவஸ்தைகளிலும் சீராயிருப்பதே அவர்களின் பெருமை. அவர்களோடு தொடர்வு வைக்கின்றவர்களுக்கெல்லாம் அச்சீரிய நிலை விரைவில் கைகூடிவீடுகிறது. எனவே நல்லார் இணக்கம் பாரமார்த்திகப் பேர் அனுபவத்தைவிட ஒருவிதத்தில் இனியதாய் இருக்கிறதென்று தாயுமானவர் போற்றுகின்றார்.
சித்தாந்த சித்தி முதலே
கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையை ஆன்றோர் ஒருவர் அரிய பாங்கில் விளக்கினார். மனது என்னும் ஒரு தத்துவத்தைக் கடவுளோடு இணைத்து வைத்தால் அப்பொழுது கடவுள் என்னும் பொருள் மனிதனாகி விடுகிறார். மனிதன் முயற்சிகள் பல எடுத்துக்கொள்கிறான். அவைகளுள் செயற்கரிய செயல் மனது என்னும் கற்பனையைத் தன்னிடத்திருந்து அகற்றுவதாம். அது அகன்று போய்விட்டால் மனிதன் தெய்வமாய் விடுகிறான். சித்தாந்த முத்தி முதலே என்னும் சொல் தொடரில் இக்கோட்பாடு அடங்கியிருக்கிறது.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
Leave a Reply