
இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது (Amazon Kindle Edition)
பாடல்
பத்திநெறி நிலைநின்றும் நவகண்ட பூமிப்
பரப்பைவல மாகவந்தும்
பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்
பசிதாக மின்றியெழுநா
மத்தியிடை நின்றும்உதிர் சருகுபுனல் வாயுவினை
வன்பசி தனக்கடைத்து
மௌனத் திருந்தும்உயர் மலைநுழைதனில் புக்கும்
மன்னு தச நாடிமுற்றுஞ்
சுத்திசெய் தும்மூல ப்ராணனோ டங்கியைச்
சோமவட் டத்தடைத்துஞ்
சொல்லரிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள்
தோறும்நிலை நிற்கவீறு
சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 11
விளக்கம்
பத்திநெறி நிலைநின்றும்
குறியும் நெறியும் இணை பிரியாதவை. குறி உள்ள இடத்தில் நெறி உண்டு. நெறி உள்ள இடத்துக் குறி உண்டு. கையாளும் உபாயத்துக்கு நெறி என்று பெயர், மார்க்கம் என்றும் வழி என்றும் அது பொருள்படுகிறது. கையாளுகிற ஒவ்வொரு உபாயமும் ஏதேனும் ஒரு நிலையில் கொண்டு சேர்க்கும். அங்ஙனம் அடையப்பெறுகிற நிலைக்குக் குறி என்று பெயர். குறிகள் அனைத்திலும் தலையாயது கடவுளை அடைதல். அதற்குமேல் மனிதன் அடையக்கூடிய குறி ஒன்றுமில்லை. நடைமுறையில், கடவுளை அடைதற்கான உபாயங்களுள் உயர்ந்தது பக்தி.
மோக்ஷஸாதன ஸாமக்ரியாம் பக்திரேவ கரியஸீ |
ஸ்வஸ்வரூபாநுஸந்தான பக்திரித்யபிதீயதே || 32 ||
என்கிறது ஆதி சங்கரரின் விவேகசூடாமணி. மோக்ஷ ஸாதனங்களில் பக்தியே தலை சிறந்தது. தனது உண்மை வடிவை ஆழ்ந்து உணர்வதே பக்தி எனப்படும்.
உயிர்கள் அனைத்தும் அன்பு சொருபம். மானிடப் பிறவியில் அன்பு பெரிதும் தெளிந்த நிலைக்கு வந்துவிடுகிறது. இந்த அன்பு முழுதையும் கடவுளிடத்துத் திருப்பிவிட்டால் அதற்கு பக்தி என்னும் பெயர் வருகிறது. பக்தியைப் பெருக்குதற்கு உபாயங்கள் பல இருக்கின்றன. இறைவனுடைய திருநாமத்தை ஓயாது ஓதுதல், அவனுடைய பெருமைகளைத் திரும்பத் திரும்பக் கேட்பது அல்லது அவனுடைய பெருமைகளைத் திரும்பத் திரும்பப் பிறர்க்கெடுத்துச் சொல்லுவது, அவனை ஆராதிப்பது, அவனுக்குக் குற்றேவல் புரிவது-—ஆகிய . இம்முறைகளைத் தொடர்ந்து கையாண்டு வந்தால் பக்தி பெருகுகிறது. கீழான இயல்புகளை அழிப்பதற்கும், கடவுள் தன்மைவாய்ந்த மேலாம் இயல்புகளை வளர்ப்பதற்கும் பக்திக்கு நிகரான சாதனமில்லை. இக் கோட்பாட்டை பத்தி நெறி நிலை நின்று என்று தாயுமானவர் பகர்கிறார்.
நவகண்ட பூமிப்பரப்பை வலமாக வந்தும்
நவகண்ட பூமிப் பரப்பை வலமாக வந்தும் என்று தாயுமானவர் இயம்புகிறார். வசதிக்காக ஒன்பது பெரிய கண்டங்களாக உலகிலுள்ள பிரதேசங்கள் ஈண்டு பிரித்தும் பகரப்பட்டிருக்கின்றன. (பரத கண்டம், கிம்புருட கண்டம், அரிகண்டம், இளாவிரத கண்டம், பத்ராசு கண்டம், கேதுமாலி கண்டம், இரணிய கண்டம், குரு கண்டம் என்று சொல்கிறார்கள்). அது எங்கும் வியாபித்திருப்பதால் பரப்பு என்று பகரப்பெறுகிறது. சுற்றி வருகின்றபொழுது நடுநாயகமாக இருக்கின்ற இடத்தை வலது கை சார்ந்திருக்குமாகில் வலம் வருதல் என அது பெயர் பெறுகிறது. கோவிலுக்குள் வலம் வருகின்றபொழுது அவனுடைய வலது கை கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்குப் பக்கத்தில் இருக்கிறது. இடதுகை எட்டியிருக்கிறது. இதே பாங்கு நதியை வலம் வருதலிலும் பூமியை வலம் வருதவிலும் கையாளப்படுகிறது. வலம் வருதலை பிரதக்ஷிணம் பண்ணுதல் என்றும் பகர்கிறோம்.
தாயுமானவர் “பக்தி நெறி நிலை நின்றும்” என்ற முந்தைய சொற்றொடரின்பின் இச்சொற்றொடரை வைத்தது, மனிதர் மேற்கொள்ளும் தீர்த்த யாத்திரையை கோடிட்டுக்காட்டுவது. தீர்த்தம்’ எனும் வடமொழி “புனிதம்/பரிசுத்தம்’ எனும் பொருளைத் தருவதாகும். “தீது நீங்கக் கடலாடியும், மாசுபோகப் புனலாடியும்’ எனவரும் பட்டினப் பாலை அடிகளால் அறியலாம். கோமுக்கிலிருந்து கங்கா ஸாகர் வரை போகும் பக்தர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்
கடலுக்குப் பரவை என்பது மற்றொரு பெயர். பக்தி விசுவாசத்துடன் கடலில் நீராடுகின்றபொழுது அது ஒரு புண்ணிய கர்மமெனக் கருதப்படுகிறது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோகர்ணம், துவாரகை, பூரி, கங்கா சாகரம் ஆகிய இடங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது புண்ணிய கர்மமாகக் கருதப்படுகிறது. பல்லாயிரம்பேர் விசேஷநாட்களில் ஆங்குச் சென்று நீராடுவதைக் காணலாம். அப்படி நீராடுகின்றபோது அவர்கள் கடவுள் சிந்தனையில்
ஆழ்ந்திருக்கிறார்கள், தங்களுடைய பாபங்கள் எல்லாம்
நீங்கிவிட்டதாகவும் அவர்கள் உணர்கிறார்கள். கடல் முழுக்கை முகாமையாக வைத்துக்கொண்டு தங்களைப் புனிதம் அடைந்தவர்களாக மக்கள் கருதுவார்களாகில் அச்செயலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நல்ல ஆத்ம சாதனமாகும். இக்கருத்தை பரவையிடை மூழ்கியும் என்று தாயுமானவர்
பகர்கிறார்.
நதிகளையெல்லாம் தெய்வீகம் வாய்க்கப்பெற்றவைகள் என்று கருதுவது நம்நாட்டு ஐதிகம் ஆகும். அந்த நதிகளுள் மிகப் புனிதம் வாய்ந்தவைகளாக ஏழு நதிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய இவ்வேழும் சிறப்பாகப் புனிதம் வாய்க்கப் பெற்றவைகள். இவ்வேழினுள் இன்றைக்கு சரஸ்வதி தோற்றத்தில் இல்லை. இப்புண்ணிய நதிகளுள் கங்கைக்குச் சிறப்பான மதிப்பு உண்டு. பிரம்மவாரி என்று அது பகரப்பெறுகிறது. அது வெறும் குருட்டு நம்பிக்கையல்ல. அதற்கேற்ற ஆதாரம் இருக்கிறது. கங்கா ஸ்நானத்தின் மூலம் மனிதனுக்கு மனபரிபாகம் விரைவில் அமைகிறது என்பது ஆன்றோர்கள் கண்டறிந்துள்ள உண்மையாகும். ஸ்தல யாத்திரை போகின்றவர்கள் இப்புண்ணிய நதிகளில் எல்லாம் சீரிய மனப்பான்மையுடன், தெய்விகச் சிந்தனையில் மூழ்கி நீராடுகிறார்கள். இந்த நதிகளையே தெய்வ சொருபமாக அவர்கள் உணர்கிறார்கள். அதற்கேற்கப அவர்களுடைய மனம் திருந்தி அமைவது திண்ணம். இச்செயலை நதிகளிடை மூழ்கியும் என்று அண்ணல் இயம்புகின்றார்.
பசிதாகமின்றி யெழுநா மத்தியிடை நின்றும்
நெருப்புக்கு எழுகா என்பது ஒரு பெயர். ஏழு நாக்குகளை உடையது என அது பொருள்படுகிறது. கொழுந்து விட்டு அது எரியும்போது நாக்குகளை உயர நீட்டுவது போன்று அதன் கொழுந்துகள் தென்படுகின்றன. மனிதன் ஒரு நல்ல மனநிலையை தனக்குத்தானே உண்டுபண்ணிக் கொள்வானாகில் தீயின் வெப்பம் தன்மீது தட்டாத பாங்கை அவன் பெ ற்றுவிட முடியும். பாமரர்க்கிடையில் பலபேர் ஆண்டுதோறும் தீயின்மீது நடப்பதை இன்றைக்கும் காண்கிறோம். தீயில் அவர்களுடைய தேகம் காந்திப் போவதில்லை. பூவின்மீது நடப்பதுபோன்று தீயின்மீது அவர் நடக்கின்றனர். தீ மிதியை பூ மிதி என்றே அவர்களில் பலர் பகர்கின்றனர். நல்ல மனநிலையைக் கொண்டு வந்து விட்டால் தீயின் வெப்பமே மனிதனுடைய உடலைத் தாக்காது போய்விடுகிறது என்பதற்கு இச்செயல்கள் சான்று
ஆகும்.
மனிதன் புரிகின்ற தபசுகளில் பஞ்சாகீனி தபசு என்
ஒன்று உண்டு. தரையில் ஓர் இடத்தில் மனிதன் அமர்ந்துகொள்கிறான். நான்கு திக்குகளிலும் சுடர்விட்டு
அரியும் தீ மூட்டப்பெறுகிறது. தலைக்குமேல் சூரிய வெப்பம் இருக்கிறது! ஆக, இந்த ஐந்தும் சேர்ந்து பஞ்சாக்கினி என்று பகரப்பெறுகின்றன. ஆங்கு அமர்தற்கு முன்பு அத்தபஸ்வி, தான் பசியினாலும் தாகத்தினாலும் பாதிக்கப்படுவதில்லை என்று ஆழ்ந்து தீர்மானிக்கின்றான். ஆழ்ந்த தீர்மானத்துக்கு உறுதியான சங்கற்பம் என்பது மற்றொரு பெயர். அப்படி எண்ணுவதின் விளைவாக நெடுநாளைக்கு மனிதனுக்குப் பசியும் தாகமும் உண்டாவதில்லை. உணவைப் பற்றிய எண்ணம் வருவதில்லை. நீர் அருந்தாது அவன் நெடுநாள் உயிர் வாழ்ந்திருக்கிறான். நாலா பக்கமும் தீ வாட்டிக்
கொண்டிருப்பதையும் அவன் பொருள்படுத்துவதில்லை. எண்ணத்தின் வலிவு எவ்வளவு பெரியது என்பதை இச்செயல் எடுத்துக்காட்டுகிறது.
சாதாரணமான வாழ்க்கையில் மனிதன் பசி தாகத்துக்கு அடிமைப்பட்டவனாகிறான். வெந்தழலின் வெப்பம் அவனைத் துன்புறுத்தக்கூடியது. ஆனால் உயர்ந்ததோர் மனநிலையை வரவழைத்துக் கொண்டாலோ இவை யாவையும் மனிதன் வென்றவன் ஆகின்றான். இக்கோட்பாட்டை பசிதாகமின்றி யெழுநா மத்தியிடை நின்றும் என்று தாயுமானவர் சொல்லுகிறார்.
உதிர் சருகு புனல் வாயுவினை வன்பசி தனக்கு அடைத்தும் மெளனத்திருந்தும்
வேறுசிலர் மற்றொரு போக்கில் கடுந்தவம் புரிவதுண்டு. அப்படித் தவம்புரிந்து கொண்டிருப்பதற்கிடையில் பசியுண்டானால் அதைப் போக்குதற்கு ஏற்ற எளிய உபாயங்களைக் கையாளுகின்றனர். மரத்திலுள்ள பச்சை இலைகவையோ, காய்,கனிகளையோ அவர்கள் கொய்வதில்லை. மேலும் கனிவர்க்கங்கள் காலமெல்லாம் அகப்பட மாட்டா. எக்காலத்திலும் எளிதில் அகப்படக்கூடிய உதிர்ந்த சருகுகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு ஏதோ குறிப்பிட்ட சில வேலைகளில் தண்ணீரில் ஊறவைத்து மென்று விழுங்குகின்றனர். உடலுக்கு முற்றிலும் அவசியமாக இருக்கின்ற நீரையும் சிறிது அருந்துகின்றனர். புனல் என்பது நீருக்கு அமைந்துள்ள மற்றொரு பெயராகும். மனிதன் சருகைத் தின்று உயிர் வாழ்ந்திருக்க முடியுமா என்பது கேள்வி. சாஸ்திரம் அதை ஆமோதிக்கின்றதா என்பது அடுத்த கேள்வி. அப்போதைக்கப்போது சமைத்து ஆயத்தப்படுத்தியுள்ள சத்து நிறைந்த சுவையான உணவையே மனிதன் உட்கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரப் பிரமாணம். பிறகு சருகைத் தின்று உடல் மெலிந்திருப்பது யோகியர்களுக்கும் தவசிகளுக்கும் பொருந்தாது. எனினும் உடல் உணர்வைக் கடந்த நிலையில் யாரோ சிலர் கடுந்தவம் புரிபவர்கள் இருக்கின்றார்கள்,
அவர்கள் பல நாளைக்கு ஒரு தடவை சருகு போன்ற சத்தற்ற
உணவை உண்டு உடலை மறந்திருக்கின்றனர். அதற்கிடையில் வாயு ஸ்தம்பனம் என்னும் ஒருவகை சாதனத்தைச் செய்கின்றனர். அதன் வாயிலாக நெடுநானைக்குப் பசியைப்பற்றிய உணர்வே மனிதனுக்கு இல்லாது போய்விடுகிறது. இத்தகைய சம்பவம் இயற்கையில் அசாதாரணமானதன்று. மற்ற உயிர்களிடத்திருந்தும் மனிதன் இப் பாடத்தைக் கற்றிருக்கிறான். உறைபனி நிறைந்துள்ள
இமயமலை, வடதுருவம் போன்ற இடங்களில் வசிக்கும் ஜந்துக்கள் பணி காலத்தில் நாவை நாசித்துவாரத்தில் விட்டு அடைத்துக்கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன; அப்போது பசியில்லை, தாகமில்லை, சுவாசிக்கவேண்டிய அவசியமுமில்லை; அப்படியிருக்க மௌனம் இன்றியமையாதது.
அத்தகைய நிலையை ஆத்ம சாதகன் ஒருவன் யோகப்பயிற்சியால் வரவழைத்துக் கொள்ளுகின்றான். நெடு நாளைக்கு அத்தகைய நிலையிலிருந்து நிஷ்டை புரிவது ஒரு சாரார்க்குச் சாத்தியமாகிறது. இக்கருத்தை உதிர் சருகு புனல் வாயுவினை வன்பசி தனக்கு அடைத்தும் மெளனத்திருந்தும் என்று தாயுமானவர் இயம்புகின்றார்.
உயர் மலைநுழைதனில் புக்கும்
இப்படியெல்லாம் உடல் வருத்தி, ஆத்ம நிஷ்டை, புரிவதற்கு உயரமாயிருக்கின்ற மலைக்குகை மிகப் பொருத்தமானது. குகைக்கு நுழைவு என்பது மற்றொரு பெயர். மலையிலே மேலே போகப்போக வெப்பம் குறைவு, குளிர் அதிகம். உயரமாயிருக்கின்ற மலையிலே குகைக்குள்ளே போய்விட்டால் ஆங்கு வெப்பம் குளிர் ஆகிய இரண்டினுடைய கொடுமை கிடையாது. உடலுக்கு ஆயாசம் உண்டாவதில்லை. வியர்வை வருவதில்லை. குளிரால் நடுக்கம் எடுப்பதில்லை. களர்வடையாத முறையில் உடல் இருக்கிறது. அங்கு எந்த விதமான ஓசை, ஒலியும் எட்டுவதில்லை. அமைதிக்கு நிலைக்களம் மலை நுழைவு. ஆங்கு அமர்க்திருக்கின்றவன் தன்னுடைய ஹிருதயம் துடிக்கின்ற ஓசையைக் கேட்கமுடியும். ஆனால் இயற்கையின் வேறு எந்த ஓசையையும் அவன் கேட்பதில்லை. தன் மனம் ஒடுங்கி இருந்தால் அவனுக்கு எல்லாம் அமைதி. மனதிலே எண்ணம் என்னும் அலைகள் உதித்தால் அந்த எண்ணமே பெரும் ஓசைகளாக அவனுக்குப் புலப்படும். எண்ணம் ஒன்றையும் எண்ணாது, இயற்கையின் ஓசை எதையும் கேளாது தன்னில் தானாய் அமைதியுற்றிருப்பதற்கு மலைக் குகை பொருத்தமான இடமாகும். அக்கருத்தை உயர் மலைநுழைதனில் புக்கும் என்று அவர் பகர்கின்றார்.
மன்னு தச நாடி முற்றுஞ் சுத்திசெய்தும்
மனிதனுக்கு உடல் வாழ்வு நடைபெற்று வருவதை நாடிகள் விளக்கிக்காட்டுகின்றன. நாடியின் செயலின் மூலமாக ஒரு மனிதன் உடல் நலமுற்றிருக்கின்றானா அல்லவா என்பதை அறிந்துகொள்ள முடியும். நாடியின் செயலுக்கும் சுவாசத்தினுடைய போக்கு வரவுக்கும் தொடர்வு இருக்கிறது. பிராணாயாமம் செய்தல் மூலம் சுவாசத்தினுடைய போக்கு வரவு ஒழுங்காகிறது. பிராணனுடைய செயலும் அதனால் ஒழுங்குப்படுகிறது. அத்துடன் பிராணாயாமத்தின் துணைகொண்டு நாடிகளைச் சுத்தப்படுத்தலாம். நாடிகள் சுத்தியடைந்து வருங்கால் மானுட உடலம் ஓர் அற்புதமான
கருவி என்பதும் ஆத்ம சாதகனுக்கு விளங்கும். முறையான பிராணாயாமத்தின் மூலம் நாடிகள் சுத்தியடைந்துவிட்டால் மானுட சரீரத்துக்குள்ளேயே அரிய ஓசைகளைக் கேட்கலாம். அரிய ஜோதி தர்சனத்தையும் உள்ளம் என்னும் பெருங்கோயிலினுள் காணலாம். நாடி சுத்தியினுடைய விளைவு அவ்வளவு மேலானதாய் இருக்கிறது.
உடலில் 72000 நாடிகள் (ஆற்றல் வழிகள் – பாதைகள்) உள்ளன. அவற்றுள் 101 பிரதானமானவை. மூன்று முக்கிய நாடிகள் – இடா, பிங்கலா, ஷுஷும்நா. இம்மூன்றை சந்த்ர கலா, ஸூர்ய கலா, அக்னிகலா என்றும் கூறுவர். இம்மூன்றில் முக்கியமானது ஷுஷும்நா நாடி (ப்ரம்ம நாடி என்றும் அழைப்பர்). சரீரத்தில் நாடிகள் பல இருப்பினும் அவைகளுள் பத்து மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. தசநாடிகள் என்று அவைகள் இயம்பப்பெறுகின்றன. மன்னுதல் என்னும் சொல் நிலைபெற்றிருத்தல் எனப் பொருள்படுகிறது. சரீரம் வாழ்ந்திருக்கும் வரை நாடிகள் அதனுள் நிலைபெற்றிருக்கின்றன. இக்கோட்பாட்டை மன்னுதச தாடி முற்றும் சுத்தி செய்தும் என்று தாயுமானவர் சொல்லுகின்றார்.
மூலப் பிராணனோடு அங்கியைச் சோமவட்டத்து அடைத்தும்
பிராணாயாமத்தை முறையாக செய்வதன் மூலம் யோகி ஒருவன் மற்றொருவித பரிபாகத்தை அடைய முடியும். அவனுடைய சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. அவைகளுள் சரீரத்தின் அடிப்பகுதியில் இருப்பது மூலாதாரம். வீட்டுக்கு அஸ்தி்வாரம் போல, ஆத்ம சாதனத்திற்கு அடிப்படை மூலாதாரம்.
வாழ்க்கைக்குத் துணையாய் இருப்பது பிராணன். உடல் வாழ்க்கையில் பிராணன் ஒழுங்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்குமளவு ஆயுள் நீடிக்கும், வாழ்வு திட்பமுடையதாகும். அங்கி என்னும் சொல் அக்னி எனப் பொருள்படுகிறது. பிராணன் சரியாக செயல் புரிந்துகொண்டிருக்கின்ற பொழுது உடலெங்கும் கதகதப்பு இருக்கிறது, அது அக்னியின் செயலாகிறது.
மூலாதாரத்தில் பிராணனும் அக்னியும் ஒழுங்காகச் செயல் புரிந்துகொண்ருக்கின்றபொழுது வாழ்வும் சரியாக நிகழ்கிறது. பிராணாயாமத்தின் மூலம் மூலாதாரத்திலிருக்கின்ற பிராணனையும் அக்னியையும் சரீரத்தின் மேல் பகுதியிலிருக்கின்ற ஏனைய ஆதாரங்களுக்குச் செலுத்துவது சாத்தியமாகிறது.
ஆறு ஆதாரங்களுக்குமேல் ஏழாம் ஞான பூமியாகிய கபாலத்தில், சோமவட்டம் அல்லது சந்திரமண்டலம் என்பது ஒன்று இருக்கிறது. பிராணனும் அக்னியும் இந்தச் சந்திர மண்டலத்துக்கு எழுப்பப்படுங்கால் மனதுக்குச் சீரியதேக்கம் உண்டாகிறது. சமாதி நிலை அது எனப் பகரலாம். இரவு பகலற்ற இடம் என்றும் அது இயம்பப்பெறுகிறது. காலம் கடந்து சென்றுகொண்டிருப்பது, ஆத்ம சாதகனுக்கு அப்பொழுது கருத்தில் சிறிதேனும் பதிவதில்லை. காலத்தைக் கடந்த நிலையில் அவன் அமைதியுற்றிருந்து விடுகிறான். இந்நிலையை மூலப் பிராணனோடு அங்கியைச் சோமவட்டத்து அடைத்தும் என்று அவர் பகர்கின்றார். யோக சாத்தித்தில், குண்டலினி யோகத்தில் சொல்லியபடி, மூலாதாரத்திலிருந்து ப்ராணனை சோம வட்டம் என்ற இடத்தில் அல்லது ஸஹஸ்ராரத்திற்குக் கொண்டுபோய் என்கிறார் தாயுமானவர்.
சொல்லரிய அமுதுண்டும்
அமிர்த தாரையை உண்டும் என்ற இச்சொல்லின் விளக்கத்தைக் காண்போம்.
அக்னியும் சூரியனும் சந்திரனும் பிராணனும் ஏழாம் ஞான பூமியில் ஒன்று கூடுங்கால் அமிர்ததாரை என்பது ஒன்று யோகிக்கு உச்சந்தலையில் உண்டாகிறது. சிவபெருமானுக்கு உச்சந்தலையிலிருந்து கங்கை பொழிவதுபோன்று
அமிர்ததாரை யோகியினுடைய சகஸ்ராரத்தினின்று வடிகிறது, யோகியானவன் அதைப் பானம் பண்ண ஆரம்பித்து விடுகிறான். அப்பொழுது அவன் அடைகின்ற ஆனந்தம் சொல்லற்கரியதாகிறது. அந்த அமிர்தத்தை உண்டு ஆனந்த பரவசத்தில் யோகி இருந்து விடுகிறான். இக்கோட்பாட்டை சொல்லரிய அமுதுண்டும் என்று அண்ணல் இயம்புகின்றார் .
அற்பவுடல் கற்பங்கள் தோறும்நிலை நிற்கவீறு் சித்திசெய்து
உடல் நிலையற்றது என்பது யாரும் அறிந்த விஷயம். தத்வ விசாரம் இல்லாதவர்களும் உடல் ஏதோ ஒருநாள் அழிந்திடும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எனினும் அதை நன்கு பாதுகாத்து வைப்பதில் உயிர்களனைத்தும் ஊக்கம் கொண்டிருக்கின்றன. அவைகள் எடுத்துக்கொள்கின்ற முயற்சிகள் அனைத்தும் உடலை நெடிது பாதுகாத்து வைத்தல் பொருட்டேயாம்.
அதற்கு அமைந்ருக்கின்றன பெயர்களே அது நிலையற்றது என்பதைக் குறிக்கின்றன. எது தகனமாய்க் கொண்டிருக்கிறதோ அது தேகம். எது ஜீரணமாய்க் கொண்டிருக்கிறதோ அது சரீரம். அது அழியும் தன்மையுடையது என்பதை இங்ஙனம் அதற்கு
அமைந்துள்ள பெயர்களே காட்டித்தருகின்றன.
ஆயினும், நெறியான வாழககையின் மூலமாகவும் பொருத்தமான உணவின் மூலமாகவும் தகுந்த தேகப்பயிற்சியின் மூலமாகவும், தேகத்தின் ஆயுள் குறைந்துபட்டுப் போகாதிருக்கும்படி பாதுகாக்கலாம். தேகத்தை ஒரு தேவாலயமாக கருதி அதை நன்கு பயன்படுத்துவதே ஒருவித ஆத்ம சாதனமாகும்.
மணி, மந்த்ரம், ஒளஷதம் ஆகியவைகளின் துணைகொண்டு காயகற்பம் அல்லது காயசித்தி செய்வது சில யோகியர்களுக்குச் சாத்தியமாகிறது. காயசித்தி செய்வதன் மூலம் நெடுங்காலத்துக்கு அது அழிந்துபட்டுப் போகாது பாதுகாத்து வைக்கலாம். ஒரு கல்ப காலம் வரையிலும் ஒரு சரீரம் நிலைத்திருக்கும்படிச் செய்யலாம் என்னும் ஐதிகம் மக்களுக்கிடையில் இருந்து வருகிறது. ஆனால் ஸ்தூல
சரீரத்தை நானூறு அல்லது ஐந்நூறு வருஷங்களுக்குமேல்
வைத்திருந்த மகான்களைப்பற்றி உலகம் ஒன்றும் அறியாது.
மிக அண்மையில், காசியில் இருந்த திரைலிங்க சுவாமிகள்,
சுமார் ஐந்நூறு வருஷகாலம் அவருடைய உடலுக்குக் காயசித்தி செய்து காப்பாற்றி வைத்திருந்தார். அதன் பிறகு அது அழிந்துபட்டுப் போய்விட்டது, சித்தர்களில் சிலர் காயத்துடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்னும் கொள்கை மக்களுக்கிடையில் உலவி வருகிறது. ஆனால் அவர்களை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை, உடலை நெடுங்காலம் காப்பாற்றி வைக்க யோகிக்கு முடியும் என்னும் உண்மை மறுக்கமுடியாதது. அதற்கேற்ற மேலான
சாதனமுறைகளைக் கையாளுவது அவசியமாகிறது. வீறு சித்தி என்னும் சொல் மேலான சாதனமுறை எனப்பொருள்படுகிறது. இப்படி உடலைப் பாதுகாத்து வைக்கும் யோகியர்களுடைய பழக்கத்தை அற்ப உடல் கற்பங்கள்தோறும் நிலை நிற்க வீறுசித்தி செய்தும் என்று தாயுமானவர் இயம்புகின்றார்.
ஞான மலதுகதி கூடுமோ சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே.
இத்தனை விதமான சாதனங்களையெல்லாம் செய்வது
உயர்ந்த சாத்தியம் ஒன்றை அடைதல் பொருட்டேயாம்.
நெடுந்தூரம் பாய்கிற நதி கடைசியில் கடலைப்போய்ச் சேர்ந்தாகவேண்டும். கடலை அடைதல் அதன் குறி, அதன்
பொருட்டு ஓயாது அது ஓடிக்கொண்டிருப்பது அதன் நெறி.
அதே பாங்கில் ஜீவாத்மன் பல பிறவிகளை எடுக்கின்றான். அவைகளின் வாயிலாக படிப்படியாகத் தன்னை மேல்நிலைக்குக் கொண்டுவருகின்றான். பிறவிகளுள் பெரியதாகிய மானுடப் பிறவியைப் பிறகு எடுக்கின்றான். மானுடப் பிறவியில் ஆத்ம சாதனங்கள் பல செய்வது சாத்தியமாகிறது.
அந்த சாதனவகைகளுள் பலவற்றை இப்பாடலில் இது காறும் ஆராய்ந்தோம். அவைகள் செயற்கரிய செயல்களாக இருக்கின்றன. ஞானத்தைப் பெறுதல் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை அறிந்து கொள்ளுதலாம். சிறந்த இந்த அறிவைத்தான் ஞானம் எனப் பெரியவர்கள் பகர்ந்துள்ளார்கள். ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை அறிந்துகொண்ட ஜீவன், பிறகு பரமாத்மாவிலேயே சேர்ந்துவிடுகிறான். அதாவது “ஜீவன் தனக்கு பரமாத்மாவிலிருந்து வேறுபாடு இல்லை என்பதை அறிகிறான்.” “ஜீவபோதம் மறைந்து, ப்ரஹ்ம ஐக்ய ஞானம் வெளிப்படுகிறது.” கடலையடைந்த நதி, நதி என்னும் சிறிய வியக்தியை இழந்துவிடுகிறது. பரமாத்மாவை அறிகின்ற ஜீவன், ஜீவபோதம் என்கின்ற சிறிய வியக்தியை இழந்துவிட்டு பரபோதம் என்கின்ற பெரிய வியக்தியைப் பெறுகின்றான்.
அதைப் பெற்றுவிடுவதுதான் சீவனுக்கு அமைந்துள்ள முடிவான குறி ஆகிறது. ஆனால் அதைப் பெறாது இதுவரையில் சொல்லியுள்ள சாதனங்களையெல்லாம் ஏராளமாகச் செய்து கொண்டு போவதால் ஜீவன் முடிவான நன்மையை அடைந்தவன் ஆகமாட்டான். ஞானத்தைப் பெறுவது தீவிர சாதகர்களாக இருக்கின்ற சிலருக்கு மிக எளிதாய் விடுகிறது.
கடலினின்று மேலே ஆவியாகக் கிளம்பிய நீர் மீண்டும்
மழைத்துளியாகக் கடலுக்குள்ளே விழுந்துவிடுமாகில் புறப்பட்ட இடத்துக்கு அது எளிதில் வந்து சேர்ந்த நீர்த்துளியாகிறது. ஆனால் அதற்கு மாறாக அது நெடுந்தூரத்துக்கு அப்பால் ஒரு மலை உச்சியின்மீது உறைபனியாக விழுந்து பல்லாயிரம் ஆண்டு காத்திருந்து, பிறகு உருகி நீராக நதியில் சேர்ந்து, பல மாறுபாடுகளுக்கு உட்பட்டு, கடலை அடையுமானல் குறியை அடைதற்கு அது எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகக் கடினமானவைகளே என்பது சொல்லாமலே விளங்குகிறது. கடலைப் போய்ச் சேருதல் என்னும் செயல் அதன் பிறகாவது பூர்த்தியாகிவிடுகிறது.
அதே பாங்கில் ஜீவாத்மன் இத்தனை விதமான சாதனங்களையெல்லாம் செய்வது தேவையில்லாத பல சாதனங்களைச் செய்வதற்கு ஒப்பாகிறது, அவைகளையெல்லாம் செய்தானபிறகும் அவன் குறியை வந்து அடையாது போய்விடுவானாகில் அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் அனர்த்தமாய்ப் போய்விடுகின்றன. தமது முயற்சி அனர்த்தமாய்ப் போய்விடலாகாது என்னும் உணர்வினல் ஞான மலதுகதி கூடுமோ என்று தாயுமானவர் பரம்பொருளிட த்துப் பணிவுடன் விண்ணப்பிக்கின்றார்.
ஞான நெறியில் முறையறிந்து போகின்றவர்களுக்கு சாதனங்கள் ஒருநாளும் கடினமானவைகள் ஆகமாட்டா. நீரினுள் செல்லுவது மீனுக்கு எவ்வளவு சுலபமானதோ அவ்வளவு சுலபமானது ஞானிக்குத் தனது யதார்த்த சொரூபத்தை அறிந்து அதில் நிலை நிற்பது. ஆனால் மனபரிபாகம் அடையாத அவிவேகிகள் நேர்வழியை அறிந்துகொள்ளாது, என்னென்னவோ முறைகளக் கையாண்டு பெரும் பாடுபடுகிறார்கள்.
எண்ணாயிரத்தாண்டு யோகமிருக்கினும்
கண்ணாரமுதினைக் கண்டறிவாரில்லை (திருமூலர்)
இந்தத் தொகுப்பில், யோகப் பயிற்சிகளைக் காட்டிலும் ஞானமே ஒருவனைப் பிறவித் தளையிலிருந்து விடுவிக்கும் என்ற ஆழமான கருத்து திருமூலரின் வாக்கோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
அயர்ந்து தூங்குகின்ற ஒரு மனிதனுக்கு சொப்பனம் உண்டாகிறது. அந்த சொப்பனம் இன்பம் தருகிறது. பொருந்தாத சொப்பனம் துன்பம் தருகிறது. சொப்பனத்தின் மூலம் ஒருவன் சுவர்க்கத்தில் இருப்பதுண்டு ; நரகத்தில் இடர்ப்படுவதும் உண்டு. கனவில் படாதபாடுபட்டுப் பொருள் சம்பாதிப்பவருமுண்டு ; ஆத்ம சாதனங்கள் செய்கின்றவர்களும் இருக்கின்றனர். மனபரிபாகம் அடைந்திருப்பவர்களுக்கு நல்ல கனவு ; கெட்ட மனமுடையவர்களுக்குத் தீய கனவு. பிறகு கனவினின்று விழித்துக் கொண்டால் நலம், கேடு, பாடுபடுதல், சாதனம் புரிதல் ஆகிய அனைத்தும் பறந்தோடி விடுகின்றன.
ஞானத்தை பெறுவது சொப்பனத்தினின்று விழித்துக்கொள்ளுதற்கு ஒப்பானது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெளிவாக விளங்குகிறது. ஞானத்தைப் பெறுவது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள்.
யஜந்து தேவான் குர்வந்து கர்மாணி பஜந்து தேவதா: |
ஆத்மைக்யபோதேந விநா விமுக்தி: ந ஸித்யதி ப்ரஹ்மசதாந்தரேபி || 6 ||
சித்தஸ்ய சுத்தயே கர்ம ந து வஸ்துபலப்தயே |
வஸ்துஸித்திர்விசாரேண ந கிஞ்சித் கர்மகோடிபி: || 11 ||
என்கிறது விவேகசூடாமணி(6, 11).
நாம் செய்யும் சடங்குகள் அனைத்தும் சித்த சுத்திக்காகவே.
ஷ்ரேயான் த்ரவ்யமயாத்யஜ்ஞாத் ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப |
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே || 4.33 ||
அனைத்து கர்மங்களும் ஞானத்தைப் பெறுவதோடு நிறைவு பெறுகிறது என்கிறது ஸ்ரீமத் பகவத்கீதை (4.33).
அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஸநம் |
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோந்யதா || 13.12 ||
(ஸ்ரீமத் பகவத்கீதை)
ஆகையால் மெய்ஞ்ஞானம் பெற்றுத்தான் ஆகவேண்டும்.
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் |
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே || 10.10 ||
(ஸ்ரீமத் பகவத்கீதை)
என்னை பக்தியோடு வழிபடுபவர்களுக்கு நான்புத்தியோகத்தை அனுக்ரஹம் செய்கிறேன். அந்தப் புத்தியோகத்தால் அவர்கள் என்னை உணர்வார்கள். பக்தியினால் என்னுடைய உண்மை ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்கிறான். அதைத் தெரிந்து கொள்ள நீ குருவிடம் செல்லவேண்டும். ஞானத்தால்தான் மோக்ஷம் என்பது இந்த பாடல் கூறும் கருத்து.
அத்தகைய குருவான பரம்பொருள் மனதுக்கு அப்பாற்பட்டது. முக்திக்கு அதே வித்து ஆகிறது. தென்முகக் கடவுளாக அவர் சிரகிரியில் சிறப்புற்று விளங்குகின்றார். ஞானி வடிவினராய் உள்ள பரமகுருவும் அவரே என தாயுமானவர் பாடலில் பகர்ந்துள்ளார்.
முடிவுரை
எந்த செயல்களை நாம் புரிந்தாலும், அச்செயல்களின் பின்னே உள்ள நம் மன நிலை என்ன என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும். அப்படி நாம் அறியவில்லை என்றால் அப்பணியை செவ்வனே செய்ய இயலாது. அதனால்தான் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் எனும் படைப்பில் (17) ,
குருதே க3ங்கா3 ஸாக3ர க3மனம்
வ்ரத பரிபாலன மத்2வா தா3னம் |
ஞான விஹீன: ஸர்வ மதேன
முக்திம் ந ப4ஜதி ஜன்மச’தேன||செல்வது கங்கை தீர்த்தப் பயணம்
புரிவது விரதம் நோன்பு தானம்
மெய்யறி வில்லா காரியம னைத்திலும்
முக்தியை உணர நூறிலும் கடினம்… 17
அப்படியான மெய்யறிவு இல்லாவிடில், நமது செயல்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகும். இதனைத்தான், பட்டினத்தார்:
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்றூர்கள்தோறும் உழலுவீர்; — நேரே உளக்குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர் விளக்கிருக்கத் தீத்தேடுவீர்!
என்றுரைத்தார்.
மேலும், சிவனை மனதில் ஆழமாகப் பதித்து பக்தி செலுத்தாமல், மேம்போக்காகப் பலன் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று அரைகுறை மனதுடன் செல்வோருக்கு தீர்த்த யாத்திரை பலன் தராது என்று தேவாரம் – ஐந்தாம் திருமுறையும் கூறுகிறது.
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்குமரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே
அப்படியென்றால், தீர்த்த யாத்திரை, விரதம், தானம் முதலிய ஆன்மீக நடைமுறைகள் அனைத்தும் தேவையில்லை என்று அர்த்தமா என்ற கேள்வி எழலாம் – முற்றிலும் இல்லை. இவை அனைத்தும் தேவை. இந்த ஆன்மீகப் பயிற்சிகள் அனைத்தும் மனத் தூய்மைக்கு அவசியம் தேவை. அறிவைப் பெறுவதற்கு மனத்தூய்மை ஒரு முழுமையான தேவை. இருப்பினும், வெறும் சுத்திகரிப்பு (மனதை தூய்மைப் படுத்துவது) என்பது ஒரு முடிவு அல்ல. இந்த நடைமுறைகள் அனைத்தும் வழிமுறைகள் மட்டுமே; இறுதியில் அறிவைப் பெறுவதே இலக்கு; அதுவே முடிவு. எனவே இந்த அறிவைப் பெறுவதற்கான அம்சத்தில் கவனம் செலுத்துங்கள். இதைத்தான் தாயுமானவர் உட்கருத்தாக வைக்கிறார்.
Leave a Reply