
தமிழ் வலைதள ஒலித்தொடர் இணைப்பு
https://soundar53.substack.com/podcast
முகவுரை
ஒரு குழந்தை எதிரில் இருந்த பலூன் வியாபாரியை பார்த்து பலூன் வேண்டுமென்று அழுதது. தாய் கண்டிக்க,அங்கிருந்த ஒரு ஞானி,பலூன் வாங்கி குழந்தையிடம் தரும் படி சொன்னார். பலூன் கைக்கு வந்தவுடன் குழந்தைக்கு ஒரே கொண்டாட்டம், கும்மாளம். இதைப் பார்த்த அந்த மாமுனி:
“பாரு!குழந்தை இப்போ ஒரே சந்தோஷமா இருக்கு. அது பலூனில் காத்துள்ள மட்டும் தான். காத்து போயிடுத்தோ அல்லது பலூன் உடைஞ்சி போச்சுன்னாலோ ஒரே வருத்தமாயிடும் அழும். இப்போ எவ்வளவு சந்தோஷமோ, காத்து போனா அவ்வளவு துக்கம் வரும். நாமும் குழந்தை மாதிரி தான் இந்தஉடம்பை வெச்சுண்டு விளையாடுறோம். ரொம்ப சந்தோஷமா, சவுக்கியமா இருக்காப்புல நினைக்கிறோம். ஆனால்,இதுலயும் காத்து போயிட்டா ஒரே துக்கம்,அழுகதான்”. இதைத் தான் சித்தர்கள் ரொம்ப சாதாரணமா
காயமே இது பொய்யடா வெறுங்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடான்னுபாடிவிட்டார்கள் என்றார்.
அந்த மாமுனியே நமது காஞ்சிப் பெரியவர்.
சமஸ்க்ருத ஸ்லோகம்
यावत्पवनो निवसति देहे,
तावत् पृच्छति कुशलं गेहे |
गतवति वायौ देहापाये,
भार्या बिभ्यति तस्मिन्काये ||
தமிழ் ஒலிபெயர்ப்பு
யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச’லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||
தமிழ் மொழிபெயர்ப்பு
காயம் தனிலே காற்றுள்ள வரைக்கும்
குசலம் கேட்பர் சுற்றமும் சூழலும்
மூச்சுக் காற்று நின்று போனதும்
உடலைக் கண்டு மனைவியும் அச்சம்
சமஸ்க்ருத சொற்களின் பொருள்
यावत् - யாவத் - எவ்வளவு
पवनः - பவன: - மூச்சுக் காற்று - பிராண வாயு
निवसति - நிவஸதி - வசிக்கும் - இருக்கும்
देहे - தேஹ - உடலில்
तावत् - தாவத் - அதுவரைக்கும்;
पृच्छति - ப்ருச்சதி - விசாரித்தல்
कुशलं - குச’லம் - நலம்
गेहे - கே3ஹே - வீட்டில்/குடும்பத்தில்
गतवति - க3தவதி - சென்றது
वायौ - வாயௌ - காற்று
देह अपाये - தே3ஹாபாயே - உடலை விட்டு பிரிதல்
भार्या - பா4ர்யா - மனைவி/இல்லாள்
बिभ्यति - பி3ப்4யதி - அச்சத்தில்;
तस्मिन् काये - தஸ்மின் காயே - அந்த உடலை (உயிர் பிரிந்த உடலை)
விளக்கவுரை
நேரடிப் பொருள்
(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை தான் உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு ந்டுங்குவாள். அதாவது உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.
விளக்கம்:
நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, மரணம் பயமாக இருக்கிறது. நாம் அனைவருமே உலக உயிர்கள், பொருள்கள் மீது விருப்பு, வெறுப்பு, ஆசைகள் மற்றும் பற்றுதல் கொண்ட மக்கள். எனவே, நாம் மரணம் என்னும் பேச்சையே தவிர்க்கிறோம். ஏதாவது நமது உரையாடலில் யாராவது அதைப் பற்றி பேசினால் கூட, "அமங்கலமான" விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வரும்போது பார்ப்போம். அதைப்பற்றி இப்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். நாம் அனைவரும் இப்போது மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம், நம்மை கவனித்துக் கொள்ள குடும்பம் மற்றும் நண்பர்கள் உள்ளனர். இப்போது ஏன் அதைப் பற்றிய பேச்சு?" என்று கூறி நமது உரையாடலை திசை திருப்பி தொடர்கிறோம். அல்லவா!
ஆனால் இது தான் நிஜ வாழ்வா? சிந்திக்கலாம்.
நமது சில இலக்குகளை அடைவதற்கான கருவியாக இருக்கும் அளவுக்கு மட்டுமே உடல் முக்கியமானது. ஒரு உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அதில் "சுவாசம்" அல்லது உயிர் இருக்கும் வரை மட்டுமே அது பாராட்டப்படுகிறது. பிராணனின் புறப்பாடு (உற்ற தேகத்மிலிருந்து உயிர் பிரியும் பொழுது), நம் அனைவரின் முழுக் கண்ணோட்டத்தையும் மாற்றுகிறது.
சுவாசம் நின்று, உயிர் போனவுடன், அந்த நபர் உடலாகவோ, பிணமாகவோ மாறுகிறார். "அவன்" அல்லது "அவள்" என்பது "அது" ஆகிவிடும்; வேகமாக அழுகும் பொருள் இனி தேவையில்லை "இது".
முதலில் அகற்றப்பட வேண்டும். மனைவி உட்பட அனைவரும் பிணத்துடன் இருக்க பயப்படுவார்கள். எனவே, உடல் அமைக்கப்பட்டு, மரக் கட்டைகளில் வைக்கப்பட்டு, தீ வைக்கப்படுகிறது அல்லது அன்னை பூமியுடன் சேர்கப்படுகிறது. பிரிந்தவர்களுடன் இருக்கும் ஒரே விஷயங்கள், அவர்களின் உன்னதமான (தார்மிக் धार्मिक्) செயல்கள்”
பின்னர் உறவினர்களும் மற்றவர்களும் சென்று விடுவர். சடங்குகளுக்குப் பிறகு, விதிவிலக்கு இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியின் புதிய வழிகளைத் தேடப் புறப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், இறந்தவர் வரலாற்றாகி நினைவிலிருந்து மங்குகிறார். இது ஒரு கசப்பான உண்மை.
இதுதான் யதார்த்தம். எனவே, “நம் குடும்பத்தின் மீது நாம் காட்டும் கண்மூடித்தனமான பாசம்/பற்று, நிலையாக நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் மேல் காட்டப்படுவதில்லை. உலக இன்பங்களிலிருந்து பற்றின்மை இல்லாவிட்டால், மனதை உள்நோக்கித் திருப்ப முடியாது. உலக உறவுகளின் நிலையற்ற தன்மையைப் பற்றி ஒருவர் சிந்தித்த பிறகு, உறவுகள் தொடர்கதை அல்ல அவைகள ரயில் பயண சிநேகிதம் போலவே என்பது தெளிவாகத் தெரியும். ஆழ்ந்து விசாரித்தால், உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து, வாழ்க்கையின் ஆன்மிகப் பரிமாணத்திற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் மனதை சுய விசாரணைக்கு ஏற்றதாக மாற்ற முடியும். எனவே கோவிந்தாவை வேண்டிக்கொள்”
ஆதிசங்கரர் இதை தெளிவாக வெளிப்படுத்தி, வாழ்க்கையில் நமது முன்னுரிமைகளை எடைபோட அறிவுறுத்துகிறார்.
தமிழ் இலக்கிய மேற்கோள்கள்
திருக்குறள்
உயிர் என்பது நமது உடலை இயக்கும் ஒரு ஆற்றல் என்று கருதப்படுகிறது. உயிர் நிலையானது என்றும், அது மீண்டும் மீண்டும் பல பிறவிகளை எடுக்கிறது என்றும் வள்ளுவர் கருதுகிறார். இவ்வுடம்புக்கும் உயிருக்குமுள்ள நட்பு, முட்டைக்குள் இருந்த பறவை இறக்கை முளைத்தபின் வெளிவந்து, அந்த முட்டையைவிட்டுப் பறந்து போவதைப் போன்றது (குறள் – 338). மற்றும், சாவு என்பது உறக்கத்தைப் போன்றது; பிறப்பு என்பது உறங்கி விழித்தலைப் போன்றது (குறள் – 338). உறங்கியவன் மீண்டும் எழுவதைப்போல், ஒரு உடலில் இருந்த உயிர் அந்த உடலின் மரணத்திற்குப் பிறகு அந்த உடலைவிட்டு வெளியேறி, மீண்டும் மற்றொரு உடலோடு இயங்குகிறது என்பதை உணர்ந்த வள்ளுவர், “உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே (குறள் – 340)” என்று வியக்கிறார்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள் – 338)
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் – 339)
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (குறள் – 340)
சுந்தரர் தேவாரம்.
ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொருள் இலாத மாயம்
மான்மறித்து அனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்,
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே! அஞ்சி னேனே. --- சுந்தரர் தேவாரம்.
வெள்ளிய நல்ல ஆனேற்றை உடையவனே! திருவாரூரில் உள்ள தந்தையே! இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன் .
சோமேசர் முதுமொழி வெண்பா
சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! - நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.
சூர பத்மன் , தன் உடம்பும், தன் அரசாட்சிக்குரித்தாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையுடையவெனக் கருதி, அழிந்தொழிந்தான்; சோமேசா! அதுபோல, ஆராயுமிடத்து நிலையுதல் இலவாகிய பொருள்களை, நிலையுதலை உடையன என்று, புல்லிய அறிவினை உடையராதல் கருதுகின்ற இழிபாம்.
பட்டினத்தார் பாடல்
“காற்றைத் துருத்தி கடிய வினைக்கு உள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டு என்று இறுமாந்து
பார்த்து இரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே”
யாரோ ஒரு கவி
"பொய்வீடு கட்டிப் புலால் வீட்டைப் போஷித்து
மெய்வீட்டினை இழந்த மேடங்காள்! -- பொய்வீடு
போ என்னும், உங்கள் புலால் வீட்டை உண்பதற்கு
வா என்னும் நல்ல வனம்"
முடிவுரை
வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர். பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர். போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் விழும். நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும்.
ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள் ஒன்றும் உள்ளது.காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில் உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர் நீங்கி விடும். உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது. அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும். மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு, தேவையான நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்து வாழ வேண்டும். இதை விளக்கவே நமது முன்னோர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கூறியுள்ளனர்.
இது தான் ஆதி சங்கரரின் ஆறாவது செயல்முறை. இதுவரை நாம் பெற்ற முறைகள் மூலம், உடல், செல்வம், காமம், வாழ்க்கை, உறவு, உயிர் இவைகளின் நிலையாமை பற்றி அறிந்தோம். அடுத்த செயல்முறையை அறியும்வரை….
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!
Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.