சங்கரனின் வைரக்கூடம் 9 – நல்லோர் இணக்கம்

நல்லோர் இணக்கம்

வலைதள ஒலித்தொடர் பதிவின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியை தொழுதல்
அதனினும் இனிது அறிவினம் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பது தானே

என்று கந்தன் கருணை என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வடித்த இந்த பாடலே, ஆதி சங்கரனின் வைரக்கூடத்தில் நாம் காணப்போகும் இந்த ஒன்பதாவது செயல்முறைக்கு முகவுரை.

ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் எனும் வைரக் கூடத்தில் முதல் எட்டு செயல்முறைகள் (ஸ்லோகங்கள்) வழியாக, நம்முள் ஒளிந்திருக்கும் வைராக்கியம் என்ற வைரத்தை தோண்டி எடுத்தார். இது நமது ஆன்மீகப் பயணத்தின் முதல் கட்டம். அடுத்த கட்டமாக, ஆதி சங்கரர் நமக்கு உதவிக்கரம் நீட்டி உய்விக்க முயலுகிறார். ஏணிப்படிகளை, வைரச் சுரங்கத்திலிருந்து மேலே வருவதற்கு இறக்குகிறார் என்கிறார் சுவாமி சின்மயானந்தர்.

"உன் நண்பர்கள் யார் என்று சொல்லுங்கள், நீங்கள் யார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று ஒரு பழமொழி உண்டு. ஒருவர் தனது உண்மையான வளர்ச்சிக்கு (பொருளாதார ரீதியாகவும் மிக முக்கியமாக ஆன்மீக ரீதியாகவும்) விரும்பினால், அவர் தனக்கு ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்கள், நிறுவனங்கள், ஆசான்களை நாட வேண்டும். நல்லார் இணக்கம் என்பர் நமது தமிழ் மொழியில்.

இந்த நல்லார் இணக்கம் எப்படி நம் ஆன்மீக வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் உள்ளது என்பதை விளக்குவதே இந்த ஸ்லோகத்தின் உட்கருத்து.

வாருங்கள், வைரக் கூடத்தில் நமது பயணம் தொடங்கட்டும். இதோ! சங்கரனின் செயல்முறை

சமஸ்க்ருத ஸ்லோகம்

सत्संगत्वे निस्संगत्वं,

निस्संगत्वे निर्मोहत्वं।

निर्मोहत्वे निश्चलतत्त्वं,

निश्चलतत्त्वे जीवन्मुक्तिः

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

ஸத்ஸங்க3த்வே நிஸ்ஸங்க3த்வம்

நிஸ்ஸங்க3த்வே நிர்மோஹத்வம் |

நிர்மோஹத்வே நிச்’சல தத்வம்

நிச்’சல தத்வே ஜீவன் முக்தி: ||

தமிழ் மொழிபெயர்ப்பு

நல்லோர் இணக்கம் பற்றை விலக்கும்

பற்றை விலக்கினால் மருட்சி இல்லை

மருட்சி இலதால் மனநிலை அமைதி

மனநிலை அமைதியால் வாழ்வில் முக்தி

சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள்

सत्संगत्वे - ஸத்ஸங்க3த்வே = நல்லோர் இணக்கத்தால் 
निस्संगत्वं - நிஸ்ஸங்க3த்வம் - பற்றின்மை

निस्संगत्वे - நிஸ்ஸங்க3த்வே = பற்றின்மையால்/பற்றை விலக்கினால்
निर्मोहत्वं - நிர்மோஹத்வம் = மருட்சி இல்லை

निर्मोहत्वे - நிர்மோஹத்வே = மருட்சி இலாததால்
निश्चल - நிச்’சல = நிலையான/மாறுதல் இலா/அமைதியான
तत्त्वं - தத்வம் = உண்மை

निश्चलतत्त्वे - நிச்’சல தத்வே = நிலையான உண்மையால்
जीवन्मुक्तिः - ஜீவன் முக்தி: = முக்திநிலை/வீடுபேறு நிலை/மெய்ப்பொருள் அறிதல்/இக்கணமே,இவ்வாழ்விலேயே பிறவிப்பிணி தீர்த்தல்

விளக்கவுரை

நேரடி பொருள்
சான்றோர் சகவாசம் ஏற்பட்டால் மனம் பற்றினை ஒழிக்கும். பற்று அழிந்தால் மன மயக்கங்கள் மறையும். மயக்கங்கள் மறைந்தால் நிலையான உண்மைப் பொருள் வெளிப்படும். நிலையான உண்மைப்பொருளை அறிந்தால் நீ ஜீவன் முக்தி அடைவாய்.
விளக்கம்
இந்த ஸ்லோகத்தில் ஐந்து முக்கிய தத்துவங்கள் ஏணிப்படிகளாய் உள்ளன. அவைகள் முறையே:

ஸத் ஸங்கம் - நல்லோர் இணக்கம்
நிஸ்ஸங் கத்வம் - பற்றின்மை
நிர்மோ ஹத்வம் - மருட்சி இன்மை
நிஸ்சல தத்வம் - மனநிலை அமைதி
ஜீவன் முக்தி - வாழ்வில் வீடுபேறு

இந்த ஐந்து தத்துவங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
சத்சங்கம் - நல்லோர் இணக்கம்

சத்சங்கம் என்ற வடமொழிச் சொல்லின் வேர்ச்சொற்கள் “சத்”, “சங்கம்”. “சத்” என்பது சத்தியம்/உண்மையைக் குறிக்கும்; சங்கம் என்பது இணக்கம், சேர்க்கை, கூட்டம், சபை என்று பொருளாகும்.
சத்சங்கம் என்பதை “சத்தியத்துடன் இருப்பது, சத்தியவாதிகளுடன் இருப்பது, ஒருமித்த ஆன்மீக எண்ணமுடையோரின் உறவு” என்று கொள்ளலாம்.

நம் மனதை ஒரு இளந்தளிருக்கு ஒப்பிடலாம். அது நன்கு வளர, தகுந்த சூழ்நிலையும், பராமரிப்பும் அவசியம். வாழ்வில் உயர்நோக்கம் வளர, மனதை சரியான வழியில் செலுத்தி, பயிற்சி தர வேண்டும். நல்லோர் இணக்கத்தால், மலரோடு சேர்ந்த நார் போல நமது ஆன்மீக அறிவும் நற்சிந்தனைகளும் , நல் அதிர்வலைகளின் செல்வாக்கும், உற்சாகமான சூழ்நிலையும் உருவாகும் சாத்தியம் அதிகரிக்கும். மெய்யறிவை உணர்வதற்கான வழித்தடைகளை அகற்ற உதவும்.

சுவாமி பரமார்த்தானந்தா, சத் என்ற சொல்லின் பொருளைப் பொறுத்து சத்சங்கத்தை மூன்று நிலைகளாக வகைப்படுத்துகிறார்.

1. முதல் நிலையில், சத் என்ற சொல்லுக்கு உன்னத நற்பண்புகள் பெற்றவர் என்று பொருள். நல்லொழுக்க விதிகளனைத்தையும், தர்மத்தின் படி நடப்பவர். இது தர்ம புருஷர்கள் எனப்படும் நல்லோரின் செயல்பாட்டு நிலை. இந்நிலையில் மறைப்படி விதித்திட்ட கடமைகள்/வினைகளுக்கு முதன்மை கவனம். இந்நிலையில் இருக்கும் நல்லோரின் இணக்கம், நம்மை நல்வழியில் வினைகள் புரிய உதவும். எனினும், மெய்யறிவு நோக்கம் முதன்மை பெறாதலால், நமது ஆன்மீகப்பயணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
2. சத்சங்கத்தின் இரண்டாம் நிலையில், சத் என்ற சொல்லுக்கு ஞானி (ஞான புருஷன்) என்று பொருள். ஒவ்வொரு ஞானியிடமும் நற்பண்புகளும் மெய்யறிவும் உள்ளதால், இத்தகைய ஞானிகளுடனான தொடர்பு இரண்டு மடங்கு நன்மைகளைக் கொண்டுள்ளது. முதல் பலன் நற்பண்புகளை உள்வாங்குவது; , இரண்டாவது நன்மை அறிவையும் உள்வாங்கும் வாய்ப்பைப் பெறுவது.
3. சத்சங்கத்தின் மூன்றாம் கட்டத்தில், சத் என்ற சொல்லுக்கு பிரம்மன் என்று பொருள். பிரம்மனுடனான தொடர்பு என்பது, நான் பிரம்மன், "அஹம் பிரம்மாஸ்மி", அதாவது பிரம்ம ப்ராப்தி அல்லது பிரம்ம ஐக்கியம் என்ற வேதப் படிப்பின் மூலம் பெறப்பட்ட அறிவின் மூலம் நான் பிரம்மத்தை விட்டு விலகி இருக்கிறேன் என்ற அறியாமையை அகற்றுவதாகும். இதுதான் உயர்ந்த நிலை. ஆண்டவனின் அருளால் கிட்டும் இத்தகைய நல்லோர் இணக்கம் அரிதானது.

ஆக, தத்துவஞானி மூஜி சொல்வது போல் “சத்சங்கம் என்பது புடம் போட்டு நம்மை அறியும் ஒரு அக்னிப் பயணத்திற்கு அழைப்பு. அந்த அக்னி “நம்”மை எரிக்காது. “நாம்” எது இல்லையோ அதை மட்டுமே எரிக்கும்”.

எனவே பற்றின்மையை அடைய, சரியான சூழலும் கூட்டமும் அவசியம் என்பதால், நல்லோர் இணக்கத்தை நாடு என்று ஆதிசங்கரர் அறிவுறுத்துகிறார். எது எப்படியிருந்தாலும், நாம் தீயோரின் சகவாசத்தையும், நம்பிக்கையற்றவர்களின் சகவாசத்தையும் அல்லது நமது சிரத்தத்தை அசைக்கக் கூடியவர்களையும் தவிர்க்க வேண்டும்..

இவ்வாறு, நாம் நல்லவர்களுடன் பழகும்போது, கெட்டவர்களின் செல்வாக்கிலிருந்து விலகி வளர்கிறோம். சத்சங்கத்தின் மூலம் தூய எண்ணங்களுக்கான நமது தனிப்பட்ட அர்ப்பணிப்பு அடுத்த படிக்கான அணுகலை நமக்கு வழங்குகிறது.
நிஸ்ஸங் கத்வம் - பற்றின்மை

சத்சங்கம் என்னும் முதல்படியில் அடியெடுத்து வைத்த பலன், நாம் ஒரு காலத்தில் தீவிரமான பற்றுதலுடன் பற்றிக்கொண்ட விஷயங்களிலிருந்து சிறிது ஒதுங்கும்போதுதான் தெரியும். சத்சங்கத்தின் ஒளியானது நமது புத்தியை மழுங்கடிக்கும் மாயையின் திரையை விலக்குகிறது. அந்த தருணத்திலிருந்து ஆன்மீக வாழ்க்கை தீவிரமாக தொடங்குகிறது.

நல்லோர் இணக்கத்தின்செல்வாக்குடன், மனதில் பற்றின்மை உருவாகிறது. எல்லோரும் பரம்பொருளையும், மெய்ப்பொருளையும், உயர் அறிவைப்பற்றியும் பேசுகிறார்கள். நிலையிலாபொருள்களுக்கு மதிப்பு கொடுக்கும் நம் மனம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பொருள்கள் மீது பற்றின்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மனம் உணர்ந்தவுடன், அந்த நபர் ஏணியில் இரண்டாவது படியில் இருக்கிறார்.

இப்போது சுவாமி விதிதாத்மானந்தாவின் ஒரு எச்சரிக்கை வார்த்தை. "பற்றுதல் மற்றும் பற்றின்மை என்றால் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும், பற்றுதலைக் கைவிடுவது என்பது குடும்பத்துடனான தொடர்பைக் கைவிடுவது அல்லது உலகத்தை விட்டு ஓடுவது என்று மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில், நீங்கள் உலகத்தை விட்டு ஓட முடியாது, ஏனென்றால் அது எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் உள்ளது. எனவே, உலகத்தின் பௌதிகப் பொருட்களை அல்ல, அவற்றைச் சார்ந்திருப்பதை விட்டுவிட வேண்டும். மக்கள் பற்றின்மையை புலன் பொருள்கள் அல்லது உலகின் வெறுப்பு என்று தவறாக விளக்குகிறார்கள். உலகத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆசிரியர்கள் கேட்பதில்லை. உலகம் நம் இன்பத்திற்காகவே உள்ளது. விஷயங்களை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டுமே அவை நமக்குக் கற்பிக்கின்றன. இன்பம் என்பது சார்பு அல்லது தேவை, இணைப்பு அல்லது வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு உறவைக் கொண்டிருப்பது. வெறுப்பு என்பது இணைப்பின் சிதைந்த வடிவம். எனவே, பற்றுதல் மற்றும் வெறுப்பு (ராகம் மற்றும் த்வேஷா), ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டும் அடிமைத்தனத்தையும் சார்புநிலையையும் குறிக்கின்றன. அவை ஆரோக்கியமற்ற உறவுக்கு இட்டுச் செல்கின்றன, அதில் நான் உலகின் சூழ்நிலைகளுக்கு எனது புறநிலையை இழக்கிறேன்; என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மற்றும் பொருள்களால் என் மகிழ்ச்சியைத் தீர்மானிக்க அனுமதிக்கிறேன். அவைகளின் இணைப்பில், நான் அவைகளுக்கு அதை விட அதிக மதிப்பை விதிக்கிறேன், வெறுப்பில், அதற்கு தகுதியானதை விட குறைவான மதிப்பை நான் காண்கிறேன். ஆகவே, பற்றிலிருந்து விடுபட வேண்டும் என்று கூறும்போது, வெறுப்பிலிருந்து விடுபட முற்பட வேண்டும் என்றும் பொருள்படும்”.

பற்று, வெறுப்பு ஆகிய இரண்டிலிருந்தும் மெல்ல மெல்ல நம்மை விடுவிக்க உதவுவது நல்லவர்களின் கூட்டுறவான சத்சங்கமே. சத்சங்கத்வே நிச்சங்கத்வம் என்பதன் பொருள் என்னவென்றால், ஞானிகளின் சகவாசத்தில், நான் மெதுவாக மனதின் அமைதியையும் விருப்பு வெறுப்புகளின் எதிர்வினைகளிலிருந்து சுதந்திரத்தையும் வளர்த்துக் கொண்டு புறநிலையாக மாறுகிறேன். நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதன் மூலம் வரையறுக்கப்பட்ட உலகில் வாழ்வதை விட, உலகத்தைப் பற்றிய ஒரு புறநிலை உணர்வை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கையாளவும் கற்றுக்கொள்கிறேன்.
நிர்மோஹத்வம் - மருட்சி இன்மை

இதன் பொருள் மோகத்திலிருந்து விடுபடுவது என ற பொருள். இந்த வார்த்தையைப் புரிந்து கொள்ள, முதலில் "மோகம்" என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மோனியர்-வில்லியம்ஸ் சமஸ்கிருதம்-ஆங்கில அகராதி மோஹத்தை 'உணர்வின் இழப்பு' என்று விளக்குகிறது. திகைப்பு, குழப்பம், கவனச்சிதறல், மோகம், மாயை, பிழை என்றும் பொருள் கொள்ளலாம்.

மனதின் மாயையே ஒருவரை உண்மையைப் பகுத்தறிவதைத் தடுக்கிறது. உலகப் பொருள்களின் யதார்த்தத்தில் ஒருவரை நம்ப வைக்கிறது மற்றும் சிற்றின்ப இன்பங்களின் திருப்திக்கு அடிமையாக்குகிறது. இதை வடமொழியில் “நித்ய அநித்ய அவிவேக: இதி மோஹ:” என்பர். இப்படி மோகத்தால் மருண்ட மனம் விருப்பு-வெறுப்பு (ராக-த்வேஷ) மூலம் உலகின் பொருட்களின் மீது நியாயமற்ற மதிப்பை, அசுத்தங்களாக சுமத்துகிறது. இந்த ராக-த்வேஷத்தின் செல்வாக்கின் கீழ் ஒரு மனம் ஒரு தூய்மையற்ற மனம். ஏதோ ஒன்று எனது இணைப்பை உறுதிப்படுத்தும் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன், ஏதாவது முரண்பட்டால் நான் மனச்சோர்வடைகிறேன். மகிழ்ச்சி என்பது ராகத்தின் விளைவாகும், மனச்சோர்வு என்பது துவேஷத்தின் விளைவாகும். எனது ராகத் துவேஷங்களை என்னால் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், நான் எதிர்வினையாற்றும்போது இந்த ராகத் துவேஷங்களின் பலனை என்னால் பார்க்க முடிகிறது. இந்த எதிர்வினைகள் கோபம், பேராசை, மனக்கசப்பு, அடக்குமுறை, சோகம் போன்றவையாக இருக்கலாம். எதிர்வினை மனது என்பது தூய்மையற்ற மனம்.

அந்த தூய்மையற்ற மனம் கலங்கிய நீர் தெளிவது போல, இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டு, தெளிவாகும் போது, அது மெதுவாக மோகத்திலிருந்து அல்லது மாயையிலிருந்து விடுபடுகிறது. மனம் மெதுவாக இந்த மோகத்திலிருந்து விடுபடும்போது அது ராக த்வேஷத்திலிருந்து விடுபடுகிறது.

மனம் எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது அமைதியை அனுபவிக்கிறது, மேலும் மனம் ஒருங்கிணைக்கப்படும் அளவிற்கு, அது சமநிலையை அனுபவிக்கிறது. நீர் எப்படி அழுக்கை அகற்றி தூய்மையானதாக மாறுகிறதோ, அதுபோல், மனதிலிருந்து அசுத்தமான எண்ணங்கள் நீங்கி, தூய்மையாகவும், சாந்தமாகவும் மாறி, மன அமைதியை அனுபவிக்கிறோம் - அது தான் அடுத்த படி - நிச்சலதத்துவம்.
நிஸ்சல தத்வம் - மனநிலை அமைதி

மனம் அமைதியடையும் போது, அது புறநிலையாகிறது. (ராட்சத ரோலர் கோஸ்டரிலிருந்துகொண்டு வெளி வந்த நிலை) அப்போதுதான் மறைகூறும் பொருளை புரிந்து கொள்ள முடிகிறது. அதுவரை, நாம் எதைக் கேட்டாலும் ராக-த்வேஷங்களால் சிதைக்கப்பட்ட மனத்தால் செயலாக்கப்படுகிறது. அந்தத் திரிபுகள் இல்லாதபோது, வேதத்தின் தரிசனம் வெளிப்படுவதை மனத்தால் உண்மையாகப் பாராட்ட முடிகிறது. ராக-த்வேஷங்களின் மீதான பற்று போகும்போது, மோகம் அல்லது மாயை போய்விடும்.

மாயை விலகும் போது, பரம் பொருளான இறுதி யதார்த்தத்தைப் பற்றி வேதங்கள் என்ன வெளிப்படுத்துகின்றன என்பதை மனம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நமது உடலை மேவிய உயிர் எனும் நிழல், உணர்வான தன்னை, உள்ளார்ந்த இயல்பு (நிஜம்) என்றும், தற்செயலான தன்மை (நிழல்) அல்ல என்றும் புரியத் தொடங்கும் பகுத்தறிவு வளர்கிறது. இப்படி பகுத்தறிவதற்கு முன், நிழல் தன்னை நிஜமாக உணர்கிறது (உடல், மன, புத்தி வளாகமே நான் என்ற உணர்வு). பகுத்தறிவில் மெல்ல மெல்ல நிலைபெறும் போது, அந்த நிழல் நிஜமாகி, நிழல் மறைகிறது.

இறையருள், விவேகம், சங்கல்பம், சத்சங்கம், குருவின் கல்வி, பிரார்த்தனை எனும் ஞானப் பிரசாதங்களே இந்த பகுத்தறிவு வளர உதவும்.
ஜீவன் முக்தி - வாழ்வில் வீடுபேறு

ஜீவன்முக்தி என்பது இந்து தத்துவத்தின்படி, உயிருடன் இருக்கும்போதே ஆன்மீக ரீதியில் விடுதலை பெற்ற நிலை. இதை வீடு பேறு என்று கூறுவர். சமஸ்கிருத சொல், ஜீவா, அதாவது "வாழ்க்கை" மற்றும் முக்தி, அதாவது "சுதந்திரம்" என்பதிலிருந்து பெறப்பட்டது. ஜீவன்முக்தி என்பது வரம்பற்ற அறிவை (மெய்ப்பொருளும் பரம்பொருளும் ஒருங்கிணைந்த நிலை), துன்பத்திலிருந்து விடுபட்டு, நித்திய பேரின்பத்தை அனுபவிக்கும் ஒரு நிலை.

முந்தைய படியில் கோடிட்டுக் காட்டிய பகுத்தறிவில் நிலைத்திருப்பது என்பது, சத் சித் ஆனந்தமே நான், நானே அவன் என்ற நேரடி அறிவினை (அபரோக்ஷ ஞானம் அதாவது “அஹம் பிரம்மாஸ்மி”) அனுபவிப்பது.

அப்படி அனுபவிக்கும் போது, ஒருவர் உயிருடன் இருக்கும்போது கூட (அதாவது, நம்முடைய அன்றாட வாழ்வில், உடலும், உடல் சாரந்த தண்ணுணர்வால் வரும் வினைகளைப் புரியும் உயிராக), அவ்வினைகள் புரியும் “உயிரான நான்” அவையில்லை, அவைகளனைத்தும் நிழலே, தான் நிஜமான சச்சிதானந்தமே என்ற உள்ளுணர்வு ஒன்று மட்டுமே இருக்கும் பூரண சுதந்திர நிலையே ஜீவன் முக்தி நிலை.

முந்தைய படிகளில் ஏறி வந்த பின்னரே, இந்த நிலையை அடைய முடியும். இந்த நிலையை கண்ணாலும், பிற இந்திரியங்களினாலும், வாக்கினாலும், வினைகள்/கர்மங்களாலும், வெறும் தவத்தாலும் புரிந்து கொள்ள முடியாது. “ஸாதந சதுஷ்டைய சம்பத்து” என்ற அடிப்படை தகுதிகள், நல்லோர் இணக்கம், குருமுகமாக மறைகளை கற்று, உள் நோக்கி, அறிவுத் தெளிவினால் நேரடியாக அனுபவிப்பது தான் இந்நிலை.

இவ்வாறு முக்தியடைந்தவருக்கு (எல்லா உயிர்களும் தானே என்று உணர்ந்தவர்), அவருக்கு இரண்டாவது இல்லாததால் மாயையோ துக்கமோ இல்லை. ஜீவன்முக்தா, பேரின்பமான பிரம்மத்தில் அசையாத மனத்துடன் தங்கியிருக்கிறது. அவர் மனதின் அனைத்து மாற்றங்களிலிருந்தும் விடுபட்டவர். அவரது இதயம் இமயமலைப் பனி அல்லது படிகத்தைப் போன்று தூய்மையானது. அவர் வேறுபாடுகளிலிருந்து விடுபட்டவர்.

ஆக, நல்லோர் இணக்கத்தில் துவங்கி, இறுதியில் இந்த ஜீவன்முக்தி அடையும் விரிவான தத்துவங்களை எளிய முறையில், இந்த ஸ்லோகத்தில் கோடிட்டுக்காட்டியுள்ளார் ஆதி சங்கரர்.

தமிழ் இலக்கியங்களில் நல்லோர் இணக்கம்

திருக்குறள்

”நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு”

நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறி அந்த நிலத்தின் தன்மையை நீர் பெற்று விடும். அது போல மனிதனுக்கு அறிவானது தாம் சேர்ந்திருப்பவர்களின் தன்மைக்கேற்ப மாறி விடும். இதற்கான எத்தனையோ உதாரணங்களை நம்மைச் சுற்றிலும் நாம் பார்க்கலாம். யாரிடம் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களின் தன்மைகளில் சிலதாவது நம்மைத் தொற்றிக் கொள்ளவே செய்கின்றன. அப்படித் தொற்றிக் கொள்பவை சிறிது சிறிதாக நம்முள் வேரூன்றவே செய்கின்றன. பின் அவையும் நம்மில் ஒரு பகுதியாகவே விடுகிறது.

சங்கரனின் இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு வரிகளை இந்த திருக்குறள்கள் பிரதிபலிக்கின்றன

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்

பொருட்பாலில், பெரியாரைத் துணைக்கோடல் என்ற அதிகாரம் முழுவதும் நல்லோர் இணக்கத்தைப் பற்றியதே. மேலும், நல்லோர் இணக்கத்தின் பெருமையை

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

என்று, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில், திருவள்ளுவர் சத்சங்கத்தைப் பற்றி கூறுகிறார்.

ஔவையாரின் வாக்குண்டாம்

எளிய இனிய தமிழில், பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதிய தமிழ் மூதாட்டி ஔவையின், வாக்குண்டாம் எனும் தொகுப்பில் வரும்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

ஆத்திசூடி

இணக்கம் அறிந்து இணங்கு

(பதவுரை) இணக்கம் --- (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து --- ஆராய்ந்தறிந்து, இணங்கு --- (பின் ஒருவரோடு) நட்பு கொள். (பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவர் என்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.

உலகநாதரின் உலகநீதி

சிறு வயதில் நாம் பயின்ற இந்த நீதிச் சொற்களை எப்படி மறக்க முடியும்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்போகாத இடந்தனிலே போக வேண்டாம்போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்……
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்…கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்…
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்….
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
அகத்தியர்

சாதுக்கள் சங்கத்தையே மனமே
தஞ்சம் அடைந்திடுவாய்

சாதுக்கள் சங்கமல்லால் மனதில்
சாந்தி வராது அறிவாய்

நாலடியார்

பாலோடு அளாயநீர் பால் ஆகும், அல்லது
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்; -தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

ஊர் அங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்,
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்
குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்,
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

முடிவுரை

நல்லாரைச் சார்ந்து இருப்பது துன்பமாக முதலில் தோன்றும். அது நாளடைவில் இன்பத்தைத் தந்துகொண்டே இருக்கும். ஆனால், தீயோரைச் சார்ந்து இருப்பது முதலில் இன்பமாகத் தோன்றும் என்பதால், உடனடியாக, தான் விரும்புவதையே அடையத் துடிக்கின்ற உயிரானது, சிற்றினத்தையே விரும்பும். அது நன்மை தராது என்பதை அறிவுறுத்த, இறைவன் அருளாளர்களை அதிட்டித்து, நீதி நூல்களையும், அருள் நூல்களையும் அருளிச் செய்தான். எனவே, மெய்யறிவு நூல்களை முயன்று படித்து, மெய்யறிவு பெற்றவரோடு கூடி இருந்து, மெய்யறிவு பெற்று உயரவேண்டும். சிறியவர் இனத்தில் சேராமல் காத்துக் கொள்ளவேண்டும்.

இந்த செயல்முறைகளை நாம் கடைபிடிக்கவில்லை என்றால், நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பகவத் கீதையின் 2வது அத்தியாயத்தின் 62 மற்றும் 63 ஸ்லோகங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

“த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥

க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥

பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையாக மாறுகிறது. ஆசையால் கோபம், கோபத்தினால் மனமயக்கம், மனமயக்கதால் நினைவு நழுவுதல், நினைவு நழுவுவதால் பகுத்தறிவின் சீர்கேடு, பகுத்தறிவின் சீர்கேட்டால் மனிதன் அழிகிறான்”.

நாம் அறிவின் ஏணியில் ஏற முயற்சிக்கவில்லை என்றால், முதல் எட்டு ஸ்லோகங்களில் கோடிட்டுக் காட்டியது போல் நாம் பற்று எனும, ஏணியின் மேலிருந்து கீழே விழுந்து மீண்டும் பயணத்தை தொடங்குவோம். அதனால்தான் ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் முக்தி அடைவதற்கான 5 படிநிலைகளை கோடிட்டுக் காட்டுகிறார்.

இந்தக் கருத்துகளைப் புரிந்துகொண்டு, ஜீரணித்து, உள்வாங்கி, சுய உணர்தலுக்கான அடுத்த படிக்குச் செல்வோம். அடுத்த பதிவில் சங்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அதுவரை…..

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

பஜ கோவிந்தத்தின் 31 ஸ்லோகங்களும், அவைகளின் தமிழ் ஒலி, மொழி பெயர்ப்புகள், சமஸ்க்ருத சொற்களின் பொருட்கள், ஆன்றோரின் விளக்கவுரை ஆகியவை இப்பொழுது நோஷன் ப்ரஸ் பதிப்பகத்தில் தமிழ் புத்தக வடிவில் கிடைக்கிறது. இதோ விவரம்

https://notionpress.com/read/bhaja-govindam-moha-mudgara?book=published&utm_source=share_publish_email&utm_medium=email

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

Leave a comment