அப்பைய தீக்‌ஷிதரின் “ஆத்மார்ப்பண ஸ்துதி” – முகவுரை

“ஸ்துதி” என்றால் புகழுரை. ஆத்மார்ப்பணம் (ஆத்ம அர்ப்பணம்) என்பது தன்னையே (தன்னிடமிள்ள அனைத்தையும்) இறைவனுக்கு அர்ப்பணித்தலைக் குறிப்பதாகும்.

“அன்றே என் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே

கொண்டிலையோ”

என மாணிக்க வாசகர் கூறுவது போல, 

“துதீய வஸ்து கோவிந்தம் துப்யமேவ ஸமப்ரததே”, அதாவது, உன்னுடைய பொருளை உனக்கே அர்பணிக்கிறேன் என கங்கை நீரை கங்கையிலே அர்ப்பணிப்பது போல,

ஆத்மார்ப்பண ஸ்துதி, நமது அஹங்காரத்தை பழுக்க வைத்து, பக்தியில் லயமாக்குகிறது. பின் அதனை அறிவால் அழித்து ஜீவன் முக்தனாகுவதற்கு வழி வகுக்கிறது.

தன்னுடையது என்ற எண்ணத்தை விடுவதே தானம் (“ஸ்வத்வ நிவ்ருத்திஹி தானம்”) என்கிறார் ஆதி சங்கராச்சார்யர்.

அதனால்தான் யாகங்களில் “இதம் ந மம” – இது என்னுடையதல்ல என ஒவ்வொறு தெய்வத்திற்கும் அளிக்கிறோம். (“ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம” – சோமனுக்கு கொடுத்துவிட்டேன், சோமனுக்குத்தான், எனக்கு இல்லை)

ஆக,

உயிர்களாகிய நாம் சிற்றறிவு உடையவர்கள், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்ற சீவன்-சிவன் என்ற வேறுபாடின் (“ஜீவேஸ்வர பேதம்”) அடிப்படையில்தான் இந்த பக்தி நூல் (“பக்தி க்ரந்தம்”) உள்ளது. ஆழ் உறக்கத்தைத் தவிர மற்ற அனைத்து நிலைகளிலும்,  உடல், உணர்ச்சி, விவேக சக்தி இவைகள் நம்மில் வேறு வேறாகவே இருக்கின்றன. த்வைத பக்தி செய்தால்தான் அத்வைத ஞானத்திற்கான மனப்பக்குவத்தை நாம் அடையலாம்.

தே1ஷாம் ஸத1த1யுக்1தா1னாம் ப4ஜதா1ம் ப்1ரீதி1பூ1ர்வக1ம் |
த3தா3மி பு3த்3தி4யோக3ம் த1ம் யேன மாமுப1யாந்தி1 தே1 ||

பகவத் கீதை 10.10

த்வைத பக்தியை நன்கு கடைப்பிடிப்பவர்களுக்குத்தான் அத்வைத ஞானத்தை அளிக்கிறேன் என்று கண்ணன் கீதையில் (10.10) கூறுகிறான்.

துன்பம் கலவாத இன்பம் இறைவன் மட்டுமே. நாம் அனுபவிக்கின்ற புலனின்பங்கள் யாவும் துன்பம் கலந்தவையே. இறையின்பத்தை புலன்களால் உணர முடியாது. எனவே இறைவனை வடிவமுடையவனாக பாவனை செய்து, அவ்வடிவங்களைப் போற்றி, தொழுது, இறையின்பத்தை புலனின்பம் போன்று அனுபவிக்கின்றோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் நாமங்கள் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 

என்றார் மாணிக்கவாசகர்.

ஆகவே நாம் புரியும் பக்திக்குப் பின்னால்

  1. இறைவனைப் பற்றிய அறிவு
  2. உயிரைப் பற்றிய அறிவு
  3. உலகம்,உறவுகள் முதலியவை துன்பம் கலந்த இன்பத்தைத்தான் தருகிறது என்ற அறிவு
  4. இந்த இன்ப துன்ப அனுபவிப்பு, பிறவிகள் தோறும் தொடர்வது என்ற அறிவு

இவைகள் இடைவிடாமல் இருந்தால்தான் பக்தி நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். இல்லையெனில் அதுவும் வெறும் இன்பம் கலந்த துன்ப முயற்சியே. “புல்லாய்ப் பூண்டாய் புழுவாய்…..இத்தாவர சங்கமத்துள் எல்லாம் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” 

என மாணிக்கவாசகர் கூறுவதை அறிய வேண்டும்.

இறைவனைப் பற்றிய அறிவினைப் பெற்றவுடன் இறைவனிடத்தில் அன்பு தோன்றும். இறைவனிடத்தில் அந்த அன்பு அனைத்தையும் செலுத்த உதவ வேண்டும்  என்று அவனையே பிராரத்தனை செய்ய வேண்டும்.

அத்தகைய பிராரத்தனைகளே, அப்பைய தீக்‌ஷிதரின் அறுபது ஸ்லோகங்கள் அடங்கிய “ஆத்மார்ப்பண ஸ்துதி”.

வரும் ஏப்ரல் துவங்கி, ஒவ்வொரு திங்களிலும், இரண்டு அல்லது மூன்று ஸ்லோகங்களுக்கான விளக்கங்களைக் காண்போம். 

பின் குறிப்பு

விளக்கங்களனைத்தும், பூஜ்யஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து, அடியேன் அறிய முற்பட்டது.  பிழைகள் அனைத்தும் என் தவறுகளால் மட்டுமே (அறிவதில், புரிவதில், புரிந்ததைக் கூறுவதில்). தவறுகளைத் திருத்திக் கொள்ள, அடியேனுக்கு அறிவுரை வழங்கவும். மிக்க நன்றி.