ஸ்துதி

किं गूढार्थैरकृतकवचोगुम्फनैः किं पुराणैः
तन्त्राद्यैर्वा पुरुषमतिभिर्दुर्निरूप्यैकमत्यैः ।
किं वा शास्त्रैरफलकलहोल्लासमात्रप्रधानैः
विद्या विद्येश्वर कृतधियां केवलं त्वत्प्रसादात् ॥ २७॥

தமிழ் ஒலி பெயர்ப்பு

கிம் கூடார்த்தை: அக்ருதகவசோ கும்பநை: கிம் புராணை: தந்த்ராத்யைர்வா புருஷமதிபி: துர்நிரூப்யைகமத்யை: | கிம்வா சாஸ்த்ரைரபல கலஹோல்லாஸ மாத்ர ப்ரதானை: வித்யா வித்யேச்வர க்ருததியாம் கேவலம் த்வத்ப்ரஸாதாத் || 27 ||

தமிழாக்கம் 

இரகசிய அர்த்தமுடை புரியா சொற் குவியல்
இதிகாசம் புராணம் இவைகளால் ஆவதென்ன  ! 
அறிவுக்கு எட்டா ஆகமம் அறிஞர்களின் அல்லோலகல்லோலம்
பயனிலா சாத்திரம் இவைகளால் ஆவதென்ன !
அறியோரின் அறிவனைத்தும் ஆகுமோ
உன்னருள் இன்றி, அறியோரின் ஆண்டவனே !!

சொற்களின் பொருள்

கிம் – ஆவதென்ன

கூடார்த்தை: – ரகசியாமான அர்த்தங்களுடன் கூடிய

அக்ருதக் வசோ கும்பநை: – செய்யப்படாத சொற் குவியலால் (வேத வாக்கியங்களால்)

கிம் புராணை: புராணங்களால் ஆவதென்ன 

புருஷமதிபி: – மனித புத்திக்கு

துர்நிரூப்யைகமத்யை: – – நிரூபிக்க முடியாதவைகளான 

தந்த்ராத்யைர் வா – ஆகமங்களால் தான் 

கிம்வா – ஆவதென்ன

 கலஹோல்லாஸ மாத்ர ப்ரதானை:     –  பண்டிதர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளகூடிய

அபலை – பயனற்ற

சாஸ்த்ரை – நூல்களால் 

கிம்வா – ஆவதென்ன

வித்யா ஈச்வர – ஞானியரின் தலைவனே 

க்ருததியாம் – ஞானிகளுடைய

வித்யே – கல்வியானது

கேவலம் – முழுவதும்

த்வத்ப்ரஸாதாத் – உன் அருளாலேயே (ஏற்படுகிறது)

விளக்கம்

கூடார்த்தை: 

வேதம், தர்மம், ப்ரம்மம் இரண்டையும் பற்றி பேசுகிறது. ஒன்றைப்பற்றி பேசும்போது, மற்றொன்றுக்கு முக்கியத்துவமில்லை. வேதம் தர்மத்தைப்பற்றித்தான் பேசுகிறது என்பவர் பூர்வமீமாம்ஸா (மீமாம்ஸா என்பது சிரத்தை, பக்தியுடன் செய்யப்படும் விசாரத்தைக் குறிப்பது – “பூஜிதவிசாரஹ”) எனப்படுவர். அதேபோல வேதம் ப்ரம்மத்தைப் பற்றியதே என்பவர் உத்தரமீமாம்ஸா எனப்படுவர். பூர்வத்னால்தான் வேதத்தினை விளக்க சூத்திரங்கள் உருவாகிற்று.  ப்ரம்ம சூத்திரத்தில் 555 சூத்திரங்கள், பூர்வமீமாம்ஸாவில் 2000 சூத்திரங்கள் உள்ளன. 

ஆக, வேதங்களைப் புரிந்து கொள்ள அந்த வேதமந்திரங்களின் கருப்பொருளை அறிவது சுலபமல்ல. அதனால், அது ரகசியான அர்த்தங்களை உடையது என்று கூடார்த்தை: என்கிறார் அப்பையர்.

அக்ருதக வசோ கும்பநைஹி 

வேத வாக்கியம் – ஸ்ருதி என்பதன் மற்றொரு பெயர் “அக்ருதக வசோ”, அதாவது “அபௌரிஷ வாக்யஹ” – ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல (இறை மொழி); அவாந்தர, மஹா வாக்யம், …. அநுவாத வாக்யம், குண வாக்யம் என பல வகைகளடங்கியதை கூட்டம் (கும்பநைஹி) என்கிறார். எந்த வாக்கியங்கள் ஞானத்தை உண்டுபண்ணுகிறது என்பதை குரு வழியாக முறைப்படி அறிய வேண்டும் (அத்யயனம் செய்ய வேண்டும்). 

கேவலம் த்வத்ப்ரஸாதாத்

இந்த “த்வத்ப்ரஸாதாத்” என்ற சொல்லை, பகவத் கீதையில் அர்ஜுனன் இறுதியாக கண்ணனிடத்தில் கூறும்போது, பயன்படுத்துகிறான்.

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதான்மயாச்யுத் |
ஸ்திதோத்யஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ || 18.73||

உமது அருளால் எனது மாயை நீங்கி, நான் அறிவில் நிலைபெற்றுள்ளேன். இப்போது நான் சந்தேகங்களிலிருந்து விடுபட்டுள்ளேன், உமது அறிவுரைகளின்படி நான் செயல்படுவேன் என்று கூறுகிறான்.

ஸ்துதியின் கருப்பொருள் ஆய்வு

ஆத்மஞானம் புருஷார்த்த ப்ரயத்தனமதனாலா அல்லது ஈஸ்வர அநுக்ரஹத்தாலா? நம் முயற்சியாலா அல்லது இறையருளாலா?

இந்தக் கேள்விக்குப் பதிலாக அமைகிறது இந்த ஸ்லோகம். மரத்திற்கு அருகில் சென்றால்தான் நிழல், குளிர் காய நெருப்புக்கு அருகில் சென்றால்தான் தனப்பு. அதுபோல முயற்சியின் பலனும், மரமும் நெருப்புமாக இருக்கும் இறையருளாலேதான். இறையருளின்றி மெய்யறிவு கிட்டாது என்கிறார் அப்பைய தீக்‌ஷிதர் இந்த ஸ்லோகத்தில். 

தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல் வைத்த மோன வள்ளலையே நித்தமும் நம்பு 

என்கிறார் தாயுமானவர்.

இறைவன் சாதகனை (என்னைத்) தேர்ந்தெடுக்கிறானா அல்லது சாதகன் (நான்) தேர்ந்தெடுக்கிறேனா? அதாவது, இறைவனின் அருளா (அனுக்ரஹமா) அல்லது நம்முடைய முயற்சியா? இதை ஆராயும் முன், ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இக்கேள்விகள், இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதைப் பற்றி அல்ல. த்வைதமோ, அத்வைதமோ, இறை பக்தியில்லாமல் எதுவும் இல்லை. பக்தியில்லாமல் ஞானயோக சரணாகதியோ (ஞானமோ), கர்மயோக சரணாகதியோ (கார்யம்) இல்லை. பக்தியின் இலக்கணங்களை கண்ணன் கீதையில் தெளிவாக பல இடங்களில் கூறுகிறார் (7. 16-19, 18.55). இதை இரு கண்ணோட்டத்தில் காண்போம்.

1. த்வைத கண்ணோட்டம்.

“எல்லா படைப்புகளுக்கும் நானே பிறப்பிடம். எல்லாம் என்னிடமிருந்து வருகிறது. இதை நன்கு அறிந்த ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்கள். அன்பான பக்தியில் எவருடைய மனம் எப்பொழுதும் என்னுடன் இணைந்திருக்கிறதோ, அவர்களுக்கு நான் என்னை அடையக்கூடிய தெய்வீக அறிவை அளிக்கிறேன். அவர்கள் மீதுள்ள இரக்கத்தால், அவர்களின் இதயங்களில் குடியிருக்கும் நான், அறியாமையால் பிறந்த இருளை, அறிவின் ஒளிரும் விளக்கினால் அழிக்கிறேன்” என்று பகவத் கீதையில் (10.8-10.11) பகவான் கண்ணன் கூறுகிறான். இறைவன் எந்த ஜீவனை தேர்ந்தெடுக்கிறாரோ, அந்த ஜீவனுக்கு தன்னைக் காட்டி அருள்வார், இறைவன் நினைத்தால்தான் இறைவன் ஜீவனுக்கு மோக்‌ஷம் கொடுப்பார் என்பது த்வைத சித்தாந்தம். 

2. அத்வைத கண்ணோட்டம்.

இறைவன் ஜீவனைத் தேர்ந்தெடுப்பது என்றால், அத்தகைய இறைவன் குணங்கள், வினைகள் உடையவனாக, தேர்ந்தெடுக்கும் கர்மத்தைப் புரிபவனாக காணப்படும். இது அத்வைத கோட்பாடிற்கு ஒப்பாது.

எனவே ஜீவாத்மா (ஜீவன்),  பரமாத்மாவைத் (இறைவன்) தேர்ந்தெடுத்தால் (முயற்சி எடுத்தால்), இறைவன் அந்த ஜீவனுக்கு, நானே நீ என்பதைக் காட்டி அருள்வார், ஜீவன் நினைத்தால்தான் இறைவன் ஜீவனுக்கு மோக்‌ஷத்தை உணர்த்துவார் என்பது அத்வைத சித்தாந்தம்.  “‘ஈஸ்வர அருள்’ எனும் சொல் கூட உபாசகனின் மனம் தயாராகியிருப்பதைத் தாமே வெளிப்படுத்தும் ஒரு உவமை மட்டுமே. சுத்தமான மனத்தில் ஆத்மா தானாகவே பிரகாசிக்கிறான்; அதனையே வேதம் ‘ஈஸ்வர அருளால் ஆத்மா கிடைக்கிறான்’ எனக் கூறுகிறது. இவ்வருள் தனிச்செயல் அல்ல; ‘அவித்யை விலகியதின் விளைவு’ என்பது சங்கரரின் நிலைப்பாடு.

என்மீது பேரன்பு  செலுத்துபவனுக்கு நான் ஞானயோகம் கொடுக்கிறேன். அவனுடைய உள்ளத்தில் அவனும் நானும் ஒன்று என்ற உண்மையை உணர்த்துவதன்மூலம் ஞானத்தைக் கொடுக்கிறேன் என்று கண்ணன் கீதையில் (10.8-10.11) கூறுகிறான். இங்கே ‘பக்தி’ என்பதற்குப் பொருள் உணர்ச்சி சார்ந்த பக்தி அல்ல; ‘ஆத்மஞானத்தைப் பெறும் பேராசை’ (ஜிஜ்ஞாஸா) தான் உண்மையான பக்தி என்று சங்கரர் விளக்குகிறார். அதனால், ‘ஈஸ்வர அருள்’ என்பது ஜிஜ்ஞாஸாரூப பக்தியின் பூரணப் பரிபாகம் ஆகும்.”

எனவே எவன் தன்னைத் தான் அறிய வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ (“ஏஷஹ யம் ஏவ”)  அவன் தன்னை நன்றாகத் தெரிந்து கொள்கிறான். எவன் இறைவனை அறிய வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ, அவன் தன்னை இறைவனாகவே அறிந்து கொள்வதன்மூலம் இறைவனை அறிந்து கொள்கிறான் என்ற விளக்கம் தருகிறது அத்வைத வேதாந்தம்.

இந்த கருப்பொருளைத்தான் அப்பையர் இப்பண்ணில் வைத்துள்ளார். இது

நாயமாத்மா ப்ரவசநேந லப்⁴யோ
ந மேத⁴யா ந ப³ஹுநா ஶ்ருதேந ।
யமேவைஷ வ்ருணுதே தேந லப்⁴ய-
-ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூக்³ம் ஸ்வாம் ॥ 1.2.23 ॥

மறைபல கற்றல் ,  மேதகு அறிவாற்றல்,  

பலமுறை கேட்டல்  இவைகள தனால்

அடையப்படுவ தில்லை இந்த ஆத்மா ! 

எவனைத் தேர்கிறதோ இந்த ஆத்மா

அவனால் மட்டுமே  அடையப் படுவது ! 

அவனுக்கே அது தன்னை விளக்குகிறது!!

என்ற கடோபநிஷத் மந்திரம் (1.2.23), முண்டக உபநிஷத் மந்திரம் (3.2.3) இவைகளைத் தழுவியது.

உபநிஷத் கூறும் உட்கருத்தை அறிந்து, இந்த மந்திரத்தில் அப்பையர் குறிப்பிடும் சில கேள்விகளை சிரத்தையுடன், பக்தி கலந்து விசாரம் செய்ய வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தில், முழு அறிவிலாது புரிந்து கொள்வது மடமை, மிகப் பெறும் தவறும்கூட. அப்பையர் ஞான பண்டிதர். ப்ரம்ம சூத்திரத்திற்கு சைவபரமாகவும், அத்வைத ரீதியிலும் விளக்கவுரைகள் எழுதியவர் அவர். கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  

வாக்யார்ஶ்ச விசார்யதாம் ஶ்ருதிஶிர: பக்ஷ: ஸமாஶ்ரீயதாம் 

துஸ்தர்காத்ஸுவிரம்யதாம் ஶ்ருதிமதஸ்தர்கோத்யநுஸந்யதாம் । 

ப்ரஹ்மாஸ்மீதி விபாவ்யதாமஹரஹர்கர்வ: பரித்யஜ்யதாம் 

தேஹேத்யஹம்மதிருஜ்யதா புதஜநைர்வா பரித்யஜ்யதாம் ॥ 3॥

ஸாதன பஞ்சகத்தில் ஆதி சங்கரர், “உபநிஷத கட்டளைகளின் அர்த்தத்தை எப்போதும் சிந்தித்துப் பாருங்கள், பிரம்மத்தின் உண்மையை அடைக்கலம் புகுங்கள்.  விபரீதமான வாதங்களைத் தவிர்த்து, ஸ்ருதியின் (உபநிஷதங்கள்) பாரபட்சமான பகுத்தறிவைப் பின்பற்றுங்கள்.  எப்போதும் “நான் பிரம்மம்” என்ற மனப்பான்மையில் (பவ்) மூழ்கி இருங்கள். பெருமையைத் துறந்து விடுங்கள். மாயையான தவறான கருத்தை – “நான் உடல்” என்பதை விட்டுவிடுங்கள். ஞானிகளுடன் வாதிடும் போக்கை முற்றிலுமாக கைவிடுங்கள்” கூறிய அறிவுரையை மனதில் நிறுத்த வேண்டும். 

முடிவுரை

உபநிஷத் மந்திரங்கள் கூறும் மெய்ஞானப் பொருளான அவனை,

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

என்று உள்ளத்தில் நிலைநிறுத்தி, இமைப்பொழுதும், நம் நெஞ்சில் நீங்காதானாக அவனை தாழ் படிந்தால், சிவஞானம் பெறுவது சீவனுக்கு எளிதாகும். 

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading