
ஆன்மீக பாரம்பரியத்தில் சைவ சித்தாந்த, அத்வைத வேதாந்த நுண்ணறிவு, ஆழ்ந்த பக்தி மற்றும் கவிதை விழுமியத்தின் அரிய சங்கமம் தாயுமானவர்.
பாடல்களின் தத்துவ சாரம்
தாயுமானவரின் பாடல்கள் வெறும் வறண்ட தத்துவங்கள் அல்ல; அவை ஒரு தேடலில் உள்ள ஆன்மாவின் நேரடி உணர்வுகள்.
• அத்வைத அனுபவம்: “எல்லாம் சிவமயம்” என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்தாலும், அந்தப் பேரமைதியை அடைய ஏங்கும் ஒரு பக்தனின் உணர்ச்சிகளையும் தன் பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
• மௌனம்: மனதைக் கடந்த “மௌனமே” மிகச்சிறந்த நிலை என்பது இவரது அடிப்படைப் பாடம்.
• உண்மையான தேடல்: ஆன்மீகப் பாதையில் சந்திக்கும் மனப்போராட்டம், அகந்தை மற்றும் உலகப்பற்று போன்ற தடைகளை ஒளிவுமறைவின்றி நேர்மையாகப் பேசுகிறார்.
• பக்தி மற்றும் ஞானம்: மெய்யறிவும் (ஞானம்) உருக்கமான பக்தியும் வெவ்வேறானவை அல்ல என்பதை இவர் நிரூபித்தார். இவரது பாடல்கள் இசை நயம் மிக்கவை; ஆழ்ந்த தத்துவத்தைச் சாமானியனும் புரியும் எளிய தமிழில் கூறுபவை.
• தாயுமானவர் சுமார் 1,452 பாடல்களை இயற்றியுள்ளார். இவை 56 பதிகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பாடல்களின் சிறப்பம்சம் என்னவென்றால், பாடலின் இறுதியில் ஒரு மந்திரச் சொல் போல ஒரு மகுடம் (Refrain) அமையும்.
சின்மயானந்த குரு
நாம் பயிலவிருக்கும் இந்தப் பகுதி, ‘குரு’வை மையமாகக் கொண்டது. ஒரு சீடன் குருவின் அருளால் எவ்வாறெல்லாம் உயர முடியும் என்பதையும், அறிவே வடிவான குருவின் சிறப்பையும் இப்பதிகம் விளக்குகிறது.
ஆதிசங்கரர் அத்வைத வேதாந்தத்தின் ‘வரைபடத்தை’ கொடுத்தார் என்றால், அந்தப் பாதையில் நடந்து, நடக்கும்போது ஏற்படும் களைப்பு, அழகு மற்றும் அமைதியைத் தாயுமானவர் நமக்குத் தன் பாடல்கள் வழியாகக் காட்டுகிறார்.
தாயுமானவர் அருளிய பாடல்களிலேயே ‘சின்மயானந்த குரு’ பகுதி மிகவும் போற்றத்தக்க ஒரு சிகரமாகும். இது வெறும் துதிப்பாடல் மட்டுமல்ல; சைவ சித்தாந்தத்தையும், அத்வைத வேதாந்தத்தையும் தனது அனுபவ அறிவால் இணைத்து அவர் வழங்கிய ஒரு மகுடம்.
இந்த பாடற்தொகுப்பில் தாயுமானவர் இரு வேறு ஆன்மீகப் பார்வைகளை அழகாக இணைக்கிறார்:
• சைவ சித்தாந்தம்: இறைவனைத் தலைவனாகவும், தன்னைத் தொண்டனாகவும் கருதி வழிபடும் பக்தி நெறி.
• அத்வைத வேதாந்தம்: “நானே அது” (பிரம்மம்) என்று உணரும் அத்வைத ஞான நிலை.
இவ்விரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் பாலமாக இப்பதிகம் விளங்குகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள 11 பாடல்களும், ஆதிகுருவான தக்ஷிணாமூர்த்தியை முன்னிறுத்திப் பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் பின்வரும் மகுட வரிகளுடன் நிறைவடைகின்றன:
“சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே”
இந்த வரிகள் இறைவனின் மூன்று முக்கிய நிலைகளை விளக்குகின்றன:
1. சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே: திருச்சிராப்பள்ளியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டையில் (சிரகிரி) வீற்றிருந்து அருள் வழங்கும் தக்ஷிணாமூர்த்தியே!
2. சின்மயானந்த குருவே: மெய்யறிவு (சித்) மற்றும் பேரின்பமே (ஆனந்தம்) வடிவான குருவே!
3. சித்தாந்த முத்திமுதலே: சைவ சித்தாந்தம் போற்றும் அந்தப் பரம்பொருளே, முக்தி நிலையின் தொடக்கமே!
இப்பதிகம் தக்ஷிணாமூர்த்தியை அறிவின் வடிவமாகவும், முக்தியின் ஊற்றாகவும் போற்றுகிறது. ஞானமும் பக்தியும் சங்கமிக்கும் ஒரு உன்னத நிலையே ‘சின்மயானந்த குரு’ ஆகும்.
ஜூலை 11 நாள் தொடங்கி, மாதம் ஒரு பாடலாக எடுத்து ஆராய்வோம் நாம் இனிவரும் பதிவுகளில்.
பின்குறிப்பு
இப்பதிவுகளின் ஆங்கில சுருக்கவுரையைக் காண, கீழ்காணும் வலைதளப் பகுதியைப் காணவும்.
https://soundar53.substack.com
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
Leave a comment