
முகவுரை
இது அப்பைய தீட்சிதரின் ஆத்மார்ப்பண ஸ்துதியிலுள்ள மிக ஆழமான சரணாகதி-பாவம் நிரம்பிய ஒரு ஸ்லோகம். இங்கு பக்தன் தன்னுடைய அநாதிகால வாஸனைகளையும், தன் அநாதர்ம நிலைகளையும் நேராக ஒப்புக்கொண்டு, இறைவனின் அருளையே ஒரே ஆதாரமாக எடுத்துக் கொள்கிறான்.
இந்த ஸ்லோகம் ஒரு பக்தனின் மனநிலையை மூன்று கட்டங்களில் காட்டுகிறது:
- தன் குறைகளை நேராக ஒப்புக்கொள்வது
- அனைத்து தகுதிகளையும் தாண்டி சரணாகதி அடைதல்
- இறைவனின் கருணையை உறுதியாக நாடுதல்
இது ஒரு சாதாரண பிரார்த்தனை அல்ல; இது அஹங்கார நிவிர்த்தி மூலம் ஆத்மார்ப்பணம்.
ஸ்துதி
पापिष्टोऽहं विषयचपलः सन्ततद्रोहशाली
कार्पण्यैकस्थिरनिवसतिः पुण्यगन्धानभिज्ञः ।
यद्यप्येवं तदपि शरणं त्वत्पदाब्जं प्रपन्नं
नैनं दीनं स्मरहर तवोपेक्षितुं नाथ युक्तम् ॥ २८॥
தமிழ் ஒலிபெயர்ப்பு
பாபிஷ்டோঽஹம் விஷயசபல: ஸந்ததத்ரோஹஶாலீ
கார்பண்யைகஸ்திரநிவஸதி: புண்யகந்தாநபிஜ்ஞ: ।
யத்யப்யேவம் ததபி ஶரணம் த்வத்பதாப்ஜம் ப்ரபந்நம்
நைநம் தீநம் ஸ்மரஹர தவோபேக்ஷிதும் நாத யுக்தம் ॥ 28॥
தமிழாக்கம்
சிற்றின்பம் நாடும் சிறுமை நிறை புண்ணியமறியா
கொடும் பாவியென இருப்பினும் பரமன் உன்
பொன்மலர்ப்பாதம் பணிந்திட்ட எனைக் கைவிடல்
பொருந்துமோ உனக்கு, புரமெரித்தோனே !!
சொற்களின் பொருள்
ஸ்மரஹர – காமனை (ஆசையை) எரித்தோனே (தன்னை எண்ணுபவர்களின் துயர் நீக்குவோனே)
பாபிஷ்டஹ – பாபியான
அஹம் – நான்
விஷயசபல: – புலனின்ப நாட்டம் மிக்கவனான (இந்திரியங்களில் மிக வலிமை படைத்தவை நாக்கும், தோலும். அதனிலும் நாக்கு மிக வலிமை. “ ஜிதம் ஸர்வம் ஜிதே ரஸே” – பாகவதம், 11.7.21. நாவடங்க நாலும் அடங்கும்)
அஹம் – நான்
ஸந்ததத்ரோஹஶாலீ – எப்போழுதும் துரோகம் செய்பவனாக (ஸ்ருதி, ஸ்ம்ருதி, குரு உபதேசம், உறுதிமொழிகளை மீறுபவனாக)
கார்பண்யைகஸ்திரநிவஸதி: – கார்பண்ய ஏக ஸ்திர நிவஸதி: – அல்ப புத்தியுடன் (பற்றுடன், உடலாகத் தன்னை எண்ணிக் கொண்டு) வாழ்க்கை நடத்துபவனாக
புண்யகந்தாநபிஜ்ஞ: – புண்யகந்த அநபிஜ்ஞ: – புண்ணியத்தின் வாஸனையைக்கூட அறியாதவனான
அஹம் – நான்
யத்யப்யேவம் – யதிபி ஏவம் – இவ்வாறு இருந்த போதிலும்
ததபி – தத் அபி – அப்பொழுதும் கூட
த்வத்பதாப்ஜம் – உன் திருவடித்தாமரைகளை
ஶரணம் – சரணாகதி
ப்ரபந்நம் – செய்திருக்கின்ற
ஏநம் – இந்த
தீநம் – எளியவனை
உபேக்ஷிதும் – கைவிடுதல
தவ – தங்களுக்கு
ந யுக்தம் – பொருத்தமல்ல
விளக்கம்
இது அப்பைய தீட்சிதரின் ஆத்மார்ப்பண ஸ்துதியிலுள்ள மிக ஆழமான சரணாகதி-பாவம் நிரம்பிய ஒரு ஸ்லோகம். இங்கு பக்தன் தன்னுடைய அநாதிகால வாஸனைகளையும், தன் அநாதர்ம நிலைகளையும் நேராக ஒப்புக்கொண்டு, இறைவனின் அருளையே ஒரே ஆதாரமாக எடுத்துக் கொள்கிறான்.
“ஆத்மார்ப்பணம்” — தன்னை முழுவதும் இறைவனிடம் ஒப்படைத்தல் என்பதை மையமாக வைத்த வேண்டிதல் இந்த ஸ்துதி.
“க்ருபநஸ்ய பாவஹ கார்ப்பண்யம்” – பொதுவாக க்ருபநன் என்பவன் அல்பன் எனப் பொருள்பட்டாலும், இங்கே உடலை நான் எனக்கருதுபவன் க்ருபநன்
“பாபிஷ்டோऽஹம்” – நான் பாபி என்று அப்பையர் தொடங்குவதை, பக்தியல் தன்னை தாழ்மைப்படுத்தக் கொள்வது என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது அஹங்கார நிவ்ருத்தியைக் (தன்முனைப்பு, தன்னுணர்வு விடுப்பு) குறிப்பது.
அத்வைத வேதாந்தத்தில், அஹங்காரம் தான் பந்தத்தின் மூல காரணம் (அவித்யா-ஆத்யஸம்). அப்பைய தீட்சிதர் இங்கு தன்னை “நான் நல்லவன்” என்று கூறவில்லை. அவர் கூறுவது:
1. நான் விஷயங்களில் ஓடும் மனம் கொண்டவன் (विषयचपलः)
2. நித்யம் தவறான வழியில் செல்கிறேன் (सन्ततद्रोहशाली)
3. ஆன்மீக வலிமை இல்லாதவன் (कार्पण्य)
4. புண்ணியம் என்னும் வாசனையே இல்லை (पुण्यगन्धानभिज्ञः)
என்ற நிலையில் இருப்பதை உணர்ந்த மனநிலை. ஆனால் இங்கு முக்கியமான உட்கருத்து, ஒரு சாதகன் அந்த நிலையை உணர்ந்து கொண்டிருந்தால், அதுவே மாற்றத்தின் முதல் படி என்பது.
“யத்யப்யேவம் – யதிபி ஏவம்” – இவ்வாறு இருந்த போதிலும் என்று அப்பையர் சொல்வது “என் தகுதியைப் பார்த்து அல்ல, உன் கருணையைப் பார்த்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறி, த்வத்பதாப்ஜம் – உன் திருவடித்தாமரைகளை சரணாகதி அடைகிறேன் என்று அவர் கூறுவது பகவத்கீதையில் “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ” என்று கண்ணன் கூறும் சரணாகதி தத்துவத்தை பரிபூரணமாக கடைப்பிடிப்பதை குறிப்பதாகும். இது கர்மபலத்தை விடுவது, அகங்காரத்தை விடுவது, “நான் செய்கிறேன்” என்ற உணர்வை விடுவது
“நைநம் தீநம் ஸ்மரஹர தவோபேக்ஷிதும் நாத யுக்தம்” என்று அப்பையர் கூறுவது, ஒரு அற்புதமான பக்தி உச்சம். “நான் தகுதியற்றவன் என்றாலும், உன் இயல்பு கருணை; எனவே என்னை நீ விட்டுவிட முடியாது” என்பது உபநிஷத்களில் வரும் “ப்ரபத்தி-பாவம்” – “तमेव शरणं गच्छ…” என்பதோடு ஒத்தது. தன்நிலைக்கு ஏற்ற சொற்களால் சிவனை ஸ்மரஹர – காமனை (ஆசையை) எரித்தோனே அழைக்கிறார். அதாவது, “என் விஷய வாஸனைகளை நீயே அழிக்க வேண்டும்” என்ற உட்கருத்தை வைக்கிறார்.
முடிவுரை
அன்றாட வாழ்வில் அறிந்தும் அறியாமலும் பாபவினைகள்புரியும் நாம், நமச்சிவாயனின் தாழ் பற்றினால் பாப விமோசனம் என்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்து. இதனைத்தான் பகவத்கீதையில் (9.30,31)
அபி1 சே1த்1ஸுது1ராசா1ரோ ப4ஜதே1 மாமனன்யபா4க்1 |
ஸாது4ரேவ ஸ மன்த1வ்ய: ஸம்யக்1வ்யவஸிதோ1 ஹி ஸ: ||30||க்ஷிப்1ரம் ப4வதி1 த4ர்மாத்1மா ஶஶ்வச்1சா2ன்தி1ம் நிக3ச்1ச2தி |
கௌ1ன்தே1ய ப்1ரதிஜானீஹி ந மே ப4க்1த1: ப்1ரணஶ்யதி1 ||
31||
“கொடிய பாவிகள் என்னைப் பிரத்தியேக பக்தியுடன் வணங்கினாலும், அவர்கள் சரியான தீர்மானத்தைச் செய்ததால் அவர்களை நான் காப்பாற்றுவேன். விரைவில் அவர்கள் மேல்நிலைக்கு வருவார்கள், நல்லொழுக்கமுள்ளவர்களாக மாறி நிலையான அமைதியை அடைகிறார்கள். குந்தியின் மகனே, என்னுடைய எந்த ஒரு பக்தனும் ஒருபொழுதும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிக்கவும்”.
என்று எடுத்துரைக்கிறான் கண்ணன்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
Leave a comment