முகவுரை

ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் மனிதர்களுள் ‌யார்‌ எத்தகைய ஆற்றல்‌ படைத்‌தவர்‌ என்பது யாருக்கும்‌ தெரியாது. அயர்ந்து தூங்குகின்ற வேளையில்‌ ஆற்றல்‌ படைத்தவர்களும்‌ ஆற்றல்‌ ஒன்றும்‌ இல்லாதவர்களும்‌ ஒரே. ஒடுங்கிய நிலையில்‌ மூழ்கியிருக்‌கின்றனர்‌. ஆனால்‌ விழித்து எழுந்துகொண்டவுடன்‌ யார்‌ எத்தகைய பாங்குடையவர்‌ என்பது எளிதில்‌ விளங்கிவிடும்‌. ஒரு மனிதன்‌ செய்கின்ற செயலே அவனுடைய ஆற்றல்‌ எத்‌தகையது என்பதை விளக்கிக்‌ காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனுடைய திறமையும்,‌ தான்‌ புரியும்‌ செயலினின்‌று வெளியாகிறது. செயல்‌ வல்லமையை ஒரு மனிதனுடைய படைப்‌புத்‌ திறமை என்று பகர்வது மிகையாகாது, இது மனிதனைப்‌ பற்றிய உண்மை. 

சரி, இனி கடவுளைப்‌ பற்றிய உண்‌மையை ஆராய்வோம். நீக்கமற நிறைந்து, அனைத்தையும் அறிந்து, அனைத்தின் ஆதாராமான அந்த ஆண்டவன்‌,‌ ஆற்றல்‌ அனைத்தும்‌ படைத்தவர்‌. அவருடைய திறமைக்கு எல்லை கண்டுபிடிக்க எவர்க்‌கும்‌ இயலாது. பேராற்றல்‌ படைத்தவர்‌ என்று அவர்‌ பகரப்படுகின்றார் மறைகளால்‌. கடவுளின்‌ பேராற்றல்‌ நமக்கு எப்படி விளங்குகிறது என்று ஒருவர்‌ கேள்வி ஒன்று கேட்கலாம்‌. அவர்‌ சர்வ சக்திமான்‌ என்பதை அவர்‌ ஓயாது நமக்கு விளக்கிக்‌ காட்‌டிக்‌ கொண்டிருக்கிறார்‌. அவருடைய படைப்பே அவருடைய வல்லமைக்கு எடுத்துக்காட்டாகும்‌. பிரளய காலத்தில்‌ பிரபஞ்சமெல்லாம்‌ அவரிடத்து ஒடுங்கிக்‌ கிடக்கிறது… சிருஷ்டியின்பொழுது அவை யாவும்‌ தோற்றத்துக்கு வருகின்றன. 

ஓவியத்தின்‌ மேன்மையிலிருந்து ஓவியக்காரனுடைய திறமை 

நமக்கு விளங்குகிறது போல சிருஷ்டியின்‌ மஹிமையிலிருந்து சிருஷ்டிகர்‌த்தாவின்‌ மஹிமைகளில்‌ பல நமக்கு விளங்குகின்றன, 

அவர்‌ நமக்குக்‌ கொடுத்திருக்கின்ற அறிவையும்‌ ஆற்‌றலையும்‌ கொண்டே நாம், அவருடைய சிருஷ்டியின்‌ ஒரு சிறு பகுதியை ‌ ஆராய்ந்து அவரை அறிய வேண்டியதாகிறது. இதற்கு உபமானம்‌ ஒன்று எடுத்துக்கொள்வோம்‌. கடல்‌ ஒன்று எத்தனை மைல்‌ தூரம்‌ பரந்துள்ளது என்பது நமக்கு விளங்குவதில்லை. அதைச்‌ சுற்றிப்‌ பார்ப்பதற்கு நீராவிக்‌ கப்பல்‌ ஒன்றை அமைக்கின்றோம்‌. அக்கப்பலை இயக்குவது ஆவிமயமாய்‌ இருக்கின்ற நீர்‌. எனவே நீரின்‌ துணை கொண்டே நீர்ப்பரப்பை அறிந்துகொள்ள நாம்‌ முயலுகின்‌ரோம்‌. அங்ஙனம்‌ இறைவன்‌ நமக்குத்‌ தந்துள்ள அறிவு  நுட்பத்தையும்‌ ஆற்றலையும்‌ கொண்டு அவருடைய படைப்‌பைத்‌ தெரிந்துகொள்ள நாம்‌ முயலுகிறோம்‌. அவருடைய படைப்பை அறிகின்ற அளவு அவருடைய சொரூபத்தையே நாம்‌ அறிபவர்‌ ஆகின்றோம்‌. ஏனென்றால்‌ அவர்‌ வேறு, அவருடைய படைப்பு வேறு அல்ல. 

அப்படி ஸ்வயும்புவாக, தோன்றாத நிலையிலிருந்து தோன்றுகிற நிலைக்குத்‌ தம்மை மாற்றியமைத்தவரான இறையின் ஆற்றலை அவரின் படைப்பு கொண்டு ஆராயந்து வேண்டுகிறார் தாயுமானவர் இந்த நான்காவது பாடலில். ‌

பாடல்

ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள்‌ 
அசரசர பேதமான 
யாவையும்‌ வகுத்துநல்‌ லறிவையும்‌ வகுத்துமறை 
யாதிநூ லையும்வகுத்துச்‌ 
சைவமுத லாம்‌அளவில்‌ சமயமும்‌ வகுத்துமேற்‌ 
சமயங்‌ கடந்தமோன 
சமரசம்‌ வகுத்தநீ யுன்னையான்‌ அணுகவுக்‌ 
தண்ணருள்‌ வகுக்கஇலையோ 
பொய்வளரும்‌ நெஞ்சினர்கள்‌ காணாத காட்சியே 
பொய்யிலா மெய்யரறிவில்‌ 
போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்‌ 
போக்குவர வ ற்றபொருளே 
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே 
சித்தாந்த முத்திமுதலே 
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே 
சின்மயா னந்தகுருவே. 

விளக்கம்

பஞ்ச பூதங்களைப் படைத்து, அதனுள் அசையும் அசையாத, உயிருள்ள, உயிரற்ற பொருட்களாக உள்ள, வேற்றுமைகள் எல்லாவற்றையும் படைத்து, புத்தியையும் கொடுத்து, அந்த அறிவு நன்றாக வளரவேண்டும் என்பதற்காக வேதங்கள் முதலிய புராணங்கள், இதிகாசங்கள் போன்ற நூலகளையும் வகுத்து, அளவிலா சமயங்களையும் வகுத்து, அதற்கு மேல் சமயத்தைக் கடந்து, மெளனத்தில் சமரசம் வகுத்த நீ என்று இறைவனை முதலில் போற்றுகிறார் தாயுமானவர்.

இதனின் விளக்கத்தைக் காண்போம்.

ஐவகை எனும்பூத மாதியை வகுத்து

  1. ஆகாசம்‌ என்பது முதலில்‌ உண்‌டான பூதம்‌, வெட்டவெளி என அது பொருள்படுகிறது. கடவுள்‌ நீக்கமற எங்கும் நிறைபொருள்‌ என்கின்றோம்‌. அக்கோட்‌பாட்டை வெட்டவெளி நிரூபிக்கிறது. வெட்டவெளிக்கு எல்லை கட்டவோ, பிளவை உண்டுபண்ணவோ எவர்க்கும்‌ இயலாது.  அந்த வெட்ட வெளியில்தான் அண்டங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அந்த வெட்ட வெளி வியாபித்திருக்கின்றது. “சுவரிடை வெளி போல “ என்கிறது கைவல்ய நவநீதம். சுவரினூடும்‌, சுவருக்கு நாலாபக்கமும்‌ எங்கும்‌ வியாபகமாயிருப்பது வெளி, இதை அறிந்துகொள்ளுகிறபொழுது கடவுள்‌ எங்கும்‌ நிறைபொருள்‌ “என்பதை ஓரளவில்‌ அறிந்து கொள்கிறோம்‌. இந்த வெட்டவெளி அல்லது ஆகாசத்துக்கு ஓசை தன்மாத்திரையாய்‌ அமைந்திருக்கிறது. வானம்‌ எங்கும்‌ வியாபித்திருப்பது போன்‌று ஒலியும்‌ வியாபகமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒலியைக்‌ கேட்டு அறிந்துகொள்‌தற்கு நம்மிடத்துக்‌ காது அமைந்துள்ளது. 
  2. இந்த ஆகாசத்திலிருந்து வாயு உண்டானது. வாயு எங்கும்‌ வியாபகமானதல்ல, சில இடங்களில்‌ அது செறிந்திருக்கிறது ; வேறு சில இடங்களில்‌ அது மெலிந்திருக்கிறது. இன்னும்‌ சில இடங்களில்‌ காற்று இல்லவே இல்லை. வானவெளியில்‌ பூமியைவிட்டு அப்பால்‌ போகப்‌ போகக்‌ காற்று குறைந்திருப்பது அதை நிரூபிக்கிறது, காற்று அல்லது வாயுவின்‌ தன்மாத்திரைக்கு ஊறு அல்லது ஸ்பர்சம்‌ என்று பெயர்‌, காற்றின்‌ துணைகொண்டே தொட்டு உணர்தல்‌ என்னும்‌ பொறி நம்மிடத்து அமைந்துள்ளது. உஷ்ணத்தையும்‌, தணுப்பையும்‌, கரடு முரடுத்‌ தன்மையையும்‌ மிருதுத்‌ தன்மையையும்‌ வாயுவின்‌ துணைகொண்டு நாம்‌ அறிகிறோம்‌. நம்‌ உடல்‌ முமுதும்‌ ஸ்பர்சித்தல்‌ அல்லது தொட்டு உணர்தல்‌ என்னும்‌ பொறி வடிவெடுத்திருக்கிறது. 
  3. மூன்றாவது பூதமாய்‌ அமைந்திருப்பது நெருப்பு. வாயுவைவிட ஸ்தூல நிலைக்கு வந்திருப்பதால்‌ அது இன்‌னும்‌ அதிகமாக எல்லையில்‌ அடங்கிவிடுகிறது. சூரியன்‌ போன்ற கோளங்களில்‌ அது நிலைபெற்றிருக்கிறது. பூமியின்‌ உட்புறத்தில்‌ அக்கினிக்‌ குழம்பாக அது நிறைந்திருக்கிறது. இந்த அக்கினியின்‌ தன்மாத்திரை ஒளி அல்லது ரூபம்‌. பிரகாசித்தல்‌ அல்லது ஒளிவிடுதல்‌ அக்கினியோடுகூடி இயல்பாய்‌ அமைந்திருக்கிறது. அந்த ஒளியின்‌ துணை கொண்டு வடிவத்தைக்‌ கிரகிக்கிற வல்லமை நமக்கு வருகிறது. அதைக்‌ கிரகிப்பதற்கு நம்மிடத்து கருவியாய்‌ அமைந்திருப்பது கண்‌. 
  4. நான்காவது பூதமாய்‌ வருவது நீர்‌, அது வண்ணத்தில்‌ இன்னும்‌ சிறியதாய்‌ விடுகிறது. சூரியனிடத்திலும்‌ பூமியின்‌ உட்புறத்திலும்‌ அக்கினி இருப்பது போன்று நீர்‌ அவ்வளவு வியாபகமாய்‌ இல்லை. பூமியின்‌ மேல்பரப்பில்‌ முக்கால்‌ பகுதியை அது மூடிக்கொண்டிருக்கிறது, சுவைத்துப்‌ பார்ப்பதற்குத்‌ துணைபுரிவது நீர்‌. ஆகவே அப்புவின்‌ தன்‌மாத்திரை ரசம்‌ என்னும்‌ கோட்பாடு வந்துள்ளது. எதை சுவைத்துப்‌ பார்க்க நாம்‌ விரும்பினாலும்‌ ஈம்‌ நாவில்‌ ஊறும்‌ உமிழ்சீரோடு கலக்கிச்‌ சவைத்துப்‌ பார்க்கிறோம்‌. 
  5. நீரைவிட ஒடுங்கிய நிலையில்‌ இருப்பது நிலம்‌. இப்‌பரந்த மண்ணுலகில்‌ நம்‌ வாசத்துக்கென்று அமைந்தது கால்பங்கு, – மற்றதெல்லாம்‌ நீரில்‌ மூழ்கியதாகிறது. மணம்‌ மண்ணினுடைய தன்‌ மாத்திரை. மூக்கின்‌ துணைகொண்டு  நாம்‌ பிருதிவியின்‌ மணத்தை முகக்கின்றோம்‌.. 

இந்த ஜம்‌பெரும்‌ பூதங்களும்‌ சிருஷ்டிக்குப்‌ பயன்படுகின்றன. 

எனவே இவைகளை உண்டுபண்ணிய கடவுள்‌ ஐவகை எனும்‌ பூதமாதியை வகுத்தவர்‌ என இயம்ப்ப்படுகின்றார்‌. வகுத்தல்‌ என்னும்‌ சொல்‌ படைத்தல்‌ எனப்‌ பொருள்‌படுகிறது. படைப்பில் ஒழுங்குபாடு இருப்பதால் வகுத்து என்று சொல்லப்பட்டது.

அசரசர பேதமான யாவையும்‌ வகுத்து

சுவாமி சித்பவானந்தரின் அருளுரையில், இது விரிவாக விளக்கப்படுகிறது. 

ஓர்‌ உடலின்‌ மூலம்‌ -தன்‌ இயல்பை விளக்குகின்ற ஆத்மாவுக்கு ஜீவாத்மா என்று பெயர்‌, உடல்‌ உண்டாவதற்கு ஐம்பூதங்கள்‌ முற்றிலும்‌ அவசியமானவை. ஆகாசம்‌ மற்ற பூதங்களுக்கு இருப்பிடமாகிறது. ஓசை ஒலியைக்‌ கிரகிப்பதற்கும்‌ அது இன்றியமையாதது. ஏனைய நான்கு பூதங்கள்‌ சேர்ந்து உடல்‌ உண்டாதற்குத்‌ துணைபுரிகின்‌றன. இந்த நான்கு பூதங்களின்‌ சேர்க்கையும்‌ செயல்களுமின்றி உடலை அமைக்க எந்த ஜீவனுக்கும்‌ இயலாது. 

ஜீவாத்மாக்களைப்‌ பொதுவாக நிலைத்திணை என்றும்‌ இயங்கு திணை என்றும்‌ இரண்டு பிரிவுகளாகப்‌ பிரிக்கிறோம்‌. 

  1. நிலைத்‌திணை அசரம்‌ என்று இயம்பப்‌ படுகிறது. இயங்குதினை சரம்‌ என்று சொல்லப்படுகிறது.  நம்‌ தலையின்மீது ரோமங்கள்‌ முளைப்பதுபோன்று அவைகள்‌ ‌ தென்படுகின்றன.
  2. இயங்குதினை (சரம்) முதல்‌ முதல்‌ நீரில்‌ உண்டானது என்பது ஐதிகம்‌. நீரினுள்‌ அசைந்து திரியும்‌ ஜந்துக்கள்‌ அனைத்துக்கும்‌ மச்சம்‌ என்பது பொதுப்பெயராய்‌ இருக்‌கிறது. கடவுள்‌ எடுத்துள்ள அவதாரங்களுள்‌ மத்ஸ்ய “அவதாரம்‌ முதலாவது ஆகிறது. அதன்‌ பிறகு “நீரினுள்‌ உள்ள உயிர்களுள்‌ சில நிலத்திலும்‌ வந்து சஞ்‌சரிக்க முயற்சி செய்தன. அம்‌ முயற்சியில்‌ அவைகள்‌ பெரிதும்‌ வெற்றிபெற்றன. ஆமை, தவளை, பாம்பு வகைகள்‌,  “நீர்‌; நிலம்‌ ஆகிய இரண்டு பூதங்களிலும்‌ இருப்பதுண்டு, இவைகளைத்‌ தொகுத்து இவைகளின்‌ பிரதிநிதியாக கூர்மம்‌ அல்லது ஆமை எடுத்துக்கொள்ளப்படுகிறது. கூர்ம அவதாரம்‌ இரண்டாவது இடம்‌ பெறுகிறது. பெரும்பாலும்‌ நிலத்தில்‌ இருந்துகொண்டு நீர்ப்பாங்கான நிலத்தில்‌ பற்று வைக்கும்‌ இயங்குதிணைகள்‌ இருக்கின்றன. அவைகளுள்‌ வராகம்‌ அல்லது பன்றி மிக முக்கியமானது. எனவே மேல்‌ நிலைக்கு இயங்குகின்ற உயிர்வகைகளுள்‌ வராக அவதாரம்‌ மூன்றாவது இடம்‌ பெறுகிறது. பிறகு விலங்கு நிலைக்கும்‌ மானுட நிலைக்கும்‌ இடைத்தரத்திலுள்ள உயிர்வகைகள்‌ இருக்கின்றன. விலங்கு நிலையைத்‌ தாண்டி மானுட நிலைக்கு அருகில்‌ வரும்‌ இயல்புகள்‌ அவ்வுயிர்களிடத்துப்‌ பெரிதும்‌ தென்படுகின்றன. அவைகள்‌ அனைத்துக்கும்‌ பொதுவாய்‌  இருப்பது நான்காவது அவதாரமாகிய நரசிம்ம அவதாரம்‌. மானுட இயல்பும்‌ விலங்கின்‌ இயல்பும்‌ இங்கு சந்திக்கின்‌றன. அடுத்தபடியாக மானுடத்‌ தோற்றம்‌ முழுதும்‌ அமைந்து விட்ட வடிவம்‌ ஒரு குள்ளன்‌ ஆகின்றான்‌. அதற்கு அறிகுறியாக ஐந்தாவது அவதாரமாகிய வாமன அவதாரம்‌ வருகிறது, மானுட இயல்புகளும்‌ மானுடக்‌ குறைபாடுகளும்‌ நிறைந்துள்ள ஜீவர்‌.களுக்குப்‌ பிரதிநிதியாக ஆராவது” அவதாரமாகிய பரசுராமாவதாரம்‌ வருகிறது. மானுட வடிவத்‌தில்‌ குறையொன்றுமில்லாத நிறை நிலைக்கு எடுத்துக்காட்‌டாக தசரதராம அவதாரம்‌ வருகிறது.  (குறிப்பு – இது ஒரு சின்னார்த்த உபமானம்; இது சாஸ்திர சித்தாந்தம் அல்ல ). 

இங்ஙனம்‌ கல்‌ நிலையிலிருந்து முற்றிலும்‌ பரிபக்குவம்‌ அடைந்துள்ள நிறை மனிதனுடைய நிலைபரியந்தம்‌ எண்ணிறந்த ஜீவகோடிகள்‌ இருக்கின்றன. அவைகளை அளந்தெடுக்க எவர்க்கும்‌ இயலாது. இயற்கையின்கண்‌ வெவ்வேறு இடங்களில்‌ வெவ்‌வேறு பாங்குடைய ஜீவர்கள்‌ வாழ்ந்து வருகின்றன. இவை யாவையும்‌ தொகுத்து அதனுள்‌ அசரசர பேதமான யாவையும்‌ வகுத்து என்று தாயுமானவர்‌ கூறுகின்றார்‌. 

நல்லறிவையும் வகுத்து

ஒன்றுக்கொன்று மாறுபடும் எண்ணற்ற உயிர்களை கடவுள் படைத்துள்ளார். இவ்வளவு விதமான உயிர்கள் ஏன் வாழ்கின்றன என்பது ஒரு கேள்வி. தெரிந்தோ தெரியாமலோ, எல்லா உயிர்களும் ஒரே இலக்கை நோக்கி முயன்று வருகின்றன. வெளிப்படையாக பார்க்கும்போது, “உயிருடன் வாழ்வதே” அவற்றின் நோக்கம் போலத் தோன்றுகிறது. ஒரு அளவிற்கு அது உண்மையும் தான். ஆனால், வாழ்க்கையில் எந்த உயிர் அதிக வெற்றி பெறுகிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

வாழ்க்கையின் பல நிலைகளில் ஈடுபடுவதன் மூலம் உயிர்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. மிகச் சிறிய உயிர்களுக்கும் அறிவு வளர்ச்சி உண்டா? இருந்தால் அது எப்படி உருவாகிறது? என்பதையும் ஆராயலாம்.

எல்லா உயிர்களும் உணவைத் தேடி வாழ்கின்றன. உணவு இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது. இயற்கையின் அமைப்பைப் பார்த்தால், ஒரு உயிரின் உடல் மற்றொரு உயிருக்கு உணவாகிறது என்பதை காணலாம். மண்ணில் உள்ள சத்துக்கள் மரம், செடி, கொடிகளுக்கு உணவாகின்றன. அவை பிறகு ஊர்வன, பறவைகள், விலங்குகள் போன்றவற்றிற்கு உணவாகின்றன. அவற்றும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று உணவாகின்றன.

இந்த அமைப்பு சிலருக்கு கொடுமையானதாக அல்லது குறைபாடுடையதாக தோன்றலாம். ஆனால் உண்மையில், இதன் மூலம் உயிர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தேவைக்காக மற்ற உயிர்களை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்கின்றன. இந்த இரு முயற்சிகளும் அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.

எதிரிகளிடமிருந்து தப்பிக்க உயிர்கள் பல சாமர்த்தியங்களை பயன்படுத்துகின்றன. உணவைத் தேடுவதிலும் அவை அறிவை வெளிப்படுத்துகின்றன. “அறிவில்லாத சிறிய உயிர்கள்” என்று சொல்லப்படுபவைகள்கூட தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், உணவைத் தேடிக்கொள்ளவும் நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன.

வாழ்க்கையில் மேல்நிலைக்கு செல்லச் செல்ல, உயிர்கள் தங்களுக்கு தேவையான வசதிகளைத் தேடிக் கொள்கின்றன. சில சிறிய உயிர்கள் கூடுகளை கட்டுவது, குழிகளை தோண்டுவது போன்ற செயல்களில் மனிதனைவிட சிறப்பாக செயல்படுகின்றன.

அறிவு மேலும் வளரும்போது, எதிர்காலத்திற்காக உணவை சேமித்து வைத்துக்கொள்ளவும் அவை கற்றுக்கொள்கின்றன. காலநிலைக்கு ஏற்ப இடம் மாறிச் சென்று வசதியான இடங்களில் வாழ்கின்றன. வெப்பத்தையோ குளிரையோ தவிர்க்க சில பறவைகள் ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து புதிய இடங்களுக்கு செல்கின்றன. பின்னர் பழைய இடங்களையும் சரியாக கண்டுபிடித்து திரும்பிவருகின்றன. சில மீன்கள் நீரில் நீண்ட தூரம் பயணம் செய்கின்றன.

இவ்வாறு வாழ்க்கை என்னும் போராட்டத்தின் மூலம் உயிர்கள் படிப்படியாக அறிவை வளர்த்துக்கொண்டு வருகின்றன. வாழ்க்கையில் போட்டியும் போராட்டமும் இல்லையெனில் அறிவு வளர்ச்சி ஏற்படாது.    இங்கே ஒரு முக்கிய வேறுபாட்டினைக் கருத்தில் இட வேண்டும். வேதாந்தத்தில் அறிவு என்பது ஆத்ம சைதன்ய பிரதிபிம்பம்; புத்தி வளர்ச்சி என்பது உபாதி பரிணாமம். எனவே இங்கே நாம் கூறும் அறிவு வளரச்சி என்பது “வாழ்க்கைப் போராட்டம் புத்தியின் செயல்திறனை வளர்க்கிறது” என்பதாகும்.

இந்த அறிவு வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவன் மனிதன். தனது அறிவின் காரணமாகவே உயிர்களுள் அவன் சிறந்தவன் என்று கருதப்படுகிறான். அரிது அரிது மானிடராயப் பிறத்தல் அரிது அல்லவா! இப்படி ஆறறிவு  படைத்த மனிதன் என்ற கருத்தையே தாயுமானவர் “நல்லறிவையும் வகுத்து”  என்ற சொற்களின் மூலம் எடுத்துரைக்கிறார்.

மறையாதி நூலையும் வகுத்து

மற்ற உயிர்கள்‌ தாம்‌ பெற்ற அறிவு அனுபவத்தை தங்களுடைய இயல்பாக மாற்றிச்‌ சந்ததியினிடத்து வழங்குகின்றன. ஆனால்‌ மனிதனோ இந்த ஏற்பாட்டில்‌ மற்ற உயிர்‌களிடத்திருந்து மாறுபட்டவன்‌ ஆகின்றான்‌. மனிதர்‌ எல்‌லார்க்கும்‌ ஒரேவித இயல்பு வந்தமைவதில்லை. விலங்கின்‌ இயல்புடைய மக்கள்‌ உண்டு; பறவைகளின்‌ இயல்புடைய மக்கள்‌ உண்டு; எத்தனைவித உயிர்வகைகள்‌ உலகில்‌ இருக்‌கின்றனவோ அத்தனைவித இயல்புகளை மனிதனிடத்துக்‌ காணலாம்‌. ‌ 

இறையின் ஒலி வேதங்கள். பஞ்ச பூதங்கள் துணையுடன் இறையொலியைக் கேட்டு (ஸ்ருதி),  தனது அனுபவ பூர்வமாக உணர்ந்து, அவ்வறிவினை   அறிவை நூல்களாக அமைத்து (ஸ்ம்ருதி, புராணம், இதிகாசம்) வைப்பது மனிதனுடைய தனி முயற்சி. மனிதனிடத்‌துள்ள இந்தச்‌ சிறப்பு இயல்பை “மறையாதி நூலையும்‌ வகுத்து” என்று தாயுமானவர்‌ இயம்புகின்றார்‌. 

 “சைவம்‌ முதல்‌ அளவு இல்‌ சமயமும்‌ வகுத்து” 

எவ்வளவு திறம்பட மனிதன்‌ இவ்வுலகில்‌ வாழ்ந்திருந்தாலும்‌, அதற்கென்று எவ்வளவு சாமர்த்‌தியமாக அவன்‌ தன்‌ அறிவைப்‌ பயன்படுத்தினாலும்‌ இறுதியில்‌ இவ்வுலக சம்பந்தமான அனைத்தும்‌ அழிந்திடும் தன்மையுடையவைகள்‌ ஆகின்றன. அழிந்திடும் உலகிலே வாழுகின்ற மனிதன்‌ – தானும்‌ அழிகிறான‌ அல்லது அழியாத நிலை ஒன்று அவனுக்கு உண்டா என்ற ஆராய்ச்சியை மக்களுள்‌ சீரியர்‌ சிலர்செய்து, விலங்கின இயல்புகளுக்கும் மேலான குறிக்‌கோள்‌ ஒன்று வாழ்க்கையில்‌ உண்டு என்பதைக் கண்டு அறிந்து, ‌அதற்கென்று அமைந்துள்ள நெறியான வாழ்க்கையை‌ சமய அனுஷ்டானம்‌ என்னும்‌ பெயரில் நிலைத்திட்டனர். இங்ஙனம்‌ ஆன்றோர்களால்‌ நிறுவப்பெற்ற சமயங்கள்‌ பல இருக்கின்றன. உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் வழிமுறைகளைக் கூறுவது சமயம். சிவனை வழிபடும் சைவர்கள், விஷ்ணுவை வழிபடும் வைணவர்கள், கணபதியை வழிபடும் காணாபத்யர்கள், பக்தியை வழிபடும் பாக்தர்கள், குமரனை வழிபடும் கெளமாரர்கள், சூரியனை வழிபடும் செளரர்கள் என எத்‌தனை மனிதர்களோ அத்தனைவித சமயங்கள்‌ உலகில்‌ உள என்பது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ‌ ‌ கருத்து, இக்கோட்‌பாட்டைத்‌ தாயுமானவர்‌ “சைவம்‌ முதல்‌ அளவு இல்‌ சமயமும்‌ வகுத்து”  என்கின்றார்‌. உலக முழுதுக்கும்‌ பொதுவாக ஏதேனும்‌ ஒரு. சமயம்தான்‌ அமையவேண்டும்‌ என்று கருதி வருகின்றவர்‌கள்‌ கருத்தில்‌ வாங்கிக்கொள்ள வேண்டிய சிறந்த கோட்‌பாடு இது ஆகும்‌.

சமயம்‌ கடந்த மோன சமரஸம்‌ வகுத்த நீ

உருவ வழிபாடு விட்டு ஞானத்திற்கு செல்லவேண்டும். உருவம் ஒரு படிதான். அதுவே லட்சியம் அல்ல. கட்டுண்டு போகக் கூடாது. உருவ வழிபாடு ஞானத்திற்கு வழிவகுக்கும்; எனினும் அதிலேயே நின்றுவிடாமல் உள்ளார்ந்த தத்துவத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இறைவனுடைய படைப்பில்‌ மனிதன்‌ எடுக்கும்‌ வடிவங்கள்‌ வெவ்வேறு அடையாளங்களைக்‌ கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுடைய அச்சு அமைப்‌பில்‌ இன்னொரு மனிதன்‌ இருப்பதில்லை. மனதின்‌ இயல்‌பும்‌ ஒவ்வொரு மனிதனுக்கும்‌ ஒவ்வொன்றாய்‌ அமைந்‌திருக்கிறது. வாழ்க்கை முறைகளும்‌ வெவ்வேறு வகைப்‌பட்டவைகளாயிருக்கின்‌றன. அங்ஙனம்‌ சமயங்களும்‌ பல இருக்கின்றன என்பதை மனிதன்‌ மறந்துவிடலாகாது.  சமயங்கள்‌ பல இருப்பதினால்தான்‌ அவரவர்‌ மனதுக்குகந்த மதம்‌ ஒன்றை அனுஷ்டிக்க மனிதனுக்கு இயலுகின்றது. இந்த மதங்கள்‌ எல்லாம்‌ மனிதனை வெவ்வேறு நிலைக்‌குக்‌ கொண்டு சேர்க்கின்றனவா என்பது அடுத்த கேள்வி, மலை உச்சிக்குப்‌ போக முயலுகின்‌றவர்கள்‌ மலையைச்‌ சுற்றிலும்‌ நின்‌றுகொண்டு மேல்நோக்கி நடக்க முயலலாம்‌. புறப்‌படும்‌ தறுவாயில்‌ ஒவ்வொரு மனிதனும்‌ ஒவ்வோர்‌ இடத்தில்‌ நிற்பவனாகின்றான்‌. புறப்படுகின்ற இடபேதத்தை முன்‌னிட்டுப்‌ புறப்படும்‌ இடங்கள்‌ பல என்று பகரலாம்‌, அங்ஙனம்‌ சமயங்கள்‌ பல இருக்கின்றன. மலை உச்‌சிக்கு ஏற ஏற வழிகள்‌ எல்லாம்‌ குவிந்து ஒன்று கூடி வருகின்றன. மலை உச்சி என்னும்‌ நிலை இறுதியில்‌ ஒன்றேயாம்‌. அங்ஙனம்‌ சமயங்கள்‌ எல்லாம்‌ மார்க்கங்கள்‌ ஆகின்றன;  அவைகளை நெறிகள். ‌அவை யாவும்‌ ஒரே குறியின்கண்‌ ஆத்மசாதகர்களை எடுத்‌துச்‌ செல்கின்றன. அந்தக்‌ குறி இப்பிரபஞ்ச வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. இதனோடு அதைச்‌ சீர்தூக்க முடியாது. ஒப்பிடுதற்கு ஆங்கு வேறு ஒன்றும்‌ இல்லை. ஆதலால்‌ அதை மனம்‌ மொழி கடந்த மோனநிலை என்று மேலோர்‌ மொழிந்தனர்‌. 

அந்த மலை உச்சியான ப்ரஹ்மம் ஒன்றுதான் சமம். மற்றதெல்லாம் விஷமம். பேச்சில் சமம் இருக்காது. பேச்சைக்கடந்த மெளனத்தில்தான் சமம் இருக்கிறது. மெளனம்தான் உண்மையான சமரசம். சமரசம்தான் ப்ரஹ்மமானந்தம். விஷம ரசம் அற்பானந்தம். பேசுவதால் வரும் இன்பத்தைவிட பேசாம இருப்பதில் வரும் இன்பம்தான் அதிகம். பேசுவதுதான் கடினம். பேசுவதற்குத்தான் முயற்சி தேவை. கவனம் தேவை. பேசாமல் இருப்பது உண்மையில் மிகவும் சுலபம். ஆனால் பேசாமல் இருக்க ஞானம் வேண்டும். 

“படிப்பதற்று, கேள்வியற்று, சிந்தையற்று,சொல்லும் பொருளுமற்று சும்மா இருப்பதற்கே எனக்கு அல்லும் பகலும் ஆசை பராபரமே” என்று தாயுமானவர் பராபரக்கண்ணியில் கூறுகிறார். சொல்லும் பொருளும் அற்று சும்மா இருக்க சொல்லும் பொருளும் தேவை. ஸாஸ்த்ரம்தான் அந்த அறிவைக் கொடுக்கிறது. மெளனமாக்குகிறது.

அப்படிப்பட்ட ஞானி அதிகமாகப் பேசுவதில்லை என்று முண்டகோபநிஷத் சொல்கிறது.

प्राणो ह्येष यः सर्वभूतैर्विभाति विजानन्विद्वान्भवते नातिवादी ।

आत्मक्रीड आत्मरतिः क्रियावानेष ब्रह्मविदां वरिष्ठः ॥ 1.4 ॥

ஞானம் கொண்டு உணர்ந்த அந்த மோன நிலையில்‌ வித்தியாசத்துக்கு இடமில்லை. ஒருவிதத்தில்‌ நம்முடைய ஆழ்ந்த நித்திரையோடு  அதை ஒப்பிடலாம்‌, அயர்ந்து தூங்குகின்றவர்களுக்கிடையில்‌ விழிப்பில்‌ உள்ள வேற்றுமை கிடையாது. வேற்றுமையைக்‌ கடந்த மோன ஒற்றுமை நிலை அது. ஆனால்‌ அது அஞ்ஞானத்தில்‌ மறைந்து கிடக்கிற நிலை; சமயம்‌ காட்டுகின்ற குறியோ ஞானத்தில்‌ தெளிந்து திரண்டு கிடக்கும்‌ பேரறிவு மோன நிலை. அந்த நிலையில்‌ உயிர்கள்‌ அனைத்தும்‌ பேரறிவுப்‌ பெருகிலையில்‌ ஒன்றுபட்டு விடுகின்றன. ஆதலால்‌ ஆங்கு உண்மையான சமரஸம்‌ திகழ்கிறது, லட்சியத்தில்‌ ஒன்றுபட்ட நிலைக்குச்‌ சமரஸம்‌ என்று பெயர்‌, இக்கோட்‌பாட்டைத்‌ தாயுமானவர்‌ மேல்‌ “சமயம்‌ கடந்த மோன  சமரஸம்‌ வகுத்த நீ “ என்று கடவுளை அழைக்கின்றார்‌. 

உன்னை நான்‌ அணுகவும்‌ தண்ணருள்‌ வகுக்க விலையோ

இதனுடைய முக்கியமான வார்த்தை என்னவென்றால். “ஹே கடவுளே! உன்னை யான் அணுகவும் தண்ணருள் வகுக்க இல்லையோ? நீ எல்லா அருளும் புரிந்து இருக்கிறாய். நான் வந்து உன்னை அணுக எனக்கு அனுக்ரஹம் செய். உன்னிடத்தில் ஈடுபாட்டை எனக்கு நீ அருள்வாயாக”. கடவுளிடம்தான் பிரார்த்தனை செய்யவேண்டும். “உண்மையான மன அமைதி வேண்டுமென்றால் இறைவனைச் சார்ந்து இரு என்று பெரியவர்கள் எல்லாம் சொல்லுகிறார்கள். இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டால் எனக்கும் அது விருப்பமாக இருக்கிறது. ஆனால் விருப்பம் ஆழமாக இல்லை. எனக்கு அந்த விருப்பம் ஆழமாக வர மாட்டேன் என்கிறது இறைவா!. எனக்கு அந்த விருப்பத்தை கூட்டு வாயாக” என்று சொல்கிறார்.

உன்னை யான் அணுகவும் தண்ணருள் வகுக்க இல்லையோ?என்னவெல்லாமோ அனுக்ரஹம் செய்கின்ற பகவானே!உன்னையே சார்ந்திருக்க எனக்கு புத்தியைக் கொடுக்கமாட்டாயா? என்று கேட்கிறார். இப்படிக் கேட்பதற்கு புத்தி வேண்டும். நம்மல் பெரும்பாலானோருக்கு, பகவானிடம் வந்து கேட்க வேண்டியதைக் கேட்க தெரியவில்லை. அவரிடம் போய் சாதாரண அல்பமான விஷயங்களைத்தான் கேட்கிறோம். உன்னை யான் அணுகவும் தண்ணருள் வகுக்க இல்லையோ? நாம் கேட்பதெல்லாம் பலமில்லாத விஷயங்களா என்று பார்க்கவேண்டும்.

பகவான் கண்ணன், கீதையில் பல இடங்களில் உலக நிலையாமையைப் பற்ற எடுத்துரைக்கின்றான். “அனித்1யமஸுக2ம் லோக1மிமம் ப்1ராப்1ய ப4ஜஸ்வ மாம்” என்கிறான் ஸ்லோகம் 9.33ல்.

சமய அனுஷ்டானங்களின்‌ மூலம்‌ சாதகர்கள்‌ கடவுளுக்கு அருகில்‌ வருகின்றனர்‌. கடும்பசி மக்களை உணவின்கண்‌ ஈடுபடுத்துவது போன்று அருள்தாகம்‌ அவர்களைச்‌ சமயங்களிடத்து ஈடுபடுத்துகின்றன. பசி அதிகரிக்குமளவு ஒரு மனிதன்‌ வலிவற்றவன்‌ ஆய்விடுகின்றான்‌ . அருள்‌ தாகம்‌ அதிகரிக்குமளவு சமயங்களை அனுஷ்டிக்கின்ற ஆர்வ வலிவும்‌ ஆத்ம சாதகன்‌ ஒருவனுக்குப்‌ பெருகின்றன. அருள்தாகம் அதிகரிக்குமளவு, சாதகனுடைய இயல்பு இன்னியல்பு ஆகிறது. பசி அக்னிக்கு ஒப்பானது; பசியுள்ளவனுக்கு பத பதைப்பை உண்டு பண்ணுகிறது, அருள்தாகமோ அதற்கு நேர்மாறானது. தணுப்படைந்த நீர்‌ உறைபனியாக அமைதியுற்றுககிடக்‌கிறது, அருள்‌ நாட்டம்‌ மிகுந்திருக்கும்‌ சாதகன்‌ தெய்வீகமான இன்னியல்பு படைத்தவனாகின்றான்‌. ஆகவே அருள்‌ நிலையை தண்‌ அருள்‌ என்று தாயுமானவர்‌ சிலாகித்துக்‌ கூறுகின்றார்‌. அத்தகைய அருள்தாக நிலையைத்‌ தமக்குத்‌ தந்தருளலாகாதா என்று தெய்வத்திடம்‌ அவர்‌ விண்ணப்‌பிக்கிறார்‌. உன்னை நான்‌ அணுகவும்‌ தண்ணருள்‌ வகுக்க விலையோ என்பது அவருடைய வாக்கு. 

பொய்வளரும்‌ நெஞ்சினர்கள்‌ காணாத காட்சியே 

கடவுள்‌ எங்கும்‌ நிறைந்திருக்கிறார்‌ என்பது கோட்பாடு. மக்கள்‌ அனைவருடைய உள்ளத்திலும்‌ அவர்‌ வீற்றிருக்‌கிறார்‌ என்பது அனைவர்க்கும்‌ ஒப்பமுடிந்த கோட்பாடு ‌. உள்ளத்தினுள்ளே கடவுள்‌ இலங்குகின்றார்‌. எனினும்‌ அவருடைய சான்னித்தியத்தை அறிந்துகொள்ள எல்லார்க்‌கும்‌ இயலுவதில்லை.

எங்கும்‌ படிகிற சூரிய வெளிச்சம்,‌ பாதரசம்‌ பூசிய கண்ணாடியின்‌ மீது தனது முழு மகிமையோடு பிரகாசிக்கிறது, பாதரசம்‌ பூசிய கண்ணாடியின்மீது தென்படுகிற சூரியன்‌ மூல குரியனுக்கு , ஒப்பானது. ஆனால்‌ அக்கண்ணாடியின்மீது சேற்றை நிறையப்‌ பூசிவிட்டால்‌ சூரிய வெளிச்சம்‌ தன்மீது, படுதற்கிடையில்‌ சூரியனுடைய சான்னித்தியத்தை அங்குக்‌ காண்பது அரிது. பொய்மையில்‌ மூழ்கிக்‌ கிடக்கின்‌ றவர்‌களுடைய நெஞ்சம்‌ சேறுபூசிய கண்ணாடி போன்று ஆத்மப்‌பிரகாசத்துக்குப்‌ பயனற்றதாய்‌ விடுகிறது. இக்கோட்‌பாட்டை பொய்வளரும்‌ நெஞ்சினர்கள்‌ காணாத காட்சியே  என்று தாயுமானவர்‌ இயம்புகின்றார்‌. 

பொய்யிலா மெய்யரறிவில்‌ போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்‌ போக்குவர வ ற்றபொருளே

பொய்யிலா மெய்யர் அறிவில் என கூறுகிறார் தாயுமானவர். யார் இந்த பொய்யிலா மெய்யர் ? சத்திய விரதத்தில்‌ நிலைத்திருக்கன்றவர் யார்; அவர் பாங்கு எத்‌தகையது என்பதை இச்சொற்றொடர் மூலம் நம்மை சிந்திக்க வைக்கின்றார் தாயுமானவர். சத்திய விரதத்துக்கு நிகரான நெறி இல்லை. 

சத்தியத்‌தைப்பற்றி மக்கள்‌ கொண்டுள்ள கருத்துக்கள்‌ பலதரப்பட்டவை. உலக நடைமுறைக்கு ஒப்ப நடப்பது ஒருசாரார்க்கு சத்திய விரதமாகிறது. மனம்‌, மொழி, மெய்‌ ஆகிய திரிகரணங்களும்‌ ஒத்திருப்பது இன்னும்‌ சிலருக்கு சத்திய விரதமாகிறது. உலக நடைமுறைகள்‌ அனைத்தையும்‌ ஒதுக்கி வைத்துவிட்டு மெய்ப்பொருள்‌ ஆகிய கடவுள்‌ தத்துவத்தையே நிலைநாட்டுவது வேறு சிலருக்கு சத்திய விரதமாகிறது. 

பொய்யை அகற்றுமளவு அங்ஙனம்‌ நெஞ்சத்தில்‌ தெளிவு தானாகவே உண்டாகிறது. மேலும்‌ மெய்ம்மையையே மொழிகின்‌றவர்களுடைய உள்ளம்‌ பாதரசம்‌ பூசிய கண்ணாடி போன்று முற்றிலும்‌ பரிபக்குவம்‌ அடைகிறது. பரிபக்குவம்‌ அடைந்துள்ள மனதில்‌ மெய்ப்பொருளாகிய பரம்பொருள்‌ உள்ளபடி ஒளிர்கிறார்‌. இதனை “பொய்யில்லா மெய்யர்‌ அறிவில்” என்கிறார் தாயுமானவர்‌.

மனத்தகத்து மிளிரும்‌ அப்பரமன்‌ மனத்துக்குள்‌ கட்டுண்டு போய்விடுகிறார்‌ என்று நாம்‌ கருதலாகாது. ஜன்னலின்‌ வாயிலாகத்‌ தென்படும்‌ வெட்டவெளி,  ஜன்னலில்  கட்டுண்டு விடுவதில்லை.  தூய உள்ளத்திலே திகழும்‌ தெய்வம்‌ அவ்வுள்ளத்தின்கண் ‌ கட்டுண்டுவதில்லை. எல்லையில்‌ அடங்காத அகண்டப்‌ பொருள், ‌ எல்லைக்கு உட்பட்டிருக்கும்‌ நெஞ்சத்‌திலும்‌  ஒளிர்ந்துள்ளார் இறை‌.

போதம்‌ என்னும்‌ சொல்‌ ஈண்டு நிறை ஞானத்தைக்‌ குறிக்கிறது. பரிபூர்ணம் என்பது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையாகும். அகண்டாகாரகாரிய என்பது பிளவுபடாத தன்மையைக் குறிப்பது. அதாவது, இடத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வரையறுக்கப்படாத தன்மை கொண்டவர் இறைவன். உடல் காலத்திற்கு உட்பட்டது. ஒரு இடத்தில் இருந்தால் மற்றொரு இடத்தில் இருக்காது; பொருளால் வரையறுக்கப்பட்டுள்ளது. அலையில் நீர் கலந்தும், அலையைக் கடந்தும் இருக்கிறது. அலை என்ற சொல்லுக்கு ஆதாரம் நீர். நீர் என்ற சொல்லுக்கு ஆதாரம் அலை அல்ல. இறைவன், ஞான ஸ்வரூபமாக பிளவு படாதவராக உள்ளார். இறைவனுக்கு ஸஜாதீய, விஜாதீய ஸ்வகத பேதம் கிடையாது. இவை ஆழ்ந்த வேதாந்த விளக்கங்கள்.

இக்கோட்பாடுகளை எல்லாம்‌ திரட்டி “போதபரிபூரண அகண்டிதாகாரமாய்” ‌ தெய்வம்‌ இலங்குகின்றார்‌ என்று தாயுமானவர்‌ காட்டுகிறார்‌. 

ஆத்மப்‌ பிரகாசம்‌, அளவில்‌ அடங்காத வெட்டவெளி போன்று எங்கும்‌ நிறைந்‌திருக்கிறது, தூய நெஞ்சம்‌ படைத்த ஞானி உடல்‌ எடுத்‌திருப்பவன்‌ ஆதலால்‌ ஓர்‌ இடத்திலிருந்து மற்றோர்‌ இடத்‌துக்குப்‌ போகவும்‌ திரும்பிவரவும்‌ கூடும்‌. அதை முன்னிட்டு அவன்‌ உள்ளத்தில்‌ ஒளிரும்‌ ஆத்மப்‌ பிரகாசத்துக்குப்‌ போக்குவரவு உண்டா என்னும்‌ கேள்வி எழுகிறது. உருண்‌டோடுகின்ற அலையின்‌ மீது தென்படுகிற சூரியனும்‌ உருண்‌டோடுவது போன்று காணப்படுகிறான்‌. ஆயினும்‌ அலைகின்ற அலையுடன்‌ சேர்ந்து அசைபவன்‌ அல்லன்‌ சூரியன்‌. அசைகின்ற நெஞ்சம்‌ படைத்துள்ள ஞானியினிடத்து மெய்ப்‌பொருளாகிய கடவுள்‌ அசைவற்றிருக்கிறார்‌. இக்கோட்‌பாட்டை போக்கு வரவற்ற பொருளே என‌ அவர்‌ சித்தரிக்கின்றார்‌.  நீக்கமற நிறைந்திருப்பதால் இறைவன் போக்கு வரவு அற்றவர். “सर्व परिच्छेद शून्य:”  அவருக்கு எந்தவிதமான பரிச்சேதமும் கிடையாது.

தெய்வமறை முடிவான பிரணவசொரூபியே 

இறைவனுடைய அருளினால் உண்டாகிய வேதங்கள். வேதங்கள்‌ யாவும்‌ சொல்‌ மயமாய்‌ இருக்கின்றன. மொழி என்னும்‌ கருவியைக்கொண்டு மெய்ப்பொருளை விளக்க மேலோர்‌ முயன்று வந்திருக்கின்றனர்‌. மொழி சொருபமாயுள்ள வேதங்கள்‌ கடவுளை விளக்குதற்கென்றே அமைந்துள்ளன. உண்மையில்‌ கடவுள்‌ விளக்கம்‌ மொழியில்‌ அடங்கிவிடுவதில்லை. அவருடைய சொருபத்துக்கு ஒரு  முடிவும்‌ கிடையாது. அத்தகைய பெரிய பொருள்‌ ஓசை ஒலி வடிவங்‌களிலும்‌ இலங்குகின்றார்‌. ஓசை ஒலி வடிவங்களில்‌ இலங்கு கின்ற பகுதிக்கு நாதப்‌ பிரம்மம்‌ என்றும்‌ சப்தப்பிரம்‌மம்‌ என்றும்‌ பெயர்‌. இந்த நாதங்களை எல்லாம்‌ ஒன்றாகத்‌ 

தொகுத்து உணருங்கால்‌ அது பிரணவம்‌ அல்லது ஓங்காரம்‌ ஆகிறது, ஓங்காரமானது நம்மால்‌ உச்சரிக்கக்கூடிய நிலையில்‌ இருக்கின்றபொழுது அதுஅகர, உகர, மகரமாகிய மாத்திரப்‌ பிரணவம்‌ என்று மொழியப்படுகிறது. உச்சரிப்பைக்‌ கடந்த நிலையில்‌ இருக்கின்றபொழுது அது அமாத்திரப்‌ பிரணவம்‌ என்று இயம்பப்படுகிறது. சொல்‌ அனைத்துக்கும்‌ அது உச்சநிலை, அது முடிவான நிலை ஆகிறது. சொல்லுலகம் அனைத்திலும் வியாபித்திருப்பது அகார, உகார, மகாரம் என்கின்ற ஓங்காரம், வேதங்களில் கம்பீரமாக இருப்பது. அந்த ஓங்கார ஸ்வரூபமே.

சொல்லுலகத்திற்கு ஆதாரமாக இருப்பது. இந்த ஓங்காரம்தான் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் இருப்பது; காலத்தைக் கடந்தும் உள்ளது. ஓங்காரமே ப்ரம்மம் என்கிறது வேதம்.

இக்கோட்பாட்டை தெய்வமறை முடிவான பிரணவசொரூபியே என்று தாயுமானவர்‌ போற்றுகின்றார்‌. 

சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே, சின்மயானத்த குருவே

அப்பெரிய பொருள்‌ சித்தத்துக்கு அப்பால்‌ இருக்கிறார்‌ என்பதையும்‌ முக்‌ திக்கு அவரே மூல காரணமாய்‌ இருக்கிறார்‌ என்பதையும்‌ உயிர்களுக்கெல்லாம்‌ அவரே தென்முக மூர்த்தியாயிருந்து அருள்புரிகிறார்‌ என்பதையும்‌ அவர்‌ நிறை ஞான சொரூபம்‌ என்பதையும்‌ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே, சின்மயானத்த குருவே என்னும்‌ தொடரில்‌ அடக்கி வைத்‌துள்ளார்‌.

முடிவுரை 

“ஹே கடவுளே! உன்னை யான் அணுகவும் தண்ணருள் வகுக்க இல்லையோ? நீ எல்லா அருளும் பரிந்து இருக்கிறாய். நான் வந்து உன்னை அணுக எனக்கு அனுக்கிரஹம் செய். உன்னிடத்தில் ஈடுபாட்டை எனக்கு நீ அருள்வாயாக. உண்மையான மன அமைதி வேண்டுமானால் இறைவனைச் சார்ந்து இரு என்று பெரியவர்கள் எல்லாம் சொல்லுகிறார்கள். இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டால் எனக்கும் அது விருப்பமாக இருக்கிறது. ஆனால் விருப்பம் ஆழமாக இல்லை. எனக்கு அந்த விருப்பம் ஆழமாக வர மாட்டேன் என்கிறது இறைவா!. எனக்கு அந்த விருப்பத்தை கூட்டு வாயாக” என்று இறையிடம் பிரார்த்தனை செய்கிறார்.

இதற்கு மன ஒருமைப்பாடு இன்றியமையாதது. மன ஒருமுகப்பாடு (concentration) வரமுடியாத அளவிற்கு வேறு ஈர்ப்புகள் (attraction) நிறைய இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களில் மனம் சுலபமாக ஈடுபடுகின்றது.

यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ।

ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ 6.26 ॥ (பகவத்கீதை)

மனம் ஒருமுகப்பட வேண்டுமானால், எந்த விஷயத்தில் ஒருமுகப்பட்ட விருப்பமோ அந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கவேண்டும்.

➢ கடவுளிடம் மனதை ஒருமுகப்படுத்த கடவுளிடம் நமக்கு ஆர்வம் வரவேண்டும்.

➢ கடவுளை நினைப்பதால் நமக்கு என்ன நன்மை என்று சிந்திக்கவேண்டும்.

➢ அப்படிச் சிந்தித்தால்தான் கடவுள் விஷயத்தில் ஆர்வம் உண்டாகக்கூடும்.

➢ ஆர்வம் உண்டானபின்பு மனம் இறைவனையே சிந்தித்துக் கொண்டிருக்கும்.

➢ காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கி இருப்பதுபோல, மனம் எப்போதும் இறைவனை நோக்கியே இருக்கும்.

இதுதான் பாடலில் பதிந்துள்ள அறிவுரை நமக்கு.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Quote of the week

Either Lead, follow or get out of the way – Choice is yours

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading