முகவுரை

தீய வழியில் சென்றுகொண்டிருக்கும் எனக்கும், உன் மீது ஆழ்ந்த பக்தியும் உலகத்திலே பற்றற்ற தன்மையையும் தெளிந்த மெய்ஞானத்தையும் அருளுவாயாக என்று முதல் பாடலில் பிரார்த்தனை புரிந்து, இரண்டாவது பாடலில், உடல் மீது அளவுக்கு மீறி பற்று கொள்ளக்கூடாது; உடலைப் பற்றிக் குறைத்தால்தான் உண்மையை உணர்ந்துகொள்ள முடியும்; சரியை, கிரியை, யோகம் என்கின்ற படிகளை நன்கு நிறைவேற்றி மெய்ஞானம் பெற வேண்டும்; எடுத்தவுடனேயே சுத்தசிவ ஞானத்திற்கு முயற்சிக்கக்கூடாது என்கின்ற கருத்தினை உள்ளடக்கி, இப்போது மூன்றாவது பாடலிலே,  எவ்வளவு தீய குணம் நம்மிடத்திலே இருந்தாலும் இறைவன் நம்மைவிட்டு ஒருபோதும் அகலாமல் இருக்கிறார்; ஏனென்றால் இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் வரையறுக்கப்படாத முழுமைப்பொருளாக இறைவன் இருக்கிறார். அப்படி இருப்பதால், எவ்வளவு தீய குணம் படைத்தவனாக இருந்தாலும் அவனிடத்திலும் இறைவன் வியாபித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று கூறுகிறார்.

தாயுமானவரின் இப்பாடல்களை, தீய வழியில் செல்லும் மக்களுக்கு பிரார்த்தனை செய்வதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாடல்

ஔவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம்
அடைந்திட் டிருக்கலோபம்
அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல்
ஆசா பிசாபமுதலாம்
வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு
மெய்யன்நீ வீற்றிருக்க
விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர்
விரிக்கிலுரை வேறுமுளதோ
கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால்
கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை
கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே
கதியான பூமிநடுவுட்
செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 3 .

விளக்கம்

அவ்வியம், ஆணவம், லோபம், அருளின்மை, பேராசைப் பிசாசு எனும் தீய குணங்களை உடைய நான் எவ்வளவு மோசமாகவனாக இருந்திடினும், ஸர்வ பரிபூரணனாக நீ இருக்கிறாய் என்று கூறுகையில் என் உள்ளத்திலும் நீ இருக்கிறாய் என அறிகிறேன். என் உள்ளத்தில் உறை மலங்களை நீக்கிடு என புராண நிகழ்வினை எடுத்துக்காட்டி வேண்டுகிறார் தாயுமானவர். இப்பாடற்சொற்களின் விளக்கங்களைக் காண்போம் இப்போது.

ஔவியம்

கூடா ஒழுக்கங்களில்‌ ஒன்று ஔவியம் (அவ்வியம்)‌; பொறாமை என்பது அதன்‌ பொருள்‌. ஔவியம் பேசேல் என்பது ஔவையாரின் ஆத்திசூடியில் உள்ள ஒரு முக்கிய அறநெறிக் கட்டளை. இதன்பொருள்: “பிறர் உயர்வைக் கண்டு பொறாமையை அடிப்படையாகக்‌ கொண்டுள்ள சொற்களைச்‌ சொல்லவேண்டாம்‌ என்பது. சிந்தித்தல்‌, சொல்லுதல்‌, செய்தல்‌ என்‌பன மனம், மொழி, மெய் (காயேந வாசா மனஸா) எனும் திரிகரணங்களின்‌ செயல்கள்‌. மூன்று கரணங்களுள்‌ ஒரு கரணம்‌ எச்செயலில்‌ ஈடுபடுகிறதோ அச்செயலை மறைமுகமாக மற்ற இரண்டு கரணங்களும்‌ செய்கின்றன. பொறாமையினால் வருகிற சொற்களைப்‌ பேசாது ஒழித்தல்‌ வேண்டும்‌ என்னும்‌ கோட்பாட்டில்‌ பொருமைப்படுகிற மனப்பான்மை இருக்கலாகாது என்பதும்‌, அதினின்று வருகின்ற செயலைச்‌ செய்யாது ஒழித்தல்‌ வேண்டும்‌ என்பதும்‌ அடங்கி விடுகின்றன. 

பிறர்‌ அடைகிற முன்னேற்றத்தைப்‌ பார்த்துச்‌ சகிக்க முடியாத நிலைக்குப்‌ பொறாமை என்று பெயர்‌, உயிர்களனைத்தும்‌ முன்னேற்றம்‌ அடைய வேண்டுமென்பதே படைப்பின்‌ நோக்கமாகும்‌. மற்ற உயிர்கள்‌ அடைகிற முன்னேற்றத்தைப்‌ பார்த்துப்‌ பொறுக்க முடியாதவன்‌ படைப்பின்‌ நோக்கமே நிறைவேறலாகாது என்று அதைத்‌ தடைப்படுத்தும்‌ பாங்குடையவன்‌ ஆகிறான். ‌ 

பிறர்‌ முன்னேற்றத்துக்குத்‌ தடை செய்ய முயலுகின்றவன்‌ தானே தடுமாற்றம்‌ அடைகின்றான்‌. ஆகவே பிறருடைய ஆக்கத்தைக்‌ கண்டு பொறாமைப்படுபவன்‌ தனக்கு ஆக்கம்‌ வந்து அமையாது அதை அடைத்து விடுபவன்‌ ஆகிறான்‌. பொறை என்பதின்‌ எதிரிடை பொறாமை. மனிதனுக்கு வெறும்‌ பொறை இருந்தால்‌ மட்டும்‌ போதாது. பிறர்‌ அடைகின்ற பேற்றினைப்‌ பார்த்து பெருமகிழ்ச்சி அடையவேண்டும்‌. யார் ஒருவள்‌ அத்தகைய பரந்த பாங்குடையவன்‌ ஆகின்றானோ அவனுக்கு எல்லாவிதமான முன்னேற்றமும்‌ உண்டு. அவன்‌ மனத்துக்கண்‌ மாசு இலன்‌ ஆவதற்கும்‌, மனம்‌ மேன்மை அடைவதற்கும்‌, பிறர்‌ முன்னேற்றத்துக்கு மகிழ்வோடு தொண்டு புரிவதே உற்ற உபாயம். 

அவ்வியம்‌ அதற்கு நேர்‌மாறானது. எங்கு அவ்வியம்‌ இருக்கிறதோ ஆங்கு ஒருவிதமான முன்னேற்றமும்‌ இல்லை. மனிதன்‌ மேலும்‌ மேலும்‌ சிறுமை அடைவதே அதன்‌ விளைவு ஆகும்‌, தம்மிடம்‌ அத்‌தகைய அவ்வியமிருக்க என்று மனத்தகத்துள்‌ படிந்துள்ள தமது கீழான நிலையைப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறார்‌ தாயுமானவர்.

நான் என்கின்ற ஆணவம்

நடைமுறையில், படாடோபமான வாழ்வு பணம்‌ படைத்திருப்பதின்‌ முறைதவறிய வெளித்‌ தோற்றம். அது போல, அஹங்காரத்தின் புறத்தோற்றமான ஆணவம், ஒரு மனிதனிடத்துள்ள அஞஞான நிலையை விளக்குகிறது. ஒவ்வோர்‌ உயிரும்‌ “நான்‌” என்னும்‌ கோட்பாட்டின்‌ மூலம்‌ தன்னைத்‌ தானே விளக்க முயலுகிறது. அஹங்காரம் நல்லவருக்கும் உண்டு. நான் இறைவனின் குழந்தை என்று சொல்லுவதும் அஹங்காரம்தான். 

“நான்” ‌ என்பதற்கு இலக்காக உள்ள பொருள்‌ யாது என்று பரிசீலனை செய்து பார்க்கவேண்டும்‌. முறையாக ஆராய்ந்து பார்க்குமிடத்து நான்‌ என்னும்‌ சொல்லுக்கு, இலக்காக ஒன்றுமில்லை. “நான்” என்ற உணர்வு அஞ்ஞான நிலையில் தேகாபிமானமாக வெளிப்படுகிறது. ஆனால் அதே “நான்” பக்தியில் ஈஸ்வர சமர்ப்பணமாக மாறும்போது மனசுத்திக்கு காரணமாகிறது.

அஞ்ஞான நிலையின் வெளிப்பாடாகிய ஆணவத்தினின்று விருப்பு வெறுப்பு என்னும்‌ ஒன்றை ஒன்‌று  மோதுகின்ற இரண்டுவித வேகங்கள்‌ அவனுக்கு உண்டாகின்றன. பஞ்சபூதங்களினின்று அந்த வேகத்துக்கேற்றபடி தனக்கு உடல்‌ ஒன்றை அவன்‌ உண்டுபண்ணிக் கொள்கின்றான்‌. அந்த உடலைக்‌ குறித்தே அவன்‌ நான்‌ என்று பொருள்‌படுத்துகிறான்‌. நான்‌ சிறியவன்‌, நான்‌ பெரியவன்‌, நாண்‌ மதிப்பு வாய்க்கப் பெற்றவன்‌ என்பதெல்லாம்‌ உடலையும்‌ உடலின்‌ செயலையும்‌ குறிப்பனவாம்‌. அலை ஒடுங்கிய இடத்து, கடல்‌ மிச்சமிருக்கிறது. நான்‌ என்னும்‌ ஆணவம்‌ அகன்று போனவிடத்து கடவுளைப்பற்றிய பேருணர்வு மிச்சமிருக்கிறது. ஆனால்‌ நான்‌ என்னும்‌ ஆணவமிருக்கின்ற இடத்து அப்பேருண்மை மறைந்து பட்டுப்போவது போன்றாகிவிடுகிறது. சுழல்‌ காற்றில்,‌ வெட்டவெளி எப்படி‌ தடைபட்டுப் போய்விடுவதில்லையோ, அப்படி‌ ஆணவத்தில்‌ ஆத்மசொரூபம்‌ அழிந்து பட்டுப்போவதில்லை. அதன்‌ உணர்வு இருந்தும்‌ இல்லாததுபோல்‌ ஆய்வீடுகிறது. ஜீவர்கள்‌ எல்‌லோரும்‌ இத்தகைய அக்ஞான நிலையில்‌ உழன்று வருகின்‌றனர்‌. இந்நிலையை “நான்‌ என்கின்ற ஆணவம்‌ அடைந்‌திட்டிருக்க” என்கிறார்‌ தாயுமானவர்‌. 

எனவே, எதற்கெடுத்தாலும் நான் நான் என்று சொல்லாமல் நன்மை நடந்தால் குருவின் கருணை, ஈஸ்வர மகிமை என்று சொன்னால் அஹங்காரம் வராது. தவறு செய்துவிட்டால், நான்தான் செய்தேன், இனிமேல் அது நடக்காது என்று சொல்ல வேண்டும். இங்கு சொல்லப்படுவது தர்மம். ஆணவத்துடன் நான் நான் என்று சொல்லும்போது புண்ணியம் போய்விடும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

லோபம் 

நரகத்திற்கு வாசல் மூன்று; காமம், க்ரோதம், லோபம் என்று பகவத்கீதையில்(16.21) கிருஷ்ணர் சொல்கிறார்.

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।

कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥ 16.21 ॥

பொருளை ஈட்டி வைத்துக்கொண்டு, பொருளை கொடுக்காத மனப்பான்மை லோபம். லோபத்தின் எதிர்பதம் தானம். 

 ஈதல் அறம்” என்பது ஔவையார் அருளிய தனிப்பாடல் வரிகள், இதன் பொருள் “பிறருக்குக் கொடுப்பதே மிகச்சிறந்த அறம்” என்பதாகும். இது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வாழ்க்கை நெறிகளில், முதல் அறமாக ஈகையை வலியுறுத்துகிறது.

அறநெறியில்‌ செல்பவன்‌ பொருளைத்‌ தேடத்‌ தெரிந்து கொள்வது போன்று, பொருளை எடுத்து வழங்கவும்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌. அந்த விஷயத்தில்‌ மனிதன்‌ ஒருவன்‌ பாலம்‌ போன்று இருக்கவேண்டும்‌ என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்‌ பகர்ந்துள்ளார்‌. பெருகி வரும்‌ வெள்ளத்தைத்‌ தடைப்படுத்துவதற்காக பாலம்‌ அமைந்துள்ளதன்று. ஒரு புறமிருந்து நீர்‌ வந்துகொண்டே இருக்கிறது. மற்றொரு புறம்‌ அது போய்க் கொண்டே இருக்கிறது, அங்ஙனம்‌ மனிதன்‌ ஒருவன்‌ பணத்தைப்‌ பெறவும்‌ வேண்டும்‌, அதைப்‌ பிறர்‌க்கெடுத்துப்‌ பகிர்ந்து கொடுக்கவும்‌ வேண்டும்‌, இவ்‌விரு செயலில்‌ ஏதேனும்‌ ஒன்று குறைபட்டுவிட்டால்‌, வாழ்வு, நல்வாழ்வு ஆவதில்லை.

கிணற்றிலே நீர்‌ ஊறுகிறது. ஊறிய நீரை ஏன்‌ இறைக்க வேண்டும்‌ என்று கருதி நீரைக்‌ கிணற்றிலேயே அடைத்தி வைத்திருந்தால்‌ அந்த நீர்‌ கெட்டுப்போய்விடும்‌. நாளடைவில்‌ அது ஈச்ச நீர்‌ ஆய்விடும்‌, உண்ணுதற்கும்‌ ஏனைய காரியங்களுக்கும்‌ அது பயன்படாது போய்விடும்‌. எடுத்து வழங்குதற்கென்று அமைந்த நீரை இறையாது அடைத்து வைத்ததின்‌ விளைவு அது. கிணற்று நீரை இறைக்குமளவு புதிய நன்னீர்‌ அதனுள்‌ வந்துகொண்டே இருக்கிறது.  ஆக, நீரின்‌ வரவும்‌ செலவும்‌ ஒன்றுக்கொன்று துணைபுரிகிறது. 

வாழ்க்கைத்‌ தத்துவமும்‌ இதுவே. பொருளை அனுபவிப்பவன், பொருளை வழங்குபவன் இருவரும் பொருளின் பயனைப் பெறுகிறார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

தானம் யக்ஞானாம் வரூதம் தக்ஷிணா லோகே தாதார: ஸர்வபூதான்யுபஜீவந்தி

தானேனாராதீரபானுதந்த தானேன த்விஷந்தோ மித்ரா பவந்தி தானே ஸர்வம் பிரதிஷ்டிதம்

தஸ்மாத் தானம் பரமம் வதந்தி || 6 || 

என்று, மஹாநாராயண உபநிஷத் தானத்தின் (கொடை) சிறப்புகளை விளக்குகிறது

ஈஸ்வர ஸ்ருஷ்டியே ஒரு “தானம்” என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். சூரியன் ஒளி தருகிறான்; பூமி விளைச்சல் தருகிறது; காற்று உயிர் தருகிறது; நதிகள் நீர் தருகின்றன. பிரபஞ்சம் முழுவதும் “கொடை” என்ற தர்மத்தின் மேல் இயங்குகிறது. அதனால் மனிதனும் தானமய வாழ்க்கையை வாழ வேண்டும்.

அத்வைதத்தில் தானத்தின் உச்ச வடிவம், அஹங்கார த்யாகம்;“எனது” என்ற மமகாரத்தை விடுவது.இதனால், மனசுத்தி ஏற்படும், ராக-த்வேஷம் குறையும், சித்தசுத்தி உருவாகும், ஞானத்திற்கு தகுதி பிறக்கும்

தானத்தின் எதிர்ப்பதம் லோபம். தேடிய பொருளைப்‌ பங்கிட்டுக்‌ கொடுக்காவிட்டால்‌ அப்பொருள்‌ பாழ்பட்டதாகிறது. பொருளைத்‌ தேடிய மனிதனுடைய மனதும்‌ பாழ்பட்டுவிடுகிறது. முறையாகப்‌ பொருளைத்‌ தேடுதல்‌ மூலம்‌ ஒருவன்‌ திறமை வாய்ந்தவனாகிறான்; முறையாக அதை வழங்குதல்‌ மூலம்‌ ஒருவன்‌ பரந்த மனப்பான்மை உடையவன்‌ ஆகின்றான்‌. ஈயாதவனுக்கோ மனப்பான்மை குறுகிவிடுகிறது. தன்னுயிர்‌ வேறு, மற்‌றுயிர்‌ வேறு என்ற வேற்றுமை புத்தி அவனுக்கு உண்டாகிறது, உண்மையில்‌ உயிர்களுக்கிடையில்‌ வேற்றுமை இல்லை. எல்லா உயிர்களும்‌ ஒரு பேருயிரில்‌ ஒன்றுபட்டிருக்‌கின்றன. தன்னிடத்திருக்‌கும்‌ பொருள்களை எடுத்து வழங்க மறுப்பதன்‌ மூலம்‌ மனிதன்‌ வேற்றுமையையே வளர்க்கிறான்‌. கிணற்றிலுள்ள நச்சு நீர்‌ போன்று அம்மனிதனும்‌ மிகக்‌ கீழ்மகனாகிறான்‌. 

அருளின்மை

அருளுடைமை என்பது ஒரு மனநிலை. அருளின்மை என்பது அதற்கு நேர்மாறான மனநிலை, அருள்‌ என்பது யாது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்‌. 

சர்க்கரையினாலான தின்பண்டம்‌ என்ன வடிவிலிருந்தாலும்‌, வெவ்வேறு பொருளோடு கலந்திருந்தாலும்,‌ தித்திக்‌கும்‌ இயல்பு அதை விட்டுப்‌ பிரிந்துபோய்‌ விடுவதில்லை. ்காரணப்‌ பொருளாகிய சர்க்கரைக்கு உரியது தித்திக்கும்‌ இயல்பு. ஆதலால்‌ காரியப்‌ பொருளாகிய தின்பண்டத்திற்கும் தித்திக்கும்‌ தன்மை. இப்பிரபஞ்சத்துக்‌கும்‌ அதிலுள்ள உயிர்வகைகள்‌ அனைத்துக்கும்‌ காரணப்‌ பொருள்‌ கடவுள்‌. பிரபஞ்சத்திலுள்ள சராசரம்‌ அனைத்‌தும்‌ காரியப்பொருள்கள்‌, காரணத்துக்கு அன்னியமாகக்‌ காரியம்‌ இல்லை. ஆதலால்‌ உயிர்கள்‌ அனைத்தையும்‌ கடவுள்‌ மயமாய்‌ உணர்ந்து பழகுதல்‌, அருளுடைமை ஆகிறது. நிகழ்கின்ற செயல்கள்‌ யாவும்‌ கடவுள்‌ செயலாய்‌ உணர்‌வதும்‌ அருளுடைமை ஆகிறது. எல்லாம்‌ அவர்‌ மயம்‌ என்றும்‌ எல்லாம்‌ அவருடைய செயல்‌ என்றும்‌ ஆழ்ந்து உணர்ந்து பழகுகின்றவர்கள்‌ தவறுதல்‌ ஒன்றும்‌ செய்து விடுவதில்லை. மேலும்‌ மேலும்‌ கடவுளிடம்‌ அவர்கள்‌ கருவிகள்‌ ஆகின்றனர்‌. இறைவனிடம்‌ அடைக்கலம்‌ புகுதல்‌ என்னும்‌ கோட்பாடு, அருளுக்குப்‌ பாத்திரமானவர்கள்‌ மூலம்‌ வெளியாகிறது, 

ஆனால்‌ அருளோடு கூடிய உணர்வு, உயிர்‌களுக்கு எளிதில்‌ அமைவதில்லை. தங்களுடைய அகங்கார ஆணவத்தோடு கூடிய உணர்வே முன்னணியில்‌ வந்து நிற்‌கிறது. தங்களுடைய செயல்களுக்கெல்லாம்‌ தாங்களே கர்த்தாக்கள்‌ என்கின்ற எண்ணமும்‌ அருளைப்‌ புறக்கணிக்‌கின்றவர்களுடைய உள்ளத்தில்‌ முன்னணியில்‌ வந்து நிற்‌கிறது. முற்றிலும்‌ பக்குவம் அடைந்தவர்களே பிரபஞ்சத்திலுள்ள யாவையும்‌ அருளோடு இணைத்து உணருகின்றனர்‌. அத்தகைய மனப்பக்குவம்‌ தமக்கு இன்னும்‌ வந்து அமையவில்லை என்பதை “அருளின்மைகூடக்‌ கலந்து உள்ளிருக்க” என்று தாயுமானவர்‌ கூறுகிறார்‌. 

மேல் ஆசா பிசாபமுதலாம்

உயிர்களனைத்தும்‌ ஆசையினால்‌ தூண்டப்பெற்று வெவ்‌வேறு விதமான செயல்களைப்‌ புரிந்து வருகின்றன. உயிர்‌களின்‌ முன்னேற்றத்துக்கு ஆசையே முதல்‌ காரணமென்றும் கூறலாம்.‌ ஆசையில்லையேல்‌ முன்னேற்றமும்‌ இல்லை. ஆயினும்‌ இந்த ஆசைக்கு முடிவு ஒன்று உண்டு.

நல்லறிவு பெற்று ஆன்மீக நிலைநின் எல்லையை அடைய ஆசை பெரிதும்‌ பயன்படுகிறது. நல்லறிவோடு கூடிய மானிடன்‌ ஆகிய பிறகு,  அருள்‌ நிலையில்‌ மனிதன்‌ அடைய வேண்டிய மேன்மைக்கு ஆசை இடைஞ்சலாய்‌ விடுகிறது. எல்லாம்‌ தம்‌ செயல்‌ என்று உணருகின்றவர்களுக்கு ஆசை முற்றிலும்‌ வேண்டப்படுகிறது. எல்லாம்‌ ஈசன்‌ செயல்‌  என்று அருள்‌ நிலையில்‌ நிலைத்திருக்க விரும்புகின்‌றவர்‌களுக்கு ஆசை பேரிடைஞ்சல்‌ ஆகிறது. அது ஓயாது மனிதனுக்குத்‌ துன்பத்தைத்‌ தருகிறது. வாழ்க்கையில்,‌ கீழ்நிலையில்‌ எது பெருந்துணையாய்‌ இருந்ததோ அது மேல்நிலையில்‌ பெருந்தொல்லையாய்‌ விடுகிறது. மேல்‌ நிலைக்குப்‌ போயிருக்‌கிறவர்களுக்கு ஆசை என்பது ஒரு பிசாசுக்கு ஒப்பாகிறது. 

உண்மையில்‌ பிரபஞ்சத்தில்‌ பிசாசு என்பது ஒன்று இருக்குமாகில்‌ அது ஆசை. எது அமைதியற்று ஓயாது அலைந்து திரிகிறதோ அது பிசாசு. அலைந்து திரியும்‌ உயிர்களைப்‌ பார்த்துப்‌ பிசாசு என்று அழைப்பது உலக வழக்கம்‌. உயிர் அலைந்து திரியும்படி தூண்டுவது ஆசை. அருள்‌ நிலையை எட்டிய பிறகு ஆசையை அறவே ஒழித்துவிட  வேண்டும்‌.  * ஆசை அறுமின்‌, ஆசை அறுமின்‌ ; ஈசனோடாயினும்‌ ஆசை அறுமின்‌ ” என்பது கோட்பாடு. மேல்‌ நிலைக்கு வந்துள்ள ஜீவர்களுக்கு இக்கோட்பாடு முற்றிலும்‌ பொருத்தமானது. 

எல்லா ஆசைகளும் பந்தத்திற்கு காரணமல்ல. ஆத்ம ஞானத்தை நாடும் முமுக்ஷுத்துவம் மட்டும் பந்தத்தை அறுக்கும் தீபம் போன்றது. தாயுமானவர் சொல்வது “மேல் ஆசா பிசாசு” — அதாவது பரிபாகம் வந்த பின் மீதமிருக்கும் விஷய வாஞ்சை.

ஒரு சான்றின்‌ மூலம்‌ இதை விளக்குவோம்‌. மத்தை இட்டு மோரைக்‌ கடைகிறோம்‌. அதனால்‌ மோரிலுள்ள வெண்ணெய்‌ முழுதும்‌ பிரிந்து வந்துவிடுகிறது. வெண்ணெய்‌ முழுதும்‌ பிரிந்தானபிறகு மேலும்‌ அதைக்‌ கடைந்துகொண்டேபோவதில்‌ காரியமொன்றுமில்லை. அதை அமைதியுற்றிருக்க விட்டுவிடுவதிலேயே நலன்‌ அனைத்தும்‌ உண்டாகிறது. அப்பொழுது வெண்ணெய்‌ திரண்டு ஒரு வடிவெடுத்து பிரிந்து நிற்கிறது. 

அதே விதத்தில்‌ மன பரிபாகம்‌ அடைந்திருக்கிறவர்கள்‌ அருள்‌ நிலையை எட்டி விடுகின்றனர்‌. அந்த அருள்நிலை திரட்டியெடுத்த வெண்‌ணெய்க்கு ஒப்பானது. ஆசையானது மேலும்‌ மனதுக்‌குள்ளே புகுந்துகொண்டு அதை அல்லலெனும்‌ ‌ நிலையில்‌ வைத்து அசைக்க வேண்டிய அவசியமில்லை. அமைதியுற்‌றிருப்பதற்கு மாறாக,  மனது ஆசையில்‌ அல்லல்படுமாகில்‌ அதைப்‌ பிசாசின்‌ செயல்‌ என்றே பகரலாம்‌, அருள்‌ ஆனவர்க்கு அத்தகைய அல்லல்‌ இல்லை, இறைவனுடைய பெரிய திட்டத்தில்‌ கருவியாக இருந்துகொண்டு இறைவனுடைய பெரும்‌ செயல்களை அமைதியோடு ஆற்றுவதே அம்மேன்மக்கள்‌ இறைவனுக்குச்‌ செய்யும்‌ வழிபாடாகிறது.  அந்நிலை தமக்கு இன்னும்‌ வந்து. அமையவில்லை என்பதை “மேல்‌ ஆசா பிசாசுமுதலாம்‌ வெவ்விய குணம்‌ பல இருக்‌கும்‌” என்ற‌ சொற்களால்‌ தாயுமானவர்‌ குறிப்பிடுகின்றார்‌. 

வெவ்விய குணம்பல இருக்க

வெவ்விய குணம்‌ என்பது கொடிய இயல்பு எனப்‌ பொருள்‌படுகிறது. மனிதனுடைய நாவில்‌ ஊறுகின்ற எச்சில்‌ ஜீரணசக்திக்குப் பெருந்துணை புரிகிறது. ஆனால்‌ இந்த எச்சில்‌ வாயிலிருந்து வெளிப்பட்டு நிற்கின்றபொழுது நஞ்சாக மாறுகின்‌றது. எவ்வுடலில்‌ உண்டாயிற்றோ அவ்வுடலுக்கே பிறகு அது தீங்கு செய்ய வல்லது. ஆசை அத்தகையது; கீழ்நிலையில்‌ இருக்கின்ற உயிர்களின் முன்னேற்றத்துக்கு அது உதவி புரிகிறது. மேல்நிலையில்‌ வந்துள்ள உயிர்கள்‌ அருளுக்குப்‌ பாத்திரமாவதற்கு அது இடைஞ்சல்‌ ஆகிறது. ஆகவே ஆசைகள்‌ அனைத்தும்‌ மேல்நிலைக்கு வந்தவர்களுக்கு வெவ்‌விய குணங்கள்‌ ஆகின்றன. 

என்னறிவூடு மெய்யன்நீ வீற்றிருக்க விதியில்லை என்னிலோ பூரணனெனும் பெயர் விரிக்கில் உரை வேறுமுளதோ

“இவ்வளவு கெட்ட குணங்கள் கொண்ட என்னுள் நீ இருக்கிறாய் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் நீ இடத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வரையறுக்கப்படாதவனாக,  பார்க்குமிடமெங்கும் எங்கும் நீக்கமற நிறைந்து, அக்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், எள்ளில் எண்ணெய்போல், தயிரில் நெய்போல, பாலில் நெய்யைப்போல பரிபூரணமாக இருக்கிறாய் என்று சொல்வதால் அதை மறுக்கமுடியவில்லை. எனவே எவ்வளவோ தீயகுணங்கள் இருந்தாலும் நீ என்னுடைய உள்ளத்தில் வீற்றிருக்கிறாய் என்ற கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை

என்றாலும் மகானுபவர்கள் பொய் சொல்லார். இதை நான் உணரவேண்டும் என்றால் இந்தத் தீய குணங்களை நீக்கிக்கொள்ளவேண்டும் என்பது மறைமுகமான கருத்து என்று விளக்குகிறார் சுவாமி ஓம்காராணந்தா.

இதன் உட்கருத்து என்ன என்பதை சுவாமி சித்பவானந்தர் விளக்குகிறார்.

ஒவ்வோர்‌ உயிரும்‌ தான்‌ குடியிருப்பதற்கேற்ற இடத்‌தைத்‌ தேடிக்கொள்கிறது. பெரிய பட்டணமொன்றில்‌ விதவிதமான பாங்குடைய மக்கள்‌ குடியிருக்க வருகின்றனர்‌.பொருளிலார் பொருளுடையார்,மேலோர், கீழோர், நல்லோர், தீயோர் என  மாறுபடும்‌ பாங்குடைய மக்களுள்‌ அவரவர்க்கேற்ற இடத்தை அப்பட்டணத்தில்‌ தேடிக்கொள்கின்றனர்‌. அதுபோல, உயிர்கள் உடலை எடுப்பதும் இக்கோட்பாட்டிற்கு உட்பட்டது எனலாம். இங்ஙனம்‌ வெவ்வேறு படித்தரங்‌களில்‌ உள்ள உயிர்கள்‌ வெவ்வேறு உடலங்களை எடுத்துக்‌கொள்வதும்‌ வாழ்க்கையைப்பற்றிய விதியாம்‌. 

கடவுளுக்கு மெய்யன்‌ என்பது ஒரு பெயர்‌. அவருடைய சொருபம்‌ ஒரு பொழுதும்‌ பொய்‌ போய்விடுவதில்லை. எல்லாக்‌ காலத்‌திலும்  அவர்‌ இருந்தபடி இருக்கிறார்‌. காலமோ கடந்து போகும்‌ தன்மையது, ஒரு நிலையில்‌ அது இருக்கிறது; மற்றோரு நிலையில்‌ அது இல்லை. எனவே காலத்துக்கு மெய்ம்மை கிடையாது. மெய்யனாகிய கடவுளோ காலத்தையும்‌ கடந்தவர்‌. கேடிலி (கேடு ஏதும் இல்லாதவன்) என்பதும்‌ நிர்மலன்‌ என்பதும்‌ அவருக்கு அமைந்துள்ள வேறு சில அடைமொழிகளாம்‌.. இந்த இரண்டு அடைமொழிகளுக்கும்‌ பொருள்‌ ஒன்றே. கேடானது கடவுளிடத்தில்லை, அவர்‌ நலமுடையான்‌. அழுக்கு இல்‌லாத பொருள்‌ அழுக்கினிடையில்‌ அமையாது, தூயவாழ்வு வாழுகின்ற மக்கள்‌ தூய இடத்தையே நாடுகின்றனர்‌.  தூய்மையே வடிவெடுத்துள்ள கடவுள்‌ தூய்மையில்‌ நிலை பெற்றுள்ள தொண்டர்கள்‌ உள்ளத்தில்‌ குடிகொண்டிருக்‌கிறார்‌ என்பது கோட்பாடு. அசுசியான இடத்தில்‌ குடியிருக்கத்‌ தூய்மையே வடிவெடுத்தவர்‌ வருவதில்லை. எனவே பொய்ம்மை என்னும்‌ பொல்லாங்கு நிறைந்தவர்‌ உள்ளத்தில்‌ மெய்யன்‌ ஆகிய தெய்வம்‌ எழுந்தருளமாட்டார்‌ என்று கருதுவது பொருத்தமானதே. ஆகையினாலே கெட்டவர்களுடைய உள்ளத்‌தைக்‌ கோயிலாகக்‌ கடவுள்‌ கொள்ளமாட்டார்‌ என்னும்‌ கோட்பாட்டில்‌ உண்மை ஒன்று இருப்பதுபோன்று தோன்றுகிறது. 

இனி, கடவுளுக்குப்‌ பூரணன்‌ என்பது மற்றொருபெயர்‌ நிறைபொருள்‌ என்பது அதன்‌ கருத்து. ஓர்‌ இடத்தில்‌ இருந்து மற்றோர்‌ இடத்தில்‌ இல்லாது போய்விடுகின்‌ற வஸ்து நிறைபொருள்‌ ஆகாது, நீக்கமற அது எங்கும்‌ நிறைந்திருக்க வேண்டும்‌, கடவுள்‌ சொர்க்கத்தில்‌ இருக்‌கின்றார்‌; நரகத்தில்‌ இல்லை என்று கருதுபவர்‌ உளர்‌. கடவுள்‌ மேல்‌ உலகில்‌ இருக்கிறார்‌ ; பாதாளத்தில்‌ இல்லை என்று பகர்கின்றவர்கள்‌ இருக்கின்றனர்‌. அப்படி அவர்‌ ஓர்‌ இடத்தில்‌ இருந்து மற்றோர்‌ இடத்தில்‌ இல்லாது போய்‌ வீடுவாராகில்‌ அவர்‌ பூரணன்‌ ஆகமாட்டார்‌. நிர்மலனாகிய பரம்பொருள்‌ கச்மலம்‌ நிறைந்த பிரபஞ்சத்திலோ, பிரபஞ்‌சத்திலுள்ள உயிர்களுடைய உள்ளத்திலோ இருக்கமாட்‌டார்‌ என்று கருதுவோமாகில்‌ அவர்‌ பூரணப்‌ பொருள்‌ அல்ல என்று நாம்‌ முடிவுகட்டிவிடுகிறோம்‌. பொல்லாதவர்‌ இப்பிரபஞ்சத்தில்‌ இருக்கின்றனர்‌. அவர்களுடைய உள்ளத்தில்‌ கடவுள்‌ இல்லையா? இருக்க அவர்‌ மறுத்து விடுவாரா? அவ்வியமும்‌, ஆணவமும்‌, லோபமும்‌, அருளின்மையும்‌, ஆசையும்‌, அவைபோன்ற கொடிய குணங்கள்‌ பல தம்‌மிடத்து இன்னும்‌ குடிகொண்டிருக்கின்‌றன என்பதைத்‌ தாயுமானவர்‌ ஒப்புகிறார்‌. அதற்கு மேல்,‌ கடவுளிடத்தில் அவர்‌ கேள்வி ஒன்று கேட்கின்றார்‌, தம்மிடத்து இருக்கும்‌ குணக்கேடுகளை முன்னிட்டு கடவுள்‌ தமக்கு வேறாகப்‌ போய்விடுவாரா – “வெவ்விய குணம்‌ பல இருக்கும்‌ என்‌ அறிவூடு மெய்யன்‌ நீ வீற்றிருக்க விதியில்லை என்‌னிலோ பூரணன்‌ என்னும்‌ பெயர்‌ விரிக்கில்‌ உரைவேறும்‌ உளதோ?”  உரைவேறும் இல்லை; பூரணன்‌ என்னும்‌ பெயருக்கு வேறு உரை எதையும்‌ நாம்‌ கொண்டு வரமுடியாது. கடவுள்‌ பூரணன்‌ ஆதலால்‌ அவர்‌ நீக்கமற எங்கும்‌ நிறைந்திருக்கிறார்‌ என்‌பதுவே பொருந்திய உரை ஆகின்றது. ஆதலால்‌ மனபரிபாகம்‌ அடையாதவர்களுடைய உள்ளத்திலும்‌ கடவுள்‌ வீற்‌றிருக்கிறார்‌.

சூரியப்பிரகாசம்,‌ நல்லது கெட்டது ஆகிய எல்லாப்‌ பொருள்கள்‌ மீதும்‌ சமமாகப்‌ படிகிறது. பாதரசம்‌ பூசிய கண்ணாடியின்மீது அது சுயம்சோதியாய்‌ இலங்குகிறது. மண்ணாங்கட்டியின்‌ மீது அதன்‌ வெளிச்சம்‌ படுகிறது. ஆயினும்‌ சூரியனுடைய சான்னித்தியத்தை ஆங்கு உள்ளபடி காண முடியாது. கெட்டவர்களுடைய உள்ளத்திலும்‌ கடவுள்‌ வீற்றிருக்கிறார்‌. அவருடைய சொரூபத்தை உள்ளபடி வெவ்விய குணம்‌ படைத்தவர்‌ களுடைய உள்ளத்தில்‌ காண முடியாது என்பதே உட்கருத்து.

யோ மாம் ப1ஶ்யதி1 ஸர்வத்1ர ஸர்வம் ச1 மயி ப1ஶ்யதி1 |

த1ஸ்யாஹம் ந ப்1ரணஶ்யாமி ஸ ச1 மே ந ப்1ரணஶ்யதி1 ||30||

எவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என்னைக் காண்கிறானோ,

எல்லாவற்றையும் என்னில் எவன் காண்கிறானோ,

எல்லாவற்றிலும் என்னை எவன் காண்கிறானோ,

என்னில் எல்லாவற்றையும் எவன் காண்கிறானோ,

அவனை விட்டு நான் பிரிவதில்லை. அவன் என்னை விட்டுப் பிரிவதில்லை என்கிறான் கண்ணன், பகவத் கீதையில் (6.30).

கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே

“கவ்வும் மலம் ஆகிய நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரு ஞான சஞ்ஜீவியே” என்று வேண்டுகிறார் தாயுமானவர். 

கவ்வும் மலம் – இதுவரையில் தாயமானவர் கூறிய வெவ்விய குணங்கள்‌ யாவும்‌ மனத்தகத்து அமைந்துள்ள மலமாகும். மனத்துக்கண் மாசு என்கிறார் திருவள்ளுவர். முதலில் மலத்தை நாம் பிடிக்கிறோம். பிறகு அவை நம்மைப் பிடிக்கிறது (கவ்வுகிறது). விருப்பு வெறுப்பு (ராக த்வேஷம்), அலைபாயும் தன்மை (விக்ஷேபம்), அறியாமை (அஞ்ஞானம்), சந்தேகம் (ஸம்சயம்), விபரீதம் இவை அனைத்தும் நம்மைக் கவ்வும் மலங்கள்.

நாக பாசம் – நம்மை பந்தப்படுத்தி தளைகளால் கட்டிடும் மலங்களை நாகபாசம் என்கிறார் தாயுமானவர். இதற்கு ஒரு திருஷ்டாந்தம் தருகிறார் தாயுமானவர். நாகபாசம் என்பது ராமாயணத்தில் இந்திரசித்து (ராவணனின் மகன்) பயன்படுத்திய ஒரு சக்திவாய்ந்த, மந்திரிக்கப்பட்ட ஆயுதம் அல்லது பாசம் ஆகும். இந்த நாகபாசத்தை ராமன் மற்றும் லட்சுமணன் மீது இத்திரஜித் போரில் எய்தான். இந்த பாசம் அவர்களைக் கட்டிப் போட்டு, அவர்களை மூர்ச்சையடைய (மயக்கமடைய) செய்தது. (கம்பர் பாடிய ராமாயணத்தில், இந்திரசித்து நாகபாசத்தை ஏவும் பகுதி நாகபாசப் படலம் என்று அழைக்கப்படுகிறது)..

கட்டுண்ட உயிர்கள் என்பது அறியாமையால் (அஞ்ஞானம்) கட்டுண்ட (சரீரத்தில் அபிமாணம் வைத்துள்ள) சீவர்களைக் குறிப்பது. 

மூர்ச்சை – மயக்கம்; நிலையற்ற உலகே சத்தியம் என்று எண்ணிக்கொண்டு மயங்கி இருப்பதைக் குறிப்பதாகும். ஸ்ரீமத் பகவத்கீதை (3.38), இதனை நெருப்பை புகை மூடியிருப்பது போல, கண்ணாடியை அழுக்கு மூடியிருப்பதுபோல, கருவை கருப்பை மூடியிருப்பது போலவும் உலக ஆசைகள் மனிதனின் அறிவை மூடியிருக்கிறது என்கிறது. 

கடிது அகல – இந்த மூர்ச்சை உடனே நீங்குவதற்காக என்பதைக் குறிப்பது . ராமாயண யுத்தத்தில், ஆஞ்சநேயர் சஞ்ஜீவி மலையைத் தூக்கிக்கொண்டு வரும்போதே அந்த மூலிகையின் காற்று பட்டு அனைவரும் எழுந்துவிட்டார்கள் என்பது போல, விரைவாக குணப்படுத்த என்பதாகும்

வலிய வரு – தானே கனிந்து வரும். இச்சொல், குருவையும் கடவுளையும் நாம்தான் தேடிச் செல்லவேண்டும். நோய் வந்தால் மருத்துவரை அணுகுவதுபோல நமக்கு ஞானம் தேவை என்றால் நாம்தான் போகவேண்டும்.நாம் முயற்சி செய்தால் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதைக் குறிப்பது. அப்படி முயல்பவருக்கே இறையருள் எனும் மூலிகை கிட்டி மயக்கம் தெளியும்.

ஞான சஞ்ஜீவியே  – அறிவாகிய மூலிகையே. பரம்பொருள் அறிவே வடிவானவன். அனியாமை மநக்கத்திற்கான மூலிகை மெய்யறிவு எனும் ஆத்மஞானம். நல்‌லறிவையும்‌ விவேகத்தையும்‌ பெறுகின்றவளவுக்கு இந்த மலங்கள்‌ இருக்குமிடம்‌ தெரியாது போய்விடுகின்றன. இறைவனுடைய (குருவின்) அருளோடு மெய்ஞ்ஞானம்‌ கிட்டிடின் ஜனன மரண சொரூபமாய்‌ இருக்கின்ற சிறு வாழ்வு அகன்று, இறைவனோடு ஐக்கியமான மரணமிலாப்‌ பெருவாழ்வு அந்த ஞானோதயத்தில்‌ அவனுக்கு உடனடியாக வலிய வருகிறது. 

ஆக வெவ்விய குணங்கள்‌ என்கின்ற மலத்தை நீக்குதற்கும்‌ கேடில்லாத பாரமார்த்திகப்‌ பெருநிலையாகிய இறைவனுடைய மெய்யான சொரூபம்‌ ஜீவனுக்கு வந்து அமைவதற்கும்‌ கடவுளைப்பற்றிய மெய்ஞ்ஞானமே உற்ற உபாயமாகிறது. சஞ்சீவி என்னும்‌ கிடைப்பதற்கரிய மருந்து கடவுளேயாம்‌. நாகபாசம்’ என்பது வெறும் கட்டு மட்டுமல்ல, அது மயக்கத்தையும் மரணத்திற்கு நிகரான நிலையையும் தருவது. அதேபோல், ‘ஞான சஞ்ஜீவி’ என்பது மருந்து மட்டுமல்ல, அது ‘வலிய வருவது’ (யாரும் அழைக்காமலே தேடி வருவது). ராமாயணத்தில் அனுமன் சஞ்ஜீவி மூலிகையைக் கொண்டு வந்தபோது, அதன் மணம் பட்ட மாத்திரத்திலேயே அனைவரும் எழுந்தனர். அதேபோல், குருவின் ஞான ஒளி பட்டாலே அஞ்ஞான மூர்ச்சை தெளிகிறது.

கதியான பூமிநடுவுட்செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே

கதியான =  மோக்ஷமென்கிற

பூமிநடுவுள் = நிலத்தினிடையில்

செவ்விதின் = செவ்வையாக / செம்மையாக

வளர்ந்து ஓங்கு = வளர்ந்து உயர்ந்த

திவ்யகுண மேருவே = தெய்வீகமான குண மலையே

மோக்ஷ பூமியில் நன்றாக விளங்கிக்கொண்டிருக்கின்ற திவ்ய குண மேருவே என்கிறார் தாயுமானவர். 

மேருவே என்று அவர்‌ கூறுகிறார்‌. எல்லா மேன்‌மைகளும்‌ பரம்பொருளிடத்து இருக்கின்றன. அப்பரம்‌பொருளோடு சார்கின்ற அளவு ஜீவனுக்கே மேன்மைகள்‌ எல்லாம்‌ மேலும்‌ மேலும்‌ வந்தமைகின்‌றன. மலம்‌ நீங்கப்‌ பெற்ற யாவும்‌ சுயப்பிரகாசமுடையவைகள்‌ ஆகின்றன.  எது பிரகாசமுடையதோ அது திவ்வியமானது. நலன்கள்‌ அனைத்துக்கும்‌ இருப்பிடம்‌ எதுவோ அது குணமேரு அல்‌லது குணக்குன்‌று. சிறப்புக்கள்‌ யாவும்‌ குவிந்துள்ள இடம்‌ அது பொருள்படுகிறது. 

இறைவனை ‘மேருவே’ என்று அழைப்பதன் மூலம், அவர் அசையாதவர் (நிச்சலமானவர்), உறுதியானவர், மற்றும் அனைத்து தேவதைகளுக்கும் (நல்ல குணங்களுக்கும்) இருப்பிடமானவர் என்ற பொருளும் உண்டு

சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே

இறைவனுடைய சிறப்புக்‌களை எவ்வளவுதான்‌ நாம்‌ விரித்துக்கொண்டு போனாலும்‌  அதை முழுதும்‌ அளந்து சொல்லிவிட நமக்கு இயலாது. ஏனென்றால்‌ நமது மனது ஒரு எல்லைக்கு உட்பட்டது. பரம்‌பொருளோ எல்லையைக்‌ கடந்தவர்‌, எல்லை கடந்த ஒரு பொருளை, எல்லையில்‌ உள்ள ஒரு அளவையைக்‌ கொண்டு அளந்துவிட முடியாது, இக்‌கருத்தைக்கொண்டே சித்‌தாந்த முத்தி முதலே என்று பரம்பொருளைத்‌ தாயுமானவர்‌ வருணிக்கின்றார்‌. சித்தம்‌ என்பது மனது. அந்தம்‌ என்‌பது முடிவு. சித்தாந்தம்‌ என்பது மனதற்ற நிலை, மனதுக்கு எட்டுகின்ற அளவு பரம்பொருளின்‌ பெருமைகளை அம்மனதானது விளக்கிக்கொண்டே போகுமாகில்‌ பிறகு அம்மனது பரம்பொருளில்‌ கலந்து கரைந்துபோய்வீடுகிறது. அது மனதற்ற நிலை ஆய்வீடுகிறது. அப்பொழுது ஜீவன்‌ முக்தி பெற்றுவிடுகின்றான்‌.அதற்கு முதல்‌ காரணமாய்‌ இருப்பவர்‌ கடவுள்‌.  அவர் சின்மயம்’ (அறிவு மயம்) + ‘ஆனந்தம்’ (பேரின்பம்) = ‘சின்மயானந்தம்’ – அதாவது அறிவே ஆனந்தமாக இருக்கும் நிலை

இக்கருத்துக்களெல்லாம்‌ சித்தாந்த முத்தி முதலே என்னும்‌ சொல்‌ தொடரில்‌ அடங்கிக்‌ கிடக்‌கின்றன. அத்தகைய பெரிய பொருள்‌ தாயமானவருடைய வணக்கத்திற்காக என்று திரிசிராப்பள்ளியில்‌ தென்முகக்‌கடவுளாக எழுந்தருளியுள்ளார்‌ என்றும்‌ அவரே உயிர்‌கள்‌ அனைத்துக்கும்‌ முதல்‌ பொருள்‌ என்றும்‌ ஞானத்துக்கு அவர்‌ உறைவிடம்‌ என்றும்‌ அவரை வருணித்தல்‌ பொருட்டு சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயானந்த குருவே என்று இயம்புகின்றார்‌. இக்கருத்துக்கள்‌ யாவையும்‌ தொகுத்து அவர்‌ மேற்கூறிய பாடலில்‌ அமைத்து வைத்திருக்கிறார்‌. 

முடிவுரை 

உண்மையில் ஆகாயத்தை விட்டு நாம் எப்படிப் பிரிய முடியாதோ அப்படி இறைவனை விட்டு ஒருபோதும் நாம் பிரியமுடியாது. பிரிந்திருப்பதாகப் போன்ற ஒரு தோற்றமே ஏற்பட்டுள்ளது. இறைவனைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்று சொல்வது தவறு. குரங்குக்குட்டிபோல இறைவனைப் பற்றிக்கொண்டால், அவர், பூனைக்குட்டியைத் தாய்ப்பூனை கவ்விக்கொள்வதுபோலக் கவ்விக்கொள்வார். இதை மர்கடக நியாயம், மார்ஜால நியாயம் என்று சொல்வதுண்டு. 

எவ்வளவு தீய குணம் நம்மிடத்திலே இருந்தாலும் இறைவன் நம்மைவிட்டு ஒருபொழுதும் அகலாமல் இருக்கிறார். ஏனென்றால் அவர் மறைகளிலே பூரணன் என்ற பெயர் பெற்றவராக இருக்கிறார். இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் வரையறுக்கப்படாது முழுமைப்பொருளாக இறைவன் இருக்கிறார். அப்படி இருப்பதால், எவ்வளவு தீய குணம் படைத்தவனாக இருந்தலும் அவனிடத்திலும் இறைவன் விளங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.

நன்மை–தீமை என்பது மனத்தின் தர்மங்கள்; அவற்றுக்கு ஆதார சைதன்யமாக இருப்பவர் இறைவன். ஆனால் அவர் நன்மையாலும் தீமையாலும் பாதிக்கப்படுவதில்லை. இருமையில் இறைந்து (வியாபித்து) இருப்பவர் இறைவன். இருமைகள் முழுவதிலும் வியாபித்து இருந்தாலும் அந்த இருமைகளால் சற்றும் பாதிக்கப்படாதவர். நலம் கேடு இரண்டும் சற்றும் இறைவனை பாதிப்பதில்லை.

பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் 

பொருந்தார் உள்ளம் தன்னில் அந்தரத்தில் 

ஜீவ சாக்ஷி மாத்திரமாய் நிற்கும் 

என்கிறது கைவல்ய நவநீதம். நல்லவர் உள்ளம், தீயவர் உள்ளம் இரண்டிலும் (பொன்னாசை, நிலத்தாசை, மாதாசை இவை அனைத்தும் உடையவனுடைய உள்ளத்திலும், அவை இல்லாதவனுடைய உள்ளத்திலும்) அம்மெய்ப்பொருள் வியாபித்துதான் இருக்கிறது.

உலக ஆசைகளைத் துறந்தவர்கள் தங்கள் உள்ளத்தில் விளங்கிக்கொண்டிருக்கும் மெய்ப்பொருளை உணர்கிறார்கள். உலக ஆசைகளைத் துறவாதவர்கள் தங்கள் உள்ளத்திலே ஒளிர்ந்துகொண்டிருக்கும் மெய்ப்பொருளை உணர்வதில்லை.

எவ்வளவு தீய குணங்கள் இருந்தாலும் அந்தத் தீய குணங்களால் சற்றும் பாதிக்கப்படாமல் இறைவன் இருக்கிறார்.

இவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருக்கின்றன. ஆனால் என்னுடைய உள்ளத்தில் यो वेद निहितं गुहायाम् என்று வேதம் சொல்வதுபோல புத்தியில் விளங்கிக்கொண்டிருக்கிறது.

எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும் புத்தியில்தான் அது வெளிப்படுகிறது என்கிறது ஆத்மபோதம் (17).

ஸதா ஸர்வகதோப்யாத்மா ஸர்வத்ராவபாஸதே |

புத்தாவேவாவபாஸேத ஸ்வச்சேஷு ப்ரதிபிம்பவத் || (17)

தூய்மையான இடத்தில் சூரியனுடைய ப்ரகாஸம் நன்கு ப்ரதிபலிப்பதுபோல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் புத்தியில் விளங்குகிறது. யார் மனதை, ஆத்மாவை நோக்கித் திருப்புகிறார்களோ அவர்களுக்கு இது விளங்கும்.

விசாரம் செய்தால், கெட்ட குணம், நல்ல குணம் இரண்டும் மனத்தைச் சார்ந்தது. நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அஹம் பூர்ண: ஆதலால் நல்ல குணம் வேண்டாம் என்று எண்ணக்கூடாது. நல்ல குணம் வந்தால்தான் இந்த உண்மை புரியும்.

கெட்ட குணங்களை நீக்கி, நல்ல குணங்களைக் கொடுத்து, பின் நல்லதையும் நீக்கி நல்லது, கெட்டதைக் கடந்து போவதுதான் இப்பாடலில் சூக்‌ஷுமமாக வைக்கப்பட்ட ஒரு கருப்பொருள். 

இருப்புக்கு இன்மை இல்லை.  இருப்பதனை அறிவதற்கு, அறியாமையை நீக்கி அருள்வாய் என்பதே இப்பாடல் 


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading