நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 1 – மந்திரவாதியும் மந்திரக் காட்சியும்.

ஶ்ரீ குருவாயூரப்பன்
முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.

மந்திரவாதி

அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.

ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.

அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.

“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்

முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.

அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.

அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.

மந்திரக் காட்சி

பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது. 

அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.

எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.

நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.

அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.

ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.

முடிவுரை

இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம்.  அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.

எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.

இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்
தட்சிணாமூரத்தி ஸ்தோத்திரம் – 2
இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – அறிவியல் கண்ணோட்டம் – பேரியக்க கோட்பாடு (Big Bang Theory)

முக்கிய அறிவிப்பு

கீழே உள்ள இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய விஞ்ஞான விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், சம்பந்தப்பட்ட தொழில்முறை வழிகாட்டி/ஆசிரியரை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முகவுரை

“கடவுளே! இது என்ன அதிசயம்! இது எப்படி சாத்தியம்? இதன் பின்னால் உள்ள ரகசியம் என்ன?”

ஒரு மந்திரவாதியின் காட்சிகளைக் கண்டு உலகம் முழுவதும், வயது வித்தியாசமின்றி நாம் கூறும் வார்த்தைகள், அல்லவா! ஏன் இப்படி வியக்கிறோம்? எதற்கு இந்த ஆர்வம்?

ஏனெனில், நாம் காணும் அந்த காட்சிகள், எந்த காரணமும் வெளிப்படையாக இல்லாத நிகழ்வுகளை இணைத்து நமக்கு ஒரு புது நிகழ்வாக தோற்றமளித்தாலும், அந்த தோற்றத்தின்பின் ஒரு மறைக்கப்பட்ட காரணம் இருப்பதாக நாம் நம்புவதனால் தான். அதாவது, காரணமில்லாமல் எந்த காரியமுமில்லை என்றும் காரண-காரிய(விளைவு) உறவு என்ற ஒன்றினை நாம் உறுதியாக நம்புவதாலும் தான்.

அதுபோல, இப்புவியில், பிறந்தது முதல் இறுதி வரை மனிதன் அறிய ஆவலாக இருக்கும் மிகப் பெரிய மந்திரக் காட்சி எது தெரியுமா? அந்த மிக முக்கியமான மாயாஜால உண்மைதான் "அண்டமும் அதன் படைப்பும்".

“இந்த பூமிக்கு எப்படி வந்தோம்?
இந்த பிரபஞ்சம் எப்படி உருவாக்கப்பட்டது?
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய மந்திரவாதி யார்?
அது எப்போது உருவாக்கப்பட்டது?
இது எங்கு உருவாக்கப்பட்டது, ஏன் உருவாக்கப்பட்டது? உருவாக்கம் மாயாஜால குழப்பத்தின் விளைவா அல்லது இதற்குப்பின் ஏதாவது ஓரு அறிவியல் செயல்முறை உள்ளதா? படைப்பிற்கு முன் என்ன இருந்தது?”

என்றெல்லாம் ஆர்வமிக்க கேள்விகளுக்கு விடைகள் காண முயல்கிறோம் நாம். ஆழ்ந்து நோக்கின், தன்னைப் பற்றி அறிந்து கொள்ள முயலும் உள்நோக்கிய பயணத்தின் வடிவங்களே இக்கேள்விகள் அனைத்தும்.

இக்கேள்விகளுக்கு இன்றைய விஞ்ஞான உலகத்தில், அறிவியல் ரீதியான விளக்கத்தை இப்போது அறிய முயலுவோம்.

பேரியக்க கோட்பாடு – ஒரு சுருக்கம் (Big Bang Theory in a nutshell)

அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பல கோட்பாடுகள் (theories) அண்டத்தின் படைப்பை பற்றி உள்ளன. தேவையான அனுமானங்கள் (assumptions), உருவகங்கள் (simulations), மாதிரிகள் (models), சமன்பாடுகள் (equations), ஊர்ஜிதங்கள் (validations) ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொன்றும் தங்களின் கோட்பாடுகளை வலுப்படுத்தி வெளிப்படுத்துகின்றன. அத்தகைய கோட்பாடுகளில் மிகவும் பிரபலமான, முதன்மையான அறிவியல் விளக்கமே பெரு இயக்க கோட்பாடு (big bang theory) ஆகும். பலர் அதனை பெரு வெடிப்பு கோட்பாடு என்றும் கூறுகின்றனர்.

இந்த கோட்பாடை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் “ நமக்குத் தெரிந்த இந்த பிரபஞ்சம், அளவிலா வெப்பம் அடங்கிய, அளவிலா அடர்த்தியான ஒற்றைப் புள்ளியுடன் தொடங்கியது. அது பின்னர் முதலில் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் பின்னர் அளவிடக்கூடிய விகிதத்திலும் அடுத்த 13700 கோடி (13.7 billion) ஆண்டுகளாக தொடர்ந்து, இன்றும் கூட விரிவடைந்து கொண்டு வருகிறது” என்று கூறலாம்.

அதாவது, சுமார் 13700 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அண்டமெனும் முழு பிரபஞ்சத்தில் அடங்கிய அனைத்தும், எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமுமாக வரையறுக்க முடியா ஒரு சிறு புள்ளியெனும் ஒருமையில் ஒடுக்கப்பட்டிருந்தது. அது திடீரென்று, ஒரு வெடிப்பென விரியத் தொடங்கி, ஒளியின் வேகத்தை விட வேகமாக நமது பிரபஞ்சத்தை வெளிப்புறமாக காற்றடைத்த பலூன் போன்று விரியச் செய்தது. இந்த அண்ட வீக்கம், காலத்தின் அளவில் ஒரு நொடியின் சில பகுதிகள் மட்டுமே நீடித்தது.

இந்த அண்ட விரிவாக்கம் திடீரெனவும் இன்றும் மர்மமாக உள்ள முடிவுக்கு வந்தபோது, இந்த பேரியக்கத்தின் உன்னதமான விளக்கங்கள் விஞ்ஞானிகளுக்கு புரியத்தொடங்கின.

அண்ட விரிவாக்க முடிவில், நிறையெனும் பொருள் (matter) மற்றும் ஆற்றல் (energy) எனும் கதிர்வீச்சு வெள்ளம் ஏற்பட்டு, இன்று நமக்குத் தெரிந்த துகள்கள், அணுக்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மாறும் பல பொருட்களுடன் நமது பிரபஞ்சத்தை நிரப்பத் தொடங்கியது. இவை அனைத்தும் பிரபஞ்சம் தொடங்கிய முதல் வினாடியிலேயே நடந்தது. அவைகளனைத்தும் அப்போது 1000 கோடி டிகிரி ஃபாரன்ஹீட் (550 கோடி செல்சியஸ்) வெப்ப நிலையில் இருந்தன. இந்நிலையில் அண்டம் முழுவதிலும், இன்று இருக்கும் எல்லாவற்றிற்கும் கட்டுமானத் தொகுதிகளாக மாறும் மூலப்பொருட்களான மின் அணுக்களான நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் நிறைந்து இருந்தன.

இந்த ஆரம்பகால "குழம்பு" உண்மையில் பார்க்க முடியாததாக இருந்திருக்கும், ஏனெனில் அது நமக்கு புலப்படும் ஒளி எதனையும் வைத்திருக்க முடியாது. மேகங்களில் உள்ள நீர் துளிகளிலிருந்து சூரிய ஒளி சிதறச் செய்வது போல, அண்டத்தில் அடங்கிய அந்த மின்ணனுக்கள் ஒளித்துகள்களை சிதறடித்திருக்கும் என நாசா நிறுவனம் கூறுகிறது.

காலப்போக்கில் இந்த அண்டக்குழம்பில் அடங்கிய மின்ணனுக்கள் கருவடைந்து அணுக்களாகி, நேர் எதிர் மறை மின்சக்திகள் பெற்று, பேரியக்க விரிவாக்கம் தொடங்கிய 380,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிக் கதிர்களை பரப்பத் தொடங்கியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இக்கோட்பாட்டினில்.

சில நேரங்களில் பேரியக்கத்தின் பின்னொளி என்று அழைக்கப்படும் இந்த ஒளி, CMB - Cosmic Microwave Background எனப்படும் அண்ட நுண்ணலைப் பின்னணி ஒளி என்று விஞ்ஞானிகளால் அறியப்படுகிறது.

தற்போதுள்ள தொழில்நுட்பம் கொண்டு, வானியலாளர்களை (astronomers) அண்டமெனும் பிரபஞ்சத்தின் பிறப்பைப் பார்க்க இயலவில்லை. பேரியக்கத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்வதில் பெரும்பாலானவை கணித சூத்திரங்கள், சமன்பாடுகள், மற்றும் மாதிரிகளிலிருந்து வந்தவை. இருப்பினும், வானியலாளர்கள், மேற்குறிய CMB எனும், அண்ட நுண்ணலைப் பிண்ணனி மூலம் விரிவாக்கத்தின் "எதிரொலியை" பார்க்க முடியும்.

அப்படி கண்ட. எதிரொலிகளை வைத்து, நாம் இன்று காணும் அண்டத்தின் ஆயிரக்கணக்கான பதிப்புகளை மிகப்பெரிய மின்கணனிகளில் உருவகப்படுத்துவதன் மூலம் அன்று நிகழ்ந்த பேரியக்கத்தினை காண இன்றைய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த பேரியக்கம் ஒரு பெரிய "வெடிப்பு" என்று குறுகிய நோக்கில் சிலர் விவரிக்கின்றனர். ஒரு வெடிப்பில், துண்டுகள் ஒரு மையப் புள்ளியிலிருந்து முன்பே இருக்கும் இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றன. நாம் மையப் புள்ளியில் இருந்தால், அனைத்து துண்டுகளும் தோராயமாக அதே வேகத்தில் நம்மிடமிருந்து விலகிச் செல்வதைக் காண்போம்.

ஆனால் பேரியக்கம் அப்படி இல்லை. இது விண்வெளியின் விரிவாக்கமாக இருந்தது - ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் சமன்பாடுகளிலிருந்து (Einstein’ equation) வெளிவரும் ஒரு கருத்தும் இதே.

பிரபஞ்சம் விரிவடைவது மட்டுமல்ல, வேகமாகவும் விரிவடைகிறது. இதன் பொருள், காலப்போக்கில், பூமியில் இருந்தோ அல்லது விண்மீன் மண்டலத்தில் உள்ள வேறு எந்த இடத்திலும் இருந்து கொண்டோ, மற்ற விண்மீன் திரள்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

நாம் பார்க்கும் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், இந்த பேரியக்கம் எனும் விரிவாக்கம் நடந்தது ஒன்றே ஒரு முறைதான் என்று திட்டவட்டமாக்கூற இயலாதென்பதை என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். சில விஞ்ஞானிகள் நாம் வாழும் அண்டத்தில் விரிவாக்கம், சுருக்கம் (அதாவது வீக்கம், வாட்டம்) இரண்டும் மாறி மாறி வரந்திருக்கும்/வரும் எனவும் நம்புகின்றனர்.

“மொத்தத்தில் அறிவியல் இப்போது செய்ய முயற்சிப்பது நமது சமீபத்திய புகைப்படத்திலிருந்து குழந்தைப் பருவத்தில் நாம் எப்படி இருந்திருப்போம் என்று யூகிப்பது போன்றது.”

முடிவுரை

படைப்பு எனும் ஒரு மந்திரச்சிந்தனையை, பகுத்தறிவால், காரண-காரிய (விளைவு) உறவிற்குள் கொண்டுவர,  விஞ்ஞானம் நீண்டகாலமாக கடினமான முயற்சிகள் எடுத்து வருகிறது. இருப்பினும் இன்றும் நாம் அனைவரும் காரணமோ விளக்கமோ இல்லாத/கண்டு இயலாத ஒரு மாயாஜால யதார்த்தத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ளோம். 

பேரியக்க கோட்பாடு ஒன்றே தற்பொழுது இந்த நிகழ்வின் மிக துல்லியமான அறிவியல் விளக்கமாக நம்பப்படுகிறது. பேரியக்கத்திற்குப் பிறகு பிரபஞ்சம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது பற்றிய நம்பத்தகுந்த விளக்கத்துடன் அறிவியல் வெளிக்கொணர்ந்தாலும், நாம் தேடுவது பேரியக்கத்திற்கு முன் என்ன நடந்தது என்பதைத்தான்.

அதாவது, உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி, படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அதாவது பேரியக்கத்திற்கு முன் உள்ள "காரணமற்ற காரணத்தை" நாம் தேடுகிறோம்.

அதை தேட வேண்டுமானால், நாம்

1. காரணம் - காரியம் (விளைவு) என்ற குறுகிய கண்ணோட்டத்தை கடந்து அந்த இரு அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும், ஏனெனில் அந்த காரணம் மற்றும் விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

2. நிறை -ஆற்றல் ( matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும்.

இதனைத்தான் நமது நாட்டிலே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது ரிஷிகளும், முனிவர்களும் பரம்பொருள், மாயை எனக் கண்டனர் அவர்களது ஆன்மீக ஆய்வால்.

அந்த ஆய்வுகளின் கண்ணோட்டங்களை வரும் வலைதளப் பதிவுகளில் காண்போம்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!