
முக்கிய அறிவிப்பு
இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.
நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.
இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை அறிந்தது
பகுதி 1ல், நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, ஆழ்ந்த தியானங்களின் மூலம், "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று கூறியதை அறிந்தோம்.
பகுதி 2ல், படைப்பு என்பது பரம்பொருளின் இச்சையால் வெளிப்படுகிறது என்றும், அப்பரம்பொருளே படைப்பின் அறிவுக்காரணம் என்றும் அறிந்தோம். மேலும் பரம்பொருளைப் போல ஆதியும் அந்தமும் இல்லாமல் எனினும் பரம்பொருளைச் சார்ந்த சக்தியான மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறப்படும் மாயையே படைப்பின் பொருட்காரணம் என்றும், அழியா இடம், அழியா காலம் இரண்டும் பொதுக்காரணமென்றும் கண்டோம். அந்த காலத்தின் கணக்கினை நான்முக கடவுளின் ஆயுளுடன் இணத்ததையும் அறிந்தோம்.
இனி இந்த மூன்றாவது பகுதியில் அண்டப் பரிணாமத்தின் விவரங்களைக் காண்போம்.
அண்டப் பரிணாமம் – அதி உயர் நிலை கண்ணோட்டம்
இந்நிலை ஆழ் உறக்க (ஸுஷுப்தி என்பர் சமஸ்க்ருதத்தில்) நிலை. அதாவது பரம்பொருள், படைக்கும் இச்சையிலாமல், அசைவிலாமல்/உணர்வலைகளின் அதிர்விலாமல் இருக்கும் தூய இருப்பு நிலை. இந்நிலையில், ஆதியும் அந்தமுமில்லாமல் பரம்பொருளும் மாயையும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆதியும் அந்தமுமில்லையதனால் காலம் என்பது இல்லை; நீக்கமற நிறைவதனால் இடம் என்ற ஒன்று இல்லை. ஆக இந்நிலையில், இடம், காலம் என்று ஒன்றில்லை.
இந்நிலையில், அறிவாற்றல் இலா, விவரிக்க இயலா மாயையில், சாத்விக, ரஜ, தாமஸ என்று மூன்று குணங்களும் சமநிலையில் இருக்கும்.
சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதை ஆரம்ப நிலை, மஹா பிரளயம் அல்லது பேரழிவு அல்லது முடிவு நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் படைப்பு, காத்தல், அழித்தல் என்று ஒன்றுமில்லை. ஏனெனில் இந்நிலையை அடைந்த ஆய்வாளர் பரம்பொருளே நான் என்று அறிந்துணர்ந்த ஆனந்த நிலை - அனைத்தும் ஒருமையில் அடங்கிய பரம்பொருள் நிலை.
அண்டப் பரிணாமம் – ஐவகை செறிவு
அறிவுக் காரணமான பிரம்மம் எனும் பரம்பொருளுக்கும், பொருட்காரணமான மூலப்ரக்ருத்தி எனும் மாயைக்கும் இடையேயான தொடர்பினால் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று செயல்முறைகள் சக்கர சுழற்சியென, வரையறுத்த காலக்கணக்கின்படி நடைபெறுகின்றன என்று நமது மறைகள் கூறுகின்றன.
பிரம்மாவின் ஒரு ஆயுட்காலம் முடிந்தபின், பரம்பொருளின் படைக்கும் இச்சையால், பரிணாமம் துவங்குகிறது. இந்த இயக்க இச்சை, பரமனின் கடைக்கண் அசைவிற்கு ஒப்பு என்று ஞானியர்கள் ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்களில் வரைந்தனர்.
இந்த இயக்க இச்சையால் மூலப்பரக்ருதி எனும் மாயை அசைந்திட, அந்த அசைவால் முக்குணங்களின் சமநிலை குலைந்து வெளிப்பட, காலச்சக்கரத்தின் உதவி கொண்டு, மாயை எனும் இயற்கையிலிருந்து தத்துவங்கள் என்ற கருவிகள் தோன்றுகின்றன.
ஞானிகளும் முனிவர்களும் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளின்படி (அத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் போன்றவை) இந்த தத்துவங்கள் 24ல் இருந்து 36 வரை உள்ளன. ஆக, முக்குண வெளிப்பாட்டிலிருந்து, படிப்படியாக அண்டப் பரிணாமம், மாயா ஜாலங்களாய் தொடர்கிறது.
1. படைப்பு எனும் இந்த சிருஷ்டிச் செயல்பாட்டில் முதன்மையான தத்துவம் மஹத். உலகளாவிய (சமஷ்டி) நிறையின் (matter) வெளிப்பாட்டை அடக்கிய கருப்பை எனலாம். இருப்பினும் இதனை அண்டத்தின் மொத்த உணர்வு (cosmic intelligence) என்றும் கூறலாம். ஏனெனில் அண்டத்தில் அடங்கிய அனைத்துயிரினங்களிலும் இந்த மஹத் புத்தி வடிவத்தில் உள்ளது. இருப்பினும் அது நிறையாகத்தான் இருக்கின்றது. காரணமும் விளைவும் தெளிவாக வெளிப்படாத நிலையில் இருந்து (அவ்யக்தா) மஹத் தத்வா முதலில் வெளிவருகிறது, நிலத்திலுள்ள விதையிலிருந்து முளை வெளிவருவது போல. ஆக, பரம்பொருள் என்பது, நீக்கமற நிறைந்த வேறுபாடுகள் இல்லா, வெளிப்படா தூய இருப்பும் தூய உணர்வும். மாயை என்பது நீக்கமற நிறைந்து வேறுபாடுகள் இல்லா வெளிப்படும் உணர்வு. நீக்கமற நிறைந்து வேறுபாடுகளுடன், வெளிப்படுவது மஹத் எனும் இருப்பும் உணர்வும்.
2. இப்படி வெளிப்பட்ட மஹத் எனும் அனைத்தையும் அறிந்த, எங்கும் நிறைந்த, சர்வ வல்லமையுள்ள படைப்புக் கொள்கை, தன்னைப் பற்றி உணரும் போது, அதாவது, ரஜஸ் எனும் அரச குணம் மஹத்தில் ஆதிக்கம் செலுத்தும் குணமாக இருந்தால், நான் எங்கும் நிறைந்தவன் என்ற அண்டமளாவிய தன்னுணர்வு (சமஷ்டி அஹங்காரம்) வெளிப்படுகிறது. அறியாமை எனும் தமஸ் குண ஆதிக்கம் மஹத்தின் மீதிருந்தால், இதுவே தனிப்பட்ட மட்டத்தில் (வியஷ்டி) சீவனின் தன்னுணர்வாக வெளிப்பட்டு தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது. நான், என்னுடையது என்ற வேறுபடுத்தும் உணர்வாக வெளிப்படுகிறது.
3. மாயையிலிருந்து ஆகாசம் (வெளி), ஆகாசத்திலிருந்து வாயு (காற்று), வாயுவிலிருந்து, தேஜா (நெருப்பு), தேஜாவிலிருந்து, ஆபஹ் (நீர்), “ஆப”த்திலிருந்து, ப்ருத்வி (பூமி) வெளிப்படுகின்றன. விண்வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளும் திரிகுணாத்மிகா எனும் முக்குண மாயையிலிருந்து வெளிப்படுவதால், அவைகளனைத்திலும் முக்குணங்களின் ஆதிக்கம் உள்ளது.
4. அடுத்தது பொறி புலன்களின் (இந்திரியங்களின்) உருவாக்கம். 'இந்திரியா' என்றால் 'பொறி’. இதனை இருவகையாக பிரிக்கலாம். (i) கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து அறிவுப்பொறிகள் (“ஞானேந்திரியங்கள்”)வழியாக ஒளி, ஒலி, சுவாசம், சுவை, உணர்வு என்ற ஐந்து நுண்நிலை புலன்களை (“தன்மாத்திரை” என்பர்)அறிவது. (ii) பேச்சு (வாய்), கைகள், கால்கள், ஆசனவாய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் என்று நாம் வினைகள் புரிய உதவும் ஐந்து வினைப்பொறிகள் (“கர்மேந்திரியங்கள்”). முன்பு கூறியது போல், நமது மறைகள் ஒவ்வொரு இந்திரியங்களுக்கும் ஒரு கட்டுப்படுத்தும் தெய்வம் அல்லது தேவதையை ஏற்படுத்தியது. இந்த பொறிகளின் உருவாக்கங்களின் செயல்முறைக்கு “பஞ்சீகரனா” என்று பெயர். பஞ்ச பூதங்களான விண்வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றின் ஒரு பாதி நான்கு பகுதிகளாகப் பிரிந்து (அதாவது எட்டில் ஒரு மடங்காக) , பின்னர் ஒவ்வொரு பூதத்திற்கும் அடுத்த நான்கு பூதங்களின் எட்டில் ஒரு பகுதி விநியோகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக காற்று, நெருப்பு, நீர், பூமி இவை ஒவ்வொன்றும் ஆகாசத்தில் எட்டில் ஒரு பங்கைப் பெறுகின்றன. துணியை நெசவு செய்யும் ஒவ்வொரு உருவாக்கத்தில் பாவு-ஊடு (warp and weft) என்று பிண்ணுவது போல! உதாரணமாக, ஆகாச தத்வத்தின் (விண்வெளி) சத்வ குணத்திலிருந்து, ஷ்ரோத்ரீந்த்ரியா (ஷ்ரோத்ர-இந்திரிய) அதாவது கேட்கும் உறுப்பு (காதுகள்) உருவாக்கப்படுகிறது. ‘ஷ்ரோத்ரா’ என்றால் ஒலி. ஒலியைக் கேட்க, காதுகள் உருவாக்கப்படுகின்றன. ஆகாசத்தின் தரம் சப்தம் அல்லது ஒலி. விண்வெளி என்பது ஒலியை கடத்தும் ஊடகம். ஒலியைக் கேட்பதற்காக, தூய்மையான பகுதியிலிருந்து அதாவது சத்வ குணத்திலிருந்து, காதுகள் உருவாக்கப்பட்டன. ஷ்ரோத்திரத்தின் கட்டுப்படுத்தும் தேவதா திக் அல்லது திசா அல்லது திசைகள் ஆகும். இங்கணம் அனைத்து இந்திரயங்களும் (பொறிகளும்) தன்மாத்தரைகளும் (புலன்களும்) உருவாக்கப்படுகின்றன.
முடிவுரை
இந்த செயல்முறைதனை நான்கே வரிகளில் திருமூலர் எடுத்துரைக்கிறார்.
”மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
(திருமந்திரம் – 385)*
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே”
பரம்பொருளிடமிருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே என்கிறார் திருமூலர்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
தேவாரம்
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்று திருநாவுக்கரசர் பாடியதும் இந்த அண்டப் பரிணாம ஆளுநரைப் பற்றியே.
இந்த ஐவகைச் செறிவு எனும் மாயா ஜால வெளிப்பாடுகளின் சித்திர விளக்கம் (ஆங்கிலத்தில்) இதோ

அண்டப் பரிணாமத்தில் அழிவு எனும் பிரளயத்தைப்பற்றி அடுத்து வரும் முடிவுப்பகுதியில் காண்போம்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!







